கல்வி வளர்ச்சிக்கு அரசியலர்களின் பங்கு என்ன? | தேர்தல் எதிர்பார்ப்புகள்

By பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு

இந்தியா விடுதலை அடைந்து, தனக்கென ஓர் அரசமைப்புச் சட்டத்தை இயற்றி, மக்களிடம் இறுதி இறையாண்மை என்ற கோட்பாட்டைக் கொண்ட சமயச் சார்பற்ற சமதர்ம ஜனநாயகக் குடியரசாக இந்திய அரசு இயங்கத் தொடங்கியதன் 75ஆவது ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் என்பதால், 2024 தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

தேர்தலை ‘ஜனநாயகத் திருவிழா’ என்று பெயரிட்டு, மக்களின் மனங்களைக் கொண்டாட்ட நிலையில் வைத்து, வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தாங்கள் நினைப்பதையெல்லாம் செய்யத் துணிவது என்ற போக்கு அரசியல் கட்சிகளிடம் அதிகரித்து வருகிறது.‌ இத்தகைய சூழலில் கல்வி குறித்து ஆழமாக நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

கல்விக் கூடங்கள் வெறும் வேலைவாய்ப்புக்கான பயிற்சி தரும் நிறுவனங்கள் அல்ல. ஒருவர் பெறும் கல்வி நேரடியாக வேலைக்கான உத்தரவாதம் அல்ல. கல்வியின் நோக்கமும் அதுவல்ல. ஒருவர் பெற்ற கல்வித் தகுதி, வேலை பெறுவதற்குப் பயன்படலாம். பட்டமே வேலையைப் பெற்றுத் தர வேண்டும் என்று நினைப்பது நுகர்வு மனப்பான்மை. மக்களை நுகர்வோராக்கிவிட்டால், கல்வி நுகரும் பொருளாகிவிடும்.

வணிக லாபத்தை வைத்து நுகர்வதற்கான பொருள் எந்த அளவு, எந்த‌ வகையில், எந்த விலைக்குக் கிடைக்கும் என்பதைச் சந்தை தீர்மானித்துக்கொள்ளும். கல்வியை வணிகப் பொருளாகக் கருதச் செய்த பிறகு, கல்வி தரும் பொறுப்பில் இருந்து அரசு விலகிக்கொள்கிறது. அத்தகைய போக்கின் வெளிப்பாடாகத்தான் அரசு நடத்தும் பள்ளிகளை அரசே பல்வேறு வகையாகப் பிரித்து, இது ஆகச் சிறந்த பள்ளி, இது சராசரிப் பள்ளி என்ற பேதத்தை உருவாக்கத் துணிகிறது.

இறுதியில், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குறைவு என்று காரணம் காட்டி பள்ளிகளை மூடிவிடும் சூழல் ஏற்படுகிறது. வணிக நலன்களைக் காக்க அனைத்து அதிகாரமும் தன்னிடத்தே கொண்ட வலுவான ஒரு மத்திய அரசு மட்டுமே வேண்டும் என்பதே சந்தையின் நோக்கம்.

பிறந்தது முதல் சந்தையில் பணிபுரியும் ஆற்றல் பெற்ற இளைஞராக வளரும்வரை ஒருவரின் அனைத்துச்செயல்பாட்டையும் வணிக நிறுவனங்களே தீர்மானிக்கும்.பெரும் வணிக நிறுவனங்களே இனி எதிர்கால இந்தியாவைத் தீர்மானிக்கப்போகின்றன என்ற பெரும் அபாயம் நம் முன் உள்ளது. இத்தகைய பேராபத்தை உணர்ந்தே அரசியல் கட்சிகளிடம் நமது எதிர்பார்ப்பை முன்வைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

நடப்பும் எதிர்பார்ப்புகளும்: கல்வி என்பது பண்பாட்டின் ஒரு கூறு. பன்மைத்துவம் வாய்ந்த இந்தியாவில் கல்வி மாநிலப் பட்டியலில் இடம்பெறுவது மக்கள் நலன் சார்ந்தது. கல்வி குறித்த அனைத்து முடிவுகளும் எடுக்கும் அதிகாரம் மாநில‌ அரசுகளுக்கு வழங்கிடும் தன்மையுடன் கல்வியை மாநிலப் பட்டியலில் இடம்பெறச்செய்ய வேண்டும்.

உலகின் வளர்ந்த நாடுகள் அனைத்தும் அடிப்படைக் கல்வியை அரசின் முழுப் பொறுப்பிலும் செலவிலும் மக்களுக்கு வழங்கிவருகின்றன. ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளில் உயர் கல்வியும் கட்டணம் இல்லாமல் பெற வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மெய்யான வளர்ச்சியை இந்தியா பெற வேண்டுமானால் அரசின் பொறுப்பிலும் செலவிலும் கல்வி வழங்கப்பட வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 41 அரசின் பொருளாதார நிலைக்கு ஏற்பக் கல்வியை மக்களின் உரிமையாக அரசு வழங்க வேண்டும் என்று தெளிவுபடக் கூறியுள்ளது.‌

பெரும் வணிக நிறுவனங்களின் லாபத்தின் மீது, ஆடம்பரமான செலவுகள், ஆடம்பரக் கேளிக்கைகள் ஆகியவற்றின் மீது கல்விக்கான சிறப்பு வரி (Educational Cess) வசூலிக்கலாம். பல்லாயிரம் கோடிகளை வழங்கித் தேர்தல் பத்திரம் வாங்க முடிந்த பெரும் நிறுவனங்களால் ஒரு சிறிய தொகையை, கல்விக்கான சிறப்பு வரியாக நிச்சயம் செலுத்த முடியும்.‌

அரசின் பொறுப்பிலும் செலவிலும் அருகமைப் பள்ளி அமைப்பில் பொதுப் பள்ளி மூலம் பள்ளிக் கல்வி என்பது விடுதலைப் போராட்டக் காலத்தின் கோரிக்கை.‌ அதை நிறைவேற்ற இந்திய அரசமைப்புச் சட்டம் அரசுக்கு வழிகாட்டியுள்ளது. கல்வியாளர்கள் தலைமையில் அமைந்த அனைத்துக் கல்விக் குழுக்களும் இதையே பரிந்துரைத்துள்ளன.

அனைவருக்கும் பள்ளிக் கல்வியை அரசு தருகிறபோது பள்ளியில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்ற கோட்பாடு இயல்பாக உருவாகும். ஏற்றத்தாழ்வு, பாகுபாடு ஆகியவை இல்லாத கல்வி வளாகம் சமூகச் சமத்துவம் உருவாக வழிவகுக்கும்.

கலை, இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றில் குழந்தைகளுக்கு இருக்கும் இயல்பான ஆற்றலைக் கண்டுணர்ந்து, அதற்கேற்ப மாணவர்கள் உரிய பயிற்சிகள் மேற்கொள்ள வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் கல்விக் கொள்கை அமைந்திட வேண்டும். முழுமையான மனித வளர்ச்சிக்குத் தேவையான கற்றல் வாய்ப்புகளை உருவாக்கித் தர அரசு முன்வர வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை: பிறப்பு முதல் 18 வயது வரை குழந்தைகளுக்கு வேலைத் திறன் பயிற்சி வழங்கக் கூடாது. வேலைத் திறன் பயிற்சி கல்வியின் நோக்கத்தை மடைமாற்றம் செய்துவிடும். சந்தையின் லாப வேட்கைக்கு நமது குழந்தைகள் இரையாக அனுமதிக்கக் கூடாது. பள்ளிக் கல்வி மதிப்பீட்டின் அடிப்படையில், உயர் கல்வி வாய்ப்புகள் அமைய வேண்டும். எத்தகைய பாடப் பிரிவுக்கும் இளநிலைப் பட்டத்துக்கும் அகில இந்திய அளவில் தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு என்பது மாணவர்கள் நலன் சார்ந்தது அல்ல.

பொது நிதியில் இயங்கும் அரசுக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களைத் தனியார்மயமாக்கும் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக உயர் கல்வி நிறுவனங்களில் சுயநிதிப் பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சுயநிதிப் பிரிவுகள் தொடங்க அனுமதிக்கக் கூடாது. அரசு - அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களிடையே எத்தகைய பாகுபாட்டையும் அரசு கடைப்பிடிக்கக் கூடாது.

அரசின் கடமைகள்: பல தலைமுறைகளாகச் சமூகப் பின்தங்கல், கல்விப் பின்தங்கலுக்கு உள்ளான சமூகங்களில் இருந்துவரும் மாணவர்கள் பொருளாதாரத்திலும் பெரும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள் மட்டுமே பல கோடி இளைஞர்களின் உயர் கல்விக் கனவை நிறைவேற்ற முடியும்.

கல்வியியல் சுதந்திரத்துக்குத் தேவையான கல்வி - நிர்வாகத் தன்னாட்சி அதிகாரத்தை அரசுக் கல்லூரிகள் - பல்கலைக்கழகங்களுக்கு வழங்க வேண்டும்.‌ அனைத்து அரசு உயர் கல்வி நிறுவனங்களுக்கும் முழு மானியத்தை அரசு வழங்க வேண்டும். அதற்குத் தேவையான நிதியை ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் ஒதுக்க வேண்டும்.

அந்நியப் பல்கலைக்கழகங்களின் கிளைகளை இந்தியாவில் திறக்க அனுமதிப்பது நமது தோல்வியை ஒப்புக்கொள்வதாகும். கல்வித் துறையில் அந்நியப் பல்கலைக்கழகம், உள்நாட்டுப் பல்கலைக்கழகம் என்ற பாகுபாடு வணிகப் போட்டியை மட்டுமே ஊக்குவிக்கும்.

கல்வி வளர்ச்சிக்கு, சமூக மேம்பாட்டுக்கு உதவாது. அரசால் அனைத்து வகையிலும் கல்வி கற்கும் வாய்ப்பை உருவாக்கித் தர முடியும்போது, அந்நியப் பல்கலைக்கழகங்களை யாரும் விரும்ப மாட்டார்கள். அதையும் கடந்து குறிப்பிட்ட நோக்கத்துக்காக, தேவைக்காக அந்நியப் பல்கலைக்கழகம் செல்ல வேண்டிய அவசியம் இருந்தால், அத்தகையவர்கள் வெளிநாடு சென்று படிக்கலாம்.

ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு எத்தகைய கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக‌ ஆய்வுகள் மேற்கொள்ளத் தேவையான சூழலையும், காலத்தையும், நிதியையும் அரசு வழங்க முன்வர வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களில் ஜனநாயகச் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

ஆசிரியர்கள், மாணவர்களுக்கான பேரவைத் தேர்தல்களை முறைப்படி நடத்துவது; அரசின் கொள்கைகளை, திட்டங்களை, நீதிமன்றத் தீர்ப்புகளை மாணவர்கள் விவாதிக்கும் அளவிலான சூழலை உருவாக்குவது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறைக்கான பயிற்சியாகும்.

சாதியக் கட்டமைப்பைத் தகர்த்து, சமூகச் சமத்துவம் காண்பதற்கும், பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாத சமதர்ம இந்தியா உருவாவதற்கும் அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்விவரை அரசின் பொறுப்பிலும் செலவிலும் அரசு நிறுவனங்கள் மூலம் மக்களின் உரிமையாக அனைவருக்கும் கிடைக்க வேண்டும். வலுவான கல்விக் கட்டமைப்பு மக்களாட்சியையும் தனிமனிதச் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் என்பதை உணர்ந்து அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் அமைய வேண்டும்.

- மின்னஞ்சல்: spcsstn@gmail.com

To Read in English: What’s the role of politicians in development of education?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்