“மோடி, அமித் ஷா மற்றும் பாஜக தலைவர்கள் எல்லோரும் பதற்றத்தில் இருக்கிறார்கள். பல இடங்களில் பாஜக வெறுப்பு அலை வீசுகிறது” என்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி, தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ். இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படாதது ஏன்? காங்கிரஸுக்கு பாகிஸ்தான் ஆதரவு பின்னணி? மத அடிப்படையில் இட ஒதுக்கீடு விவகாரம் என பல கேள்விகளுக்கும் பதிலளித்துள்ள அவரது நேர்காணலின் முதல் பகுதி இது...
இண்டியா கூட்டணி வென்றால், ஆண்டுக்கு ஒரு பிரதமர் பதவி என்ற நடைமுறை அமலுக்கு வரும் என்று பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் சாடுகிறார்களே?
“கடந்த தேர்தல் வரலாற்றில் பிரதமரை அறிவித்து தேர்தலைக் காங்கிரஸ் சந்திக்கவில்லை. இந்தியாவில் மிகச்சிறந்த ஆட்சியை வழங்கிய நரசிம்ம ராவ், மன் மோகன் சிங் போன்றவர்கள் அறிவிக்கப்பட்டு பிரதமர்களாக வரவில்லை. காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலை தனிநபர் சார்ந்து ’நரேந்திர மோடி vs ராகுல் காந்தி’ என வியூகத்தைக் கட்டமைக்க விரும்பவில்லை. ஒரு தனிப்பட்ட நபரை முன்னிறுத்தி அவரை பிரதமராக்கவே தேர்தல் என்பதற்குப் பதிலாக மாற்று தத்துவத்தை அறிமுகப்படுத்துகிறோம்.
மோடி என்பவர் தனிநபராக இருந்தாலும், அவர் சமூக நீதிக்கு எதிரான ஒரு வலதுசாரி சிந்தாந்த பின்னணியைக் கொண்டுள்ளார். எனவே தனி நபரை முன்னிறுத்துவதற்குப் பதிலாக மாற்று தத்துவத்தை முன்னிறுத்த வேண்டும் என்னும் அடிப்படையில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கக் கூடாது என உறுதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது."
பிரதமர் வேட்பாளர் அறிவிக்காததன் பின்னணியில் இண்டியா கூட்டணியிலுக்குள் சிக்கல் இருப்பதாக பாஜக தேர்தல் பிரச்சாரத்தைக் கட்டமைக்கிறதே?.
“பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் எடுத்துச் சொல்லி வாக்கு கேட்க எந்த சாதனைகளும் சரித்திரங்களும் இல்லை. தவிர, காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மக்களை ஈர்த்துள்ள காரணத்தினால் பிரதமர் மோடிக்கு வேறு எதைக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என தெரியவில்லை. அதனால்,பிரதமர் வேட்பாளர் வைத்து அரசியல் செய்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் யார் பிரதமர் ஆவார் என்பது மக்களுக்கு தெரியும்.”
மக்களுக்குப் பிரதமர் வேட்பாளர் தெரியும் என்னும் நிலையில், அது வெளிப்படையாக சொல்வதில் ஏன் தயக்கம்?
“அப்படி ஓர் அறிவிப்பு வெளியானால் அது பரப்புரையின் நோக்கத்தை மாற்றிவிடும். ஐந்து ஆண்டுகளுக்கான செயல் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறோம். இதை முறையாக அமல்படுத்தும் நபர் இண்டியா கூட்டணியின் பிரதமராக அறிவிக்கப்படுவார்.”
காங்கிரஸ் ஆட்சி அமைக்கப் பாகிஸ்தான் ஆதரவு என பாஜக குற்றச்சாட்டை முன்வைக்கிறது. அது குறித்து உங்கள் கருத்து என்ன?
“கடந்த 40 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சிப் பிரதமர்கள் யாரும் பாகிஸ்தானுக்குச் சென்றதில்லை. அடல் பிகாரி வாஜ்பாய் பாகிஸ்தான் சென்றிருக்கிறார். நவாஸ் ஷெரிஃபின் மனைவிக்குப் பட்டு சேலை எடுத்து சென்றிருக்கிறார் மோடி. ஆகவே, காங்கிரஸ் பிரதமர்கள் இந்தியாவின் தன்மானத்தை விட்டு தந்ததில்லை.
இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய காங்கிரஸ் கட்சி மீது இப்படியான குற்றச்சாட்டை வைப்பது சரியா? இம்ரான் கானும் மோடி பிரதமராக வேண்டும் எனப் பேசினார். அதை யாரும் சுட்டிக்காட்டுவதில்லை. ஒரு நாட்டில் ராகுல் காந்தியால் ஈர்க்கப்பட்டவர் அவரைப் பாராட்டுகிறார். அவர் அதிகாரத்தில் இருக்கக்கூடிய நபர் அல்ல. அதை ஒரு தேர்தல் பொருளாக பேசக்கூடிய அளவுக்குப் பிரதமர் மோடி தரம் தாழ்ந்து இருக்கிறார்.”
மத அடிப்படையிலான இடஒதுக்கீடை அம்பேத்கர் பேசவில்லை எனப் பிரதமர் பேசுகிறார். இதற்கு உங்கள் கருத்து என்ன?
“மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் மோடியும் குழம்பி மக்களையும் குழப்புகிறார்.இந்துக்களில் பல சாதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனை இந்து மத அடிப்படையிலான இடஒதுக்கீடு என சொல்ல முடியாது. அது அந்த சாதியினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு. அப்படிதான் சமூக ரீதியில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் அடையாளம் கண்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அது மத அடிப்படையில் வழங்கப்படும் இடஒதுக்கீடு இல்லை. எனவே, பிரதமர் மோடி பேசுவதில் உண்மையும் இல்லை, அது வாதத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடிய கருத்தும் அல்ல."
‘இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி பாஜக இல்லை’ என ராஜ்நாத் சிங் சொல்கிறாரே?
“அவருக்கு மோடி பேசியதைக் காட்ட வேண்டும் .தேர்தல் பிரச்சாரத்தை அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்து செல்வது என தெரியாமல் மக்களை மதத்தின் அடிப்படையில் பிரிக்கும் செயல்திட்டத்தைப் பாஜக கையிலெடுத்துள்ளது. இதைத் தவிர அவர்களுக்கு வெற்றிக்கு வேறு வழி இல்லை என எண்ணுகிறார்கள். அதனால் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இஸ்லாமியர்கள் என்னும் சொல்லாடலைப் பயன்படுத்தி மக்களை உண்மையென நம்ப வைக்க நினைக்கிறது பாஜக. ஆனால், மக்கள் இந்தப் போலி பிரச்சாரத்தை நம்ப மாட்டார்கள்."
பாஜக ‘400 திட்டம்' வெற்றி பெறுமா?
“மோடி, அமித் ஷா மற்றும் பாஜக தலைவர்கள் எல்லோரும் பதற்றத்தில் இருக்கிறார்கள். பல இடங்களில் பாஜக வெறுப்பு அலை வீசுகிறது. பாஜக வேட்பாளர்களால் பிரச்சாரத்திற்கு கூட செல்ல முடியவில்லை. அவர்களின் ‘டார்கெட் 400’ எல்லாம் காணாமல் போய்விட்டது. மெஜாரிட்டியாவது கிடைக்காதா என்னும் நிலையில் தான் பாஜக தற்போது இருக்கிறது.
மக்கள் அளிக்கும் வாக்குகளை நம்பி அவர்கள் தேர்தலைச் சந்திக்கவில்லை. எங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் நடவடிக்கைகளில் சந்தேகங்கள் இருக்கின்றன. எனவே, 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நியாயமாகவும் முறையாகவும் நடந்து, வாக்கு எண்ணிக்கையில் எந்தக் குளறுபடிகளும் அரங்கேறாமல் இருந்தால் இண்டியா கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்."
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் ஆளுங்கட்சியான திமுக மீதும் சந்தேகங்கள் எழுப்பப்படுகிறதே?
“தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் அறியாதவர்கள் இப்படியான வாதத்தை முன்வைக்கின்றனர். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்பு, அரசு நிர்வாகத்தின் அதிகாரம் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கையிலுக்குச் சென்றுவிடும். இதில் மாநில அரசு செய்யும் பணி என எதுமில்லை. அதேபோல், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் எங்களுக்குப் பல கேள்விகள் இருக்கின்றது.
வாக்களித்த மொத்த வாக்குகளையும் தொகுதி வாரியாக வெளியிட தேர்தல் ஆணையம் மறுக்கிறது. தேர்தல் முடிந்த இரவு அறிவிக்கும் வாக்குப்பதிவுக்கும், அடுத்த நாள் அறிவிக்கும் வாக்குப்பதிவுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது. குறிப்பாக, பிஹாரில் 8%,மேற்கு வங்கத்தில் 7% வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பாஜக எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்னும் அடிப்படையில் இந்த மாறுபாடுகள் நடக்கிறதோ என்னும் கேள்வி எழுப்பப்படுகிறது."
மீண்டும் இரண்டு தொகுதிகளில் களமிறக்கப்படுகிறார் ராகுல் காந்தி... இது அச்சத்தின் வெளிப்பாடு என்கிறதே பாஜக?
“கேரளாவில் மட்டும்தான் ராகுல் போட்டியிடுவார், உத்தர பிரதேசத்தில் போட்டியிட மாட்டார் என கூறினார்கள். தற்போது உத்தர பிரதேசத்தில் போட்டியிடுகிறார். எனவே, தொகுதி மாற்றத்தைக் குற்றாச்சாட்டாக முன்வைக்கின்றனர். ரேபரேலி தொகுதியைப் பொறுத்தவரையிலும் சோனியா காந்தி தொடர்ந்து போட்டியிட்ட ஒரு பாரம்பரியமான தொகுதி. அவர் ராஜ்ய சபாவிற்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதனால், அங்கு ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதெல்லாம் விமர்சிக்க வேண்டும் என்னும் காரணத்திற்காக சொல்லப்படுகிறது."
முக்கியமான தொகுதிகளில் கூட வேட்பாளர் அறிவிப்பதில் தயக்கம் காட்டுவது ஏன்?
“தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் மற்ற இடங்களுக்குப் பரப்புரைக்கு செல்வதில் சிக்கல் எழும். அந்தத் தொகுதியில் முடங்கிவிடுவார்கள். அதனால், ராகுல் காந்தியின் போட்டி தாமதமாக அறிவிக்கப்பட்டது. தவிர, இதில் வேறு எந்த குழப்பமும் கிடையாது."
சிஏஏ சட்டத்த் திருத்தத்தை ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்துவோம் எனப பாஜக கூறியதற்கு எதிராக ராகுல் காந்தி எந்தக் கருத்தையும் சொல்லவில்லையே?
“தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவர் ப.சிதம்பரம் குடியுரிமை சட்டத்துக்கு கட்சியின் எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டார். காங்கிரஸ் கட்சிக்கு எந்தக் குழப்பமும் கிடையாது. சிஏஏ சட்டத்தை அமல்படுத்தும் அளவிற்கு காங்கிரஸ் அடிப்படைவாத அரசியல் செய்யவில்லை. ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இண்டியா கூட்டணிக்கு கிடைத்தால் அனைத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் குடியுரிமை சட்டம் ரத்து செய்யப்படும்."
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago