18 ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக கடுமையான சவால்களை எதிர்கொண்டிருக்கும் மாநிலங்களில் மேற்கு வங்கமும் டெல்லியும் முக்கியமானவை. பாஜக வகுக்கும் வியூகங்களுக்குப் பதிலடி கொடுப்பதிலும், புதிய சவால்களை ஏற்படுத்துவதிலும் அம்மாநிலங்களின் முதல்வர்களான மம்தா பானர்ஜியும், அர்விந்த் கேஜ்ரிவாலும் தீவிரம் காட்டிவருகின்றனர்.
இண்டியா கூட்டணியில் நீடிப்பதாகச் சொல்லிவந்தாலும் தனித்துக் களம் காண்கிறது திரிணமூல் காங்கிரஸ். காங்கிரஸ் அரசு மீதான ஊழல் புகார்களின் அடிப்படையில் வெடித்த போராட்டத்தின் வழியே முகிழ்த்த ஆம் ஆத்மி கட்சி, இந்தத் தேர்தலில் காங்கிரஸின் துணையுடன் களமிறங்குகிறது.
சற்றும் கலங்காத மம்தா: மேற்கு வங்கத்தில் 2019 மக்களவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18இல் பாஜக வென்றது; 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 77இல் வென்றது. இந்த முறை மொத்தம் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 30ஐக் கைப்பற்றுவோம் என அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர் கூறிவருகின்றனர்.
ஆனால், ஏராளமான பாஜகவினர் (திரிணமூல் காங்கிரஸிலிருந்து சென்றவர்கள்) மீண்டும் ‘தீதி கழக’த்துக்குத் திரும்பிவிட்டனர். மம்தா அரசு மீதான ஊழல் புகார்கள், வன்முறைச் சம்பவங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட விவகாரங்களை வைத்து, இந்த முறையும் கணிசமான இடங்களை வெல்ல வியூகம் வகுத்த பாஜகவுக்கு, சந்தேஷ்காளியைச் சேர்ந்த பெண்கள் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜஹான் உள்ளிட்டோரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் ஆயுதமானது.
» “பிரஜ்வல் வழக்கில் ஒத்துழைக்கவில்லை” - மத்திய அரசு மீது கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் புகார்
» கேஜ்ரிவாலின் வயதான பெற்றோரை அலைக்கழிப்பதா? - மத்திய அரசு மீது டெல்லி அமைச்சர் ஆதிஷி குற்றச்சாட்டு
சந்தேஷ்காளியில் மத அடிப்படையில் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாக மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டிவந்த நிலையில், மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவெந்து அதிகாரியின் தூண்டுதலின் பேரிலேயே அந்தப் பெண்கள் பொய்ப் புகார் அளித்ததாகக் காணொளி ஆதாரத்துடன் திரிணமூல் காங்கிரஸ் பதிலடி கொடுத்தது. ஆனால், அந்தக் காணொளி திரிக்கப்பட்டது என்று கூறும் பாஜகவினர், அந்தக் காணொளியால் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று வாதிடுகின்றனர்.
அடுக்கடுக்கான பதிலடிகள்: இதற்கிடையே, ஆளுநர் சி.வி.அனந்த போஸ் மீது ஆளுநர் மாளிகை முன்னாள் பெண் பணியாளர் முன்வைத்த பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு பாஜகவை அதிரவைத்தது. தன் மீதான புகாரை ஆளுநர் மறுத்தாலும் தங்களிடம் காணொளி ஆதாரம் இருப்பதாக வாதிடுகிறது திரிணமூல் காங்கிரஸ். முன்னாள் நீதிபதியும் பாஜக வேட்பாளருமான அபிஜீத் கங்கூலி மம்தா குறித்துத் தரம் தாழ்ந்த வகையில் பேசிய பேச்சும் திரிணமூல் காங்கிரஸுக்குப் புதிய ஆயுதமாகியிருக்கிறது.
சில துறவிகள் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக மம்தா எழுப்பிய குற்றச்சாட்டும் சர்ச்சைக்குள்ளானது. குறிப்பாக, முர்ஷிதாபாதில் ராமநவமி கொண்டாட்டத்தின்போது வெடித்த கலவரத்தின் பின்னணியில் பாரத் சேவாஷ்ரம் சங்கா (பிஎஸ்எஸ்) மடத்தைச் சேர்ந்த சுவாமி பிரதீப்தானந்தா இருப்பதாக மம்தா கூறினார்.
வெகுண்டெழுந்த பிரதீப்தானந்தா, மம்தா மன்னிப்புக் கேட்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பிஇருக்கிறார். இதைக் கையில் எடுத்த பாஜக, மம்தா இந்துக்களுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது. உடனே, “நான் இந்துவா முஸ்லிமா என்றெல்லாம் பாஜக சான்றிதழ் தர வேண்டாம். நானே ஒரு இந்து பிராமணப் பெண்தான்” என்று மம்தா பதிலடி கொடுத்தார்.
அண்மையில் 26,000 ஆசிரியர்களின் பணிநியமனம் சட்டவிரோதமானது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பைத் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்க பாஜக செய்த சதி இது என மம்தா குற்றம்சாட்டிவருகிறார்.
ஒரு வாக்குக்கு ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை பாஜக தருவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார். மேற்கு வங்கத்தில் பாஜக ஒரு அந்நியக் கட்சி என்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் சாடிவருகின்றனர்.
முஸ்லிம்களின் ஆதரவு முன்பைவிடவும் திரிணமூல் காங்கிரஸுக்குக் கணிசமாக அதிகரித்திருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி விவகாரங்களில் முஸ்லிம்களுக்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்திருக்கும் மம்தா, “உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை எல்லாம் இருக்கிறதுதானே? அப்படியென்றால், நீங்கள் இந்தியக் குடிமக்கள்தான்” என்று துணிச்சலாகப் பேசிவருகிறார். பாஜகவுக்கு அதுவே அரசியல் ஆயுதமாகவும் ஆகிவிடுகிறது.
தலைநகரில் பெரும் யுத்தம்: 2014, 2019 என இரண்டு தேர்தல்களிலும் டெல்லியில் மொத்தம் உள்ள ஏழு இடங்களையும் கைப்பற்றிய பாஜகவுக்கு இந்த முறை ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி கடும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உள்ளிட்டோரின் வரிசையில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டது ஆம் ஆத்மி கட்சியை வீறுகொண்டு எழச் செய்தது.
50 நாள்கள் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறையின் பகீரத முயற்சிகளைத் தாண்டி உச்ச நீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கியது, இந்தத் தேர்தலின் முக்கியமான திருப்புமுனை. வெளியே வந்த வேகத்தில், பாஜகவுக்கு வாக்களித்தால் மோடி அல்ல, அமித் ஷாதான் பிரதமராவார் எனக் கூறி பாஜகவுக்கே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் கேஜ்ரிவால். சிறைக்குச் சென்றாலும் முதல்வர் பதவி பறிபோய்விடாமல் பார்த்துக்கொண்ட கேஜ்ரிவால், ‘அனுமன் ஆசி’யுடன் சிறை மீண்டதாகச் சொல்லி, பாஜகவின் இந்துத்துவ அஸ்திரங்களுக்கும் ஒருவகையில் பதிலடி கொடுக்கிறார்.
மதுபானக் கொள்கையில் முறைகேடு, தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான ‘சீக் ஃபார் ஜஸ்டி’ஸிடமிருந்து நிதி பெற்றது என அடுத்தடுத்து ஆம் ஆத்மி கட்சி மீது புகார்களை அடுக்கிவரும் பாஜக, அடுத்ததாக அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால், கேஜ்ரிவாலின் இல்லத்தில் அவரது உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரால் பிரகாசமடைந்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் உருவாக்கத்தில் ஸ்வாதி மாலிவாலுக்கும் முக்கியப் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இலவசப் பேருந்து, தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மகளிரிடம் நற்பெயரை வாங்கிவிட்டதாக நம்பும் ஆம் ஆத்மி, பல்வேறு வாக்குறுதிகளின் மூலம் பெண் வாக்காளர்களைக் கவரும் முனைப்பில் இருக்கிறது. இந்தச் சூழலில், ஸ்வாதி மாலிவால் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை பாஜக ஆயுதமாக்குவதில் வியப்பில்லை.
ஆனால், முன் அனுமதி வாங்காமல் அங்கு காலை 8 மணிக்கு மாலிவால் சென்றது பாஜகவின் சதித்திட்டம் என்கிறார்கள் ஆம் ஆத்மி கட்சியினர். சீக் ஃபார் ஜஸ்டிஸ் விவகாரத்தில் என்ஐஏ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்பிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்ஸேனா, மாலிவால் விவகாரத்தில் கேஜ்ரிவால் மெளனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியதை வைத்து, இது நிச்சயம் பாஜகவின் சதிதான் என்று அக்கட்சியினர் அடித்துச் சொல்கிறார்கள்.
கூடவே, மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தபோது பாஜக அமைதி காத்தது ஏன் என்றும், அந்தப் போராட்டத்தில் இதே ஸ்வாதி மாலிவால் காவல் துறையினரால் தாக்கப்பட்டபோது ஏன் அதைக் கண்டிக்கவில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்புகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, அரசியல் கட்சிகள் வெளிநாட்டிலிருந்து நிதி பெறக் கூடாது என்னும் விதிக்குப் புறம்பாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆம் ஆத்மி கட்சி நிதி வாங்கியதாக எழுந்த பழைய குற்றச்சாட்டை பாஜக மீண்டும் கையில் எடுத்திருக்கிறது.
ராகுல் - கேஜ்ரிவாலுக்குப் பாகிஸ்தான் ஆதரவு இருப்பதாகவும் விமர்சிக்கிறது. இவை அனைத்தையும் தாண்டி, இண்டியா கூட்டணி குறைந்தபட்சம் 300 இடங்களில் வெல்லும் எனப் பேசுகிறார் கேஜ்ரிவால். இதுவரையிலான ஐந்து கட்டத் தேர்தலில், தங்களுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக இரு தரப்பும் பேசிவருகின்றன. நாளைக்கு ஆறாம் கட்டம். நம்பிக்கைதானே எல்லாம்!
- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago