பாஜக சுவடுகளுக்கு ‘குறி’, மாநிலங்களை ‘கவரும்’ உத்தி... - காங்கிரஸ் வாக்குறுதிகள் சொல்வது என்ன?

By பாரதி ஆனந்த்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கை குழுவின் தலைவரான ப.சிதம்பரம், “இதைச் சொல்வதற்காக வருந்துகிறேன்...” என்று சில விஷயங்களைப் பட்டியலிட்டுப் பேசினார். பலவீனப்படுத்தப்பட்ட அரசமைப்புகள், எதேச்சதிகாரம், தனிநபர் உரிமையில் அத்துமீறல் எனப் பல்வேறு விஷயங்களைப் பட்டியலிட்டதோடு கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் நோக்கில் பல்வேறு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த தேர்தல் அறிக்கையில் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்” என்றார். 10 ஆண்டுகளில் எவ்வித விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய சட்டங்களை ஆய்வு செய்து மாற்றங்கள் செய்யப்படும் என்பது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முக்கிய ‘டேக் அவே’ கவனம் பெறுகிறது.

அந்த வகையில் பாஜக கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்கள் என்னென்ன? பாஜக அரசு நிறைவேற்ற முற்படும் காங்கிரஸ் எதிர்க்கும் திட்டங்கள் என்னென்ன? எவையெல்லாம் மாற்றப்படும், நீக்கப்படும், திருத்தப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக குறிப்பிட்டுள்ளது. ‘5 நியாயங்கள்’ என்ற தலைப்பில் இளைஞர்களுக்கான நீதி, மகளிருக்கான நீதி, விவசாயிகளுக்கான நீதி, தொழிலாளர்களுக்கான நீதி மற்றும் மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையிலான நீதி என்று வகுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மீதான விரைவுத் தொகுப்பு பின்வருமாறு:

MSP-க்கு சட்டபூர்வ அங்கீகாரம்: விவசாயிகளுக்கான வாக்குறுதியில் இருந்து இதனைத் தொடங்கலாம். குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரை அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது, விவசாயிகள் கோரியது போலவே MSP-க்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை யாரும் மறக்க இயலாது. அதனையடுத்து, மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தாலும் கூட குறைந்தபட்ச ஆதார விலைக்கான கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

அண்மையில், பருப்பு வகைகள், மக்காச்சோளம், பருத்தியை அரசு நிறுவனங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையில் ஐந்து ஆண்டுகளுக்கு வாங்கும் என மத்திய அரசு கூறியது. இதனை எதிர்த்த ராகுல் காந்தி, “பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து குழப்பத்தை பரப்புகிறவர்கள், பசுமைப் புரட்சியின் தந்தை பாரத ரத்னா டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனை அவமதிக்கிறார்கள்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரை அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது, விவசாயிகள் கோரியது போலவே MSP-க்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வும், மாநில அரசின் உரிமையும்: நீட் தேர்வு என்பது பாஜகவின் சாதனையாகவே முன்னிறுத்தப்படும் நிலையில் நீட் தேர்வு நடத்துவென்பது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பத்துக்கே விடப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்துள்ளது. நீட் மட்டுமல்ல, க்யூட் போன்ற மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வும் மாநில அரசின் விருப்பங்களுக்கே விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையும் மாநில அரசுகளின் ஆலோசனைகளுக்குப் பின்னரே நடைமுறைப்படுத்தப்படும்.

ராஜஸ்தானின் கோட்டா நகரில் நடைபெறும் நீட் பயிற்சி வகுப்பு தற்கொலைகள், தமிழகத்தில் நீட் எதிர்ப்பு முழக்கங்கள் என நீட் தேர்வு பரவலாக சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸின் இந்த அறிவிப்பை தமிழக கல்வியாளர்கள் பெரும்பாலானோர் வரவேற்கின்றனர்.

“நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் அது வரவேற்கத்தக்கது. மருத்துவப் படிப்பு வசதி படைத்தோருக்கானது என்ற நிலை உருவாகிவிட்டது. நீட் பயிற்சி மையங்கள் பணப் பறிப்பில் ஈடுபடுகின்றன. நீட் தேர்வை திரும்பத் திரும்ப எழுதும் ‘நீட் ரிப்பீட்டர்ஸ்’-களால் முதன்முறை தேர்வெழுதும் மாணவர்கள் தோல்வியடைகின்றனர். நீட் தேர்வு தேவையற்றதே. அதை மாநிலங்களில் விருப்பப்படி விட்டாலும் சரி, ரத்து செய்தாலும் சரி வரவேற்கத்தக்கதே. ஒரு மாநிலம் ரத்து செய்து ஒரு மாநிலம் அமலில் வைத்தாலும் கூட ஆல் இண்டியா கோட்டா பகிர்ந்தளிப்பதில் சிக்கல் வராது” என்று கல்வியாளர் ஒருவர் கூறுகின்றார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறை கொண்டு வரப்படாது என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. அண்மையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. “2022-ல் சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது சம்பந்தமாகத்தான் ஆலோசனைகளைக் கோரியது. ஆனால், தற்பொழுது மத்திய அரசு இதை விரிவுபடுத்தி நாடாளுமன்ற மற்றும் மாநில சட்ட சபைகளோடு, நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் இணைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஆய்வு வரம்புகளை வெளியிட்டுள்ளது. இந்தச் செயல் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், குடியரசு தலைவர் முறையிலான ஆட்சியை நோக்கியும் செல்வதாகும்” என்று காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்க்கின்றன. எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படாது என காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்துள்ளது.

அக்னி பாத் திட்டம் ரத்து: ராணுவத்தில் இளைஞர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யும் திட்டமாகவே இது கொண்டுவரப்பட்டது. அதாவது, அக்னி பாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் ராணுவத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் பணி செய்ய முடியும். 4 ஆண்டுகள் பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களுக்கு சேவை நிதி தொகுப்பு வழங்கப்படும். 17.5 வயதில் இருந்து 23 வயதுக்குள் இருப்பவர்கள் இத்திட்டத்தில் சேர முடியும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மதிப்பீடுகள் செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அக்னி பாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவர் என்று பாஜக அரசு அமல்படுத்திய திட்டம் பரவலாக கடும் எதிர்ப்பை சம்பாதித்தது.

அதை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் அவ்வப்போது இது முற்றிலும் தோல்வியடைந்த திட்டம் என்று விமர்சித்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அக்னி பாத் திட்டம் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. இதை இளைஞர்களுக்கான நீதியாக பட்டியலிட்டுள்ளது. கூடவே, மத்திய அரசுப் பணிகளில் உள்ள 30 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது. அதேபோல் கல்வி, வேலைவாய்ப்பில் அளிக்கப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத உள் ஒதுக்கீடு அனைத்து சமூகத்தினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: பாஜக ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி எந்தப் பேச்சும் இல்லை. பிஹார், அதனைத் தொடர்ந்து கர்நாடகா போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுவிட்டன. இந்நிலையில், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பும் சாதிகளின் அடிப்படையிலான சமூக பொருளாதார நிலைமையும் கணக்கெடுப்பும் நடத்தப்பட்டு அரசியல் சாசனத்தின் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50 சதவீத இடஒதுக்கீடு என்ற உச்சவரம்பு நீக்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தனிநபர் சுதந்திரத்தில் தலையீடு இருக்காது: மக்களின் உணவு, உடை, காதல் திருமணம் மற்றும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயணம் செய்து வசிப்பது போன்ற தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட மாட்டோம். மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் நியாயமற்ற முறையில் தலையிடும் அனைத்து சட்டங்களும் விதிகளும் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. LGBTQIA+ நல சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிப்படுவதற்கான சட்டம் இயற்றப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது.

ரோகித் வெமுலா சட்டம்: பட்டியலினத்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோகித் வெமுலா சட்டம் கொண்டுவரப்படும் என்ற காங்கிரஸின் வாக்குறுதி மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கான வாக்குறுதியும், கேள்வியும்: ஜம்மு - காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து உடனடியாக வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்திருந்தாலும் கூட அதற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக எதுவும் விளாவாரியாக தெரிவிக்கப்படாதது விமர்சனங்களை ஈர்த்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம், EVM மவுனம் ஏன்? - இமாச்சலப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி நல்ல பலனைத் தந்தது. அங்கு சொன்னபடி அது அமல்படுத்தப்பட்டது. ஆனால், காங்கிரஸின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

அதேபோல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மோசடி நடப்பதால் பழையபடி வாக்குச்சீட்டு முறை அமல்படுத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வந்த காங்கிரஸ் கட்சி ஆச்சர்யப்படும் வகையில் அது பற்றி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. மாறாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (EVM) செயல்திறன் மற்றும் வாக்குச்சீட்டின் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை இணைக்கும் வகையில் தேர்தல் சட்டங்கள் திருத்தம். இவிஎம்மில் வாக்களித்ததை விவிபாட் இயந்திரத்தில் சரிபார்க்கும் முறை கொண்டுவரப்படும் என்று அறிவித்திருக்கிறது. இதன் மீதான விமர்சனங்களும், கேள்விகளும் எழுப்ப்பட்டு வருகின்றன.

ஜிஎஸ்டி 2.0 - ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் பாஜக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுவிட்டதாகக் கூறிவரும் காங்கிரஸ், என்டிஏ அரசால் இயற்றப்பட்ட ஜிஎஸ்டி சட்டங்களை திருத்தி ஜிஎஸ்டி 2.0 கொண்டுவரும் எனக் கூறியுள்ளது. புதிய ஜிஎஸ்டி முறையில், ஜிஎஸ்டி ஏழைகளுக்குச் சுமையை ஏற்படுத்தாததாக இருக்கும். வட்டி விதிப்பில் சில விலக்குகள் கொண்டுவரப்படும். அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கொள்கையின் அடிப்படையில் ஜிஎஸ்டி 2.0 அமையும். விதை, உரம், மின்சாரம் என விவசாயத்துறை உள்ளீடுகளுக்கு (agricultural inputs) ஜிஎஸ்டி விதிக்கப்படாது என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

பெண்களுக்கு ரூ.1 லட்சம்: குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம் கொண்டுவரப்படும். ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்படும். தனிநபர் வருமான வரி ஒரே விதமாக நிலையாக இருக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும். முதியோருக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் அமலுக்கு வரும். கட்சி தாவினால் உடனடியாக பதவி இழக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும். 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ.400 ஆக அதிகரிக்கப்படும். பெண்களுக்கு ஊதியத்தில் உள்ள பாகுபாட்டை களைய ஒரே வேலை, ஒரே ஊதியம் திட்டம் போன்ற காங்கிரஸின் அறிவிப்புகள் கவனம் பெற்றுள்ளன.

இருப்பினும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை ஒழுங்கு முறை, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு போன்ற அறிவிப்புகள் இடம்பெறாதது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. பொது சிவில் சட்டம் பற்றியோ, குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றியோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லை.

திட்டங்கள் பலவற்றை அறிவித்ததோடு பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திரம் முறைகேடு தொடர்பாக விசாரணை செய்யப்படும் என்றும் காங்கிரஸ் உறுதி கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை 'நியாய பத்ரா' என்ற அடைமொழி இடம்பெற்றுள்ளது. "நியா" என்பது சமஸ்கிருத வார்த்தையாகும். இது அனைவருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி, சமத்துவம் என்பதைதான் குறிக்கிறது. இந்த நியாய பத்ராவை காங்கிரஸ் மக்கள் மத்தியில் முன்வைத்துள்ள நிலையில், அதற்கான வரவேற்பு தேர்தலில் பிரதிபலிக்கும். நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதன்படி ஏப்ரல் 19, 26, மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகியதேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE