தமிழகத்தில் 4 முனைப் போட்டி களம் எப்படி? | மாநில நிலவர அலசல் @ மக்களவைத் தேர்தல்

By பால. மோகன்தாஸ்

மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை, அவற்றுக்கான வாக்கு வங்கிகள் எவ்வளவு, கடந்த கால தேர்தல்களில் அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றிகள் / தோல்விகள், தற்போதைய அரசியல் சூழல் யாருக்கு சாதகமாக, பாதகமாக இருக்கிறது என பல்வேறு அம்சங்களை புள்ளி விவரங்களோடு இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தின் தேர்தல் கள நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.

இந்தியாவின் தென்முனையை தன்னகத்தே கொண்டிருக்கும் தமிழகம், பரப்பளவில் இந்தியாவின் 10-வது பெரிய மாநிலம். ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது தமிழகம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகையில் 7-வது பெரிய மாநிலம் தமிழகம். இங்கே 7,21,47,030 பேர் வசிக்கிறார்கள். இந்துக்கள் 88.10 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 6.06 சதவீதமும், இஸ்லாமியர்கள் 5.56 சதவீதமும், சமண மதத்தவர்கள் 0.13 சதவீதமும் வசிக்கிறார்கள். சீக்கியர்களும், பவுத்தர்களும், பிற மதத்தவர்களும் தலா 0.01 சதவீதம் இருக்கிறார்கள்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் கல்வி அறிவு 80.09%. இதில், ஆண்களின் கல்வி அறிவு 86.77 சதவீதமாகவும், பெண்களின் கல்வி அறிவு 73.14 சதவீதமாகவும் உள்ளது. தமிழகத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 996 பெண்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் 38 மாவட்டங்களும், 39 மக்களவைத் தொகுதிகளும், 234 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1967 வரை சுமார் 20 ஆண்டுகள் தமிழகத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, ராஜகோபாலாச்சாரி, காமராஜர், பக்தவச்சலம் ஆகியோர் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர்களாக இருந்தார்கள். 1967-ல் முதன்முதலாக திமுக ஆட்சிக்கு வந்தது. சி.என்.அண்ணாதுரை முதல்வராக பொறுப்பேற்றார். அவரது மறைவை அடுத்து, நெடுஞ்செழியன் 7 நாட்கள் இடைக்கால முதல்வராக இருந்தார். அவரைத் தொடர்ந்து மு.கருணாநிதி முதல்வரானார். திமுகவில் இருந்து பிரிந்த எம்.ஜி.ராமச்சந்திரன், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கி 1977-ம் ஆண்டு முதல்வரானார்.

அதன்பிறகு தமிழக தேர்தல் களம் திமுக Vs அதிமுக என மாறியது. திமுகவில் கருணாநிதிக்கு அடுத்து மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி வகித்து வருகிறார். அதிமுகவில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு நெடுஞ்செழியன், வி.என்.ஜானகி, ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர். தமிழகத்தை அதிக காலம் ஆட்சி செய்த முதல்வர் என்ற பெருமை மு.கருணாநிதியைச் சாரும். சுமார் 19 ஆண்டுகள் அவர் தமிழகத்தை ஆட்சி செய்துள்ளார்.

தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தாலும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, விசிக, மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளே களத்தில் செல்வாக்குடன் இருக்கின்றன. இவை தவிர, மக்கள் நீதி மய்யம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்றவை குறிப்பிடத்தக்க கட்சிகளாக இருந்து வருகின்றன.

மக்களவைத் தேர்தல் கள நிலவரத்தின் ஒரு பகுதியாக, கடந்த சில மக்களவைத் தேர்தல்களில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற வெற்றி - தோல்விகள் குறித்து தற்போது பார்ப்போம்.

2019 மக்களவைத் தேர்தல்: கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. திமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. காங்கிரஸ் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளிலும், சிபிஐ, சிபிஎம், விசிக ஆகியவை தலா 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியில் போட்டியிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒரு வேட்பாளரான ரவிக்குமார், ஈஸ்வரன், பாரிவேந்தர் ஆகியோர் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். அந்த வகையில், உதயசூரியன் சின்னம் 24 தொகுதிகளில் போட்டியிட்டது.

அந்தத் தேர்தலில், திமுக 33.52% வாக்குகளுடன் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரி தொகுதியிலும் போட்டியிட்டது. இதில், தமிழகத்தில் 12.61% வாக்குகளைப் பெற்று 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தது. புதுச்சேரியில் போட்டியிட்ட ஒரு தொகுதியில் 57.15% வாக்குகளுடன் வெற்றி பெற்றது. விசிக ஒரு தொகுதியிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.

அதிமுக அணியில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில், அதிமுக 22 தொகுதிகளில் போட்டியிட்டது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் ஏ.சி. சண்முகம், புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஆகியோர் போட்டியிட்டனர். பாமக 7, பாஜக 5, தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிட்டன. தமாகா 1 தொகுதியில் போட்டியிட்டது. இதில், அதிமுக 19.39% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை.

2014 மக்களவைத் தேர்தல்: அடுத்ததாக, 2014 மக்களவைத் தேர்தலின்போது அதிமுக தனித்து 39 தொகுதிகளிலும் போட்டியிட்டது. திமுக அணியில், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை இணைந்து போட்டியிட்டன. பாஜக தலைமையிலான அணியில், தேமுதிக, பாமக, மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புதிய நீதி கட்சி ஆகியவை இணைந்து போட்டியிட்டன.

இந்தத் தேர்தலில், அதிமுக 44.92% வாக்குகளுடன் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜகவும், பாமகவும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன. பாஜக 5.56% வாக்குகளைப் பெற்றது. திமுக 23.91% வாக்குகளைப் பெற்ற போதிலும் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. காங்கிரஸ் 39 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. எனினும் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை. அதேநேரத்தில் 4.37% வாக்குகளைப் பெற்றது.

2021 சட்டப்பேரவைத் தேர்தல்: அடுத்ததாக, தமிழகத்தில் கடைசியாக நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பார்ப்போம். இந்தத் தேர்தலின்போது, திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. அதிமுக தலைமையில், பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 188 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 37.70% வாக்குகளுடன் 133 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 4.27% வாக்குகளுடன் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டு 0.99% வாக்குகளுடன் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிபிஐ 6 தொகுதிகளில் போட்டியிட்டு 1.09% வாக்குகளுடன் 2 தொகுதிகளிலும், சிபிஎம் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 0.85% வாக்குகளுடன் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

அதிமுக அணியில், 191 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, 33.29% வாக்குகளுடன் 66 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 3.80% வாக்குகளுடன் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக, 20 தொகுதிகளில் போட்டியிட்டு 2.62% வாக்குகளுடன் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 6.58% வாக்குகளைப் பெற்றது. மக்கள் நீதி மய்யம் 180 தொகுதிகளில் போட்டியிட்டு 2.62% வாக்குகளைப் பெற்றது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 165 தொகுதிகளில் போட்டியிட்டு 2.35% வாக்குகளைப் பெற்றது. இம்மூன்று கட்சிகளும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

2024 மக்களவைத் தேர்தல் களம்: தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகள் கொண்ட இந்த மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக தலைமையில் ஓர் அணி, பாஜக தலைமையில் ஓர் அணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என 4 முனைப் போட்டி உருவாகி உள்ளது.

திமுக அணி: திமுக தலைமையிலான அணியில் சட்டமன்றத் தேர்தலின்போது ஏற்பட்ட கூட்டணி கட்சிகள் அப்படியே ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன. இதில், திமுக 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியிலும், மதிமுக ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியானது திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.

அதிமுக அணி: அதிமுக அணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன. இதில், அதிமுக 32 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேமுதிக 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

பாஜக அணி: பாஜக தலைமையிலான அணியில் பாமக, அமமுக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்துள்ளனர். பாஜக 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதோடு, இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர், புதிய நீதி கட்சியின் ஏ.சி. சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தேவநாதன் யாதவ் ஆகியோர் பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் தாமரைச் சின்னம் 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாமக 10 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஓ. பன்னீர் செல்வம், சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சி: நாம் தமிழர் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துக் களம் காண்கிறது.

தமிழகத்தின் தேர்தல் களம் 4 முனைப் போட்டி கொண்டதாக இருந்தாலும், திமுக, அதிமுக, பாஜக ஆகியவற்றின் தலைமையிலான அணிகளுக்கு இடையேதான் போட்டி இருப்பதாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக கடந்த 3 ஆண்டுகளில் செய்த நலத்திட்டங்களைச் சொல்லி வாக்கு கேட்கிறது. அதோடு, பாஜக தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு உரிய நிதி பங்கினை அளிக்க மறுப்பதாகவும், வெள்ள பாதிப்பின்போது மாநில அரசு நிதி உதவி கோரியும் வழங்க மறுத்துவிட்டதாகவும் புகார் தெரிவித்து வருகிறது.

பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருப்பதாகக் கூறி வரும் அதிமுக, கடந்த கால அதிமுக ஆட்சியில் செய்த மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்து வருகிறது.

தேசிய அளவில் பாஜக மீண்டும் வருவது உறுதி என கூறி வரும் பாஜக, நரேந்திர மோடிக்கு எதிராக எதிர் அணியில் பிரதமர் வேட்பாளரே இல்லை என்பதை சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்து வருகிறது. அதோடு, கடந்த 10 ஆண்டு கால பாஜக தலைமையிலான ஆட்சியில் செய்த மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், அடுத்து ஆட்சிக்கு வந்தால் செய்ய திட்டமிட்டுள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறது.

மூன்று அணிகளின் தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. அணிகளின் தலைவர்கள் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் அதிக அளவில் பங்கேற்பதைப் பார்க்க முடிகிறது. வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. அதோடு, தேர்தல் பிரச்சார அனலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

2024 மக்களவத் தேர்தலின் முதல் கட்டத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் ஒரே பெரிய மாநிலம் தமிழகம். வரும் 19-ம் தேதி வாக்குப் பதிவு தொடங்க உள்ளதால், 17-ம் தேதியோடு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வர உள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள அதேநேரத்தில், யாருக்கு எந்த அளவு வெற்றி கிட்டும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முந்தைய பகுதி: பாஜக கூட்டணி Vs இண்டியா... பிஹார் களம் எப்படி? | மாநில நிலவர அலசல் @ மக்களவைத் தேர்தல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்