மாயாவதியின் மனதில் இருப்பது என்ன? | மக்களவை மகா யுத்தம்

By வெ.சந்திரமோகன்

மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் நிலைப்பாடு குறித்துத் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியிலோ இடம்பெறாமல் தனித்தே களம் காண்கிறது பகுஜன் சமாஜ் கட்சி. இண்டியா கூட்டணித் தலைவர்கள் பல முறை அழைத்தும் அதை ஏற்க மாயாவதி முன்வரவில்லை. அவரது வியூகம்தான் என்ன?

பாஜகவுக்கு மறைமுக ஆதரவா? நான்கு முறை உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த மாயாவதி, தனது ஆட்சிக்காலத்தில் தலித் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கணிசமாகப் பங்களித்தார். உத்தரப் பிரதேசத்தின் பல கிராமங்களுக்கு மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தந்தார். 2012 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர், மாயாவதியின் தீவிர அரசியல் செயல்பாடுகள் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கின. குறிப்பாக, தலித் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து காத்திரமான கருத்து தெரிவிக்காமல் அமைதி காப்பது மாயாவதியின் பின்னடைவுக்கான அத்தாட்சி என விமர்சிக்கப்படுகிறது.

பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை மாயாவதி விலக்கிக்கொள்ளவில்லை. அவர் மீது சிபிஐ விசாரணை இருந்ததுதான், அதற்குக் காரணம் எனப் பேசப்பட்டது. மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் மாயாவதியின் மெளனம் இன்னும் இறுகியது. அதற்கும் அவர் மீதான ஊழல் வழக்குகளே காரணம் எனக் கூறப்படுகிறது. காஷ்மீரில் 370ஆவது சட்டக்கூறு ரத்து, முத்தலாக் தடைச் சட்டம், பொருளாதாரத்தில் நலிந்த உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு என மோடி அரசு கொண்டுவந்த பல மசோதாக்களைப் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரித்தது. இப்போது பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்படக் கூடாது என்பதற்காகவே பகுஜன் சமாஜ் கட்சி தனித்து நிற்பதாகப் பேசப்படுகிறது.

இந்தியாவின் மிக முக்கியமான தலித் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் இந்நிலைப்பாட்டால், தலித் வாக்குகள் சிதறுண்டு பாஜகவுக்குச் சாதகமான சூழலை உருவாக்கலாம் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து. அதேவேளையில், பிற கட்சிகளைப் போலவே பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்தும் எம்பி-க்கள்,எம்எல்ஏ-க்கள் பாஜகவுக்குத் தாவுவதும் ஒருபுறம் அரங்கேறிவருகிறது. சிலவிஷயங்களில் பாஜகவுக்குப் பதிலடிகொடுக்க மாயாவதியும் தயங்கு வதில்லை. மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் மதுரா, அலிகர் தொகுதிகளில் பாஜகவிலிருந்து வந்த சுரேஷ் சிங், ஹிதேந்திர குமார் ஆகியோரைத்தான் களமிறக்கியிருக்கிறது பகுஜன் சமாஜ் கட்சி.

கூட்டணிக் கணக்குகள்: அரசியல் எதிரிகளிடமிருந்து மாயாவதி நிரந்தரமாக விலகியிருப்பதில்லை. 1995இல் சமாஜ்வாதி கட்சியுடனான உறவு முறிந்த பின்னர், லக்னோவில் அரசு விருந்தினர் மாளிகையில், மாயாவதி மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். எனினும், பகைமையை மறந்து 2018இல் கோரக்பூர் மக்களவை இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கைகோத்தார். அந்தக் கூட்டணி 2019 மக்களவைத் தேர்தலிலும் தொடர்ந்தது. அந்தத் தேர்தலில் கிடைத்த தோல்விக்குப் பின்னர், கூட்டணியை முறித்துக்கொண்டு தனிவழி கண்டார்; இப்போதும் அது தொடர்கிறது. அரசியல் செல்வாக்கு குறைந்துவிட்டதால், கூட்டணி விஷயத்தில் பேரம் பேச பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாய்ப்பு குறைவு என்பதாலேயே கூட்டணிகளை மாயாவதி தவிர்க்கிறார் எனக் கூறப்படுகிறது.

காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளின் ஆட்சிகளும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் பங்களிக்கவில்லை என மாயாவதி தொடர்ந்து பேசிவருகிறார். காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறுவது பகுஜன் சமாஜ் கட்சிக்கான தலித் வாக்கு வங்கியை இழக்கவைக்கும் என்பதாலேயே அக்கட்சியை மாயாவதி கடுமையாக விமர்சிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஒரு காலத்தில் முன்னேறிய வகுப்பினர் - முஸ்லிம்கள் - தலித்துகளை ஒருங்கிணைக்கும் சமூகச் சமன்பாடுகள் மூலம் வெற்றிகளைப் பெற்ற மாயாவதி, இந்த முறையும் அப்படியான சில முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். முஸ்லிம் வாக்குகள் காங்கிரஸ் - சமாஜ்வாதி அடங்கிய இண்டியா கூட்டணிக்குக் கிடைக்கும் என அக்கட்சிகள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேரை இந்த முறை களமிறக்கியிருக்கிறார் மாயாவதி. அதேபோல், குஜராத்தில் சத்திரிய தாக்கூர் சமூகத்தினர் குறித்து அவதூறாகப் பேசிய மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலாவுக்கு எதிராக, குஜராத் மட்டுமல்லாமல் உத்தரப் பிரதேசத்திலும் அச்சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில், காஸியாபாத், கெளதம் புத்தா நகர் ஆகிய தொகுதிகளில் சத்திரிய தாக்கூர் சமூகத்தினரை வேட்பாளர்களாகக் களமிறக்கியிருக்கிறார் மாயாவதி.

பலம் சேர்க்கும் மருமகன்: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தைப் பொறுத்தவரை, மாயாவதியை விடவும் அவரது மருமகனும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஆகாஷ் ஆனந்தின் பங்கே அதிகம். லண்டனில் எம்பிஏ படித்த ஆகாஷ், பகுஜன் சமாஜ் கட்சியின் நவீன முகமாகவே அறியப்படுகிறார். ஊடகங்களையும் திறம்படக் கையாள்கிறார். அவரது பிரச்சாரக் கூட்டங்களில் அதிக அளவில் கூட்டம் சேர்கிறது.

2014 மக்களவைத் தேர்தலில் கிடைத்த அதே 19% வாக்குகள், 2019 மக்களவைத் தேர்தலிலும் கிடைத்ததை இன்றைக்கும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள். ஆனால், 2022 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியின் வாக்குவங்கி ஏறத்தாழ 13%ஆகச் சுருங்கிவிட்டது. அந்தத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில்தான் அக்கட்சி வென்றது. எனினும், தனித்துப் போட்டியிட்டால்தான் தங்கள் வாக்குவங்கியைத் தக்கவைக்க முடியும் என்று பகுஜன் சமாஜ் கட்சி கருதுகிறது.

சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஆகாஷ், “கூட்டணி வைத்தால் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எங்களுக்கு ஆதரவான வாக்குகளைப் பெற்றுவிடுகின்றன. அது பாஜகவுக்கே சாதகமாகிவிடுகிறது” எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், இண்டியா கூட்டணிதான் பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்கிறது என்று அதிரடியாகக் கூறியிருக்கிறார்.

முன்னாள் அரசியல் கூட்டாளியான சமாஜ்வாதி கட்சியைச் சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் ஆகாஷ், இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இப்போதுதான் இடஒதுக்கீடு பற்றி இவ்வளவு ஆர்வம் வருகிறதா என்றும் கேள்வி எழுப்புகிறார். மற்றொரு தலித் தலைவரான சந்திரசேகர் ஆசாத் பகுஜன் சமாஜ் கட்சிக்குப் பெரும் சவாலாக இருக்கிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுத் தளமாக இருக்கும் தலித் இளைஞர்களை ஈர்ப்பதில் ஓரளவு வெற்றியும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. இதனால், பிரச்சார மேடைகளில் சந்திரசேகர் ஆசாத்தைக் கடுமையாகச் சாடுகிறார் ஆகாஷ்.

தேர்தலுக்குப் பிறகான கூட்டணி? “ராமர் கோயில் கட்டப்பட்டது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு ராமர் கோயில் திறப்பு நியாயம் சேர்த்துவிடாது” என்று பகிரங்கமாக விமர்சிக்கும் ஆகாஷ், மறுபுறம் மோடி அரசு மீது கனமான விமர்சனங்களை வைப்பதில்லை. “அப்படிச் செய்தால் கடுமையான பதிலடி கிடைக்கும். அது எங்கள் தலித் சமூகத்தினருக்குப் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்” என்று விளக்கமும் அளிக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்துக் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும், மாயாவதியின் எண்ணம் அதுதான் என்றும் கூறும் ஆகாஷ், “தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ஒருவேளை பாஜகவுடனான கூட்டணிக்கு வாய்ப்பு இருந்தால், தலித் சமூகத்தினரின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு அதைப் பயன்படுத்திக்கொள்வோம்” என்றும் கூறியிருக்கிறார். இரண்டு முறை (1997, 2002) பாஜக ஆதரவுடன்தான் மாயாவதி முதல்வரானார் என்பது கவனிக்கத்தக்கது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE