கடல் மட்டத்திலிருந்து 6.4 மீட்டர் உயரத்தில் இருக்கிறது சென்னை மாநகரம். புவி வெப்பமாதலால் கடல் மட்டம் உயர்ந்து 2050க்குள் சென்னையின் 144 சதுர கி.மீ. அளவிலான நிலப்பரப்பு நீரில் மூழ்கிவிடும் என ஓர் ஆய்வு எச்சரிக்கிறது. அத்துடன், கடந்த பத்தாண்டுகளாகச் சாலைகளாலும் - அதாவது, சாலை உயர்வுகளாலும் புதைந்துகொண்டிருக்கிறது சென்னை.
2015, 2023 வெள்ளங்களில் சென்னையே மூழ்கி, மக்களின் ஏராளமான சொத்துகள் சாலைகளில் குப்பை மலைகளாக வீசப்பட்டன. அந்தப் பேரழிவுக்கு அடிப்படைக் காரணம், சென்னையின் சாலைகள்மளமளவென உயர்த்தப்பட்டதுதான் எனத் தமிழ்நாடு அரசின் பொறியாளர் சங்க முன்னாள் தலைவர் குற்றம்சாட்டினார்.
சாலை மட்டம் உயர்வது ஒற்றை நிகழ்வு அல்ல; அது தொடர் முறைகேடுகளின் ஊற்றுக்கண். மிக நுட்பமான முறையில் பின்னப்பட்டு, கண்ணுக்குத் தெரிந்தே, எல்லோரது பார்வையில் படும்படி நடந்துகொண்டிருக்கும் சங்கிலித் தொடர் முறைகேடு. இதன் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?
புதையுண்டுவரும் சென்னை: 1992ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அப்போதைய துணைவேந்தர் டாக்டர் எஸ்.சாதிக் பேசும்போது, அவரது மாணவப் பருவத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கலைநயம் மிக்க மதில் சுவருக்குக் கீழே நடைமேடையும், அதற்கும் கீழே சாலையும் இருந்ததாக நினைவுகூர்ந்திருந்தார்.
» மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர்
இப்போது மதில் சுவரின் தலை மட்டுமே தெரிகிறது; சாலையானது தொடர்ந்து மேலே மேலே போடப்பட்டதால் மதில் சுவர் மறைந்துவிட்டது என்றும் குறைபட்டுக்கொண்டார். இப்போது நிலைமை இன்னும் மோசம், கடந்த 30 ஆண்டுகளில் அந்தச் சுவர் முழுமையாகப் புதைக்கப்பட்டு புதிய சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
தாமஸ் மன்றோ சிலையைச் சுற்றியிருந்த நீள்வட்டச் சுற்றுச்சுவர், மாநிலக் கல்லூரி, சென்னை உயர் நீதிமன்றம் - சட்டக் கல்லூரி - போர் நினைவுச் சின்னத்தைச் சுற்றியிருந்த நடைமேடையுடன் கூடிய சின்ன மதில், சென்னை அருங்காட்சியக மதில் என அத்தனையும் சாலை மேம்பாட்டால் புதைக்கப்பட்டன.
இதில் அருங்காட்சியகத்தின் மதில் மட்டும் மீட்கப்பட்டு புனரமைக்கப்பட்டது. இது வெறும் மதில் சுவர் பிரச்சினையல்ல, அந்த மதிலால் பாதுகாக்கப்படும் கட்டிடமும் சேர்ந்து தனது தரையை இழந்து புதைக்கப்பட்ட சோகக் கதை. இதன் அடுத்த அத்தியாயத்தைச் சென்னை மெட்ரோ எழுதிக்கொண்டிருக்கிறது.
