இந்தியாவில் குழந்தைத் திருமணம் | சொல்... பொருள்... தெளிவு

By இந்து குணசேகர்

இந்தியாவில் ஒரு நிமிடத்தில் மூன்று குழந்தைத் திருமணங்கள் நடப்பதாகச் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ‘இந்தியா சைல்டு புரொடெக் ஷன்’ (India Child Protection) என்னும் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டிருக்கும் இந்த ஆய்வறிக்கையில், “இந்தியாவில் ஒரு நிமிடத்தில் 3 சிறுமிகளுக்குக் குழந்தைத் திருமணம் நடைபெறுகின்றன; அதேநேரத்தில், குழந்தைத் திருமணம் தொடர்பாக ஒரு நாளில் 3 வழக்குகள் மட்டுமே பதிவுசெய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2011 மக்கள்​தொகைக் கணக்கெடுப்பு, தேசியக் குற்ற​வியல் ஆவணக் காப்பகப் பதிவுகள், தேசியக் குடும்ப நல ஆய்வு ஆகியவற்றின் தரவுகளின் அடிப்​படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்​பட்​டுள்ளது. உலக நாடுகளில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறும் நாடாக இந்தியா உள்ளது. உலகளவில் நடைபெறும் குழந்தைத் திருமணங்​களில் 45% தெற்காசி​யாவில் நடைபெறுகின்றன. இதில் 34% இந்தியாவில் நடப்ப​தாகத் தரவுகள் தெரிவிக்​கின்றன.

இந்தியா - தமிழ்நாடு: இந்தியச் சட்டங்​களின்படி பெண்களின் திருமண வயது 18, ஆண்களின் திருமண வயது 21 என வரையறுக்​கப்​பட்​டுள்ளது. இதற்குக் குறைவான வயதுடையோர் இடையே நடைபெறும் திருமணங்கள் குழந்தைத் திருமணங்கள் என அழைக்​கப்​படு​கின்றன. இந்தியாவில் 20-24 வயதுக்கு உள்பட்ட பெண்களில் 18 வயதுக்கு முன் திருமணம் செய்து​வைக்​கப்​பட்​ட​வர்கள் எத்தனை பேர் என்பதே குழந்தைத் திருமணத்தைக் கணக்கிடு​வதற்கான பொதுவான அளவுகோல்.

அதன்படி, இந்தியாவில் 20-24 வயதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களில் குழந்தைத் திருமணம் செய்து​வைக்​கப்​பட்​ட​வர்கள் மேற்கு வங்கம் (42%), பிஹார் (41%), திரிபுரா, (40%) ஜார்க்​கண்ட் (32%), அசாம் (31%) ஆகிய மாநிலங்​களில் அதிகமாக உள்ளதாக தேசியக் குடும்ப சுகாதார ஆய்வு - 5இல் (2019 - 2021) தெரிவிக்​கப்​பட்​டுள்ளது. நாகாலாந்து (6%), இமாச்சலப் பிரதேசம் (5%), ஐம்மு - காஷ்மீர் (5%), லடாக் (3%), லட்சத் தீவுகள் (1%) போன்ற மாநில/மத்திய ஆட்சிப் பகுதி​களில் இதே வயதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களில் குழந்தைத் திருமணம் செய்து​வைக்​கப்​பட்​ட​வர்கள் குறைவாக உள்ளனர்.

தமிழ்நாடு போன்ற வளர்ச்​சி​யடைந்த மாநிலங்​களிலும் குழந்தைத் திருமணங்கள் கரோனா காலத்​துக்குப் பிறகு கணிசமாக அதிகரித்​துள்ளன. தமிழ்​நாட்டில் ஒரு நாளில் சராசரியாக 10 குழந்தைத் திருமணங்கள் நடப்ப​தாகத் தமிழ்நாடு அரசின் சமூகநலன் - மகளிர் உரிமைத் துறை வெளியிட்​டுள்ள புள்ளி​விவரங்கள் கூறுகின்றன.

வறுமையும் வேலையின்​மையும்: குழந்தைத் திருமணங்​களுக்கு முதன்மைக் காரணம் குடும்பத்தில் நிலவும் வறுமை. குடும்பத்தின் பொருளா​தாரச் சூழல் வலிமையாக இல்லாத​போது, பெண் குழந்தை​களைச் சிறு வயதிலே திருமணம் செய்து​வைக்கும் முடிவைப் பெற்றோர் எடுக்​கின்​றனர். குழந்தை​களுக்குக் கல்வி சரியாகக் கிடைக்​காத​போதும், பொருளா​தாரச் சூழல் உள்ளிட்ட காரணங்​களால் கல்வி கற்பதில் தடை ஏற்படும்​போதும் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்​கின்றன.

அடுத்து வேலையின்மை. உள்ளூரில் வேலைவாய்ப்பு இல்லாத சூழலில் பிழைப்புத் தேடிப் பிற மாவட்​டங்​களுக்குச் செல்லும் பெற்றோர் பாதுகாப்பு குறித்த அச்சத்தின் காரணமாக, பெண் குழந்தை​களுக்குப் பதின்​பருவம் தொடங்கிய உடனேயே திருமணம் செய்து​வைக்கும் போக்கும் தொடர்​கிறது. குழந்தைத் திருமணம் நகரங்​களைக் காட்டிலும் கிராமங்​களில் கூடுதலாகப் பதிவாகிறது. கிராமங்​களில் 20-24 வயதுப் பெண்களில் 27% பேர் குழந்தைத் திருமணம் செய்து​வைக்​கப்​பட்​ட​வர்கள். நகரங்​களில் 15%.

கொடிய விளைவுகள்: குழந்தைத் திருமணங்​களால் பெண் குழந்தை​களின் கல்வி பறிக்​கப்​படு​வ​தால், தமது அனைத்துத் தேவைகளுக்கும் குடும்பத்​தினரையே அவர்கள் சார்ந்​திருக்கும் சூழல் ஏற்படு​கிறது. குறிப்பாக, இத்திரு​மணங்கள் சிறுமிகளைக் குடும்ப வன்முறைக்கும் சுரண்​டலுக்கும் உட்படுத்து​கின்றன.

இந்தியாவில் கட்டாயப்​படுத்​தப்​பட்டுத் திருமணம் செய்து​வைக்​கப்​படும் சிறுமிகளில் 60%க்கும் அதிகமானோர் ரத்தசோகையால் பாதிக்​கப்​படு​கின்​றனர். இப்பா​திப்பால் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்​சத்துக் குறைபாட்டுடன் பிறக்​கின்றன. பிரசவத்​தின்போது குழந்தை இறப்பும் நிகழ்​கிறது.

குழந்தைத் திருமணத்தைத் தடுக்க... குழந்தைத் திருமணங்​களைத் தடுக்​க​வும், குழந்தைத் திருமணங்​களில் ஈடுபடு​பவர்​களுக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ‘குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்’ (2006) இயற்றப்​பட்​டுள்ளது. இந்தச் சட்டத்​தின்படி, குழந்தைத் திருமணம் நடத்திவைப்​பவர், திட்ட​மிட்​டவர், திருமணச் சடங்கை நிகழ்த்​துபவர் ஆகியோ​ருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் கடுங்​காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்​படு​கிறது. ஆனால், திருமணத்தை நடத்தி​வைத்​த​தாகக் குற்றம்​ சாட்​டப்​பட்​டவர், தான் செய்து​வைத்தது குழந்தைத் திருமணம் என்பது தனக்குத் தெரியாது என்பதை நிரூபித்தால் அவர் தண்டனையி​லிருந்து தப்பிவிட முடியும்.

குழந்தைத் திருமணங்​களைத் தடுக்கப் பெண்களின் திருமண வயதை 18இலிருந்து 21 ஆக உயர்த்த வழிவகை செய்யும் சட்டம் இமாச்சலப் பிரதேசச் சட்டப்​பேர​வையில் நிறைவேற்​றப்​பட்​டிருக்​கிறது. தேசிய அளவிலும் இச்சட்​டத்தைச் செயல்​படுத்த மாநிலங்​களில் தொடர்ந்து விவாதங்கள் நடத்தப்​பட்டு​ வரு​கின்றன. மேலும், குழந்தைத் திருமணம் தொடர்​பாகப் புகார் அளிக்க 1098 என்கிற எண்ணும் அரசுத் தரப்பில் அறிவிக்​கப்​பட்​டுள்ளது.

முன்னு​தா​ரணமான அசாம்: குழந்தைத் திருமணத்தைக் கட்டுப்​படுத்தும் நடவடிக்கை​களில் இந்தியாவில் பிற மாநிலங்​களுக்கு அசாம் முன்னு​தா​ரண​மாகி​யுள்ளது. 2021 - 2022, 2023 - 2024 காலக்​கட்​டங்​களில் அசாமில் 20 மாவட்​டங்​களில் உள்ள 1,132 கிராமங்​களில் குழந்தைத் திருமணம் கிட்டத்தட்ட 81% குறைந்​துள்ள​தாகத் தேசியக் குடும்ப சுகாதார ஆய்வு கூறுகிறது. அசாமில் 2021 - 2022இல், 3,225 குழந்தைத் திருமணங்கள் பதிவான நிலையில், இந்த எண்ணிக்கை 2023 - 2024இல் 627 ஆகக் குறைந்​துள்ளது.

2023இல் மட்டும் குழந்தைத் திருமணம் தொடர்பாக 3,000 கைது நடவடிக்கைகளை அசாம் அரசு மேற்கொண்​டிருக்​கிறது.
2022இல் பதிவான, 3,563 குழந்தைத் திருமண வழக்கு​களில் வெறும் 181 வழக்குகள் மட்டுமே வெற்றிகரமாக முடித்து வைக்கப்​பட்​ட​தாகச் சுட்டிக்​காட்டும் குழந்தை நல ஆர்வலர்கள், குழந்தைத் திருமணங்​களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்​படுத்​தியதன் மூலமே அசாமில் குழந்தைத் திருமணங்கள் குறைந்​திருப்​ப​தாகத் தெரிவிக்​கின்​றனர்.

யுனிசெஃப் கணிப்பு: குழந்தைத் திருமணங்கள் அனைத்தும் கட்டாயத் திருமணங்களே எனச் சுட்டிக்​காட்டும் உச்ச நீதிமன்றம், அத்திரு​மணங்கள் நிகழாமல் தடுப்பது மிகவும் முக்கியம் என வலியுறுத்​தி​யிருக்​கிறது. இந்தியாவில் 2006இல் 20-24 வயதுடைய பெண்களில் 47% பெண்கள் குழந்தைத் திருமணம் செய்து​வைக்​கப்​பட்​ட​வர்களாக இருந்​தனர். 2019-21 இல் இது 23.3% ஆகக் குறைந்​துள்ளது. இருப்​பினும், ஆந்திரப் பிரதேசம், அசாம், பிஹார், ஜார்க்​கண்ட், ராஜஸ்​தான், தெலங்​கானா, திரிபுரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்​களில் குழந்தைத் திருமணங்​களின் எண்ணிக்கை தேசியச் சராசரியைவிட அதிகமாகவே உள்ளது.

2030க்குள் தெற்காசி​யாவில் குழந்தைத் திருமணங்​களின் எண்ணிக்கை குறைந்​தாலும் அவற்றை முழுமையாக அகற்ற 55 ஆண்டுகள் தேவைப்​படலாம் என ஐ.நா. குழந்தை நல அமைப்பான யுனிசெஃப் கணித்​துள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு, வரும் காலத்தில் குழந்தைத் திருமணம், குழந்தை மகப்பேறு குறித்த பாடங்​களைப் பள்ளிக் கல்வியில் அறிமுகப்​படுத்​துதல், பாலியல் கல்வியை அறிமுகம் செய்தல் போன்ற விழிப்பு​ணர்வு நடவடிக்கை​களில் அரசு இறங்க வேண்​டும். குழந்தைத் ​திரு​மணங்​களில் ஈடு​படு​வோரைத் தண்​டிப்​ப​தற்கான சட்​டங்​களையும் வலுப்​படுத்த வேண்​டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்