மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை, கடந்த கால தேர்தல்களில் அக்கட்சிகளுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் எவ்வளவு, அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த தேர்தல் வெற்றிகள் / தோல்விகள், தற்போதைய கள சூழல் யாருக்கு சாதகமாக / பாதகமாக இருக்கிறது என பல்வேறு அம்சங்களை புள்ளி விவரங்களோடு இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது சத்தீஸ்கரின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்ப்போம்.
மத்தியப் பிரதேசத்தில் இருந்து கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பிறந்த மாநிலம் சத்தீஸ்கர். பரப்பளவில் நாட்டின் 10-வது பெரிய மாநிலம். மக்கள்தொகையில் 16-வது பெரிய மாநிலம். இங்கு 2 கோடியே 56 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இம்மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். சத்தீஸ்கர் மக்களின் தாய் மொழி சத்தீஸ்கரி. எனினும், இங்கு மக்கள் அதிக அளவில் இந்தி பேசுகிறார்கள். மாநிலத்தின் எழுத்தறிவு 70.28% உள்ளது. இதில், ஆண்களின் எழுத்தறிவு 80.27% உள்ளது. பெண்களின் எழுத்தறிவு 60.24% உள்ளது.
சத்தீஸ்கர் மக்களின் பிரதான தொழில் விவசாயம். மாநிலத்தின் 80% மக்கள் விவசாயம் சார்ந்த பணிகளை மேற்கொள்கிறார்கள். இங்கு அரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதால், நாட்டின் அரிசி கிண்ணம் என இம்மாநிலம் அழைக்கப்படுகிறது. சத்தீஸ்கர் 33 மாவட்டங்கள், 11 மக்களவைத் தொகுதிகள், 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. சத்தீஸ்கரில் 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தலும், பிரதான அரசியல் சக்திகளாக பாஜகவும், காங்கிரசுமே இருக்கின்றன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாநிலத்தில் இந்துக்கள் 93.25% இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் 2.02 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 1.92 சதவீதமும் இருக்கிறார்கள்.
மாநிலம் தோற்றுவிக்கப்பட்டது முதல் காங்கிரஸும், பாஜகவுமே மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. அஜித் ஜோகி, ரமன் சிங், பூபேஷ் பெகல் ஆகியோர் முதல்வர்களாக இருந்துள்ளனர். தற்போது விஷ்ணு தியோ சாய் முதல்வராக இருக்கிறார். சத்தீஸ்கரை காங்கிரஸ் 8 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது. பாஜக 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்திருக்கிறது. தற்போதும் அக்கட்சியின் ஆட்சியே உள்ளது.
தற்போதைய தேர்தல் கள நிலவரம் குறித்து அறிந்து கொள்வதற்கு முன்பாக, கடந்த கால மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.
2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை 11 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டன. இந்த தேர்தலில், 1,76,64,520 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 69.39% வாக்குகள் பதிவாகின. இதில், பாஜக 24.83% வாக்குகளுடன் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 19.55% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 2.44% வாக்குகளை மட்டுமே பெற்றது. பிற கட்சிகள், ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றன.
2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: மொத்தமுள்ள 11 தொகுதிகளிலும் பாஜகவும், காங்கிரஸும், பகுஜன் சமாஜ் கட்சியும் தனித்துப் போட்டியிட்டன. இந்த தேர்தலில் 1,90,16,462 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 71.64% வாக்குகள் பதிவாகின. இதில், பாஜக, 51.44% வாக்குகளுடன் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 41.50% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் 2.33% வாக்குகளை மட்டுமே பெற்றது. தேர்தலில் போட்டியிட்ட பிற கட்சிகள் அனைத்தும் ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றன.
2023 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: பாஜகவும், காங்கிரஸும் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டன. பகுஜன் சமாஜ் கட்சி, கோண்ட்வானா கனதந்திரா கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. பகுஜன் சமாஜ் கட்சி 58 தொகுதிகளிலும், கோண்ட்வானா கனதந்திரா 32 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த தேர்தலில், 2,04,12,807 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 76.75% வாக்குகள் பதிவாகின. இதில், பாஜக 46.87% வாக்குகளுடன் 54 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி 42.77% வாக்குகளுடன் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கோண்ட்வானா கனதந்திரா கட்சி 1.39% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 2.05% வாக்குகளை மட்டுமே பெற்றது.
2024 தேர்தல் கள நிலவரம்: இந்த தேர்தலிலும் பாஜகவும், காங்கிரஸும் தனித்தே களம் காண்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இந்த மாநிலத்தில் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19 முதற்கட்டத் தேர்தலில் ஒரு தொகுதி, ஏப்ரல் 26 இரண்டாம் கட்டத் தேர்தலில் 3 தொகுதிகள், மே 7 மூன்றாம் கட்டத் தேர்தலில் 7 தொகுதிகள் என தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சார வியூகங்கள்: பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் மகாதாரி வந்தனா திட்டம், அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்களை இலவசமாக அழைத்துச் செல்லும் குழந்தை ராமர் தரிசன திட்டம் உள்ளிட்ட திட்டங்களை மாநில அரசு நிறைவேற்றி இருப்பதை சுட்டிக்காட்டி பாஜக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதோடு, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்டும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பிரதமரின் உத்தரவாதங்களையும் சொல்லி பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. அதோடு, நக்சல் தீவிரவாதத்தை தங்கள் கட்சி ஒழித்து வருவதாகவும், ஆனால், காங்கிரஸ் நக்சல்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் பாஜக பிரச்சாரம் மேற்கொள்கிறது.
மற்றொருபுறம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கான நியாயம், பெண்களுக்கான நியாயம், விவசாயிகளுக்கான நியாயம், தொழிலாளர்களுக்கான நியாயம், ஏழைகளுக்கான நியாயம் எனும் 5 பிரதான வாக்குறுதிகளை முன்வைத்து காங்கிரஸ் பிரச்சாரம் மேற்கொள்கிறது. மேலும், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை, மதச்சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுகிறார்கள், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வருகிறது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago