மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை, கடந்த கால தேர்தல்களில் அக்கட்சிகளுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் எவ்வளவு, அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த தேர்தல் வெற்றிகள் / தோல்விகள், தற்போதைய கள சூழல் யாருக்கு சாதகமாக / பாதகமாக இருக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது நாட்டின் வட முனையில் இருக்கக்கூடிய ஜம்மு காஷ்மீரின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்ப்போம்.
இமயமலை அடிவாரத்தில் இருக்கக்கூடிய நாட்டின் அழகிய மாநிலம் ஜம்மு காஷ்மீர். இந்த மாநிலத்தின் குளிர்கால தலைநகராக ஜம்முவும், கோடைக்கால தலைநகராக ஸ்ரீநகரும் உள்ளன. பரப்பளவில் நாட்டின் 22வது பெரிய மாநிலம். ஜம்மு பிராந்தியத்தில் 10 மாவட்டங்கள், காஷ்மீர் பிராந்தியத்தில் 10 மாவட்டங்கள் என இந்த மாநிலத்தில் 20 மாவட்டங்கள் உள்ளன. அதோடு, 5 மக்களவைத் தொகுதிகள், 114 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், 24 சட்டப்பேரவைத் தொகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ளன.
மக்கள் தொகையில் ஜம்மு காஷ்மீர் நாட்டின் 20வது மாநிலம். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஜம்மு காஷ்மீரில் 1,25,41,302 மக்கள் வசிக்கிறார்கள். இது லடாக் மக்கள் தொகையான 2,74,289-ஐ உள்ளடக்கியது. இதில் ஆண்களின் எண்ணிக்கை 66,40,662. பெண்களின் எண்ணிக்கை 59,00,640. இந்த மாநிலத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 892 பெண்கள் மட்டுமே உள்ளனர். ஜம்மு காஷ்மீரின் எழுத்தறிவு 83.45 சதவீதமாக உள்ளது. இதில், ஆண்களின் எழுத்தறிவு 89.08 சதவீதமாகவும், பெண்களின் எழுத்தறிவு 77.13 சதவீதமாகவும் உள்ளது. கஷ்மீரி, டோக்ரி, உருது, இந்தி, ஆங்கிலம் ஆகியவை ஜம்மு காஷ்மீரின் அலுவலக மொழியாக உள்ளது.
இந்துக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பிராந்தியமாக ஜம்முவும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய பிராந்தியமாக காஷ்மீரும் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் 28.44 சதவீதமும், இஸ்லாமியர்கள் 68.32 சதவீதமும் உள்ளனர். சீக்கியர்கள் 1.87 சதவீதமும், பவுத்தர்கள் 0.90 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 0.28 சதவீதமும் உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 75.19% மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். 24.81% மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கிறார்கள். பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. அரிசி, சோளம், கோதுமை ஆகியவை அதிகம் பயிரிடப்படுகின்றன. ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் அதிக அளவில் இங்கு பயிரிடப்படுகின்றன. விவசாயத்துக்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பைத் தரக்கூடியதாக சுற்றுலாவும், கைவினைப் பொருட்கள் தயாரிப்பும் உள்ளன.
ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா, முப்தி முகம்மது சையத், குலாம் நபி ஆசாத், ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோர் ஜம்மு காஷ்மீரின் முதல்வர்களாக இருந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 30க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தாலும், பாஜக, காங்கிரஸ், ஃபரூக் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, மெகபூபா முஃப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி, சஜத் கனி லோனின் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி, குலாம் நபி ஆசாத்தின் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி ஆகியவையே பிரதான அரசியல் சக்திகளாக உள்ளன.
தற்போதைய தேர்தல் கள நிலவரம் குறித்து பார்ப்பதற்கு முன்பாக கடந்த சில தேர்தல்களின் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.
2014 மக்களவைத் தேர்தல்: இந்த தேர்தலில் 71,83,129 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 49.72% வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 6 தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிட்டது. காங்கிரஸ் 3 தொகுதி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 3 தொகுதி என இரண்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. 32.65% வாக்குகளுடன் பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி 20.72% வாக்குகளுடன் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 23.07% வாக்குகளையும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 11.22% வாக்குகளையும் மட்டுமே பெற்றன. தேர்தல் வெற்றி இக்கூட்டணிக்கு கிட்டவில்லை.
2014 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: இதில், 87 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. 73,16,946 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 47,94,374 பேர் வாக்களித்தனர். அதாவது, 65.52% வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் 75 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 22.98% வாக்குகளுடன் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி 84 தொகுதிகளில் போட்டியிட்டது. 22.67% வாக்குகளைப் பெற்ற இக்கட்சி, 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 86 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 18.01% வாக்குகளுடன் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
85 தொகுதிகளில் போட்டியிட்ட ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, 20.77% வாக்குகளுடன் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 3 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஎம் 0.50% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி 26 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், 1.93% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் இக்கட்சி வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீர் மதச்சார்பற்ற மக்கள் ஜனநாயக முன்னணி 3 தொகுதிகளில் போட்டியிட்டது. 0.72% வாக்குகளைப் பெற்ற இக்கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
தேர்தலுக்குப் பிறகு, பாஜகவும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியும் கூட்டணி ஆட்சியை அமைத்தன. முதலில், முஃதி முகம்மது சயத் முதல்வராக பொறுப்பேற்றார். 2016ல் அவர் மறைந்ததை அடுத்து, அவரது மகளான மெகபூபா முஃப்தி 2016 ஏப்ரல் 4ம் தேதி ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வரானார். கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பாஜக தனது ஆதரவை திரும்பப் பெற்றதை அடுத்து 2018 ஜூன் மாதம் மெகபூபா முஃப்தி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்,
2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலின்போது பாஜக, காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. இந்த தேர்தலின்போது 41,45,202 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களில், 35,62,744 பேர் அதாவது, 44.97% பேர் வாக்களித்தனர். மொத்தமுள்ள 6 தொகுதிகளிலும் போட்டியிட்ட பாஜக, 46.67% வாக்குகளுடன் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 7.94% வாக்குகளுடன் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 28.64% வாக்குகளையும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி 2.38% வாக்குகளையும் பெற்றன. ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி 3.78% வாக்குகளைப் பெற்றது.
இந்த தேர்தலைத் தொடர்ந்து மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 2019, ஆகஸ்ட் 5ம் தேதி மிக முக்கிய நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்தது. அதோடு, ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு, லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டன. லடாக் பிரிந்ததால், ஜம்மு காஷ்மீரின் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை 6ல் இருந்து 5 ஆக குறைந்தது.
2024 மக்களவைத் தேர்தல் கள நிலவரம்: இந்த பின்னணியில், 2024 மக்களவைத் தேர்தலை ஜம்மு காஷ்மீர் எதிர்கொள்கிறது. மொத்தமுள்ள 5 தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 முதற்கட்டத் தேர்தலில் ஒரு தொகுதி, ஏப்ரல் 26 இரண்டாம் கட்டத் தேர்தலில் ஒரு தொகுதி, மே 7 தேதி மூன்றாம் கட்டத் தேர்தலில் ஒரு தொகுதி, மே 13ம் தேதி நான்காம் கட்டத் தேர்தலில் ஒரு தொகுதி, மே 20 ஐந்தாம் கட்டத் தேர்தலில் ஒரு தொகுதி என இங்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு அணியாகவும், இண்டியா அணி ஒரு அணியாகவும் எதிர்கொள்கின்றன. பாஜக கூட்டணியில் ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. பாஜக 2 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி 2 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி முதலில் எடுத்தது. எனினும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி உடனான மோதலை அடுத்து, அந்த கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளிலும் போட்டி வேட்பாளரை ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி நிறுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. குலாம் நபி ஆசாத்தின் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அனந்தநாக் - ரஜோரி மக்களவைத் தேர்தலில் குலாம் நபி ஆசாத் போட்டியிடுவார் என அவரது கட்சி அறிவித்தது. எனினும், மக்களவைத் தேர்தலில் போட்டியிட தான் விரும்பவில்லை என்றும், மாநிலத்தின் வளர்ச்சியில்தான் தனது கவனம் உள்ளது என்றும் குலாம் நபி ஆசாத் கூறிவிட்டார்.
கருத்துக் கணிப்புகள்: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் 8 கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இவை அனைத்திலும், இண்டியா கூட்டணியே முன்னிலை வகிக்கிறது. இந்த கூட்டணி குறைந்த பட்சம் 2 தொகுதிகளிலும் அதிகபட்சம் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பாஜக கூட்டணி குறைந்தபட்சம் 1 தொகுதியிலும் அதிகபட்சம் 3 தொகுதியிலும் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் பிரச்சாரங்கள்: நரேந்திர மோடி தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அமைதியை ஏற்படுத்தியது உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி பாஜக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதோடு, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியின் வாக்குறுதிகள் குறித்தும் அக்கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியும் பிரச்சாரம் செய்து வருகின்றன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் மாநிலத்தின் அடையாளம் பறிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை ஆகிய பிரச்சினைகளை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளும் காங்கிரஸ், இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என உறுதி அளித்து வருகிறது. அதே நேரத்தில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 மீண்டும் கொண்டு வரப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago