மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை, கடந்த கால தேர்தல்களில் அக்கட்சிகளுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் எவ்வளவு, அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த தேர்தல் வெற்றிகள் / தோல்விகள், தற்போதைய கள சூழல் யாருக்கு சாதகமாக / பாதகமாக இருக்கிறது என பல்வேறு அம்சங்களை புள்ளி விவரங்களோடு இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் குஜராத்தின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்ப்போம்.
பரப்பளவில் நாட்டின் 5வது பெரிய மாநிலம் குஜராத். மக்கள் தொகையில் 9வது பெரிய மாநிலம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குஜராத் மக்கள் தொகை 6 கோடியே 4 லட்சம். மாநிலத்தின் கல்வி அறிவு 78.03%. இதில், ஆண்களின் கல்வி அறிவு 85.75%. பெண்களின் கல்வி அறிவு 69.68%. இம்மாநிலத்தில், ஆயிரம் ஆண்களுக்கு 919 பெண்கள் இருக்கிறார்கள். கிராமப்புறங்களில் 57.40% மக்கள் வசிக்கிறார்கள். நகர்ப்புறங்களில் 42.60% மக்கள் வசிக்கிறார்கள். மக்களின் தாய் மொழி குஜராத்தி. அதேநேரத்தில், இந்தி பரவலாகப் பேசப்படுகிறது.
குஜராத்தில் இந்துக்கள் 88.57% இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் 9.67% இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பிற மதத்தினர் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறார்கள். குஜராத்தில் 33 மாவட்டங்கள், 26 மக்களவைத் தொகுதிகள், 182 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன. குஜராத்தை அதிக காலம் ஆட்சி செய்த கட்சி காங்கிரஸ். அதேநேரத்தில், 1998 முதல் தற்போது வரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவே இம்மாநிலத்தை தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது.
சிமன்பாய் படேல், மாதவ் சிங் சோலங்கி, கேசுபாய் படேல், சங்கர் சிங் வகேலா, நரேந்திர மோடி, ஆனந்திபென் படேல், விஜய் ரூபானி என பலர் இம்மாநிலத்தின் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். தற்போது பூபேந்திரபாய் படேல் முதல்வராக இருக்கிறார். மாநிலத்தை அதிக காலம் ஆட்சி செய்த முதல்வர் என்ற பெயரை நரேந்திர மோடி பெற்றுள்ளார். இவர், 12 ஆண்டுகள் 227 நாட்கள் குஜராத்தின் முதல்வராக இருந்துள்ளார். குஜராத்தில் 450க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. எனினும், பாஜகவும், காங்கிரசுமே மாநிலத்தின் அரசியலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். குஜராத்தின் தற்போதைய தேர்தல் கள நிலவரம் குறித்து அறிந்து கொள்வதற்கு முன்பாக, கடந்த கால தேர்தல் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.
» “எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்ட உச்ச நீதிமன்றம்” - பிரதமர் மோடி கருத்து @ விவிபாட் தீர்ப்பு
» “மம்தா அரசால் 26,000 குடும்பங்கள் வேலை இழப்பு” - மோடி குற்றச்சாட்டு @ மேற்கு வங்கம்
2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலின்போது மொத்தம் 4,06,03,104 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களில், 63.66% பேர் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவு செய்தனர். இந்த தேர்தலில் பாஜகவும், காங்கிரசும் தனித்துப் போட்டியிட்டன. 60.11% வாக்குகளைப் பெற்ற பாஜக மொத்தமுள்ள 26 தொகுதிகளையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 33.45% வாக்குகளை மட்டுமே பெற்றது. வேறு எந்த கட்சியும் ஒரு சதவீத வாக்கைக்கூட பெறவில்லை.
2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலின்போது 4,51,52,373 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களில், 64.51% பேர் வாக்களித்தனர். இந்த தேர்தலில் பாஜகவும், காங்கிரசும் தனித்துப் போட்டியிட்டன. இதில், 63.07% வாக்குகளைப் பெற்ற பாஜக மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 32.55% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. பிற கட்சிகள் ஒரு சதவீதம் அளவுக்குக்கூட வாக்கினைப் பெறவில்லை.
2022 சட்டப்பேரவைத் தேரதல் முடிவுகள்: இந்த தேர்தலின்போது 4,91,63,277 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 64.84% வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட பாஜக, 52.50% வாக்குகளுடன் 156 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. 179 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 27.75% வாக்குகளுடன் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 181 தொகுதிகளில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 12.98% வாக்குகளுடன் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சமாஜ்வாதி கட்சி 3.11% வாக்குகளைப் பெற்று ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. சுயேச்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
2024 மக்களவைத் தேர்தல்: குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதை அடுத்து, மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
சூரத் தொகுதியின் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். அதே தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த நிலேஷ் கும்பானி என்ற காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த சுயேச்சைகள் உள்பட 8 வேட்பாளர்களும் மனுவை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து, முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில், பாஜக தனித்து களம் காண்கிறது. காங்கிரஸ் கட்சி முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 24 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் வியூகத்தை மாற்றி இருக்கும் காங்கிரஸ், குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற முனைப்பு காட்டி வருகிறது.
மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 10-க்கும் மேற்பட்ட கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்துக் கருத்துக் கணிப்புகளுமே, மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் பாஜகவே வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன. பாஜக குறைந்தபட்சம் 60.70% வாக்குகளையும், அதிகபட்சம் 64% வாக்குகளையும் பெறும் என்றும், காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி குறைந்தபட்சம் 26% வாக்குகளையும், அதிகபட்சம் 35% வாக்குகளையும் பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறி இருக்கின்றன.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago