மக்களவை மகா யுத்தம்: பயப்படுகிறதா பாஜக?

By வெ.சந்திரமோகன்

ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் என இண்டியா கூட்டணித் தலைவர்கள் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், பாஜகவுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.

“தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்படுவோம் என்று மோடியும் பாஜகவும் பதற்றத்தில் இருக்கின்றனர்” என சீதாராம் யெச்சூரியும், “இனி ஆட்சிக்கு வரவே முடியாது என்ற அச்சத்தில், மக்களிடமிருந்து எதிர்க்கட்சிகளை எப்படியேனும் தனிமைப்படுத்த பாஜக முயற்சிக்கிறது” என்று அகிலேஷ் யாதவும் கிண்டல் செய்திருக்கின்றனர்.

பாஜக 370க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்று மோடி நம்பிக்கையுடன் கூறிவந்தாலும் அக்கட்சி உள்ளூர அச்சத்தில் இருப்பதையே சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

பாதகமாக மாறும் சாதகங்கள்: தங்கள் எம்.பி-களில் 100 பேருக்கு பாஜக இந்த முறை மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை. 2019 தேர்தலிலும் இதே போல் 99 பேருக்கு மறுவாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன் பலனையும் பாஜக அறுவடை செய்தது. ஆனால், இந்த முறை அது பலிக்குமா என்பது சந்தேகம்தான்.

தேர்தல் பத்திர விவகாரத்தில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கும் பாஜக, வழக்கம் போல எதிர்க்கட்சிகளிலிருந்து வரும் தலைவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துவருகிறது. இது இண்டியா கூட்டணிக்கு நெருக்கடி என்று சொல்லப்பட்டாலும், பாஜகவுக்குள் கசப்புகளையும் கிளப்பிவிட்டிருக்கிறது.

சமீபத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலின்போது, பாஜகவுக்கு வாக்களித்த இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்ஆறு பேருக்கும், அதே தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலில் நிற்க பாஜக வாய்ப்பளித்திருக்கிறது.

அறுவரில் ஒருவரான ரவி தாக்கூரிடம் கடந்த தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் பாஜக அமைச்சர் ராம் லால்மார்க்கண்டா இந்த முறை தனக்குப் பதிலாகக்காங்கிரஸிலிருந்து வந்தவருக்கு வாய்ப்பளிப்பதா என அதிருப்தியில் பாஜகவிலிருந்து வெளியேறிவிட்டார்.காங்கிரஸ் சார்பில் அவர் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தின் சபர்காந்தா மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் மனைவி ஷோபனாவின் பெயர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிக்குள் கலகம் வெடித்திருக்கிறது. 2,000க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கட்சியிலிருந்து விலகியிருக்கின்றனர். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நிகழ்ந்துவரும் இந்த மாற்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஊழல் கறைபடிந்தவர்கள் என பாஜகவே விமர்சித்துவந்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் தயக்கமின்றி சீட் ஒதுக்குகிறது பாஜக. காங்கிரஸிலிருந்து வந்த கையோடு நவீன் ஜிண்டல், அசோக் தன்வார் போன்றவர்களுக்கு உடனடியாக சீட் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

நிலக்கரி முறைகேட்டுப் புகாரில் நவீன் ஜிண்டல் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்தில் இருந்தாலும் இதுவரை அவர் கைதுசெய்யப்படவில்லை. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினரால் ‘திருடர்’ என விமர்சிக்கப்பட்டவர் நவீன் ஜிண்டல். அதேபோல், சுரங்க முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்ட ஜனார்த்தன் ரெட்டி மீண்டும் பாஜகவில் இணைந்திருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அர்விந்த் கேஜ்ரிவால் சிறை செல்லக் காரணமான டெல்லி மதுபானக் கொள்கை முறைகேட்டுப் புகாரில், ‘அப்ரூவ’ராக மாறிய அரபிந்தோ ஃபார்மா நிறுவனத்தின் சரத் சந்திர ரெட்டி, தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு ரூ.52 கோடி அளித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

இந்த விவகாரங்களை முன்வைத்து பாஜகவை இண்டியா கூட்டணி சரமாரியாக விமர்சிக்கிறது. அமலாக்கத் துறையின் வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டது 0.4% தான் என்பதைச் சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சிகள், விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மோடி அரசு வேட்டையாடுவதாகக் குற்றம்சாட்டுகின்றன.

குறிப்பாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகள் சரியானவையா என இண்டியா கூட்டணி கேள்வி எழுப்பியிருக்கிறது.

கூட்டணிச் சிக்கல்கள்: பஞ்சாபில் அகாலி தளத்துடன் பாஜக நடத்திவந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது. சாத்தியமற்ற பல்வேறு நிபந்தனைகளை அகாலி தளம் வைத்ததால் பாஜக இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. 2019 தேர்தலில் அகாலி தளத்துடனான கூட்டணியில் மூன்றே இடங்களில் போட்டியிட்டு, இரண்டு இடங்களில் வென்ற பாஜக இந்த முறை அதிகமான இடங்களை எதிர்பார்த்தது.

ஆனால், அகாலி தளம் அதற்கு இசையவில்லை. ஏற்கெனவே, ஒடிஷாவில் பிஜு ஜனதா தளத்துடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால் அங்கு தனித்துக் களம் காண்கிறது பாஜக. கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் (ஜேடிஎஸ்) பாஜக கூட்டணி அமைத்திருக்கும் நிலையில், தும்கருவில் மேடையில் பாஜக-ஜேடிஎஸ் தலைவர்கள் மோதலில் ஈடுபட்டது பேசுபொருளாகியிருக்கிறது.

மகாராஷ்டிரத்தில் 2014, 2019 தேர்தல்களில் 23 இடங்களில் பாஜக வென்றது. ஆனால், அந்தக் காலகட்டங்களில் சிவசேனா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தது. இப்போது, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் அதிருப்தி அணிகளின் துணையுடன் களம் காணும் பாஜகவுக்குச் சவால்கள் அதிகம்.

மிக முக்கியமாக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பிளவுற்று, அவற்றிலிருந்து கணிசமான தலைவர்கள் வெளியேறி (அக்கட்சிகளின் சின்னங்களையும் தக்கவைத்து) பாஜக கூட்டணி அரசு உருவாகத் துணை நின்றாலும், அக்கட்சிகளின் உண்மையான தொண்டர்களின் - அசல் வாக்கு வங்கியின் ஆதரவைத் திரட்டுவது அத்தனை எளிதல்ல.

ஒரு சதவீத வாக்கு வங்கிகூட இல்லாத மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சிக்குப் பாஜக கொடுக்கும் முக்கியத்துவம், அங்கு நிலைமை சிலாக்கியமாக இல்லை என்பதையே உணர்த்துகிறது.

ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சியுடனான பாஜகவின் கூட்டணிக்குள்ளும் கசப்புகள் முளைத்திருக்கின்றன. நேற்றுவரை மோதிக்கொண்டிருந்த இரு கட்சிகளும் எப்படி இணைந்து செயல்படுவது என இரு தரப்பும் முறுக்கிக்கொண்டிருக்கின்றன. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துவிட்டது.

முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதுசெய்யப்பட்டிருப்பதும் பாஜகவுக்கான ஆதரவுத் தளத்தைச் சுருக்கியிருக்கிறது. சிக்கிம் மாநிலத்தின் ஆளுங்கட்சியான கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டுவிட்டது.

பிற பிரச்சினைகள்: மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணான ரேகா பத்ராவை வேட்பாளராக்கியதுடன், அவருடன் மோடி காணொளி மூலம் உருக்கமாகப் பேசினார். பிரதமர் மோடி இத்தனைப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கும் நிலையில், மம்தா பானர்ஜி குறித்து துர்காபூர் பாஜக வேட்பாளர் திலீப் கோஷ் தரக்குறைவாகப் பேசியது சர்ச்சையாகியிருக்கிறது.

பாஜக வேட்பாளராகக் களமிறக்கப்படும் நடிகை கங்கனா ரணாவத் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத் பதிவிட்ட நிலைத்தகவலும் புயலைக் கிளப்பியிருக்கிறது. தனக்குத் தெரியாமல் தன் குழுவினர் செய்துவிட்டதாக அவர் விளக்கமளித்தாலும் அது அநாகரிகமான பதிவு என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

உத்தரப் பிரதேசத்தில் ராஷ்ட்ரிய லோக் தளத்தை (ஆர்எல்டி) கூட்டணிக்குள் கொண்டுவந்தது, பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுவது உள்ளிட்ட சாதக அம்சங்கள் பாஜகவுக்கு இருந்தாலும், ராகுல் காந்தி மேற்கொண்ட நீதி யாத்திரை தலித்துகள், முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளைக் காங்கிரஸுக்குப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமர் கோயில் திறப்பு விழாவின் பலனை மேற்கு உத்தரப் பிரதேசத்தில் முழுமையாக அறுவடை செய்ய வேண்டும் என்பதற்காகவே, ‘ராமாயணம்’ தொலைக்காட்சித் தொடரில் ராமராக நடித்த அருண் கோவிலை மீரட் தொகுதியில் களமிறக்குகிறது பாஜக.

பாஜகவில் வருண் காந்திக்கு வாய்ப்பளிக்கப்படாத நிலையில், வருணை வரவேற்கத் தயார் எனக் காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி கூறியிருக்கிறார். சமாஜ்வாதியில் அவர் சேரலாம் என்றும் ஊகங்கள் எழுப்பப்படுகின்றன. ஒருவேளை வருண் வந்தால் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்குச் சற்றே வலிமை கூடும்.

அமேதியில் வருண் போட்டியிட்டால் அத்தொகுதியில் கடந்த தேர்தலில் ராகுலைத் தோற்கடித்த ஸ்மிருதி இரானிக்குக் கடும் சவாலை ஏற்படுத்தும். சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிட மேனகா காந்திக்கு மீண்டும் சீட் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர் இன்னமும் பிரச்சாரத்தைத் தொடங்காமல் இருக்கிறார். அவரும் அதிருப்தியில் இருப்பதாகவே பேசப்படுகிறது.

இப்படிப் பல பிரச்சினைகளை பாஜக எதிர்கொண்டிருக்கும் நிலையில், அவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில் இண்டியா கூட்டணி முனைப்பு காட்டினால் பாஜகவுக்குப் பெரும் நெருக்கடியாக அமையும்.

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்