ஒவ்வொரு தேர்தலின்போதும், எதிர்பார்த்த அளவுக்கு வாக்குப்பதிவு நிகழவில்லை என்கிறஆதங்கக் குரல்கள் ஒலிக்கின்றன. பல பத்தாண்டுகளாக வாக்காளர்களை வாக்குச்சாவடியை நோக்கி ஈர்க்கப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அவை பலனளிக்கின்றனவா?
உலக அரங்கில் பொ.ஆ. (கி.பி.) 1900இல் நடந்த அரசியல் மாற்றம், பிரிட்டிஷாருக்கு எதிராக இந்தியாவிலும் எழுச்சிக்கு வித்திட்டது. இதற்கான தீர்வாக வந்ததே மக்களாட்சி என்ற ‘வாக்கு உரிமைச் சட்டம்’. நில உடைமையாளர்கள், வரி செலுத்தும் வியாபாரிகள், ஆண்களுக்கு மட்டுமே அந்தக் காலகட்டத்தில் வாக்குரிமை வழங்கப்பட்டது.
மன்னர்களாக அலங்கரிக்கப்பட்ட பெரும்பான்மையோர், வாக்கெடுப்பின் மூலம் ‘மக்கள் பிரதிநிதிகள்’ ஆனார்கள். 1920 முதல் 1934 வரை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல்களைக் காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது; எனினும், 1937 தேர்தலில் பங்கெடுத்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் நடைபெற்ற தேர்தலில் வாக்காளர்களை வாக்குச்சாவடி பக்கம் நகர்த்திட நெல்லுச் சோறு, பருப்பு, நெய், வடை, பாயசம் என வண்டி வண்டியாக உணவு சமைத்துக் கொட்டியதாக பிரிட்டிஷ் பதிவுகள், வழக்காறுகளாக, தெம்மாங்குப் பாடல்களாகக் கிடைக்கின்றன.
வாக்காளர்கள் ஓட்டுப் போட ஏதுவாக சிவப்புப் பெட்டி, மஞ்சள் பெட்டி வைக்கப்பட்டது. 1937 தேர்தலுக்குப் பின்னர், மஞ்சள்-சிவப்புப் பெட்டிச் சண்டை ஆங்காங்கு வெடித்து, சாதிக் கலவரமாக மாறியதை மாவட்ட விவரக் குறிப்புகள் சொல்கின்றன. அதன் பின்னர், இரண்டாம் உலகப் போர், விடுதலைப் போர் ஆகியவற்றில் அரசியல் கட்சிகளும் பிரிட்டிஷாரும் கவனம் செலுத்தியதால், நலத்திட்ட அரசாக நீடித்தது. இக்காலகட்டத்தில் மக்களை அரசியல்படுத்திய கட்சிகள் வாக்கு சதவீதத்தைப் பெருக்கிட முடியவில்லை.
» தோல் நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதா?: பிரதமர் மோடி கண்டனம்
» கருப்பு, பழுப்பு நிறம் சிறந்தது: மருத்துவர் சு.முருகுசுந்தரம் விளக்கம்
விடுதலைக்குப் பின்னர் நடைபெற்ற முதல் தேர்தலில் அனைத்துத் தரப்பு மக்களும் வாக்குரிமை பெற்றனர். ‘ஓட்டு போடலேன்னா செத்ததற்கு அர்த்தம்’ என்ற பரப்புரை மக்களிடம் நன்றாக எடுபட்டது; மக்களை வாக்குச்சாவடிக்கு இழுத்தது. கல்வி, பத்திரிகை, வானொலி, போக்குவரத்து போன்றவை பரவலாக்கம் பெறாத காலத்தில், இந்தியக் குடிமகனாகக் கருதிய மக்கள் வாக்களித்தனர்.
நிலம் அதிகமாக வைத்திருந்த ஜமீன், மிட்டா, மிராசு, முதலாளிகள் தங்கள் பண்ணையாளர்களை மொத்தமாக வாக்களிக்கவைக்க எடுத்த ‘முயற்சி’ ஓரளவுக்கு வெற்றிபெற்றதாக ‘தன் வரலாற்று’ நூல்கள், அக்காலப் பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகள், காவல் துறைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. முதல் இரண்டு தேர்தல்களில் 45% வாக்குப்பதிவு என்பது மெச்சும்படியானது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்து. பின்னர் நடைபெற்ற தேர்தலில் 61% வாக்குகள் பதிவாகின.
நாட்டில் நிலவிய பஞ்சம், சீன யுத்தம் ஆகியவற்றுக்கு இடையில் 1962இல் நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு பெரும் சரிவு கண்டது. 1970இல் தென் கிழக்கு, மத்திய ஆசிய நாடுகளில் உருவான அரசியல் எழுச்சி, இந்தியாவையும் தொட்டது. ‘ஆயுதம் தாங்கிய புரட்சி’ என்கிற பரப்புரை கல்விப்புலம் சார்ந்தவர்களிடம் எடுபட்டது.
இந்த எழுச்சியைக் கட்டுக்குள் கொண்டுவந்தாலும் நீறுபூத்த நெருப்பாகப் படர்ந்தது. இக்காலகட்டத்தில் கட்சிகளைப் பிளவுபட வைத்த தேர்தல் முகவர்கள், இளந்தலைமுறை வாக்காளர்களைத் தேர்தல் நீரோட்டத்தில் நீந்த வைத்தனர். எழுச்சியின் தாக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் திரைப்பட நட்சத்திரங்களை அரசியலுக்குள் இழுக்க எடுக்கப்பட்ட முயற்சி நல்ல பலனைக் கொடுத்தது.
ஆனால் அதே நேரம், அரசு இயந்திரச் செயல்பாடுகளால் 1970 காலங்களில் எழுச்சிக் குழுக்களின் செல்வாக்கு மக்களிடம் அதிகரித்தது. 1980-84 தேர்தலில் சில பகுதிகளில் வாக்காளர்களுக்குச் சொற்பப் பணமும், சிற்றுண்டியும் வழங்கிய பதிவுகள் கிடைக்கின்றன. திரைப்பட நட்சத்திரங்களின் வருகையால் 1984இல் 66% வாக்குப்பதிவு கிடைத்தது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இக்காலகட்டத்தில் உலகமயமாக்கலின் தாக்கம் தொடங்கியபோது புதிய புதிய இயக்கங்கள் உருவாக்கப்பட்டன. இவர்கள் ‘பாராளுமன்றம் பன்றித்தொழுவம்’ எனப் பரப்புரை செய்தனர். இது குறித்து உலகளாவிய விவாதம் நடந்தேறியது.
மக்களுக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் இடையே உள்ள வெற்றிடத்தை நிரப்பிட மீண்டும் திரைப்பட நட்சத்திரங்களைக் கொண்டுவர எடுக்கப்பட்ட பகீரத முயற்சிகள் வெற்றிப் படியைத்தொட்டன. வாக்குச் சரிவை எதிர்கொள்ள வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க எடுத்த முடிவால் தேர்தல் ஜனநாயகம் தூக்கி நிறுத்தப்பட்டதற்கான பதிவுகள் உள்ளன.
வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வாக்கு அரசியலை எதிர்த்துப் பரப்புரை செய்த இயக்கங்களைத் தேர்தல் கப்பலில் பயணிக்கவைத்தும் எதிர்பார்த்த முடிவு கிட்டவில்லை; என்றாலும் சமூக மாற்றம் நிகழ்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
60% வாக்குப்பதிவு குறைந்திடாமல் இருக்க, இளைஞர்களை வாக்குச்சாவடிக்கு ஈர்க்கத் திரைப்பட நட்சத்திரங்கள் மூலம் ‘வாக்களிக்க வேண்டும்’, ‘யாருக்கு வாக்களிக்க வேண்டும்’ என்று பரப்புரை செய்யப்பட்டது. இதுவும் பயன் தராததால் ‘நோட்டா’ கொண்டுவரப்பட்டது. அதிலும் பெரிய பயன் கிடைக்கவில்லை. தற்போது மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் வீடுகளுக்கே சென்று வாக்களிக்க வைத்திருப்பது பாராட்டுக்குரியது.
வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த தேர்தல்களை அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளதைக் கவனித்தால், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு நகர்த்திட ஏதோ ஒரு வகையிலான தூண்டுதல் தேவைப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் வாக்கு சதவீதத்தின் அளவு குறித்த கவலை தொடர்வது சரியல்ல. ஜனநாயக முறையைக் கட்டிக்காக்க, வாக்காளர்கள் சலிப்படையாமல் வாக்களிக்க, ஒவ்வொரு தலைமுறை வாக்காளர்களையும் ஈர்த்திட புதிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம்.
- தொடர்புக்கு: rmnagu@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago