‘யூத்’துகள் முதல் ‘பூத்’துகள் வரை - பாஜகவின் ‘ஜூன் 4… 400+' வியூகங்கள் என்னென்ன?

By நிவேதா தனிமொழி

ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு குறிப்பிட்ட முழக்கத்தைக் கையிலெடுத்து தேர்தலைச் சந்தித்து வருகிறது பாஜக. அந்த வகையில் கடந்த 2014-ம் ஆண்டு ‘ஏழைத் தாயின் மகன்: இந்தியாவின் பிரதமர்’ என்ற பரப்புரையை பாஜக மேற்கொண்டது. 2019-ம் ஆண்டு ‘வேண்டும் மோடி… மீண்டும் மோடி’ என்றது. அதுபோல் இம்முறை பாஜக ‘ஹாட்ரிக்’ அடிக்கும்... 3-வது முறை ஆட்சியை பிடிக்கும். அதுவும் 400 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைப்போம்’ என்று ஓராண்டுக்கு மேலாகவே பாஜக பிரமுகர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக, தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளை மையமாக வைத்து ‘இம்முறை ஜூன் 4… 400 இடங்களுக்கு மேல்’ என பாஜக பரப்புரை மேற்கொண்டு வருகிறது. பாஜகவின் இந்த முழக்கம் சொல்லும் செய்தி என்ன? - இதோ ஒரு விரைவுப் பார்வை...

400 இடங்களுக்குப் பின்னால் பாஜகவின் வியூகம் என்ன? - கிராமங்களில் கழிப்பறை திட்டம், ஏழைகள் வீடு வாங்க மானியம், சமையல் எரிவாயு திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 எனப் பல திட்டங்களை அமல்படுத்தியதால் மக்களிடம் வரவேற்பு இருக்கும் என பாஜக நம்புகிறது. அதேபோல், ராமர் கோயில் திறக்கப்பட்டதும் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்பதும் பாஜகவின் நம்பிக்கை. சமீபத்தில், வீட்டுக்கு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்தது மட்டுமின்றி, பெட்ரோல் விலையை ரூ.2 குறைத்தது என அடுத்தடுத்த உத்தரவை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.

வாக்குகள் அதிகரிக்க பாஜக வியூகம்! - மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்காக 37 கோடி வாக்காளர்களின் ஆதரவைத் திரட்ட பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்து இருக்கிறார். இதன்மூலம் பாஜக தனித்து 370 தொகுதிகளைக் கைப்பற்ற முடியும் என்று பாஜக தலைமை உறுதியாக நம்புகிறது. இதற்காகப் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக, சமூக வலைதளங்கள் மூலம் இளம் தலைமுறை வாக்காளர்களை கவர பாஜக திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு சார்பில் கடந்த 8-ம் தேதி நாடு முழுவதும் 23 பேருக்கு ’தேசிய படைப்பாளி விருதுகள்’ வழங்கப்பட்டன. விருது பெற்ற ஒவ்வொருவரின் சமூக வலைதள கணக்குகளையும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

அதுமட்டுமில்லாமல், தலைமைத் தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி வாக்காளர் பட்டியலில் 30 வயதுக்கு உட்பட்ட 21.54 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களை பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு முயற்சியையே மேலே குறிப்பிட்டோம்.

பூத் வாரியாக வாக்குகள் அதிகரிக்க வாய்ப்பு - ஒரு மக்களவைத் தொகுதியில் சராசரியாக 1,900 பூத்துகள் உள்ளன. ஒவ்வொரு பூத்திலும் பாஜக தொண்டர்கள் 370 வாக்குகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று பாஜக தலைமை ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் 10 லட்சத்து 35 ஆயிரம் பூத்துகள் உள்ளன. பாஜக தொண்டர்கள் தீவிரமாக களப் பணியாற்றினால் 37 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. உண்மையில் கூட்டணி கணக்குதான் 400. பாஜகவின் கணக்கு 370 தொகுதிகளைக் கைப்பற்றுவதுதான்.

பாஜகவின் 370 கணக்கு என்ன? - மக்களவையில் 543 இடங்கள் உள்ளன. 2014 மற்றும் 2019-இல் முறையே 282, 303 இடங்களை பாஜக வென்றது. கடந்த சில தினங்கள் முன்பு பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய மோடி, "370 என்பது பாஜகவுக்கு வெறும் எண் அல்ல. இது ஓர் ஆழமான உணர்வைக் குறிக்கிறது. குறிப்பாக, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 'சட்டப்பிரிவு 370' குறிக்கிறது. அதற்கு முழு பாடுபட்டது முகர்ஜி. அவருக்கு மரியாதை செலுத்த 370 தொகுதியில் வெற்றி பெற வேண்டும்" என பேசினார். எனவே, நேரடியாக 370 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என்பதே அக்கட்சியின் திட்டம்.

வட இந்தியா கணக்கு! - வட இந்தியாவில் தொகுதி எண்ணிக்கை மிகவும் அதிகம். அதேநேரம், தென்னிந்தியாவில் பாஜகவுக்கு ஆதரவு மனநிலை குறைவுதான். எனவே, அதைக் கவனத்தில் கொண்டு அதிகம் தொகுதிகள் கொண்ட வடமாநிலங்களில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் வெல்ல திட்டமிட்டுவருகிறது. அதனால்தான் அந்த மாநிலத்தில் உள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முதலில் அறிவித்தது. அதுபோல், பிஹாரில் உள்ள 40 தொகுதிகளைக் கைப்பற்ற பிஹார் முதல்வர் நீதிஷ் குமாரை பாஜக தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவந்தது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் சிவசேனா கட்சியை உடைத்து எம்எல்ஏக்களை வெளியேற்றி, அஜித் பவார் தலைமையிலான பிரிவுடன் கூட்டணி வைத்துள்ளது பாஜக. இப்படியாக ஒவ்வொரு மாநிலத்திலும் சில வியூகங்களையும் வகுத்து பாஜக (370+30) 400 தொகுதியைக் கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.

பாஜகவுக்கு 400 தொகுதிகள் எதற்கு வேண்டும்? - நாம் முன்பே கூறியதுபோல், இது வெறும் வெற்று தேர்தல் முழக்கமல்ல. 400 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் அமர்வதே பாஜகவின் நோக்கம். 2014-ல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜக அடுத்த நடந்த தேர்தலில் 20 இடங்களை அதிகம் பெற்றது. அதுபோல் இம்முறை மொத்தமுள்ள தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் வென்று பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுக்க திட்டமிட்டிருக்கிறது.

சமீபத்தில், பாஜவைச் சேர்ந்த எம்.பி ஒருவர், அரசியலைப்புச் சட்டத்தை மாற்றும் முடிவில் இருப்பதாக வெளிப்படையாக பேசினார். அதற்கு பாஜக விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

ஆகவே, இந்த 400 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து பாஜக தன் அனைத்துக் கருத்தாக்கங்களுக்கும் செயல் வடிவம் கொடுக்கும் . இதனால்தான், ‘மீண்டும் பாஜக வந்தால் அரசியலைப்புச் சட்டமே இருக்காது’ என எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர் என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஆனால், பாஜகவின் இந்தக் கனவு நிறைவேறுமா? 400 தொகுதிகளைப் பெற பாஜகவின் இந்த வியூகங்கள் கைகொடுக்குமா? அதை எதிர்த்து களமாட எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கப் போகும் யுக்தி என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE