ஆந்திராவில் மும்முனைப் போட்டி - முந்துவது யார்? | மாநில நிலவர அலசல் @ மக்களவைத் தேர்தல்

By பால. மோகன்தாஸ்

மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை, கடந்த கால தேர்தல்களில் அக்கட்சிகளுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் எத்தனை, அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த தேர்தல் வெற்றிகள் / தோல்விகள், தற்போதைய கள சூழல் யாருக்கு சாதகமாக / பாதகமாக இருக்கிறது என பல்வேறு அம்சங்களை புள்ளி விவரங்களோடு இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்ப்போம்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சென்னை மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் மொழிவாரி மாநிலம் ஆந்திரப் பிரதேசம். பரப்பளவில் நாட்டின் 7வது பெரிய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் 26 மாவட்டங்கள், 175 சட்டப்பேரவைத் தொகுதிகள், 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆந்திரப் பிரதேசத்தின் மக்கள் தொகை 4 கோடியே 96 லட்சம். கிராமப்புறங்களில் 70% மக்களும் நகர்ப்புறங்களில் 30% மக்களும் வசிக்கிறார்கள். பாலின விகிதத்தை எடுத்துக்கொண்டால், ஆயிரம் ஆண்களுக்கு 996 பெண்கள் இருக்கிறார்கள். மாநிலத்தின் அலுவல் மொழி தெலுங்கு. கூடுதல் அலுவல் மொழி உருது. இம்மாநிலத்தில் இந்துக்கள் 88.46%, இஸ்லாமியர்கள் 9.56%, கிறிஸ்தவர்கள் 1.34% வசிக்கிறார்கள். மாநிலத்தின் கல்வி அறிவு 67.41%. இதில், ஆண்களின் கல்வி அறிவு 80.90%; பெண்களின் கல்வி அறிவு 64.60%.

நீலம் சஞ்சீவ ரெட்டி, பி.வி. நரசிம்ம ராவ், சென்னா ரெட்டி, என்.டி. ராமா ராவ், என். சந்திரபாபு நாயுடு, ராஜசேகர ரெட்டி, ரோசைய்யா, கிரண் குமார் ரெட்டி என பலர் இம்மாநிலத்தின் முதல்வர்களாக இருந்துள்ளனர்.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து காங்கிரஸ் கட்சியே இம்மாநிலத்தை அதிக காலம் ஆட்சி செய்திருக்கிறது. இரண்டாம் இடத்தில் தெலுங்கு தேசம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 பேர் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த 3 பேர் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். காங்கிரசில் இருந்து பிரிந்து ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்த ஜகன் மோகன் ரெட்டி தற்போது மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார்.

ஆந்திரப் பிரதேசத்தில் 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. எனினும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய இரண்டு கட்சிகளே 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வங்கியுடன் அதிக செல்வாக்கோடு இருக்கின்றன. காங்கிரஸ், பாஜக, ஜனசேனா ஆகிய 3 கட்சிகளும் ஓரளவு செல்வாக்கோடு இருக்கின்றன.

மக்களவைத் தேர்தலோடு ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 125 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தற்போதைய தேர்தல் களம் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு முன்பாக, கடந்த சில தேர்தல் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.

2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில், மொத்தமுள்ள 25 தொகுதிகளிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், 49.88% வாக்குகளுடன் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் 40.18% வாக்குகளைப் பெற்ற போதிலும், 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 1.30% வாக்குகளையும், பாஜக 0.97% வாக்குகளையும், ஜன சேனா கட்சி 5.87% வாக்குகளையும் மட்டுமே பெற்றன.

2019 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் போட்டியிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 49.95% வாக்குகளுடன் 151 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து, கட்சியின் தலைவர் ஜகன் மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றார். 175 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி 39.17% வாக்குகளுடன் 23 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 137 தொகுதிகளில் போட்டியிட்ட ஜனசேனா கட்சி 5.53% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. 174 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 1.17% வாக்குகளை மட்டுமே பெற்றது. இதேபோல், 173 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 0.84% வாக்குகளை மட்டுமே பெற்றது.

ஆந்திரப் பிரதேசத்தின் தற்போதைய தேர்தல் களம் எவ்வாறு இருக்கிறது என்பதை தற்போது பார்ப்போம்.

ஆந்திரப் பிரதேசத்தில் மும்முனைப் போட்டி: ஆந்திரப் பிரதேசத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நியமித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் கட்சியின் தலைவரும் மாநிலத்தின் முதல்வருமான ஜகன் மோகன் ரெட்டி.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சி, ஜன சேனா ஆகியவை போட்டியிடுகின்றன. தெலுங்கு தேசம் 17 மக்களவைத் தொகுதிகளிலும், பாஜக 6 மக்களவைத் தொகுதிகளிலும், ஜன சேனா கட்சி 2 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சட்டப்பேரவைத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி 144 தொகுதிகளிலும், ஜன சேனா கட்சி 21 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இண்டியா கூட்டணி சார்பில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 23 தொகுதிகளிலும், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் 159 தொகுதிகளிலும், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவை தலா 8 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

மக்களவைத் தேர்தல் கருத்துக் கணிப்புகள்: தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு முன்பும், இணைந்ததற்குப் பின்பும் கருத்துக் கணிப்புகளில் மிகப் பெரிய வித்தியாசம் தெரிகிறது. இணைவதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றி பெறும் என கணிப்புகள் தெரிவித்தன. குறிப்பாக, குறைந்தபட்சம் 15 தொகுதிகளிலும் அதிகபட்சம் 25 தொகுதிகளிலும் அக்கட்சி வெற்றி பெறும் என பிப்ரவரி 2024க்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இணைந்ததற்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி குறைந்தது 18 தொகுதிகளிலும் அதிகட்சம் 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிப்புகள் கூறுகின்றன. ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் குறைந்தபட்சம் 5, அதிகபட்சம் 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. இண்டியா அணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என கணிப்புகள் கூறுகின்றன.

அரசியல் களத்தில் ஐவர்: இந்த தேர்தல் அரசியல் குடும்பங்களின் தேர்தலாகவும் பார்க்கப்படுகிறது. ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன் மோகன் ரெட்டி, அவரது தங்கையும், ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான ஓய்.எஸ். ஷர்மிளா, முன்னாள் முதல்வர் என்.டி. ராமா ராவின் மாப்பிள்ளையும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான என். சந்திரபாபு நாயுடு, என்.டி. ராமா ராவின் மகளும், பாஜகவின் மாநில தலைவருமான புரந்தேஸ்வரி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகரும் ஜன சேனா தலைவருமான பவன் கல்யாண் ஆகியோர்தான் இந்த தேர்தலின் முக்கிய சக்திகளாக இருக்கிறார்கள்.

அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள போராடும் ஜகன் மோகன்: கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை ஜகன் மோகன் ரெட்டியின் அரசு மேற்கொண்டுள்ளதால், கிராமப்புறங்களில் ஆட்சிக்கு ஆதரவான மனநிலை இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், நகர்ப்புறங்களில் அரசு மீது அதிருப்தி அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த தேர்தலைப் போல் அல்லாமல், இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, பாஜகவோடு கூட்டணி அமைத்திருப்பதால், இந்த தேர்தல் வெற்றி ஜகனுக்கு மிகவும் முக்கியமானதாக மாறி இருக்கிறது. ஒருவேளை தேர்தலில் தோல்வி அடைந்து, மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அது ஜகனின் அரசியல் எதிர்காலத்தை சவால் மிகுந்ததாக மாற்றிவிடக்கூடும்.

மீண்டும் அதிகாரத்தைப் பெறத் துடிக்கும் சந்திரபாபு நாயுடு: கடந்த 5 ஆண்டு கால ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில், தான் கைது செய்யப்பட்டது, சட்டமன்றத்தில் அவமானப்படுத்தப்பட்டது என பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்ததால் இந்த தேர்தல் வெற்றி சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்வா சாவா என்பதாக மாறி இருக்கிறது. வெற்றியை எப்படியாவது பெற்றே தீர வேண்டும் என்பதற்காகவே, பல்வேறு சமரசங்களுடன் அவர் பாஜக மற்றும் ஜன சேனா கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமையை நிரூபிக்க போராடும் ஒய்.எஸ்.ஷர்மிளா: ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி எனும் கட்சியை தெலங்கானாவில் நடத்தி வந்த ஷர்மிளா, அதைக் களைத்துவிட்டு சமீபத்தில்தான் காங்கிரசில் இணைந்தார். இணைந்த கையோடு அவருக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது. காங்கிரஸ் தலைவரானதை அடுத்து தொடர்ச்சியாக அண்ணன் ஜெகனுக்கு எதிராக தொடர் பிரச்சாரங்களை செய்து கவனத்தை ஈர்த்து வருகிறார் ஷர்மிளா. ஜகன் மோகன் ரெட்டி Vs சந்திரபாபு நாயுடு என இருக்கும் களத்தை, ஜகன் மோகன் ரெட்டி Vs ஒய்.எஸ். ஷர்மிளா என மாற்ற அவர் தொடர்ந்து முயல்வதாகக் கூறப்படுகிறது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தனக்கு வழங்கியது சரியான நடவடிக்கையே என காங்கிரஸ் மேலிடம் கருதும் வகையில், தேர்தல் முடிவுகள் அமைய வேண்டும் என்பதற்காக ஷர்மிளா தீவிர தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், மக்கள் யாருக்கு எத்தகைய வெற்றியை / தோல்வியைத் தருகிறார்கள் என்பது ஜூன் 4ம் தேதி தெரிந்துவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்