சாதிகளால் ஆன இந்தியச் சமூகத்தை ஆழமாகப் புரிந்துகொள்வதுடன் அக்கற்பனைக் கோட்பாட்டை அழித்தொழிப்பதற்கான தேவையை உணர்ந்தவர்களால் மட்டும்தான் பெரியாரின் பொருத்தப்பாட்டையும் சாதியொழிந்த ஒரு சமூகத்தை உருவாக்க, அரை நூற்றாண்டுக் காலம் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பையும் உணர்ந்துகொள்ள முடியும்.
அவர் நாள்தோறும் எழுதியதும் உரையாடியதும் போராடியதும் சிந்தித்ததும் பிறவி இழிவை முற்றாக அழித்து, சுயமரியாதையுடன் கூடிய சமத்துவச் சமூகத்தை உருவாக்குவதற்காகவே என்பதை இந்த நாடும் சமூகமும் புரிந்துகொண்டிருந்தால், இந்நாட்டின் உயரிய விருது அவருக்கு நல்கப்பட்டிருக்கும்.
முன்னுதாரணமற்ற தலைவர்: முடியாட்சி முதல் குடியாட்சி வரை, அரசியல்தான் மக்களின் அனைத்துச் சிக்கல்களையும் தீர்க்கும் அருமருந்தாகக் கருதப்படுகிறது. அது உண்மையெனில், இந்தியாவில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலவும் வர்ண - சாதி முரண்களை மட்டும் அது ஏன் தீர்க்கவில்லை எனக் கேட்ட பெரியார், அதற்காகவே அரசியலை முற்றாகத் தவிர்த்த ஓர் ஒப்பற்ற இயக்கத்தைத் தோற்றுவித்தார்.
தம்முடைய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எவ்விதத் தேர்தல் அரசியலிலும் பங்கேற்கக் கூடாது என்பதை இயக்கத்தின் முதன்மைச் சட்டமாக்கி, தம் இயக்கம் இறுதிவரை ஒரு சமூகப் பண்பாட்டு இயக்கமாகவே செயல்படும் என்றார். வரலாற்றில் புத்தரைத் தவிர, உலகளவில்கூடப் பெரியாரின் இத்தகைய அரசியல் தவிர்த்த அணுகுமுறைக்கு முன்னுதாரணமாக எவரையும் குறிப்பிட்டுச் சொல்வது கடினம்.
“சுயமரியாதை இயக்கமானது, அரசியல்களின் பெயரால் நமது நாட்டில் உள்ள பல கட்சிகளைப் போல் அல்லாமல், அந்நியர்களிடமிருந்து யாதொரு விதமான சிறு விஷயத்தையும் எதிர்பாராமல் மக்களின் அறிவை விளக்கி - அவரவர்களின் மனப்பான்மையை மாற்றுவதன் மூலமே - உண்மையான விடுதலையையும் சமத்துவத்தையும் தன்மதிப்பையும் உண்டாக்கக்கூடியதான ஒரு இயக்கமாகும்” (‘குடிஅரசு’, 25.08.1929) எனத் தன்னுடைய இயக்கத்தைப் பெரியார் வரையறுத்தார்.
அரசியல் உரிமைகளால் நிறைவடைந்தோர் அவ்வுரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கான போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். அதற்குப் பல நிலைகளிலும் ஆதரவு கிடைக்கிறது. ஆனால் சமூக, மத, பண்பாட்டு உரிமைகள் முழுமை அடையும்போதுதான், அதன் மீது கட்டப்படும் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதை அவர்கள் இன்றுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அரசியலில் சமத்துவமும் சமூக நிலையில் ஏற்றத்தாழ்வுகளும் நீடிப்பதையே இந்நாட்டின் முதன்மை முரணாகக் கண்டறிந்து, அதைக் களைவதற்கான போராட்டத்தையே பெரியார் இறுதிவரை நிகழ்த்தினார்.
தமக்குத் தேசாபிமானமோ, பாஷாபிமானமோ, குலாபிமானமோ இல்லை என்று அறிவித்த பெரியார், எந்தப் புலவரும் அறிஞரும் செய்யத் துணியாத தமிழ் மொழிச் சீர்திருத்தத்தைச் செய்தார். இன்றுவரை கற்பு, கைம்பெண், விபச்சாரி போன்ற சொற்கள் எல்லாம் பாலினச் சமமின்மையை வலியுறுத்தி, ஆணாதிக்கத்தை நிலைபெறச் செய்வதால், பக்தியின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் செம்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என விமர்சித்தார். அத்துடன் தமிழுக்கும் மதத்துக்குமான தொடர்பை நீக்கி அதை மதச்சார்பற்ற, பாலினச் சமத்துவத்துடனான அறிவியல் மொழியாக்க விழைந்தார் பெரியார்.
உயர் எண்ணங்களின் சோலை: தனித் தமிழ்நாடு கோரிக்கையாக இருந்தாலும், இந்தி / சம்ஸ்கிருத எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும் இடஒதுக்கீட்டைப் பாதுகாத்து, பரவலாக்க முன்னிறுத்திய செயல்திட்டமாக இருந்தாலும் கடவுள், மத எதிர்ப்பாக இருந்தாலும் அவை அனைத்தையுமே பெரும்பான்மை மக்களிடையிலான சாதிய முரண்களைப் பலவீனப்படுத்தவும் சமூகத்தை ஜனநாயகப்படுத்தவுமே பெரியார் பயன்படுத்தினார்.
ஏனெனில், தமிழர்/திராவிடர் ஓர்மை என்பது, ஓர் அரசியல் ஓர்மையாக இல்லாமல் அது ஒரு சமூக ஓர்மையாகப் பரிணமிக்க வேண்டும் என்பதே பெரியார் போராட்டங்களின் அடிநாதம். ஆனால், உயர் எண்ணங்களின் சோலையாக மலர்ந்த பெரியார் செயல்திட்டங்களின் அகவயமான கூறுகள் புறந்தள்ளப்பட்டு, புறவயமான அரசியல் முழக்கங்களே தற்போது முன்னிறுத்தப்படுகின்றன.
தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெறும்போது, பெரியார் அம்மக்களுக்கு ஆதரவாக இல்லை என்றொரு விமர்சனம் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. சாதி ஒழிப்பைத் தன் உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்ட ஒரு சிந்தனையாளர், அவ்வமைப்பால் கடுமையாகப் பாதிக்கப்படும் மக்களுக்கு எதிராக இருந்தார் என்று குற்றம்சாட்டுவது, ஆதாரமற்றது; உள்நோக்கம் உடையது.
தலித் மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நடைபெறும்போது, அம்பேத்கரின் நிலைப்பாடு எத்தகையதாக இருந்ததோ அதே தன்மையில்தான் பெரியாரின் அணுகுமுறையும் அமைந்திருந்தது. வன்கொடுமைகளுக்கு எதிராக மட்டுமே செயல்படுவது என்பது, அதன் தோற்றுவாயான சாதியையும் அதற்கு உறுதுணையாக நிற்கும் மதத்தையும் எதிர்க்காமல், அதன் வெளிப்பாடான தீண்டாமையை மட்டுமே எதிர்க்கும் காந்திய அணுகுமுறையைப் போன்றது. அம்பேத்கரும் பெரியாரும் இத்தகைய அணுகுமுறைக்கு நேர் எதிரானவர்கள்.
நவீனப் பார்வை: நவீனக் கருத்தரிப்பு குறித்தெல்லாம் 80 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த பெரியார், ‘இனிவரும் உலகம்’ (1944) என்ற தமது நூலில், விமானப் போக்குவரத்து அதிகமாகும், கம்பியில்லா தந்திச் சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும், ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும், உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க செளகரியம் ஏற்படும். மேற்கண்ட சாதனங்களால் ஓரிடத்திலிருந்துகொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக்கொடுக்கச் சாத்தியப்படும் என்றார்.
ஆனால், இதைப் பலரும் முன்கூட்டியே அவதானித்த பெரியாரின் நவீன தொழில்நுட்பச் சிந்தனை என்றளவில் மட்டுமே சிலாகிக்கின்றனர். உண்மையில் நவீனம் (Modernity) என்பதைப் பெரியார் வெறும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளாக மட்டுமே பார்க்கவில்லை. தான் கணித்த உலகில், இழிவான வேலை இருக்காது, அடிமைத்தனம் இருக்காது, பெண்களுக்குக் காவல் கட்டுப்பாடு இருக்காது, போர் இருக்காது, அதிசயப் பொருள்களை மக்கள் எல்லோரும் ஒன்றுபோல் அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்படும், உலகில் எந்தத் தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்தையும் குறைபாடுகளையும் ஒவ்வொருவரும் (சமூகமே) தங்களுக்கு ஏற்பட்டதுபோல் நினைக்கும்படியும் அனுபவிப்பதுபோல் துடிக்கும்படியும் அவ்வளவு கூட்டு வாழ்க்கையும் ஒற்றுமை உணர்ச்சியும் ஏற்படும் என்றார் பெரியார். ஆக, சாதிகள் ஒழிந்த, சமத்துவம் நிறைந்த, நாட்டின் வளங்களை அனைவரும் பாகுபாடின்றி அனுபவிக்கக்கூடிய உன்னதமான ஜனநாயகப் பண்பாட்டைத்தான் (இனிவரும்) நவீன உலகமென்று பெரியார் கணித்தார்.
கடவுள், மதம், சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு, குடும்பம், தேசியம், மொழி, நாடு என எதுவாக இருந்தாலும் அது சாதியைப் பாதுகாப்பதாக இருக்கக் கூடாது; பாலின ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டதாக இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் பெரியார். தவிர, ஆரியர் - திராவிடர் முரணையும் அவர் ரத்தப் பரிசோதனை செய்து, இன்னொரு இனப்பாகுபாட்டுக்கு வித்திட்டவரல்ல. பெரும்பான்மை மக்களாக இருக்கும் இந்தியத் தொல்குடியினர் மீது நிகழ்த்தப்பட்ட மத, பண்பாட்டுப் படையெடுப்பை அறவழியிலும் அறிவுப் பிரச்சாரத்தின் மூலமும் நேர் செய்வதையே வாழ்க்கையின் முழு நேரத் தொண்டாகக் கொண்டிருந்தார்.
மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும் மதத்தைக் கண்டிக்கும் பெரியார், உண்மையில் மதம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விவரிக்கத் தயங்கவில்லை: “என்னை மத விரோதி என்று சில மதவாதிகள் சொல்லுகிறார்கள். மதங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று நான் சொல்லுவதும் இப்படிப்பட்ட (ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட) மதங்களைத்தானே ஒழிய, மனிதனிடம் மனிதன் அன்பாய், உபகாரியாய், சமுதாயத்துக்கு ஏற்ற ஒழுக்கமாய், நாணயமாய், பிறர் நலத்தில் பற்றுள்ள நண்பனாய், மற்றவர்களுக்குத் தொல்லை இல்லாதவனாய் நடந்துகொள்ளும் தன்மையை மதம் என்றால் அதைப் போற்றுகிறவனே ஆவேன். நானும் கூடுமானவரை அப்படிப்பட்ட மதவாதியே ஆவேன்” (‘குடிஅரசு’ - 15.02.1947).
‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்று பெரியார் முன்வைத்த திட்டம் இன்று செயல்வடிவம் பெற்றுள்ளதால், அவர் நெஞ்சில் தைக்கப்பட்டிருந்த அந்த முள் அகற்றப்பட்டுவிட்டதாகப் பலரும் மன நிறைவுகொள்கின்றனர். உண்மையில், “பன்னூற்றாண்டுகளாகப் பிறப்பின் காரணமாகப் படிநிலையின் கீழ்நிலையில் உள்ள சூத்திரர்களும் பஞ்சமர்களும்கூட, கருவறைக்குள் நுழையலாம்” என்ற அளவில்தான் உரிமை கிடைத்துள்ளதே தவிர, அதனால் பிறவி இழிவு எள்ளளவும் நீங்கவில்லை.
“இருளை உணராதவர்கள் ஒருபோதும் ஒளியைத் தேடிக் கண்டடைய மாட்டார்கள்” என்றார் அம்பேத்கர். பிறப்பு உருவாக்கியுள்ள இவ்விருளை ஆழமாக உணர்ந்தவர்களால் மட்டும்தான், பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நிரந்தரமாக நீக்க முடியும்.
- புனிதப் பாண்டியன், தொடர்புக்கு: dalitmurasu@gmail.com
(‘இந்து தமிழ் திசை’ வெளியிட்டுள்ள ‘என்றும் தமிழர் தலைவர்’ நூலில் வெளியான கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.)
| இன்று - செப்.17 - தந்தை பெரியார் 145-ஆவது பிறந்த நாள் |
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago