மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை, அவற்றுக்கான வாக்கு வங்கிகள் எவ்வளவு, கடந்த கால தேர்தல்களில் அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றிகள் / தோல்விகள், தற்போதைய அரசியல் சூழல் யாருக்கு சாதகமாக / பாதகமாக இருக்கிறது என பல்வேறு அம்சங்களை புள்ளி விவரங்களோடு இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்ப்போம்.
வட கிழக்கு இந்தியாவின் நுழைவு வாயில் அசாம். நிலப்பரப்பில் அருணாச்சலப் பிரதேசத்துக்கு அடுத்த இரண்டாவது பெரிய வடகிழக்கு மாநிலம் இது. இயற்கை வளங்கள் நிறைந்த இந்த மாநிலம் காடுகளையும் மலைகளையும் அதிக அளவில் கொண்டுள்ளது. அசாமின் மிகப் பெரிய நீர் ஆதாரமாக பராக் மற்றும் பிரம்மபுத்ரா ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகள் விவசாயத்துக்கும் மின்பிடி தொழிலுக்கும் பயன்பட்டு வருகின்றன. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் அசாம் முதல் மாநிலமாக உள்ளது. இந்த மாநிலத்தில் 4 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.
அசாமின் மிக முக்கிய தொழில் விவசாயம். மாநிலத்தின் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு விவசாயத்தின் மூலமாக வருகிறது. 69% மக்களுக்கு விவசாயம்தான் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. அசாம் டீ உற்பத்திக்கு பெயர் பெற்ற மாநிலம். உலகின் டீ உற்பத்தியில் 7ல் ஒரு பங்கு இம்மாநிலத்தில் உற்பத்தியாகிறது. அரிசி, கடுகு, சணல், உருளைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, மஞ்சள், வாழை, பப்பாளி, பாக்கு போன்றவையும் இங்கு அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. கிழக்காசிய நாடுகளுடனான வர்த்தகத்துக்கு முக்கிய இணைப்புப் பாலமாக அசாம் உள்ளது.
அசாமில் பக்சா, சிராங், தர்ரங், திப்ரூகர், நல்பாரி என 35 மாவட்டங்களும், காசிரங்கா, லக்கிம்பூர், ஜோர்ஹட், கரிம்கஞ்ச், சில்சார் என 14 நாடாளுமன்றத் தொகுதிகளும், பதார்பூர், அல்காபூர், சிட்லி, ஜாலேஷ்வர், திஸ்பூர் என 126 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அசாமில் 3.12 கோடி மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் இந்துக்கள் 61.47%, இஸ்லாமியர்கள் 34.22%, கிறிஸ்தவர்கள் 3.74% இருக்கிறார்கள். மாநில மக்கள் பேசும் மொழிகளை எடுத்துக்கொண்டால், அசாமீஸ் பேசுபவர்கள் 48.38%, பெங்கலி 28.92%, போடோ 4.51%, சாத்ரி 2.29%, மிஷிங் 1.98%, நேபாளி 1.91%.
இந்த மாநிலத்தில் 41 அரசியல் கட்சிகள் உள்ள போதிலும், காங்கிரஸ், பாஜக, அசாம் கன பரிஷத், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்டு மக்கள் முன்னணி, ஐக்கிய மக்கள் கட்சி ஆகியவையே மக்கள் செல்வாக்கு பெற்றவையாக உள்ளன. அதிலும் குறிப்பாக பாஜகவும், காங்கிரஸுமே பிரதான கட்சிகளாக உள்ளன.
2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: கடந்த 2019 மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை அசாமில் மொத்தமுள்ள 2 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரத்து 59 வாக்காளர்களில் ஒரு கோடியே 78 லட்சத்து 7 ஆயிரத்து 713 வாக்காளர்கள் வாக்களித்தனர். அதாவது, 81.60% வாக்குகள் பதிவாகின.
மொத்தமுள்ள 14 தொகுதிகளில் 36.41% வாக்குகளுடன் 9-ல் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 35.79% வாக்குகளைப் பெற்ற போதிலும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 7.87% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. சுயேச்சை ஒருவர் 4.30% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் அசாம் கன பரிஷத் 8.31% வாக்குகளையும், போடோலாண்டு மக்கள் முன்னணி 2.50% வாக்குகளையும், ஐக்கிய மக்கள் கட்சி 2.33% வாக்குகளையும் மட்டுமே பெற்றன.
2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: 2014 மக்களவைத் தேர்தலில் அசாமில் மொத்தமுள்ள ஒரு கோடியே 88 லட்சத்து 37 ஆயிரத்து 713 வாக்காளர்களில், ஒரு கோடியே 49 லட்சத்து 38 ஆயிரத்து 826 வாக்காளர்கள் வாக்களித்தனர். அதாவது, 80.12% வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் பாஜக அதிகபட்சமாக 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த கட்சி இந்த தேர்தலில் 36.86% வாக்குகளைப் பெற்றது. 29.90% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 14.98% வாக்குகளைப் பெற்ற அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 3 இடங்களைக் கைப்பற்றியது. 9.62% வாக்குகளைப் பெற்ற சுயேச்சை ஒருவர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார். அஸ்ஸாம் கன பரிஷத் 3.87% வாக்குகளையும், போடோலாண்டு மக்கள் முன்னணி 2.21% வாக்குகளையும் மட்டுமே பெற்றன.
2009 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: 2009 மக்களவைத் தேர்தலை எடுத்துக்கொண்டால், இந்த தேர்தலில் ஒரு கோடியே 74 லட்சத்து 70 ஆயிரத்து 329 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களில், ஒரு கோடியே 21 லட்சத்து 41 ஆயிரத்து 171 பேர் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த கட்சி இந்த தேர்தலில் 34.89% வாக்குகளைப் பெற்றது. 16.21% வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்த பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி 16.10% வாக்குகளுடன் ஒரு தொகுதியிலும், அசாம் கன பரிஷத் 14.60% வாக்குகளுடன் ஒரு தொகுதியிலும், போடோலேண்டு மக்கள் முன்னணி 5.410% வாக்குகளுடன் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
2004 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: 2004 மக்களவைத் தேர்தலின்போது ஒரு கோடியே 50 லட்சத்து 14 ஆயிரத்து 874 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில், ஒரு கோடியே 3 லட்சத்து 77 ஆயிரத்து 354 பேர் வாக்களித்தனர். அதாவது, 69.11% வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில், அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 35.07% வாக்குகளுடன் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 22.94% வாக்குகளைப் பெற்ற போதிலும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அசாம் கன பரிஷத் 19.95% வாக்குகளுடன் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. சுயேட்சை ஒரு இடத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த 4 மக்களவைத் தேர்தல்களைப் பொறுத்தவரை, இரண்டில் பாஜகவும், இரண்டில் காங்கிரஸும் அதிக இடங்களைப் பெற்றுள்ளன. அதோடு, மாநில கட்சிகளைவிட தேசிய கட்சிகளே அதிக செல்வாக்குடன் இருப்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக, அசாமில் நடைபெற்ற சில சட்டமன்றத் தேரதல் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.
2021 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: 2021 சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 2 கோடியே 34 லட்சத்து 36 ஆயிரத்து 864 வாக்காளர்களில், ஒரு கோடியே 91 லட்சத்து 71 ஆயிரத்து 536 வாக்காளர்கள் வாக்களித்தனர். அதாவது, 81.80% வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அசாம் கன பரிஷத் மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலாண்டு மக்கள் முன்னணி, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதில், மொத்தமுள்ள 126 தொகுதிகளில், பாஜக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலில், பாஜக 60 தொகுதிகளிலும், அசாம் கன பரிஷத் 9 தொகுதிகளிலும், ஐக்கிய மக்கள் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
காங்கிரஸ் 29 இடங்களிலும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 16 இடங்களிலும், போடோலாண்டு மக்கள் முன்னணி 4 தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
2016 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள ஒரு கோடியே 99 லட்சத்து 90 ஆயிரத்து 755 வாக்காளர்களில் ஒரு கோடியே 68 லட்சத்து 91 ஆயிரத்து 142 வாக்காளர்கள் வாக்களித்தனர். அதாவது, 84.49% பேர் வாக்களித்தனர். இந்த தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அசாம் கன பரிஷத், போடோலாண்டு மக்கள் முன்னணி, ரபா ஜாதிய ஐக்கிய மஞ்ச், திவா ஜாதிய ஐக்கிய மஞ்ச் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இக்கூட்டணி மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 86 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பாஜக 60, அசாம் கன பரிஷத் 14, போடோலாண்டு மக்கள் முன்னணி 12 தொகுதிகளில் வெற்றி பெற்றன. சர்பானந்த சோனாவால் முதல்வராக பதவியேற்றார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ஐக்கிய மக்கள் கட்சி இடம் பெற்றிருந்தது. எனினும், இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டும் 26 இடங்களில் வெற்றி பெற்றது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இந்த தேர்தலில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பாஜக 29.51% வாக்குகளையும், காங்கிரஸ் 30.96% வாக்குகளையும் பெற்றன. பாஜகவைவிட அதிக சதவீத வாக்குகளைப் பெற்ற போதிலும், ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை காங்கிரஸ் இழந்தது.
2011 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: 2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 81 லட்சத்து 88 ஆயிரத்து 269 ஆக இருந்தது. இதில், வாக்களித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 38 லட்சத்து 9 ஆயிரத்து 440. இந்த தேர்தலில், 75.92% வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில் மொத்தமுள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 39.39% வாக்குகளுடன் 78 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தருண் கோகாய் முதல்வராக பதவியேற்றார். பாஜக 11.47% வாக்குகளுடன் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 12.57% வாக்குகளுடன் 18 தொகுதிகளிலும், அசாம் கன பரிஷத் 16.29% வாக்குகளுடன் 10 தொகுதிகளிலும், திரிணமூல் காங்கிரஸ் 2.05% வாக்குகளுடன் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் இருவர் வெற்றி பெற்றனர்.
2006 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: 2006 சட்டப்பேரவைத் தேர்தலை எடுத்துக்கொண்டால், மொத்தமுள்ள ஒரு கோடியே 74 லட்சத்து 34 ஆயிரத்து 19 வாக்காளர்களில், ஒரு கோடியே 32 லட்சத்து 9 ஆயிரத்து 887 வாக்காளர்கள் வாக்களித்தனர். அதாவது, வாக்குப்பதிவு 75.77%. இந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 53 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, தருண் கோகாய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 32.70% வாக்குகளைப் பெற்றது. 12.07% வாக்குகளுடன் பாஜக 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 20.39% வாக்குகளுடன் அசாம் கன பரிஷத் 24 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி 16.12% வாக்குகளுடன் 10 இடங்களில் வெற்றி பெற்றது. சிபிஐ ஒரு தொகுதியிலும், சிபிஎம் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
சட்டப்பேரவைத் தேர்தல்களை எடுத்துக்கொண்டால் கடந்த 4 தேர்தல்களில் இரண்டில் காங்கிரஸ் கட்சியும், இரண்டில் பாஜகவும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளன.
அசாமில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அசாம் கன பரிஷத், ஐக்கிய மக்கள் கட்சிகள் தொடர்கின்றன. மொத்தமுள்ள 14 தொகுதிகளில் பாஜக 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அசாம் கன பரிஷத் 2 தொகுதிகளிலும், ஐக்கிய மக்கள் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சி 12 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதி, கூட்டணி கட்சியான அசாம் ஜாதிய பரிஷத்துக்கு ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. இதனிடையே, குவஹாட்டி மக்களவை தொகுதி வேட்பாளரை திரும்பப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி, சோனிட்பூர் மற்றும் திப்ருகர் தொகுதிகளில் இருந்து தங்கள் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
2024 மக்களவைத் தேர்தல்: 2024 மக்களவைத் தேர்தல் அசாமில் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள முதல் கட்டத் தேர்தலில் 5 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலில் 5 தொகுதிகளுக்கும், மே 7-ம் தேதி நடைபெற உள்ள மூன்றாம் கட்டத் தேர்தலில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் அது அசாமில் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என அக்கட்சி கருதுகிறது. அதேநேரத்தில், அது பாதகமாகவே அமையும் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அசாம் முன்னாள் பாஜக முதல்வரும் தற்போதைய மத்திய அமைச்சருமான சர்பானந்த சோனாவால், "குடியுரிமை திருத்தச் சட்டம் தேசிய அளவிலானது. இந்த சட்டத்தைக் கொண்டு அடிப்படையற்ற அச்சத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. மிகவும் புத்திசாலிகளான அஸ்ஸாம் மக்களிடம் இந்த அச்சுறுத்தல் முயற்சி எடுபடாது.
பிரதமர் மோடியின் ஆட்சியில் அசாம் மக்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். சொந்தமாக நிலம் இல்லாத பழங்குடி மக்களுக்கு பாஜக ஆட்சியில் பட்டா நிலம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 14 தொகுதிகளில் 12ல் வெற்றி பெறும்" என தெரிவித்துள்ளார்.
"இந்த தேர்தலில் ஒரே ஒரு காங்கிரஸ் வேட்பாளரைத் தவிர மற்ற அனைவரும் பாஜகவில் இணைவார்கள். காங்கிரஸில் தொடர அவர்கள் விரும்பவில்லை. காங்கிரஸில் நல்ல சில தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களை பாஜகவில் இணைய அழைத்துள்ளேன். நான் அவர்களோடு தொடர்பில் இருக்கிறேன்" என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் ராணா கோஸ்வாமி, பொதுச் செயலாளர் சூரஜ் தெஹிங்கியா, சட்டமன்ற உறுப்பினர் பசந்த தாஸ் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.
இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் பூபென் போரா, "அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஒரு தற்காலிக பின்னடைவே. காங்கிரஸ் தலைவர்களை விலைக்கு வாங்குவது, அச்சுறுத்துவது என்ற இரண்டு வித வழிகளை முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா கொள்கையாக வைத்திருக்கிறார்.
என்னை அவர் மறைமுகமாக அச்சுறுத்தி வருகிறார். ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின்போது என் மீது வழக்கு பதியப்பட்டது. அதை காரணம் காட்டி ஜோர்ஹட் காவல் நிலையத்தில் இருந்து சிஐடி போலீசார் தொடர்ந்து எனக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். நான் மன ரீதியாக வலிமையானவன். சிறைக்குச் செல்வது குறித்து எனக்கு அச்சம் இல்லை. ஆனால், சிலர் அஞ்சுகிறார்கள். தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக கொண்டு வந்திருக்கிறது. இண்டியா கூட்டணிக்கு இது வாக்குகளைப் பெற்றுத் தரும்" என தெரிவித்துள்ளார்.
தற்போதைய கள நிலவரமும் கருத்துக் கணிப்புகளும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கின்றன. அதேநேரத்தில், காங்கிரஸும் கனமான வாக்கு சதவீதத்தைக் கொண்டிருக்கிறது. எனினும், அது அக்கட்சிக்கு வெற்றியை ஈட்டித் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முந்தைய அத்தியாயம் > மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டி என்றாலும்... - | மாநில நிலவர அலசல் @ மக்களவைத் தேர்தல்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago