ஜெயலலிதா... சில நினைவுகள்! - ‘துக்ளக்’ ரமேஷ் பகிர்வு

By செய்திப்பிரிவு

தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுடன், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக அவர் பொறுப்பேற்று, சுற்றுப்பயணங்கள் மேற்கொண்ட காலகட்டத்தில் எனக்கு அறிமுகம் கிட்டியது. என்றாலும், அவரது 45 ஆண்டுகால பொது வாழ்க்கைப் பயணத்தில், கடைசி 20 ஆண்டுகளில் அடிக்கடி சந்திக்கவும், நேரடியாகப் பலமுறை உரையாடவும் ‘சோ’ மூலம் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அரசியலில் ஈடுபடும் பெண்களில் பலர் அறிவுக் கூர்மையும், திறமையும் கொண்டவர்களாய் இருப்பினும், சுலபத்தில் அவர்களால் உயர் பொறுப்புகளுக்கு வரமுடிவதில்லை. அவச் சொற்களையும், அவதூறுகளையும் அரசியலுக்கு வரும் பெண்களில் பலர் எதிர்கொள்ள நேரிடுகிறது. திரைத்துறை புகழ் பின்னணி மட்டுமின்றி, எம்.ஜி.ஆரின் ஆதரவோடு அதிமுகவுக்கு அடியெடுத்து வைத்த ஜெயலலிதாவும் அத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது.

கட்சிக்குள் வந்ததும் விரைவாக கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார்; ராஜ்ய சபா உறுப்பினர் பதவி பெற்றார் என்பது மட்டும் பார்க்கப்படுகிறது. அதே இயக்கத்தில் இருந்து அவரை அவமதித்தும், அச்சுறுத்தியும் வெளியேற்ற நடந்த முயற்சிகள் நினைவுகூரப்படுவதில்லை.

இதற்குச் சான்றுகளாக, அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வந்த சமயத்தில், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து நடு இரவில் வெளியேறுமாறு அவர் கட்டாயப்படுத்தப்பட்டார்; எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலம் புறப்படும் சமயத்தில் அவருக்கு நேர்ந்த அவமதிப்பு மற்றொரு நிகழ்வு. இதன்பிறகு சட்டசபையில் அவர் மீது நடந்த தாக்குதலை சொல்லலாம்.

1996 தேர்தல் தோல்விக்குப் பிறகு, வழக்குகள் - கைது - சிறைவாசம் என்று அடுத்தடுத்து சோதனைகள். அந்த காலகட்டத்தில் அவரோடு உரையாடிய தருணங்களில், சோர்வடையாமல், மன உறுதியுடனும், தன்னம்பிக்கையுடனும் அவர் இருந்ததை கண்டிருக்கிறேன்.

பொது முக்கியத்துவம் வாய்ந்த சில பிரச்சினைகள் தொடர்பாக அவரது கவனத்துக்கு நான் கொண்டு சென்றபோது, அவற்றுக்கு உடனே தீர்வு கண்டிருக்கிறார். அம்மா உணவகங்களை மாநிலம் முழுவதும் திறப்பது; சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் சிறிய பேருந்துகளை அறிமுகப்படுத்துவது, வீடுகளில் நிலத்தடி நீர் கட்டமைப்பை கட்டாயப்படுத்துவது - ஆகியன குறித்து அவரோடு உரையாடியுள்ளேன்.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் முறையற்ற செயல்கள் குறித்து எனக்கு வந்த தகவல்களை, முதல்வராக இருந்த அவரிடம் தெரி வித்தபோது, அதுகுறித்து தானும் விசாரித்து அறிந்து, மாநகராட்சி மன்ற உறுப்பினர்களை அழைத்து, ‘‘மாநகராட்சி மன்றத்தைக் கலைக்கத் தயங்க மாட்டேன்; தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால், கைது செய்யப்படுவீர்கள்’’ என்று எச்சரித்தார். 2001-ல் தமாகாவுடன் அதிமுக கண்ட கூட்டணி, 2011-ல் தேமுதிகவுடன் உருவான கூட்டணி ஆகியவற்றில் ‘சோ’ முக்கிய பங்கு வகித்தார். அப்போது சில தகவல்களைத் தெரிவிப்பதற்கு நம்பிக்கைக்குரியவனாக என்னைக் கருதினார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சையில் முக்கியமாகக் கூறப்படுவது, உயர்தர சிகிச்சைக்காக அவர் ஏன் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படவில்லை என்பதாகும். அவருக்கு அதில் விருப்பம் இல்லை என்று அப்போலோ மருத்துவர்களிடம் அவரே தெரிவித்தார் என்று சொல்லப்படுவதை இன்றும்கூட பலர் நம்ப மறுக்கிறார்கள். ஆனால் செல்வி ஜெயலலிதா அப்படி கூறியிருப்பார் என்று நான் நம்புவதற்கு ஒரு சம்பவத்தை இங்கு சொல்வது பொருத்தமாக இருக்கும்.

‘சோ’ இரண்டு மூன்று முறை சுவாசப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருமுறை அவரைக் காண ஜெயலலிதா மருத்துவமனை வந்திருந்தபோது அந்த அறையில் நானும் இருந்தேன். அப்போது ‘சோ’ , ஜெயலலிதா மிகவும் தளர்ந்த நிலையில் இருப்பதாகக் கருதி, ‘‘அம்மு, (ஜெயலலிதா) நீ ஏன் அமெரிக்கா அல்லது சிங்கப்பூர் சென்று முழு பரிசோதனை செய்து கொள்ளக் கூடாது?’’ என்று கேட்டார். ‘‘டயாபடிஸ் எப்படி இருக்கிறது’’ என்று கேட்டுவிட்டு, இந்த யோசனையைச் சொன்னார்.

அப்போது ஜெயலலிதா, ‘‘இங்கே இல்லாத மருத்துவர்கள், மருத்துவ வசதியா?’’ என்று கூறினார். பத்திரிகையாளர்களுடன் அவர் நெருக்கம் பாராட்டியதில்லை என்று சிலர் கூறுவதுண்டு. பெண் தலைவர் என்ற முறையில் ஒரு இடைவெளி இருப்பது இயல்பு. பல பத்திரிகையாளர்களை பெயர் கூறி அழைக்கும் அளவுக்கு அவர் அறிந்திருந்தார்.

அவர்களது பத்திரிகையில் வெளிவந்த தன்னைக் குறித்த விமர்சனம் குறித்து, தனது அதிருப்தி அல்லது ஆட்சேபத்தைக் கூறுவார். என்னிடமும் இது நடந்திருக்கிறது. மத்திய ஆளும் கட்சியுடன் சமரசங்கள் செய்துகொண்டு போவதில் உடன்பாடு இல்லாதவர் ஜெயலலிதா. அவரை அச்சுறுத்திப் பணிய வைக்க முடியாது. பல வகைகளில் அவர் ஒரு தனித்துவமான தலைவர்.

| டிச.5 - இன்று: ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினம் |

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்