மணிப்பூரில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் நிகழத் தொடங்கியிருப்பது பெரும் வருத்தம் அளிக்கிறது. அம்மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில், திடீர்த் தாக்குதலில் ஈடுபட்ட குக்கி பழங்குடி அமைப்பைச் சேர்ந்த 11 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களில் மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் எரித்துக் கொல்லப்பட்டனர்; ஆறு மாதக் குழந்தை உள்பட ஆறு பேர் கடத்தப்பட்டிருக்கின்றனர்.
நவம்பர் 11ஆம் தேதி பிற்பகலில், ஜிரிபாம் மாவட்டத்தின் போரெபேக்ராவில் உள்ள ஜாக்குராதோர் கரோங் சந்தைப் பகுதியின் குடியிருப்புகள், கடைகள், காவல் நிலையம், சிஆர்பிஎஃப் முகாம்கள் ஆகியவற்றின் மீது ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். சிஆர்பிஎஃப் வீரர்கள் நடத்திய பதிலடித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் குக்கி பழங்குடியினக் கிராமங்களில் தன்னார்வலர்களாகச் செயல்பட்டுவந்தவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது.
கொல்லப்பட்டவர்களிடமிருந்து நவீன ரக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அவர்களின் மறைவு ஒட்டுமொத்த குக்கி சமூகத்துக்கும் இழப்பு என குக்கி ஸோ கவுன்சில் (சி.ஓ.டி.யூ) வருத்தம் தெரிவித்திருக்கிறது. 12 மணி நேர முழு அடைப்புக்கும் அழைப்பு விடுத்தது. நவம்பர் 7 இல் ஜிரிபாம் மாவட்டத்தின் ஸைரான் கிராமத்தில் குக்கி பழங்குடிப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மெய்தேய் சமூக ஆயுதக் குழுவினர், போரெபேக்ரா காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்திருந்ததாகவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தவே குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வந்ததாகவும் குக்கி ஸோ கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே நாள் அதிகாலை 3 மணி அளவில், விஷ்ணுபூர் மாவட்டத்தின் சைய்தோன் பகுதியில் ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.
அசாம் ரைஃபிள்ஸ், சிஆர்பிஎஃப், காவல் துறை எனப் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் இருந்தும், மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. குக்கி பழங்குடிகளிடம் மன்னிப்புக் கோராமல் சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்கள் முகாமிலிருந்து வெளியேறக் கூடாது என்று குக்கி பழங்குடி அமைப்புகள் மிரட்டல் விடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது.
மெய்தேய் சமூகத்தினர், காவல் துறையினர், பாதுகாப்புப் படையினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், ‘ஹ்மார் கிராமத்தின் தன்னார்வலர்கள்’ என்ற குக்கி பழங்குடி அமைப்பு அக்டோபர் 19இல் நடத்திய தாக்குதலும் புதிய பதற்றத்தைத் தோற்றுவித்திருக்கிறது.
» தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: கால் இறுதியில் பஞ்சாப், தமிழ்நாடு அதிர்ச்சி தோல்வி
» தமிழக அரசை கண்டித்து அதிமுக நவ.19-ம் தேதி ஆர்ப்பாட்டம்: செங்கை பதுவஞ்சேரியில் நடக்கிறது
இப்படியான சூழலில், 2014 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் வட கிழக்கு மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் 82% குறைந்திருப்பதாக உள்துறை விவகாரங்களுக்கான நிலைக்குழுவிடம் அளித்திருக்கும் அறிக்கையில், மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது பொருத்தமற்றது. இதில் மணிப்பூர் நிலவரம் சேர்க்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் முன்வைத்திருக்கும் விமர்சனம் புறந்தள்ளத்தக்கது அல்ல.
அதேபோல், குக்கி பழங்குடியினரை முதல்வர் பிரேன் சிங் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என அந்தச் சமூகத்தைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்கள் கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். இவர்களில் ஆறு பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
பெரும்பான்மையாக உள்ள மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த முதல்வர் பிரேன் சிங் தனது சமூகத்தினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக குக்கி பழங்குடியினர் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்கிற அளவில் ஆழமான மனக்காயங்களும் பகையுணர்வும் அச்ச உணர்வும் இரு தரப்பிலும் வேரூன்றி இருப்பதையே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசும் மாநில அரசும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்காவிட்டால், அசம்பாவிதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம்!
***
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago