திராவிடக் கட்சிகளின் வடக்கு - தெற்கு பிரிவினை, இந்தி, சம்ஸ்கிருதம் திணிப்பு போன்ற வாதங்கள் இனியும் தமிழக தேர்தல் களத்தில் எடுபடாது என்று தமிழக பாஜக தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்தியில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் தான் இவ்வாறு கூறியிருக்கிறார். அதேபோல், சிறிய கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீட்டுப் பிரச்சினையின் பின்னணில் பாஜகவின் பங்கு இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.அவருடைய பேட்டியின் விவரம்:
2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு வாய்ப்பு எப்படி இருக்கிறது? - “வரவிருக்கும் தேர்தல் தனித்துவமானது. ஏனெனில் முதன்முறையாக இந்திய மக்கள் அனைவருக்குமே பிரதமர் மோடி தான் மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறார் என்பதைத் தெரிந்து வைத்துள்ளனர். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். களமும் அதையே பிரதிபலிக்கிறது. அது நடக்கும்போது மக்கள் வழக்கமாக எடுக்கும் முடிவுகளில் இருந்து மாறுபட்டு தேர்வு செய்திருப்பது தெரியும்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்திருந்தாலும் கூட மாநிலத்துக்கு பல நன்மைகள் நடந்துள்ளன. இந்த முறை தமிழக மக்களிடம் மத்திய அரசுடன் ஒத்துப்போக வேண்டும் என்ற மனநிலையே தமிழக மக்கள் மத்தியில் நிலவுகிறது. என்டிஏ கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி அதனை உறுதி செய்யும். இந்தத் தேர்தலில் உள்ளூர், மாநிலப் பிரச்சினைகளுக்கு இடமில்லை இது தேசியத் தேர்தல். இந்த முறை என்டிஏ சிறப்பான வாக்கு சதவீத சாதனையை நிகழ்த்தும். மோடிஜியின் 400 எம்.பி.க்கள் குழுவில் தமிழக எம்.பி.க்கள் பெருமளவில் இடம்பெறுவார்கள்.”
பாஜகவின் இலக்கு வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதா இல்லை அதிகமான இடங்களைக் கைப்பற்றுவதா? - “கட்சி இரண்டிலும் தான் கவனம் செலுத்துகிறது. மும்முனைப் போட்டியில் வெல்ல கட்சி 35% வாக்கு விகிதத்தைக் கடக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கடந்த முறையை ஒப்பிடுகையில் மேலும் 370 வாக்குகளையாவது பெற வேண்டும் என்பதே இலக்கு. அதேபோல் ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் 40 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கள நிலவரமும் சாதகமாக உள்ளது.”
திமுக - அதிமுகவுக்குத்தான் போட்டி. பாஜக இதில் இல்லை என்று அக்கட்சிகள் கூறுகின்றனவே! - “அது ஒருவகையில் நல்ல விஷயம் தான். மற்ற கட்சிகள் ஏதோ உள்ளாட்சித் தேர்தலுக்கோ அல்லது சட்டப்பேரவைத் தேர்தலுக்கோ பிரச்சாரம் செய்வது போல் செய்து கொண்டிருக்கின்றன. அவர்கள் இது தேசியத் தேர்தல் என்பதையே உணரவில்லை. அவர்கள் இன்னும் 1960-களிலேயே தேங்கிக் கிடக்கின்றனர்.
தெற்கு - மேற்கு ஏற்றத்தாழ்வு, இந்தி, சம்ஸ்கிருதம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மக்களுக்கு மோடிஜி தமிழ் ஆதரவாளர், தமிழர்களுக்கானவர் என்பது தெரியும். நாங்கள் வளர்ச்சி என்ற நேர்மறை மொழியைப் பேசுகிறோம். நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். மக்கள் அதை அங்கீகரிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.”
பாஜக வலுவாக இருக்கும் தொகுதிகளில் கூட்டணியும் பலமாக இருக்கிறது. ஆனால் கோவை, கன்னியாகுமரி போன்ற தொகுதிகளில் உங்கள் கூட்டணிக் கட்சிகளின் சுவடே இல்லையே! இது வாக்குப்பதிவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
“ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு பிரத்யேக இயல்பு இருக்கும். ஆகையால் வாக்குப் பரிமாற்றம் தேர்தலுக்குத் தேர்தல் வேறுபடும். கூட்டணிக் கட்சியினர் அனைவருமே கூட்டணியின் கொள்கையை பிரதிபலிக்க வேண்டும். மோடிஜி இந்த தேசத்துக்கு முக்கியமானவர் என்பதை நம்ப வேண்டும். அது எங்கள் கூட்டணியில் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், இண்டியா கூட்டணிக்கு அப்படிப்பட்ட பொதுவான கொள்கை இல்லை. அவர்கள் உள்ளூர மோதிக் கொண்டிருக்கின்றனர். கேரளாவில் காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் மோதல் நிலவுகிறது. ஆனால் தமிழகத்தில் அவர்கள் எல்லோரும் ஒரே அணியில் இருக்கின்றனர்.”
பாஜக கூட்டணிக் கட்சிகளான அமமுக, தமக ஆகியனவற்றிற்கு அவர்கள் கேட்ட பிரஷர் குக்கர், மிதிவண்டி சின்னம் கிடைத்துள்ளது. ஆனால் எதிரணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை. அவர்கள் பாஜக சதியை இதற்குக் காரணம் கூறூகிறார்களே?
“சின்னம் ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் வேலை. அது வெளிப்படைத்தன்மை மிகுந்த நடைமுறை. விதிகளுக்கு உட்பட்டே அது நடைபெறுகிறது. மிதிவண்டி சின்னம் கோரி முதலில் விண்ணப்பித்தது தமாகா அதனால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அக்கட்சி அச்சின்னத்தைப் பெற்றுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி குறித்த நேரத்தில் விண்ணப்பிக்கவில்லை. இதில் பாஜக சதி இருப்பதாகச் சொல்வதில் எந்த தர்க்கமும் இல்லை. ஏற்கத்தக்கது அல்ல.”
பாஜக தலைமையிலான மத்திய அரசுதான் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டத்தைக் கொண்டுவந்தது. அது இன்னும் சில ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என்றாலும் ஏன் பாஜக தமிழகத்தில் உரிய இட ஒதுக்கீட்டைத் தரவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது அச்சட்டத்தை தூக்கிப்பிடித்ததாக ஆகியிருக்குமல்லவா?
“19 சீட்களில் பாஜக நேரடியாக களம் காண்கிறது. அதில் நாங்கள் 3 பெண்களைக் களமிறக்கியுள்ளோம். நாங்கள் இதில் முயன்றவரை விருப்பம் தெரிவித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். இது முழுவீச்சில் அமலாவதில் இருக்கும் திட்டம், பெண்களுக்கு இன்னும் அதிகமாக சீட் கொடுப்பதை நோக்கி நாங்களும் முன்னேறி வருகிறோம். 2019 தேர்தலில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் தான் பாஜகவுக்கு இருந்தார். இப்போது மூவர் இருக்கின்றனர். எதிர்காலத்தில் எங்கள் வேட்பாளர்களில் 50 சதவீதம் பேர் மகளிராக இருப்பர்.”
உங்கள் சொந்த ஊர் கருர். நீங்கள் ஏன் கோவையில் போட்டியிடுகிறீர்கள்? - “கோவையில் போட்டியிடுவது என்பதை நான் தேர்வு செய்யவில்லை. அது எங்கள் கட்சித் தலைமை எடுத்த முடிவு. கோவையில் இருந்த நான் போட்டியிட வேண்டும் என்பதற்கு கட்சித் தலைமை பல்வேறு காரணங்கள் வைத்துள்ளது. முதலாவது கடந்த 10 ஆண்டுகளில் கோவை தீவிரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்கள் நடந்துள்ளன. போதைப் புழக்கம் அதிகரித்துள்ளது. கோவையில் நிறைய சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கின்றன.”
மோடி அரசானது பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, திட்டமிடல் இல்லாத கரோனா ஊரடங்குகள் மூலம் இந்தியாவின் எம்எஸ்எம்இ (சிறு, குறு, நடுத்தர தொழில்களை) அழித்துவிட்டதாக அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஒரு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். நீங்கள் தொழில்நகரமான கோவையில் போட்டியிடுவதால் இதற்கு உங்களின் பதில் என்ன?
“சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் நன்றாக நடைபெறுகின்றன. பதிவு செய்யப்பட்ட எம்எஸ்எம்இ-க்கள் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. கோவை மாவட்டம் தான் ’முத்ரா’ திட்டத்தின் மிகப்பெரிய பயனாளி. தமிழகத்துக்கு இத்திட்டத்தின் கீழ் 2 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கோவை மக்களுக்கு சிறு சிறு பிரச்சினைகளை மத்திய அரசிடம் கொண்டு செல்ல வழியில்லாமல் இருக்கிறது. அவர்களுக்கு அங்கே பிரதிநிதி இல்லை.
நாங்கள் கட்சியின் மூலமாக எங்களின் நிதியமைச்சர், தொழில்துறை அமைச்சர், ஜவுளி அமைச்சரை கோவைக்கு வரச் செய்திருக்கிறோம். கோவையில் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் பிரதிநிதி வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். கோவையும் மாநிலத்தின் மற்ற பகுதிகளும் ஒன்றோடு ஒன்றும் உலகளாவிய இணைப்பில் இருக்கின்றன.
ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - பாலீஸ்தான் பிரச்சினை போன்ற சர்வதேச விவகாரங்கள் ஐரோப்பிய பொருளாதார மந்த நிலை ஆகியன தொழில்நகரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு கோவையில் இருந்து ஒரு பிரதிநிதி வேண்டும். கோவையின் தேவைகளை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்,
நாடாளுமன்றத்தில் கோவையின் குரலாக ஒருவர் ஒலிக்க வேண்டும். வளர்ச்சிக்கு எதிரான கம்யூனிஸ்ட் பிரதிநிதி 5 ஆண்டுகள் மக்களவையில் இருந்தாரே! அவரிடம் என்ன எதிர்பார்க்க முடியும். கோவை முழுவதுமே ஆட்சியில் இருக்கும் கட்சியின் பிரதிநிதியே தங்களுக்கு வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது.”
மத்திய அமைச்சர் எல்.முருகன், சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை களம் இறக்கியது குறித்த விமர்சனங்கள் பற்றி உங்களது கருத்து?
“நயினார் நாகேந்திரனைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த திருநெல்வேலி மாவட்டத்துக்கு அவருடைய சேவையை, பங்களிப்பை விரிவுபடுத்த வேண்டும் என்று கட்சி விரும்பியது. இவர்கள் மூவரும் மத்திய அரசுக்கும் - மாநிலத்துக்கும் இடையே நேரடி தொடர்பாகத் திகழக் கூடியவர்கள். அவர்களின் அனுபவம் அபரிமிதமானது. மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை அனுபவமே பெரிது, மக்களவையில் அனுபவக் குரல் ஒலிப்பது அவசியம்.”
ஆனால் முருகனும், நயினார் நாகேந்திரனும் ஏன் தேர்தலில் போட்டியிடுவதற்காக தத்தம் பதவிகளை ராஜினாமா செய்யவில்லை?
“தேர்தல் ஆணைய விதிமுறைகள் அதற்கு அனுமதி தருகிறதே. வெற்றி பெற்றால் முந்தையப் பதவியை ராஜினாமா செய்வார்கள். சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும்.”
எரிபொருள் விலை குறைப்பை முன்னிலைப்படுத்தியுள்ள திமுகவின் தேர்தல் அறிக்கை மீதான உங்கள் பார்வை என்ன?
“திமுக செலக்டிவ் அம்னீஸியா-வில் இருந்து வெளிவர வேண்டும். 2021 தேர்தல் வாக்குறுதிகளை வாசிக்க வேண்டும், எரிபொருள் விலைக் குறைப்பில் அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதை உணர வேண்டும். ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகள் என்னவாகின என்றும் சில்ல வேண்டும். திமுகவுக்கு தாங்கள் வெற்றி பெற மாட்டோம் என்பது தெரியும். எனக்கு என்ன சந்தேகம் என்றால், ஏன் இன்னும் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், வீட்டுக்கொரு நிலவைக் கொடுப்போம் என்று வாக்குறுது கொடுக்கவில்லை!”
பாஜக ஏன் நமோ பிரச்சாரத்தை தமிழில் முன்னெடுத்துள்ளது?
“தமிழக மக்கள் மோடிஜி என்ன பேசுகிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்கான தளம் இது. நாடு முழுவதும் பிரதமர் பேசுவதை தமிழக மக்கள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மற்ற பிராந்திய மொழிகளை ஒப்பிடுகையில் தமிழில் நமோவின் செயல்பாடு சிறப்பாகவே இருக்கிறது. தமிழக மக்கள் நரேந்திர மோடியை வெகுவாகவே விரும்புகிறார்கள்.”
- என்.சாய் சரண் | தொகுப்பு: பாரதி ஆனந்த்
தொகுப்பு: பாரதி ஆனந்த்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago