மிக முக்கியமான விண்வெளிச் சாதனையுடன்தான் இந்தியாவில் 2024ஆம் ஆண்டின் முதல் நாள் பிறந்தது. எக்ஸ்ரே போலரிமீட்டர் செயற்கைக்கோள் (XPOSAT) என்னும் அதிநவீன விண்வெளி எக்ஸ் கதிர் தொலைநோக்கி, ஜனவரி 1 அன்று விண்ணில் ஏவப்பட்டது.
கருந்துளை, நியூட்ரான் விண்மீன் போன்ற பொருள்கள் பிரபஞ்சத்தில் எக்ஸ் கதிர்களை வெளியிடும். இவற்றை இந்தத் தொலைநோக்கி ஆய்வு செய்யும். ஆகஸ்ட் மாதம் ‘எஸ்எஸ்எல்வி-டி3’ (SSLV-D3) ஏவூர்தி மூலம் ‘இஓஎஸ்-08’ (EOS-08) என்னும் புவி கண்காணிப்பு மைக்ரோசாட் விண்கலத்தையும், பிப்ரவரி மாதம் ஜிஎஸ்எல்வி-எஃப்14 (GSLV-F14) ஏவூர்தி மூலம் ‘இன்சாட்-3டிஎஸ்’ (INSAT-3DS) விண்கலத்தையும் விண்ணில் ஏவியுள்ளது இஸ்ரோ.
முழு சூரிய கிரகணம் நடைபெறும் சில நொடிகள் மட்டுமே சூரியனின் மேற்புறத்தில் உள்ள ‘கரோனா’ எனும் சூரிய வளிமண்டலம் தென்படும். இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி, ஒன்றின் முன்னே மற்றொரு விண்கலத்தைத் துல்லியமாக நிலைநிறுத்தினால், முதல் விண்கலம் சரியாகச் சூரியனை மறைத்து - கிரகணம் செய்ய - இரண்டாவது விண்கலத்திலிருந்து செயற்கைச் சூரிய கிரகணத்தைக் காணலாம்.
இந்த வியப்பான அமைப்புதான் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கட்டமைத்துள்ள ‘புரோபா-3’ சூரிய ஆய்வு விண்கலம். கடந்த டிசம்பர் 5 அன்று இஸ்ரோவின் ‘பிஎஸ்எல்வி - எக்ஸ்.எல் சி-59’ (PSLV-XL C-59) ஏவூர்தி மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டு ரயில் பெட்டியை இணைப்பது போல டிசம்பர் 20 அன்று ‘ஸ்பேடெக்ஸ்’ (SPADEX) என்னும் திட்டம் மூலம் இரண்டு விண்கலங்களை விண்வெளியில் பிணைக்கும் சாதனையை இஸ்ரோ சாதிக்க உள்ளது.
» பாம்பன் பாலத்தில் என்ன பிரச்சினை?
» பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 1000 கன அடியாக குறைப்பு
400 கிலோ எடை கொண்ட தொடர்ந்துசெல்லும் விண்கலம், இலக்கு விண்கலம் என்கிற இரண்டு செயற்கைகோள்கள் ஒருசேர விண்ணில் ஏவப்பட உள்ளன. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இப்படியான சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்னும் பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும். டிசம்பர் 31 அன்று என்விஎஸ்-2 என்ஏவிஐசி (NVS-2 NavIC) செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி ஏவூர்தி மூலம் செலுத்தி, இந்தியாவின் சொந்த ஜி.பி.எஸ். அமைப்புக்கு வலுசேர்க்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
மருத்துவத் துறையில்... காசநோயை உருவாக்கும் மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் என்னும் கிருமி, எப்படி நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஏய்த்துப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஹைதராபாத் சிஎஸ்ஐஆர் - செல் - மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வு வழியே மேலும் திறன் மிகுந்த காசநோய் மருந்துகளைத் தயாரிக்க முடியும். இந்தியாவின் மூன்று கட்ட அணு ஆற்றல் உற்பத்தித் திட்டத்தின் மிக முக்கியக் கண்ணியான ஈனுலை அணுமின் நிலையம் தொடங்கப்பட்டிருக்கிறது.
பெங்களூருவில் உள்ள ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (The Institute for Stem Cell Science and Regenerative Medicine) சுனில் லக் ஷ்மண் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், ஆற்றல் பற்றாக்குறையை எதிர்கொள்வதில் செல்கள் பயன்படுத்தும் முன்னுரிமை உத்திகளுக்கான கட்டமைப்பை இனம் கண்டுள்ளனர்.
சென்னை ஐஐடி இயற்பியல் துறை ஆய்வாளர் சுந்தர ராமபிரபு தலைமையிலான ஆய்வுக் குழுவினர் நானோகேடலிஸ்ட்களை உருவாக்கிக் கடல் நீரை மின்பகுப்பு செய்து, பசுமை ஹைட்ரஜனைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். மாற்று எரிசக்தித் துறையில் இது பெரும்பயன் தரும்.
ஹைதராபாதில் உள்ள மிதவறட்சி வெப்பமண்டல சர்வதேசப் பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICRISAT) சுவாமிக்கண்ணு நெடுமாறன் உள்பட சர்வதேச ஆய்வாளர்கள் பெண்களுக்குப் பணம், குடும்ப வருவாய் போன்ற முடிவுகளில் முடிவெடுக்கும் அதிகாரம் அதிகரிக்கும்போதும், குடும்ப ஊட்டச்சத்து நிலை மேலும் மெச்சத்தகுந்த நிலையை அடைகிறது எனக் கண்டறிந்துள்ளனர்.
கான்பூர் ஐஐடியைச் சேர்ந்த வேதியியல் பேராசிரியரான சந்தீப் வர்மா தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், அதிக வெப்பநிலையிலும் நிலையாக இருக்கும் இன்சுலின் ஒப்பு மருந்து ஒன்றைத் தயாரித்துள்ளனர். தொலைதூரப் பகுதிக்கும், மின்சாரம் இல்லாத நிலையிலும் மனித இன்சுலின் மருந்தைப் பயன்படுத்த இது வழிவகை செய்யும்.
இன்னும் பல சாதனைகள்: பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கு மாற்றாக வேதி ஆற்றலை நேரடியாக மின்னாற்றலாக மாற்றக்கூடிய மின்வேதியியல் எரிபொருள் மின்கலம் (Fuel cell) முன்னணியில் உள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் மிகப் பெரிய சிக்கல், இதில் பயன்படுத்தப்படும் வினைவேகமாற்றி வேதிப்பொருள்கள்தாம்.
புணேயில் உள்ள இந்திய அறிவியல் கல்வி - ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER) வேதியியல் இணைப் பேராசிரியரான முஸ்தபா ஒட்டகம்தொட்டியில் (Musthafa OttakamThotiyl) தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் திறன் மிக்க கோபால்ட் அடிப்படையிலான மூலக்கூறு வினையூக்கிகளை வடிவமைக்க முடியும் என நிறுவியுள்ளனர்.
சென்னை ஐஐடி வேதியியல் துறையின் பேராசிரியர் தாளப்பில் பிரதீப் தலைமையிலான ஆய்வுக் குழு, மைக்ரோ உளிகளால் மைக்ரோ மீட்டர் அளவிலான கனிமத் துகள்களை உடைத்து, நானோ பொருள்களை உருவாக்க முடியும் என நிறுவியுள்ளது. நோயாளியின் படுக்கை அருகிலேயே பரிசோதனை முடிவுகளைக் கண்டறிய மைக்ரோபபிள் லித்தோ கிராபி எனப்படும் முறையைப் பயன்படுத்தி, புதிய நுட்பத்தை இந்திய அறிவியல் கல்வி - ஆராய்ச்சி நிறுவனத்தைச் (IISER) சேர்ந்த அயன் பானர்ஜி தலைமையிலான ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஹைதராபாத் ஐஐடி பேராசிரியர்கள் பி.வெங்கடேஷம், எஸ்.சூர்யகுமார் தலைமையிலான குழுவினர் தேனீ கூட்டிலிருந்து ஒலி ஆற்றலைச் சிதறடிக்கும் திறன் கொண்ட புதிய பொருள்களை உருவாக்கியுள்ளனர். காகிதத் தேன்கூடு, பாலிமர் தேன்கூடு மூலம் புனையப்பட்ட இத்தகைய தாள்கள் இரைச்சல் கட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கும் என்கிறார்கள்.
மகாராஷ்டிர வனத் துறையுடன் இணைந்து, அசோகா சுற்றுச்சூழல் அறக்கட்டளை (ATREE) ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய ஆய்வு, பூர்விகப் புற்களை நடுவதன் மூலம் சுற்றுச்சூழலை மறுசீரமைத்து, மூன்று ஆண்டுகளில் மண்ணின் கரிமக் கார்பனை 50% வரை அதிகரிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. இதன் மூலம் வளிமண்டல கார்பன் மாசை அகற்றி புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த முடியும்.
இந்தியா, அமெரிக்காவில் செயல்படும் புராஜெக்ட் பிரகாஷின் (Project Prakash) ஆராய்ச்சியாளர்கள், ‘மூளை வளர்ச்சியின் தொடக்கக் காலத்தில் சிறு குழந்தையால் நிறங்களைக் காண முடியாது; வெறும் ஒளியின் பிரகாச வேறுபாட்டைக் கறுப்பு வெள்ளையாகத்தான் குழந்தை உணரும்; படிப்படியாகத்தான் நிறக்காட்சி ஏற்படுகிறது’ எனக் கண்டறிந்துள்ளனர்.
மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் - தொழில்நுட்ப நிறுவனத்தின் (INST) தீபா கோஷ் தலைமையிலான ஆய்வுக் குழு, நாள்பட்ட காயங்களுக்குப் புதுமையான சுய-இயங்கும் காயக்கட்டை உருவாக்கியுள்ளது. நீரிழிவு பாதப் புண்கள் உள்ள நபர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையக்கூடும். மூளை செல்களான நியூரான்களின் தொடர்புக்கு மிக அவசியமான சினாப்டிக் வெசிகல் (எஸ்வி) புரதங்கள், தாம் உருவாகும் இடத்திலிருந்து சென்றுசேர வேண்டிய இடத்தை எப்படி அடைகின்றன என்பது மர்மமாக இருந்துவந்தது.
மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தின் இணைப் பேராசிரியை சந்தியா பி.கௌஷிகா தலைமையிலான ஆய்வுக் குழுவினர், கெய்னோராப்டிடிஸ் எலிகன்ஸ் எனும் உருண்டைப் புழுவின் மூளை நியூரான் செல்களை ஆய்வுசெய்து இந்தப் போக்குவரத்தை ஒழுங்குசெய்யும் மூன்று முக்கியப் புரதங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு மூளை சம்பந்தமான நோய்களைப் புரிந்துகொள்ள உதவும்.
இப்படிப் பல்வேறு சாதனைகள் இருந்தாலும் முதன் முறையாக அறிவியல் விருதுகளில் அரசியல் தலையீடு இருந்ததாக எழுந்த விமர்சனங்களும் பெரும் பேசுபொருளாகின. அறிவியல் ஆய்வுகளுக்கான நிதியும் குறைக்கப்பட்டுவருகிறது. 2025ஆம் ஆண்டில் இந்தக் குறைகள் களையப்பட்டு, இந்திய அறிவியல் இன்னும் பல படிகள் முன்னேறட்டும்!
- தொடர்புக்கு: tvv123@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago