டெல்லியில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி, வெளிநாட்டினர் தங்கியிருக்கின்றனரா என்ற சோதனை சில தினங்களாக நடந்து வருகிறது. இதில், வங்கதேசத்தைச் சேர்ந்த 132 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பது கண்டறியப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதில் கானா, உகாண்டா, நைஜீரியா, உஸ்பெகிஸ்தான் போன்ற பல நாட்டவர்களும் அடங்குவர்.
வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டு ஆட்சிமாற்றம் நடந்ததில் இருந்தே, அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கடந்த 5 மாதங்களில் அசாமில் 1000 பேர், திரிபுராவில் 1000 பேர் ஊடுருவியிருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வங்கதேசத்தை ஒட்டிய அசாம், திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய எல்லையோர மாநிலங்களில் ஊடுருவல் அதிகரித்துள்ளது.
வங்கதேசத்தில் சமீபத்தில் கலவரம் ஏற்பட்டதால், அந் நாட்டின் பிரதான தொழில்களில் ஒன்றான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதில் வேலையிழந்த பல தொழிலாளர்கள் இந்தியாவிற்குள் வேலை தேடி ஊடுருவ முயல்கின்றனர். இந்த விவகாரம் வங்கதேசத்தை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களோடு முடிந்துவிடவில்லை. ஜவுளி உற்பத்தியில் வங்கதேசத்திற்கு போட்டியாக திகழும் தமிழகத்தின் திருப்பூர் ஊடுருவல்காரர்களின் இலக்காக உள்ளது.
சமீபத்தில் கோவை, திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்த வங்கதேசத்தவர் பிடிபட்டனர். அவர்களிடம் இந்தியர் என்பதற்கான அடையாளமாக போலி ஆதார் அட்டைகள் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆதார் அட்டைகளை ஏற்பாடு செய்து கொடுத்த ஏஜென்ட் ஒருவரும் திருப்பூரில் பிடிபட்டுள்ளார். அவர் கடந்த 13 ஆண்டுகளாக இந்தியாவின் பல பகுதிகளில் வசித்திருப்பதும், மேற்குவங்கத்தில் சட்டவிரோத அமைப்பு ஒன்றுடன் தொடர்புடையவராக இருந்து, அசாம் காவல் துறையால் தேடப்படும் குற்றவாளியாக இருந்ததும் அதிர்ச்சிகரமான தகவல்களாக உள்ளன.
இன்னும் சொல்லப்போனால், வங்கதேசத்தின் அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சிலரே பணம் செலவழித்து ஏஜென்ட்கள் மூலம் குறைந்த சம்பளத்திற்கு வேலையாட்களை வரவழைப்பதாக வரும் தகவல்கள் மேலும் அதிர்ச்சியூட்டுகின்றன. நைஜீரியா, உகாண்டா போன்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் போதைப்பொருட்களை தமிழகத்திற்குள் கொண்டு வருவதற்கான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். போதைப்பொருள் சோதனையில் சமீபத்தில் பிடிபட்ட வெளிநாட்டவர்களிடம் நடந்த விசாரணையில் இந்த தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
கோவை, திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்ற உத்தரவு இருந்தாலும், போலியான ஆவணங்களுடன் வருபவர்களை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. காவல் துறையால் மட்டுமே போலி ஆவணங்கள் வைத்திருப்பவர்களைக் கண்டறிய முடியும். வெளிநாட்டவர் ஊடுருவல் விவகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே தொடர்புடையது என்று தமிழக அரசு அலட்சியமாக இல்லாமல், அவர்களது தொடர்பு தமிழகம் வரை நீள்வதால் தமிழகத்திலும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி, சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கண்டுபிடித்து அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
6 days ago