மெட்ரோ நிர்வாகத்தின் மெத்தனம்: உலகின் பல நாடுகளில் மெட்ரோ ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. தரைக்கு மேலும் கீழும் இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகில் எங்கெல்லாம் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டாலும் ஒரே மாதிரியான பல அளவீடுகள் பயன்படுத்தப்பட்டாலும், சாலையைப் பொறுத்தவரையில் ஒரே அளவீடுதான் பயன்படுத்தப்படுகிறது.
அதாவது, பூமிக்கு 20 மீட்டருக்குக் கீழே அதன்பாதை அமைக்கப்படுவதால் மேலே இருக்கும் சாலையின் மட்டம் உயரக் கூடாது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதி. ஏனெனில், சாலையின் மட்டம் உயர்ந்தால் சாலையை ஒட்டியுள்ள கட்டிடங்கள் பூமிக்குள் புதையுண்டு போவதுடன், மழை நீர் உள்ளே நுழையும்.
தொடர்ந்து சாலைகள் மேலே மேலே அமைக்கப்படுமானால், சாலையை ஒட்டியுள்ள கட்டிடங்களைப் பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கவோ இடித்துக் கட்டவோ பெரும் செலவு ஏற்படும். ஏறக்குறைய இது நகரை மறுகட்டுமானம் செய்வதைப் போன்றது.
கட்டுமானப் பணி தொடங்கப்பட்டபோது இரண்டு முக்கியமான உறுதிமொழிகளை மெட்ரோ நிறுவனம் தந்தது. முதலாவது, மெட்ரோ ரயில் போகும் பாதைகளில் உள்ள சாலைகளைத் தற்காலிகமாக மட்டுமே மெட்ரோ நிர்வாகம் தனது கட்டுமானப் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளும்.
பணிகள் முடிந்த பிறகு, அந்தச் சாலைகள் எந்த உயரத்தில் இருந்தனவோ அதே உயரத்தில் திரும்ப மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படும். இரண்டாவது, மெட்ரோ பயன்பாட்டுக்குத் தற்காலிகமாக எடுக்கப்படும் அரசு, தனியார் நிறுவன நிலங்கள் அவற்றில் உள்ள பழைய கட்டுமானங்களோடு திரும்ப ஒப்படைக்கப்படும்.
இந்த வாக்குறுதிகளைக் கண்காணிக்க வேண்டிய சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னைப் பாரம்பரியக் கட்டிடங்கள் கண்காணிப்பு அமைப்பு ஆகியன தங்கள் கடமையைச் செய்யவில்லை.
ஏற்கெனவே, மாநகராட்சியின் அலட்சியத்தால் சாலைகள் கன்னாபின்னாவென உயர்த்தப்பட்டு, வீடுகள் புதைந்துள்ள விம்கோ நகரிலிருந்து மெட்ரோ தொடங்கி நெரிசல் மிகுந்த திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மெட்ரோ கட்டுமானம் சாலையின் நடுப்பகுதியைச் சராசரியாக இரண்டு அடிகளுக்கு உயர்த்தியுள்ளது. மெட்ரோ ரயில் போகும் பாதைகளின் மேலுள்ள சாலைகள் சராசரியாக இரண்டு அடிகள் வரைஉயர்த்தப்படுகின்றன என்றால், அதன் நிறுத்தங்கள்தான் பெரும் அச்சுறுத்தல்களாக மாறியுள்ளன. மெட்ரோ முடிகின்றபோது கட்டிடங்களின் வாசல்கள்கூடப் பாதியளவு புதைந்திருக்கும்.
அடுத்து வரும் உயர் நீதிமன்ற மெட்ரோ நிலையம் படுமோசம். அங்கே கண்கூடாகப் பார்க்கும் வகையில் மோசடி நடந்துள்ளது. டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி வளாகத்தின் சுற்றுச்சுவர் சிதைக்கப்பட்டு, அதன் வளாகம் சுருக்கப்பட்டு மெட்ரோ ஆக்கிரமித்துள்ளது.
அக்கல்லூரியின் பழைய இடத்தை மெட்ரோ நிர்வாகம் திரும்பத் தரவேயில்லை. அதுமட்டுமின்றி, அதன் பாரம்பரியம் மிக்க நுழைவாயிலை நாசம் செய்துள்ளது. அதற்கு எதிரே உள்ள குறளகம், ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனம், சென்னை இல்லம், சேம்பர் ஆஃப் காமர்ஸ் கட்டிடங்கள் அரை மீட்டருக்குப் புதைக்கப்பட்டு, அக்கட்டிடங்களின் பிளாட்பாரங்களோடு படிகளை இழந்திருப்பதுடன் அவற்றின் சுற்றுச்சுவர்கள் முற்றிலும் பூமியில் புதைக்கப்பட்டுள்ளன.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ கற்பனை செய்ய முடியாத சிதைவை உருவாக்கியுள்ளது. ரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த பாரம்பரியக் கட்டிடங்கள் முழுமையாக இடிக்கப்பட்டு, ஒரே ஒரு சிறிய சிவப்புக் கட்டிடம் மட்டும் பேருக்கு நிற்கிறது. விக்டோரியா ஹால், ரிப்பன் கட்டிடங்களுக்குச் செல்ல ஒரு மீட்டர் கீழே இறங்கியாக வேண்டும்.
அதற்குப் பிறகு ‘தி இந்து’ அலுவலகத்திலிருந்து தொடங்கி சைதாப்பேட்டை வரையில் அண்ணாசாலை ஒரு மேம்பாலம்போல உயர்த்தப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்து அலுவலகத்துக்குள் நுழைய வேண்டுமானால், அண்ணா சாலையிலிருந்து மெதுவாக ஏறி, அந்த அலுவலக வளாகத்துக்குள் நுழைய வேண்டும்.
அப்படித்தான் ‘தி மெயில்’ அலுவலகம், பிஆர் அண்ட் சன்ஸ் மற்றும் ராஜாஜி ஹால் ஆகியன இருந்தன. இப்போது அண்ணா சாலையின் நடுவிலிருந்து இந்து அலுவலகத்தைப் பார்த்தால் அதன் பழைய சாலை இரண்டு மீட்டர்கள் உயர்த்தப்பட்டது தெரியும்.
அதில் மெட்ரோவின் பங்கு ஒரு மீட்டர். பாரம்பரியம் மிக்க கட்டிடமான எல்ஐசி தனது உயரத்தில் ஒரு மீட்டரை இழந்திருக்கிறது. புகழ்பெற்ற ஹிக்கின்பாதம்ஸ் வாசலின் மூன்று அடிகளைக் காணோம். இப்படி அண்ணாசாலை முழுக்கவும் கட்டிடங்கள் மெட்ரோவினால் புதைந்திருக்கின்றன.
தீர்வு என்ன? - சாலையினால் புதைக்கப்பட்ட கட்டிடங்களின் வாயில்களை இனி உயர்த்திக் கட்ட முடியாது. ஒன்று இடிக்க வேண்டும் அல்லது வாசலுக்கு எதிரே சுரங்கத்தைத் தோண்டி, நுழைவாயிலைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் சாலையின் உயரத்தைக் கூட்டக் கூடாது என்றும், தெருக்களின் பழைய சாலைகளை நான்கு அங்குலம் பெயர்த்து எடுத்துவிட்டு, இரண்டு அங்குலம் புதிய சாலை போட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மெட்ரோ நிர்வாகமும், சென்னை மாநகராட்சியும் குழிதோண்டிப் புதைத்துவிட்டன.
இந்தப் பேராபத்து கிராமங்களைக்கூட விட்டு வைக்கவில்லை. சாலையின் உயரம், வீடுகளில் வசிக்கும் குடிமக்களின் இருப்பிட உரிமையோடு தொடர்புடையது என்கிற புரிதல் அரசுக்கு உருவானால்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்!
- தொடர்புக்கு: writersannah@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago