மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 19 அன்று தேர்தல் தொடங்கவிருக்கும் நிலையில், ஜூன் மாதம் புதிய அரசு அமைந்துவிடும். இந்நிலையில், அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டுச் செயல்பட்டு வரும் குடிமைச் சமூக அமைப்புகள் கோரிவரும் விஷயங்கள் கவனத்துக்குரியவை.
அரசமைப்புச் சட்டம் உறுதிசெய்யும் அனைத்து உரிமைகளையும், சலுகைகளையும், கடமைகளையும் மக்கள் அறியவைப்பதோடு, அவை அனைத்தையும் கடைக்கோடி இந்தியர்களும் பெற்று வாழ வேண்டும் என்பது குடிமைச் சமூக அமைப்புகளின் பொதுவான விருப்பமாகும். பல்வேறு துறைகள் சார்ந்த கோரிக்கைகளும் குடிமைச் சமூக அமைப்புகளிடம் இருக்கின்றன.
பொருளாதாரக் கோரிக்கைகள்: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பெரும் பங்கைப் பெருநிறுவனங்கள் வசம் வழங்குவதைத் தவிர்த்து, பொதுத் துறைக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் குடிமைச் சமூக அமைப்புகள் விரும்புகின்றன. விவசாயம் புத்துணர்வு பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்; உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும்.
அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் கோருகின்றன. பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, ரயில், விமானக் கட்டணம், மின்சாரக் கட்டணம் குறைப்பு, மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் போன்றவை வேண்டும்.
வாகனங்களை வாங்கும்போதே சாலைக் கட்டணம் செலுத்தப்படும் நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் சாலைகளைப் பயன்படுத்துவதற்குச் சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்; வளர்ச்சியின் பெயரால் இயற்கை வளம், மலைப்பகுதிகள், கடற்கரைப் பகுதிகள் சுரண்டப்படும் போக்கு கைவிடப்பட வேண்டும் என்றும் இந்த அமைப்புகள் விரும்புகின்றன.
சமூகக் கோரிக்கைகள்: சாதியத்தின் பெயரால் நடத்தப்படும் வன்கொடுமைகள், ஆணவக்கொலைகள் தடுக்கப்படுவது அவசியம். இவற்றை அரசியல் ஆதாயம், தனிநபர் நலனுக்காகச் செயல்படுத்துவோரைச் சட்டத்தின் கீழ் தண்டித்து, தலித் மக்களின் மனித மாண்பு காக்கப்பட வேண்டும்.
சமூக நீதி என்னும் சமத்துவச் சமுதாயத்தை உறுதிசெய்யும் அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாடு நீர்த்துப்போகும் வகையில், பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு, குறிப்பாக உயர் சாதியினருக்கும் இடஒதுக்கீடு, சலுகைகள் வழங்குவதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்திய அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும். உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் இடஒதுக்கீட்டை நிலைநாட்ட வேண்டும்.
அடிப்படைவாதக் கருத்துக்களின் அடிப்படையில் பெண்கள் உரிமைக்கு எதிரான எல்லா கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாலியல் குற்றம் இழைத்தோர் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மக்கள்தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு எல்லா நிலைகளிலும் 50% இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டுத் தீர்மானம், தள்ளிப்போடப்படாமல், உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் இந்த அமைப்புகள் எதிர்பார்க்கின்றன.
சமயக் கோரிக்கைகள்: மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் போக்கு உடனடியாக நிறுத்தப்படுவதோடு, சிறுபான்மையினர், சிறு இனக்குழுக்கள், தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள், விளிம்புநிலை மக்கள் ஆகியோரின் பாதுகாப்பும், வாழ்வும், வாழ்வாதாரமும் உறுதிசெய்யப்பட வேண்டும்.
வகுப்புவாதப் பிரச்சாரம் தடை செய்யப்பட்டு, மதத்தின் பெயரால் நடத்தப்படும் மோதல்கள், தாக்குதல்களை உடனடியாகத் தேசத்துரோகச் செயலாக அறிவித்துக் கடும் தண்டனை வழங்க வேண்டும் எனக் குடிமைச் சமூக அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
சிறுபான்மையினர், அவர்தம் வாழிடங்கள், வழிபாட்டுத் தலங்கள், கூட்டங்கள், பேரணிகள் போன்றவற்றைத் தடைசெய்வது அல்லது ஒடுக்குவது போன்ற சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகளையும் நிறுத்த வேண்டும்.
1991இல் கொண்டுவரப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அச்சட்டத்தின்படி 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதியில் வழிபாட்டுத் தலங்கள் எந்தத் தன்மையில் இருந்தனவோ, அவை அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும்.
எல்லா மொழிகளுக்கும், கலாச்சாரங்களுக்கும் சம வாய்ப்பு அளித்தல் அவசியம். மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர் போன்ற பகுதிகளில் மத-இன அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது. உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியில் வழக்கு தாக்கல்செய்யவும், வாதிடவும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.
அரசியல் கோரிக்கைகள்: அரசமைப்புச் சட்டம் வழங்கும் கோட்பாடுகள், மதிப்பீடுகள், உரிமைகள் ஆகியவற்றைச் சேதப்படுத்தாமல், ஆளும் மத்திய-மாநில அரசுகள் அவற்றை உறுதிப்படுத்தவும் செயல்படுத்தவும் வேண்டும்.
இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடுகளான ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி, சுதந்திரம், சகோதரத்துவம், கூட்டாட்சித் தத்துவம் ஆகியவை பாரபட்சம் இன்றிச் செயல்படுத்தப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும். ஒரே நாடு, ஒரே மொழி என முன்வைக்கப்படும் ஒற்றைவாதம் கைவிடப்பட்டு, நாட்டின் பன்முகத்தன்மை நிலைநிறுத்தப்பட வேண்டும்.
சட்டத்துக்குப் புறம்பாகவும், தாங்களே சட்டத்தைக் கையிலெடுத்தும் செயல்படும் அமைப்புகள் தடை செய்யப்படுவதோடு அவற்றின் சட்டவிரோதச் செயல்கள், தீவிரவாத அமைப்புகளின் கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டுத் தண்டனைக்கு உள்படுத் தப்பட வேண்டும். அரசு நிறுவனங்கள் மத, இன அடிப்படைவாதக் கொள்கைகளுடன் செயல்படாமல் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும்.
அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், நியாய உணர்வோடு செயல்படும் அமைப்புகளும் அதிகாரிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். மாநில சுயாட்சி அங்கீகரிக்கப்பட்டு, கூட்டாட்சித் தத்துவம் மதிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் மாநில அரசுகள் தங்கள் மாநில வளமைக்கான செயல்களில் ஈடுபட அனுமதிக்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எந்த விதத்திலும் அழுத்தங்கள் நேரக் கூடாது. தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வுசெய்து நியமிக்கும் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பங்கேற்பை நீக்கியது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையையும் நேர்மையான தேர்வுமுறையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதுபோன்ற சட்டத் திருத்தங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்.
வாக்கு இயந்திரங்களின் மீது தொடர்ந்து முன்வைக்கப்படும் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். ஜனநாயகப் பண்பின் அடிப்படையில் குடிமைச் சமூகம் முன்னெடுக்கும் விமர்சனங்கள், விவாதங்கள், ஆலோசனைகள், வெகுமக்கள் மத்தியில் பகிரப்படும் கருத்துக்கள் ஆகியவற்றைக் கருத்துரிமை-பேச்சுரிமை அடிப் படையில் அணுகுவதற்கு மாறாக, அரசுக்கு எதிரான போக்காகப் பாவித்து ஒடுக்கும் போக்கு கைவிடப்பட வேண்டும்.
நாட்டின் வளர்ச்சி, மக்களின் நலன், உரிமைகள் - பன்மைத்தன்மையைத் தாங்கிப்பிடிக்கும் குடிமைச் சமூகங்கள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் செயல்பாட்டை ஆழமாகப் புரிந்துகொண்டு, அரசின் கொள்கைகள் - திட்டங்களை உருவாக்குதல் - செயல்படுத்துதலில் அவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த வேண்டும்.
- தொடர்புக்கு: thirugeetha@gmail.com
To Read in English: Civil society organizations’ demands
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago