கிரீமிலேயரை வீழ்த்தும் உள்ஒதுக்கீடு

By சு.விஜயபாஸ்கர்

இந்தியாவின் அரசமைப்புச் சட்டம், கால ஓட்டத்தில் பல மாற்றங்​களைச் சந்தித்து, சமூகரீ​தி​யாகவும் கல்வி​யிலும் பிற்படுத்​தப்பட்ட வகுப்​பினருக்குக் கல்வி, வேலைவாய்ப்​பிலும்; பட்டியல் சாதிகளுக்​கும், பட்டியல் பழங்குடி​யினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் துறையிலும் இடஒதுக்கீடு வழங்கு​கிறது.

கூடவே, கிரீமிலேயருக்கு (Creamy Layer) இடஒதுக்கீடு தரக் கூடாது என்கிற குரல்​களும் தொடர்​கின்றன. சமீபத்தில் உள்ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கிரீமிலேயர் தொடர்பாக நீதிப​திகள் தெரிவித்​திருந்த கருத்துகள் விவாதத்தை எழுப்​பி​யிருக்​கின்றன.

இடஒதுக்கீடு பெறத் தகுதி​யானவர் யார்? - 1871 முதல் பிரிட்டிஷ் இந்தியாவில் சாதிகளின் பட்டியலும் மக்கள்​தொகையும் கணக்கெடுக்​கப்​பட்டன. 1931 மக்கள்​தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை​யில், தீண்டாமைக் கொடுமை​யினால் பாதிக்​கப்​படும் சாதிகளும், மலைகளிலும் காடுகளிலும் வாழும் பழங்குடி​யினங்​களும் அட்டவணைப்படுத்தப்பட்டன.

அதுவரை பயன்படுத்​தப்பட்ட Depressed Class என்ற சொல்லுக்குப் பதில், 1935இல் Scheduled Castes (பட்டியல் சாதிகள்), பிற்படுத்​தப்பட்ட பழங்குடிகள் (Backward Tribes) என்கிற சொற்கள் அறிமுகப்​படுத்​தப்​பட்டன. இந்த இரண்டு பட்டியல்​களில் இடம்பெற்ற மக்கள் பிரிவினருக்கு அரசியல் துறையில் இடஒதுக்கீடு வழங்கப்​பட்டது. மதராஸ், பம்பாய் உள்ளிட்ட மாகாணங்​களி​லும், மைசூர், கோலாப்பூர் உள்ளிட்ட சமஸ்தானங்​களிலும் பிற்படுத்​தப்பட்ட வகுப்​பினருக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இடஒதுக்​கீடு​களும் தொடர்ந்தன.

சுதந்திர இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் உருவாக்​கப்​பட்​ட​போது, பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகளுக்கு அரசியல் துறையிலும் (சட்டப்​பிரிவு 332); பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள், பிற்படுத்​தப்பட்ட வகுப்​பினருக்கு வேலைவாய்ப்​பிலும் (சட்டப்​பிரிவு 16(4)) இடஒதுக்கீடு வழங்கப்​பட்டது. யாரெல்லாம் பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள் என்று கண்டறியும் அதிகாரம் நாடாளு​மன்​றத்​துக்குத் தரப்பட்டு, அதற்கு அரசமைப்பு அங்கீ​காரம் (சட்டப்​பிரிவுகள் 341, 342) வழங்கப்​பட்டது.

மதராஸ் மாகாணத்தில் நடைமுறையில் இருந்த வகுப்புவாரி ஆணையை எதிர்த்து செண்பகம் துரைராஜன் தொடுத்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் வகுப்புவாரி ஆணையை ரத்துசெய்தது. மேல்முறை​யீட்டில் அத்தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி​செய்தது. வகுப்புவாரி உரிமையை மீட்டெடுக்க பெரியாரின் பின்னால் திரண்டு தமிழ்நாடு போராடியது. தமிழ்நாடு காங்கிரஸும், அன்றைய முதல்வர் குமாரசாமி ராஜாவும் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த பிரதமர் நேருவை வலியுறுத்​தினர்.

விளைவாக, அரசமைப்புச் சட்டம் முதன்​முறை​யாகத் திருத்​தப்​பட்டு, சட்டப்​பிரிவு 15(4) சேர்க்​கப்​பட்டது. இப்பிரிவு சமூகரீ​தி​யாகவும் கல்வி​யிலும் பிற்படுத்​தப்பட்ட வகுப்​பினருக்குக் கல்வியில் இடஒதுக்கீடு தரும் அதிகாரத்தை அரசுக்குத் தந்தது. அதன்படி தமிழ்​நாடு, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்கள் அதிகாரத்​துக்கு உள்பட்ட கல்வி நிறுவனங்​களில் பிற்படுத்​தப்பட்ட வகுப்​பினருக்கு இடஒதுக்கீடு வழங்கின.

இருந்த​போதும் தேசிய அளவில் யார் பிற்படுத்​தப்பட்ட வகுப்​பினர் என்கிற பட்டியல் இல்லை. 1953இல் பிரதமர் நேருவால் உருவாக்​கப்பட்ட காகா காலேல்கர் ஆணையம், 2,399 சாதிகளைப் பிற்படுத்​தப்பட்ட சாதிகள் என்று கண்டறிந்து அறிக்கை அளித்தது. ஆனால், காங்கிரஸ் அரசு அதனை ஏற்றுக்​கொள்ள​வில்லை.

1979இல் உருவாக்​கப்பட்ட மண்டல் கமிஷன், 11 வகையான சமூக, பொருளாதார, கல்வி அளவுகோல்​களின் அடிப்​படையில் 3,743 சாதிகளைப் பிற்படுத்​தப்பட்ட வகுப்​பினர் என்று அறிக்கை அளித்தது. மண்டல் குழுவின் பரிந்​துரைகளின்படி 1990இல் பிரதமர் வி.பி.சிங் செயலாக்கம் தந்து, மத்திய அரசின் வேலைவாய்ப்பில் பிற்படுத்​தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு தந்தார். 2006இல் அரசமைப்புச் சட்டம் திருத்​தப்​பட்டு, மத்திய அரசின் கல்வி நிறுவனங்​களில் பிற்படுத்​தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடைத்தது.

இடஒதுக்​கீட்டில் கீரிமிலேயர்: குறிப்​பிட்ட தொகைக்கு அதிகமாக வருமானம் பெறும் பிற்படுத்​தப்பட்ட பிரிவினரை கிரீமிலேயர் என்று கருதி, அவர்களுக்கு இடஒதுக்கீடு தரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இந்திரா சஹானி வழக்கில் 1992இல் தீர்ப்​பளித்தது. இதைப் போன்ற வருமான அடிப்​படையிலான கட்டுப்பாடு பட்டியல் சாதிகளுக்​கும், பட்டியல் பழங்குடிகளுக்கும் வந்து​விடுமோ என்கிற ஓர் அச்ச உணர்வு இடஒதுக்​கீட்டு ஆதரவாளர்​களுக்கு எப்போதும் உள்ளது.

‘பஞ்சாப் அரசு எதிர் தவீந்தர் சிங்’ வழக்கில், ஆகஸ்ட் 1இல் வெளிவந்​துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகளில் பின்தங்கிய பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு தரலாம் என்றும், அதற்காகப் பட்டியலில் உள்ள சாதிகளை​யும், பழங்குடிகளையும் துணைப் பிரிவு​களாகவும் பிரிக்​கலாம் என்றும், அதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்றும் கூறுகிறது.

இத்தீர்ப்​பானது, சட்டப்​பிரிவு 341இன் கீழ் உருவாக்​கப்பட்ட பட்டியலில் உள்ள சாதிகளை கிரீமிலேயர் என்று அறிவித்து, இடஒதுக்​கீட்டுப் பலன்களில் இருந்து அவர்களை முற்றிலும் விலக்கும் தொடக்கக் காரணி​களைக் கொண்டுள்ளது என்று சில தலித் அமைப்புகள் கருதுகின்றன. அந்த வகையில் கிரீமிலேயரைவிட உள்ஒதுக்கீடு ஆபத்தானது என்றும் கருதுகின்றன. ஏனெனில், தற்போது நடைமுறையில் உள்ள கிரீமிலேயர் இடஒதுக்​கீட்டுப் பலன்களில் இருந்து தனிநபர்களை விலக்கு​கிறது. ஆனால், ஒட்டுமொத்த சாதியை கிரீமிலேயர் என்று அறிவிக்கும் ஆபத்தை உள்ஒதுக்கீடு கொண்டுள்ளது என்கின்​றனர்.

கிரீமிலேயரை வீழ்த்​துமா? - உண்மையில் உள்ஒதுக்கீடு தருவதன் மூலம் கிரீமிலேயர் எனும் கிருமிலேயரை வீழ்த்த இயலும். ஏனெனில், இடஒதுக்கீடு என்ற தத்துவம் கிரீமிலேயருக்கு எதிரானது. பல நூற்றாண்​டுகளாக முன்னேறிய வகுப்​பினர் வசமிருந்த சமூக வளங்களைப் பங்கிடும் சட்டவடிவமே இடஒதுக்​கீட்டுத் தத்துவம். 1902இல் சாகு மகாராஜின் சமஸ்தானத்தில் அறிமுகம் கண்ட இடஒதுக்​கீட்டுத் தத்துவம், கால ஓட்டத்தில் பல்வேறு மாற்றங்​களைக் கண்டுள்ளது. சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இடஒதுக்​கீட்டின் பலன்கள் ஓரளவுக்​காவது சென்று சேர்ந்​துள்ளன.

அதன்விளைவாக, இந்தியச் சமூகத்தின் உண்மையான கிரீமிலேயரான முன்னேறிய வகுப்​பினர், ‘எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்’ என்று கோரி, 103ஆவது அரசமைப்புச் சட்டத்​திருத்​தத்தின் மூலம் பொருளாதார அடிப்​படையில் 10% இடஒதுக்கீடு பெற்று​விட்​டனர். எவ்வளவு குறைவாகச் செயல்​படுத்​தப்​பட்​டாலும் இடஒதுக்​கீட்டின் மூலம் பலன்கள் உண்டு என்பதற்கான சாட்சியம் இது.

இடஒதுக்​கீட்டின் மூலம் பலன்கள் உண்டாகுமெனில், ஏற்படும் பலன்களை அளவிடுவது அவசியம். அவ்வாறு அளவிட்​டால், உண்மைப் பயனாளி​களை​யும், பயன்பெறாதவர்​களையும் கண்டறிய இயலும். கண்டறிந்த தரவுகளின்படி, இடஒதுக்​கீட்டின் பலன் இதுவரை பயன்பெறாதவர்​களுக்குச் சென்று சேரும் வகையில் பகிர்ந்​தளிக்​கப்பட வேண்டும். அதற்காக இடஒதுக்​கீட்டுக் கொள்கையில் தேவையான மாற்றங்களை, குறிப்​பிட்ட கால அளவில் செய்து​கொண்டே இருக்க வேண்டும்.

இதன்மூலம் இடஒதுக்​கீட்டுக் கொள்கை நடைமுறைக்கு வந்து கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் ஆன பின்னரும் சமூகத்தில் பிற்படுத்​தப்பட்ட நிலையில் உள்ளோரைத் தூக்கிவிட இயலும். சமூகப் பின்தங்கிய நிலையின் அடிப்​படையில் வழங்கப்​படும் இடஒதுக்​கீட்டை ஒழித்து​விட்டு, தனிநபர் பொருளாதார அடிப்​படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரும் முன்னேறிய வகுப்​பினரின் குரல்களை அடக்கவும் இயலும்.

அரசுப் பள்ளி​களில் பயின்​றோருக்கு வழங்கப்​படும் 7.5% இடஒதுக்​கீடு, பிற்படுத்​தப்பட்ட பிரிவை இரண்டாகப் பிரித்து உருவாக்​கப்பட்ட மிகப் பிற்படுத்​தப்பட்ட வகுப்​பினருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட பல உள்ஒதுக்​கீடுகள் தமிழ்​நாட்டில் ஏற்கெனவே செயல்​பாட்டில் உள்ளன. மற்ற மாநிலங்​களிலும் வேறு வகையிலான உள்ஒதுக்​கீடுகள் உள்ளன. இவ்வகை உள்ஒதுக்​கீடுகள் பின்தங்கிய நிலையில் உள்ளோருக்குச் சமூக வளங்கள் சென்றுசேருவதை உறுதி​செய்​கின்றன.

பல ஆண்டுகளாக வருமானத்தை மட்டும் அடிப்​படை​யாகக் கொண்டு கணக்கிடப்பட்ட வறுமைக் குறியீடு தற்போது சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அடிப்​படை​யாகக் கொண்டு கணக்கிடப்​படும் பல பரிமாண வறுமைக் குறியீடாக விரிவடைந்​துள்ளது.

அதேபோல் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் உள்ளிட்ட சமூக வளங்களைப் பகிர்ந்​தளிக்கும் இடஒதுக்​கீட்டுத் தத்துவம், சாதியை முக்கியக் காரணி​யாகக் கொண்ட பல பரிமாணக் குறியீடு​களின் அடிப்​படையில் வடிவமைக்​கப்​பட்டு, அது தரும் பலன்களைக் குறிப்​பிட்ட கால அளவில் அளவிட வேண்டும். தேவைப்​படின் தரவுகளின் அடிப்​படையில் மாற்றங்​களைச் செய்ய வேண்டும். சாதிகளுக்கு இடையே வேறுபாடு​களும் ஏற்றத்​தாழ்வு​களும் இருக்கும் வரை இடஒதுக்​கீட்டுத் தத்து​வத்தின் முக்கியமான அடிப்படை அலகாக சாதி இருக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து இடஒதுக்​கீட்டுத் தத்து​வத்தை மறுசீரமைப்புச் செய்வதன் மூலம், உண்மையான கிரீமிலேயர் பிரிவினர் இடஒதுக்​கீட்டின் பலன்களைப் பெறுவதைத் தடுக்க இயலும். சாதியைப் புறக்​கணித்து​விட்டு, பொருளாதார அடிப்​படையை மட்டுமே தனித்த அலகாகக் கொண்டு உருவாக்​கப்​பட்டு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கிரீமிலேயர் என்ற நஞ்சின் தாக்கம் பட்டியல் சாதிகள், பழங்குடி​யினரைத் தீண்டாமல் தடுக்க இயலும். இவ்வகை​யில், தகுந்த முறையில் உருவாக்​கப்பட்ட உள்ஒதுக்​கீடுகள் கிரீமிலேயர் என்ற ஆபத்தைத் தடுக்க இயலும்​.

- தொடர்​புக்கு: vvv_vv_1985@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்