சிறப்புக் கட்டுரைகள்

ஏன் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரிக்கிறது?

அ.நாராயணமூர்த்தி

நீர் இருப்பு பற்றி வெளிவரும் செய்திகள் அச்சமூட்டுகின்றன. ஒருபுறம், எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய நீர் வளங்கள் வேகமாகக் குறைந்துவருகின்றன. மறுபுறம் நீரின் தரம் மோசமடைந்து வருகிறது. உலக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுதல் ஆண்டுதோறும் 1% முதல் 2% வரை அதிகரித்துவருவதால் நிலத்தடி நீர் இருப்பும் குறைந்துவருகிறது. குளங்கள், ஏரிகள் ஆபத்தான வேகத்தில் மறைந்துவருகின்றன. நிலைமை இப்படியே சென்றால் எதிர்காலச் சந்ததியினருக்குத் தண்ணீர் கிடைக்குமா?

பிரச்சினையின் தீவிரம்: உலக வங்கி, யுனிசெஃப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வெளியிட்​டுள்ள அறிக்கைகள், இன்று உலகளவில் நீர்ப் பற்றாக்குறை மிகவும் பெரிய சவாலாக​வும், கோடிக்​கணக்கான மக்களைத் தினமும் பாதித்து​வரு​வ​தாகவும் கூறுகின்றன. மக்கள்தொகை அதிகரித்து நகரங்கள் தொடர்ந்து விரிவடைவ​தால், தண்ணீருக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது.

இது ஏற்கெனவே வரையறுக்​கப்பட்ட நீர் வளங்களின் (Potential Water) மீது பெரும் அழுத்​தத்தை ஏற்படுத்து​கிறது. உலகெங்​கிலும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான குடிநீர் கிடைக்​காமல் தவிப்​ப​தாக​வும், சுமார் 400 கோடிக்கும் அதிகமான மக்கள் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது ஒரு மாதத்​துக்குக் கடுமையான நீர்ப் பற்றாக்​குறையை எதிர்​கொள்​வ​தாகவும் தரவுகள் கூறுகின்றன. நீர் தொடர்பான மோதல்​களின் எண்ணிக்கை​யும், தீவிரமும் அதிவேகத்தில் அதிகரித்து வருகின்றன.

இந்தியாவின் நிலை: நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கையான கூட்டு நீர் மேலாண்மைக் குறியீடு (Composite Water Management Index, 2018), ‘இந்தியா அதன் வரலாற்றில் மிக மோசமான நீர் நெருக்​கடியைச் சந்தித்து வருகிறது’ எனக் கூறியுள்ளது. மேலும், ‘இந்தியாவில் சுமார் 60 கோடி மக்கள் அதி முதல் தீவிர (high-to-extreme) நீர் நெருக்​கடியை எதிர்​கொள்​கிறார்கள். வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 40% மக்களுக்குக் குடிநீர் கிடைப்​பதில் சிக்கல் ஏற்படும். 75% மக்களுக்கு அவர்கள் வீட்டில் குடிநீர் வசதி இல்லை.

70% தண்ணீர் மாசுபட்​டுள்ளது மட்டுமல்​லாமல், நீர்த் தரக் குறியீட்டில் 122 நாடுகளில் இந்தியா தற்போது 120ஆவது இடத்தில் உள்ளது’ என்று நிதி ஆயோக் அறிக்கை கூறியுள்ளது. மாசுபட்ட தண்ணீரை அருந்து​வ​தால், இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் உயிரிழக்​கின்றனர் என்றும் குறிப்​பிட்​டு உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு நீர் அவசியம் என்பதால், நீர்ப் பற்றாக்குறை காரணமாக, வரும் 2050ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்​தியில் (Gross Domestic Product) 6% இழப்பு ஏற்படும் என்று சில கணிப்புகள் குறிப்​பிடு​கின்றன.

மத்திய நீர் ஆணையத்தின் தரவுகளின்படி, சராசரியாக ஓர் ஆண்டுக்குப் பயன்படுத்​தக்​கூடிய இந்தியாவின் மொத்த நீர் வளம் (Utilisable Water) சுமார் 1,123 பில்லியன் கன மீட்டர். ஆனால், தண்ணீருக்கான தேவை 2050ஆம் ஆண்டுக்குள் 1,447 பிசிஎம் ஆக அதிகரிக்கும் என்று கணிக்​கப்​பட்​டுள்ளது. அதாவது, நீர்த் தேவைக்கும் அதன் வழங்குதலுக்கும் இடையில் பெரிய இடைவெளி ஏற்படும். தொடர்ச்சியான நீர்ச் சுரண்டல் காரணமாக மொத்த நீர் வளங்களில் மட்டுமல்ல, தனிநபருக்குக் கிடைக்கும் நீரிலும் பெரும் சரிவு ஏற்பட்​டு

உள்ளது. 2001இல் 1,816 கன மீட்டராக இருந்த தனிநபர் நீரின் அளவு, 2011இல் 1,544 ஆகவும், 2025இல் 1,434ஆகவும் குறையும் என்று கணக்கிடப்​பட்​டுள்ளது. தனிநபர் நீர் அளவு எங்கெல்லாம் 1,700 கன மீட்டருக்கும் கீழே உள்ளதோ, அங்கே தண்ணீர்ப் பஞ்சம் உள்ளதாக உலக அளவிலான தண்ணீர் மதிப்​பீட்டுக் குறியீடுகள் கூறுகின்றன. நிலத்தடி நீர் முன்பை​விடத் தற்போது பெரும் நெருக்​கடியில் உள்ளது.

ஓர் ஆண்டில் பயன்படுத்​தக்​கூடிய நிலத்தடி நீர் அளவான 397.62 பில்லியன் கன மீட்​டரில் (BCM) தற்போது 244.92 பிசிஎம் உறிஞ்​சப்​படு​கிறது. இது உலகிலேயே மிக அதிகம். விவசாயரீ​தியாக முன்னேறிய பெரும்​பாலான மாநிலங்​களில் (பஞ்சாப், ஹரியாணா, தமிழ்​நாடு, கர்நாடகம்) நிலத்தடி நீர்ச் சுரண்டல் மிக அதிகமாக உள்ளது. மத்திய நிலத்தடி நீர் வாரியம் 2024இல் ஆய்வுசெய்த 6,746 வட்டங்​களில், சுமார் 27% வட்டங்​களில் நீர் அதிகமாக சுரண்​டப்​படு​வ​தாக​வும், மற்ற வட்டங்​களில் நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதாகவும் தெரிவித்​துள்ளது.

தீர்வுகள் என்ன? - 90% நீரைப் பயன்படுத்தும் விவசா​யத்தில் நீர்ப் பயன்பாட்டைக் குறைப்பது முக்கியம். இந்தியாவில் கால்வாய்ப் பாசனம் சுமார் 180 லட்சம் ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆனால், நீர்க் கணக்கீட்டு முறை (Water Accounting Method) இல்லாத​தால், அங்கு நீர்ப் பயன்பாட்டுத் திறன் வெறும் 35 - 40% மட்டுமே உள்ளது. 2000இன் தொடக்​கத்தில் நீர்க் கணக்கீட்டு முறையைக் கால்வாய்ப் பாசனத்தில் அறிமுகப்​படுத்​தியதன் மூலம், நீர்ப் பயன்பாட்டுத் திறனை மகாராஷ்டிரம் கணிசமாக அதிகரிக்க முடிந்தது.

கால்வாய்ப் பாசனத்தில் அளவீட்டு விலை (Volumetric Pricing) நிர்ண​யத்​துக்குப் பதிலாக, பரப்பளவு அடிப்​படையில் நீருக்கு விலை நிர்ணயம் செய்வ​தால், நீரின் பயன்பாட்டுத் திறன் மிகவும் குறைவாக உள்ளது. பாசன நீர் விலை நிர்ணயம் குறித்த வைத்தி​ய​நாதன் குழு (1992) பரிந்துரைத்​தபடி, அளவீட்டு முறையில் விலை நிர்ணயம் செய்தால், கால்வாய்ப் பாசனப் பகுதியில் நீரின் செயல்​திறனை மேம்படுத்து​வதோடு, கால்வாய்ப் பாசனப் பகுதி​களில் தற்போதுள்ள நீர்ப் பற்றாக்​குறையைக் கணிசமாகக் குறைக்​கலாம்.

நீர்ப் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்​ப​தற்கு ஒரு நம்பிக்கைக்​குரிய தீர்வு நுண் நீர்ப்​பாசனம் (drip and sprinkler irrigation method). இந்தியாவின் பல பகுதி​களில் நடத்தப்பட்ட கள ஆய்வுகள், இந்த முறை மூலமாக 50-70% நீர், மின்சா​ரத்தைச் சேமிப்​பதோடு பயிர் விளைச்​சலைக் கணிசமாக அதிகரிக்க முடியும் என்பதைக் காட்டு​கின்றன. நுண் நீர்ப்​பாசனத்​துக்கான பணிக்குழு (Task Force on Micro-Irrigation, 2014), இத்தகைய தொழில்​நுட்​பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு பயிர்​களில் அடையக்​கூடிய மிகப்​பெரிய நீர்ச் சேமிப்பை அடிக்​கோடிட்டுக் காட்டி​யுள்ளது.

மகாராஷ்டிரம், குஜராத், ஆந்திரம் போன்ற மாநிலங்கள் நுண் நீர்ப்​பாசனத்தைப் பயன்படுத்து​வதில் விரைவான முன்னேற்றம் அடைந்துள்ளன. தற்போதுள்ள (2023-24) நுண்பாசனப் பரப்பளவான 167.35 லட்சம் ஹெக்டேரை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம், நீர்ப்​பயன்​பாட்டுத் திறனை அதிகரிப்​ப​தோடு, நிலத்தடி நீர்ச் சுரண்​டலையும் குறைக்க முடியும்.

ஒருங்​கிணைந்த முயற்சிகள் தேவை: நெல், கோதுமை, கரும்பு, வாழை போன்ற அதிக நீர் உறிஞ்சும் பயிர்​களின் சாகுபடிப் பரப்பளவு அதிகரித்து​வருவது, நீர்ப் பற்றாக்​குறையை அதிகரிக்​கிறது. இந்தியாவில் 1990-91 முதல் 2020-21 வரையிலான காலக்​கட்​டத்​தில், நீரை அதிகம் உறிஞ்சும் கரும்புப் பயிரின் சாகுபடிப் பரப்பளவு 32 சதவீத​மும், நெல்லின் பரப்பளவு 6 சதவீத​மும், வாழையின் பரப்பளவு 129 சதவீதமும் அதிகரித்​துள்ளது. இதைச் சரிசெய்யக் குறைந்த நீர் உறிஞ்சும் பயிர்​களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி, அதன் கொள்முதல் உள்கட்​டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும்.

அதிகரித்து​வரும் தண்ணீர்ப் பற்றாக்குறை மாநிலங்​களுக்கு இடையே​யும், மாவட்​டங்​களுக்கு இடையேயும் மோதல்களை ஏற்படுத்துவது மட்டுமல்​லாமல், தண்ணீர் வழங்கு​வதற்கான செலவையும் சேர்த்தே அதிகரிக்​கிறது. நீர்த்தேவை சார்ந்த பிரச்சினை​களைச் சரிசெய்யும் அதே வேளையில், நீர் இருப்பை அதிகரிக்க குளம், ஏரி போன்ற​வற்றை மீட்டெடுப்​ப​தற்கும் புதுப்​பிப்​ப​தற்கும் ஒருங்​கிணைந்த முயற்சிகள் தேவை.

- தொடர்புக்கு: narayana64@gmail.com

மார்ச் 22 - உலக தண்ணீர் தினம்

SCROLL FOR NEXT