திமுக - அதிமுக யுகம் தொடங்கி, கடந்த 50 ஆண்டுகளில் 12 மக்களவைத் தேர்தல்களைத் தமிழ்நாடு சந்தித்துள்ளது. இதில் திமுக, அதிமுக தலைமையிலான அணிகள் தலா ஆறு முறை பெரும்பான்மை வெற்றிகளைப் பெற்றுள்ளன. 1977, 1984, 1989, 1991, 1998, 2014 ஆகிய மக்களவைத் தேர்தல்களில், அதிமுக அணி பெரும்பான்மை இடங்களில் வென்றிருக்கிறது; 2014இல் மட்டும் தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வென்று புதிய வரலாற்றை எழுதியது.
இதேபோல திமுக அணி 1980, 1996, 2004, 2019 தேர்தல்களில் பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளது. 1999இல் திமுக அணி 26 தொகுதிகளிலும், அதிமுக அணி 13 தொகுதிகளிலும்; 2009இல் திமுக அணி 27 தொகுதிகளிலும் அதிமுக அணி 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
பெரும் வெற்றி, பெரும் தோல்வி: மேற்கண்ட தேர்தல்களில் முடிவுகள் ஒன்றுபோல இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதாவது, அதிமுக பெரும்பான்மையாக வெற்றி பெறும்போது திமுக அணி ஒற்றை இலக்கத்திலும்; திமுக பெரும்பான்மையாக வெற்றி பெறும்போது அதிமுக அணி ஒற்றை இலக்கத்திலும் வெற்றியைப் பதிவுசெய்திருக்கின்றன.
1977-1991 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற ஐந்து மக்களவைத் தேர்தல்களில் 1977, 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் முறையே 35, 37, 37, 39 தொகுதிகளில் அதிமுக அணி பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது; திமுக அணியோ முறையே 4, 2, 1, 0 ஆகிய தொகுதிகளில் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. விதிவிலக்காக 1980இல் மட்டும் திமுக அணி 37 தொகுதிகளிலும் அதிமுக அணி இரண்டு தொகுதிகளிலும் வென்றுள்ளன.
» ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு
» நீலகிரி தேர்தல் அதிகாரி மீதான புகார் குறித்து அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை: சத்யபிரத சாஹூ தகவல்
இதேபோல 1996 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற 7 மக்களவைத் தேர்தல்களில் திமுக அணி 1996, 2004, 2019 தேர்தல்களில் பெரும் வெற்றியை ருசித்தது; அதில் 1996, 2004இல் 39 தொகுதிகளிலும் 2019இல் 38 தொகுதிகளிலும் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.
அதிமுக அணி 1998, 2014 ஆகிய ஆண்டுகளில் மாபெரும் வெற்றி பெற்றது. 1977-1991 வரையிலான காலகட்டத்தில் அதிமுக அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது; 1996க்குப் பிறகு திமுக அணி ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. விதிவிலக்காக 1999, 2009இல் மட்டும் இரண்டு அணிகளுமே இரட்டை இலக்கத்தில் வெற்றியைப் பெற்றுள்ளன.
1977 முதலே மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அதிமுக, முதல் முறையாக 2014இல் தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வென்றது. ஒப்பீட்டளவில் திமுக இதுவரை தனித்துப் போட்டியிட்டதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஆட்சியில் தேர்தல்: 1977, 1984, 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்தே மக்களவைத் தேர்தலும் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் ஒன்றுபோலவே அமைந்தன. ஆனால், திமுகவோ அதிமுகவோ மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும்போது சந்தித்த மக்களவைத் தேர்தல்களில் திமுக கூட்டணியே அதிக தொகுதிகளில் வென்றிருக்கிறது. 1980இல் ஆட்சியில் இருந்த அதிமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது.
1980இல் இந்திரா காந்திக்கு ஆதரவாகக் களம் மாறியிருந்தது; காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைத்தது போன்றவை திமுக வெற்றிக்கு உதவின. 1989இல் ஆட்சியில் இருந்த திமுக கூட்டணி எதிர்கொண்ட மக்களவைத் தேர்தலில் ஓரிடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. அப்போது பிளவுபட்ட அதிமுக ஒன்றிணைந்தது, சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கண்டது போன்றவை அந்த அணிக்குச் சாதகமாகின.
1998இலிருந்து தமிழ்நாட்டில் மக்களவைக்குத் தனியாகத் தேர்தல் நடத்தும் சூழல் உருவானது. அந்த முறை ஆட்சியில் இருந்த திமுக மக்களவைத் தேர்தலில் 9 தொகுதிகளில் மட்டுமே வென்றது. மத்தியில் மீண்டும் மீண்டும் ஆட்சி கவிழ்ந்ததும், 1996இல் தனித்துப் போட்டியிட்ட பாமக, மதிமுக, பாஜக ஆகிய கட்சிகளை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவந்ததும் இந்தத் தேர்தலில், அதிமுக அணிக்குச் சாதகமாக மாறியது.
1999 மக்களவைத் தேர்தலையும் ஆட்சியில் இருந்தபோது எதிர்கொண்ட திமுக கூட்டணி 26 தொகுதிகளில் வென்றது. ஆனால், அதிமுக அணியும் இத்தேர்தலில் இரட்டை இலக்கத்தில் 13 தொகுதிகளில் வென்றது. இந்தத் தேர்தலில் விசித்திரமான ஒரு மாற்றம் நிகழ்ந்தது. தமிழ்நாட்டில் 1998இல் அதிமுக அமைத்திருந்த கூட்டணியில் இருந்து அந்தக் கட்சி வெளியேறிய பிறகு திமுக அதில் இடம்பெற்றது.
முன்னதாக வாஜ்பாய் அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் கவிழ்ந்த அனுதாபம், கார்கில் போர் நடவடிக்கைகள் போன்றவை திமுக அணிக்குச் சாதகமாகின. 1998இல் ஒற்றை இலக்கத்தில் வென்றிருந்த திமுக, ஒன்றரை ஆண்டுகளிலேயே வெற்றி விகிதத்தை அதிகப்படுத்தியது.
2004இல் அதிமுக ஆட்சியில் இருந்தபோது சந்தித்த தேர்தல் ஒரு புதிய வரலாற்றை எழுதியது. அத்தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக அணி வெற்றிபெற்றது. தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி மக்களவைத் தேர்தலில் ஓரிடத்தில்கூட வெல்லாமல் முழுமையாகத் தோற்றது இதுவே முதல் முறை.
2009இல் (திமுக ஆட்சியின்போது) நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக அணி 27 தொகுதிகளிலும் அதிமுக அணி 12 தொகுதிகளிலும் வென்றன. ஈழப் போர் விவகாரம், மின்வெட்டு பிரச்சினைகளையும் தாண்டி திமுகவுக்கு மக்கள் வாக்களித்தனர். தேமுதிக தனியாகப் போட்டியிட்டு 10% வாக்குகளைப் பிரித்தது, தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்தியது.
2014இல் அதிமுக ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வென்று புதிய சாதனையை அதிமுக படைத்தது; திமுகவுக்கு ஒரு இடம்கூடக் கிடைக்கவில்லை. முதல் முறையாகத் திமுக, அதிமுகவுக்கு மாற்றாகக் களமிறங்கிய பாஜக தலைமையிலான அணி இரண்டு தொகுதிகளில் வென்றது.
தமிழ்நாட்டு அரசியலில் திமுக, அதிமுக அல்லாமல் ஓர் அணி வெற்றி பெற்றது இதுவே முதல் முறை. திமுகவுக்கு எதிராக 2ஜி வழக்கு, அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தியது போன்றவை அதிமுக வெல்ல வழிவகுத்தன.
2019இல் அதிமுக ஆட்சியில் இருந்தபோது சந்தித்த தேர்தலில் திமுக அணி 38 தொகுதிகளிலும் அதிமுக அணி ஓரிடத்திலும் வென்றன. அதிமுக வலுவிழந்திருந்தது, ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை, புதிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்தது போன்றவை காரணமாகின. கடந்த 12 மக்களவைத் தேர்தல்களில் தமிழ்நாட்டில்ஆட்சியில் இருந்த கட்சி 1999, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் மட்டும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் 1984 (அதிமுக), 1999 (திமுக), 2009 (திமுக) என மூன்று முறை மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணியில் இருந்த கட்சிகள் இங்கு வெற்றியைப் பெற்றுள்ளன. மாறாக, 1996 (அதிமுக), 1998 (திமுக), 2004 (அதிமுக), 2019 (அதிமுக) என நான்கு முறை தோல்வியும் கிடைத்துள்ளது.
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆட்சி செய்துகொண்டிருக்கும்போது பெரும்பாலும் எதிர்ப்பலை அதிகமாகி, எதிர்க்கட்சிகள் வெற்றி பெறவே வழிவகுக்கும் என்கிற கூற்று எல்லா தேர்தல்களிலும் உண்மையாகிவிடுவதில்லை என்பதை இந்தத் தரவிலிருந்து உணரலாம்.
இப்போது எப்படி? - 2014 தேர்தலைப் போலவே 2024 களமும் அமைந்திருக்கிறது. 2014இல் அதிமுக, திமுக அணி, பாஜக அணி, காங்கிரஸ் எனப் போட்டி நிலவியதைப் போல 2024இல் திமுக அணி, அதிமுக அணி, பாஜக அணி, நாம் தமிழர் என்று மாறியிருக்கிறது.
திமுகவும் அதிமுகவும் 2014ஐப் போலவே மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தேர்தலைச் சந்திக்கின்றன. அப்போது போலவே ஓர் அணியைக் கட்டமைத்து பாஜகவும் களம் காண்கிறது. இந்த ஒற்றுமைகள் தேர்தல் களத்தில் எப்படி எதிரொலிக்கும் என்பது ஜனநாயகத்தின் எஜமானர்களின் கைகளில் உள்ளது!
- தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago