மக்களவைத் தேர்தல்: ஏன், எப்படி வாக்களிக்க வேண்டும்?

By ச.கோபாலகிருஷ்ணன்

2014 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 37இல் வெற்றிபெற்றது. 2019 தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த இரண்டு தேர்தல்களிலும் தமிழ்நாட்டில் வெற்றிபெற்ற கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைத்த பாஜகவின் கூட்டணியில் இல்லை.

எனவே, இந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை மக்களவைக்குத் தேர்ந்தெடுத்ததன் மூலம் வாக்காளர்கள் தமது வாக்குகளை வீணடித்துவிட்டார்கள் என்னும்கருத்து சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டது. ஆனால், இம்முறை களத்தில் உள்ள மூன்று அணிகளுமே குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதைக் காண முடிகிறது.

மக்களவை என்பது ஆளும்கட்சி, பிரதமர், அமைச்சர்கள் ஆகியோரால் மட்டும் நடத்தப்படுவது அல்ல. எதிர்க்கட்சி, சுயேச்சை உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் தவிர்க்க முடியாத அங்கத்தினர் ஆவர்.

பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் விதம்: அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவின் பிரதமர் யார்என்பதைத் தீர்மானிக்கப்போவது மக்களவைத் தேர்தல் முடிவுகள்தான். ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைப் போல அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முறை இந்தியாவில் இல்லை.

நாம் பிரதமரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை. மக்களவை உறுப்பினரையே (எம்.பி.) தேர்ந்தெடுக்கிறோம், பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையில் எந்தக் கட்சி அல்லது கூட்டணியைச் சேர்ந்தவர்கள் எம்பிக்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அவர்களே ஆட்சி அமைப்பதற்கான அதிகாரத்தைப் பெறுவார்கள். அவர்கள் தம்முள் ஒருவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுப்பார்கள்.

பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப்பெற்றவர் பிரதமராகவும், பிரதமரால் பரிந்துரைக்கப்படுகிறவர்கள் அமைச்சர்களாகவும் குடியரசுத்தலைவரால் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்படுவார்கள். பிரதமர் தலைமையிலான மத்தியஅமைச்சரவைதான் மத்திய ஆட்சியை வழிநடத்துகிறது. கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், தேசப் பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான உறவுஎனப் பல்வேறு விவகாரங்களுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டு அவற்றுக்கான அமைச்சர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

இந்தத் துறைகள் சார்ந்து இவர்களே புதிய சட்டங்களையும், இருக்கும் சட்டங்களில் திருத்தங்களையும் பல புதிய திட்டங்களையும் முன்மொழிகிறார்கள். அமைச்சராக நியமிக்கப்படுபவர் மக்களவை எம்பி ஆகவோ மாநிலங்களவை எம்பி ஆகவோ இருக்க வேண்டும் அல்லது அமைச்சராக்கப்பட்ட ஆறு மாத காலத்துக்குள் ஏதேனும் ஓர் அவையின் எம்பி ஆகிவிட வேண்டும். பெரும்பாலும் மக்களவை எம்பிக்களிடமே முக்கிய அமைச்சகப் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.

எதிர்க்கட்சிகளின் பங்கு: நாடாளுமன்றத்தின் முதன்மையான பணி, அரசின் வரவு-செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்தல், பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குதல் (பட்ஜெட்), சட்டம் இயற்றுதல். எந்த ஒரு சட்டமும், சட்டத்திருத்தமும் இரண்டு அவைகளிலும் மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட வேண்டும். பண மசோதாக்களைத் தவிர பிற அனைத்து மசோதாக்களும் இரு அவைகளிலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறிய பிறகுதான் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டம் ஆகும்.

மத்தியில் ஆளும் கட்சியோ கூட்டணியோ பெரும்பான்மையுடன் ஆட்சி செய்துவரும் சூழலில், மக்களவையில் சட்டங்களை நிறைவேற்றுவதை எதிர்க்கட்சிகள் தடுக்க முடியாது. மத்தியில் ஆளும் கட்சியே பல மாநிலங்களில் ஆளும் கட்சியாகவோ ஆளும் கூட்டணியின் அங்கமாகவோ இருக்கும்போது, மாநிலங்களவையிலும் அரசு கொண்டுவரும் மசோதாக்களை நிறைவேற்றுவதற்குத் தடை இருக்காது.

ஆனால், எந்த ஒரு மசோதாவும் நாடாளுமன்ற அவைகளில் உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்ட பிறகே சட்டமாக நிறைவேறும். இந்த விவாதத்தில் சுயேச்சை உறுப்பினர்கள் உள்பட அனைத்துஉறுப்பினர்களும் பங்கேற்கலாம். வெவ்வேறுகொள்கைகள், கருத்தியல்களை முன்னிலைப்படுத்துபவர்கள் இந்த விவாதங்களில் பங்கேற்றால்தான் அரசு கொண்டுவரும் சட்டங்கள் கூடுமானவரை குறைகள் நீக்கப்பட்டு, அதிக நன்மைகள் கொண்டவையாக நிறைவேற்றப்பட முடியும்.

நிலைக் குழுக்கள்: மசோதாக்களின் மீதான விவாதம் சில நேரம் அவற்றை நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவதற்கும் வழிவகுக்கும். இக்குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இருப்பார்கள். இத்தகைய விவாதங்களிலும் நிலைக் குழு பரிசீலனைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் பரிந்துரைகளை அரசு ஏற்று சில மாற்றங்களைச் செய்வதற்கும் வாய்ப்பு உண்டு.

எனவே, ஆளும்கட்சி எவ்வளவு வலுவாக இருந்தாலும் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் முக்கியப் பங்காற்ற முடியும்; மாற்றங்களை விளைவிக்க முடியாவிட்டாலும் மாற்றுக் கருத்தைப் பதிவுசெய்வதும் முக்கியக் கடமை. ஜனநாயகத்துக்கு அது மிகவும் அவசியம்.

மேலும், தொகுதி மக்களின் தேவைகளை விளக்கி, சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களிடம் கேள்விகளை எழுப்பி, கோரிக்கைகளை முன்வைத்து மக்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுத் தரும் பொறுப்பும் மக்களவை உறுப்பினர்களுக்கு உள்ளது. அதற்கு, தொகுதியின் தேவைகளை, மக்களின் விருப்பங்களை நன்கு உள்வாங்கியிருக்க வேண்டும். அவை விவாதங்களில் அவற்றைமுன்வைத்து தொகுதிக்கு நன்மைகளைப் பெற்றுத்தரும் வாதத் திறமையைப் பெற்றிருக்க வேண்டும்.

பரிசீலிக்க வேண்டிய அம்சங்கள்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவைக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு உறுப்பினரும் முக்கியமானவர். அவரைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களைத் தெரிந்துகொள்ள - மக்களவை உறுப்பினர்களின் பணிகள், அதிகார வரம்பு ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நம் அரசமைப்புச் சட்டம் அனைத்துத் துறைகளையும் மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், ஒத்திசைவுப் பட்டியல் என்ற மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளது. மத்தியப் பட்டியல், ஒத்திசைவுப்பட்டியல் ஆகியவற்றின் கீழ் வரும் துறைகள் சார்ந்து நாடாளுமன்றம் சட்டம் இயற்ற முடியும்.

இந்தத் துறைகள் சார்ந்து மட்டுமே மக்களவை உறுப்பினர்கள் பணியாற்ற முடியும். ஆனால், கணிசமான வாக்காளர்கள் சாலைகளில் மழைநீர் தேங்குதல், சாக்கடை அடைப்பு நீக்கப்படாதது போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்துக்குக் கீழ் வரும் பிரச்சினைகளின் அடிப்படையில் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கிறார்கள்; மாநில அரசின் செயல்பாடு சார்ந்தும் தமது வாக்கைத் தீர்மானிக்கிறார்கள்.

மக்களவை உறுப்பினர்களின் பணி ஒட்டுமொத்த நாட்டு மக்கள் மீதும் தாக்கம் செலுத்தக்கூடியது. கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம், மாநில உரிமைகள், தனியார்மயம், மதம், சாதி, இடஒதுக்கீடு, அயலுறவு எனப் பல முக்கியமான பொருண்மைகளில் ஒரு வேட்பாளரோ அவரை முன்னிறுத்தும் கட்சியோ என்ன மாதிரியான கொள்கைகளைக் கொண்டிருக்கிறார்கள், எந்த அளவுக்கு உறுதியுடன் செயல்படுவார்கள், நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்றுத் தமது கொள்கைகளையும் கருத்தியலையும் எவ்வளவு வலிமையாகப் பதிவுசெய்கிறார்கள் என்பதைப் பற்றி எல்லாம் சிந்திக்க வேண்டும்.

வேட்பாளர் ஏற்கெனவே எம்பி ஆக இருந்தவர் என்றால், அவருடைய நாடாளுமன்றச் செயல்பாட்டைச் சீர்தூக்கிப் பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம். தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி நிதியை எம்பி எப்படிச் செலவு செய்திருக்கிறார் என்பது ஓர் அளவுகோல். எத்தனை நாள்கள் அவைக்குச் சென்றிருக்கிறார், எவ்வளவு விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார், எத்தனை கேள்விகளை எழுப்பியிருக்கிறார் என்பதையெல்லாம் தேசியச் சராசரியுடன் ஒப்பிட்டு, ஒரு எம்பியின் நாடாளுமன்றச் செயல்பாடுகள் குறித்து முடிவெடுக்கலாம்.

வேட்பாளர்களின் தகுதி, செயல்பாடு, திறமை ஆகியவற்றைக் கவனிப்பது முக்கியம்தான். ஆனால், நாடாளுமன்ற அமைப்பில் உறுப்பினர்கள் தனித்து இயங்க முடியாது. நாட்டைப் பாதிக்கும் சட்டங்களில் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தாலோ வாக்களிக்க மறுத்தாலோ அவர் பதவியை இழப்பார். எனவே கட்சிகள், அவற்றின் கொள்கைகளைத் தெரிந்துகொண்டு அதற்கேற்றபடி வாக்களிப்பதும் முக்கியமானது.

மக்களவைத் தேர்தலில் நாம் ஒவ்வொருவரும் செலுத்தும் வாக்கு ஒட்டுமொத்த நாட்டின் மீதும் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் மீதும் ஏதோ ஒரு விதத்தில் தாக்கம் செலுத்தக்கூடும். இந்தப் புரிதலுடன் ஏப்ரல் 19 அன்று வாக்களிக்கத் தயாராவோம்!

- தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

To Read in English: Lok Sabha elections: Why and how to vote?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்