வியாகுலன்
எழுபதுகளில் எழுதத் தொடங்கிய படைப்பாளிகளில் முக்கியமானவர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியம், அரசியல், நாடகம் என்று பல்வேறு தளங்களில் இயங்கிய ஆர். இராசேந்திர சோழன் என்கிற அஷ்வகோஷ் இன்று நம்மை விட்டுப் பிரிந்தார். இவரது மறைவு தமிழ் இலக்கியத்திற்கு பேரிழப்பாகும். இவரது சிறுகதைகள் தமிழ் சிறுகதை இலக்கியத்திற்கு முக்கிய வரவுகள். வடிவ நேர்த்தியும், கனலும், எதார்த்தமும் கொண்டவை. அடிமன சலனங்கள் வெளிப்படும் தருணங்களை கதையாக்குவதில் புதுமைப் பித்தன், கு.ப.ரா. இவர்களுக்கு இணையானவர்.
க்ரியா வெளியீடாக வெளிவந்த இவரது ‘எட்டுக் கதைகள்’ என்ற தொகுப்பும், மூன்று குறுநாவல்கள் அடங்கிய ‘இராசேந்திர சோழன் குறு நாவல்கள்’, ‘பறிமுதல்’ ஆகிய தொகுதிகளும் புனைவிலக்கியத்தில் முக்கியமானவை.தமிழ் நாடகக் கலைக்கு அஷ்வகோஷின் பங்களிப்பு முக்கியமானது. அதன் புத்தக வடிவங்களாக அஷ்வகோஷ் நாடகங்கள், தெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள், மரியாதை ராமன் மதிநுட்ப நாடகம், மேற்கத்திய இந்திய நாடகம் இயங்குதல் கோட்பாடு இவற்றை உள்ளடக்கிய ‘அரங்க ஆட்டம்’ என்ற நூலும் இவர் தமிழுக்கு தந்த கொடைகள்.
அரசியல் செயல்பாடுகளிலும் களம் நின்று விடிவு தந்த மிகச் சிறந்த போராளி. ‘எங்கள் ஊரில் ஒரு கதாபாத்திரம்’ என்ற சிறுகதை ஆனந்த விகடனில் பரிசு பெற்ற முதல் கதையாக வெளிவர, அதைத் தொடர்ந்து கசடதபற, கணையாழி, அஃக் ஆகிய இதழ்களில் தொடர்ந்து எழுதியவர். தமிழின் முக்கிய அடையாளம், உன்னதமான படைப்பாளி ஆர். இராஜேந்திர சோழன்.
இவரது சொந்த ஊரான மயிலம் பற்றி இவர் சொல்லும் போது, “மயிலத்தில் மயில் போலவே ஒரு மலை இருக்கும். அந்த மலையின் பிம்பம் மயில் வடிவத்திலேயே இருக்கும். அந்த மலையோடு நான் உரையாடியதும், அந்த மலை என்னோடு உரையாடியதுமான அந்த பசுமையான காலத்தில் ஞாபக அடுக்குகளை சுமந்தவனாகவே என் இளமைக் காலம் இருந்தது” என்பார்.
மேலும் “பிராட்வே எதிரில் தொன்போஸ்கோ பள்ளி மைதானத்தில் சிறுவனாக நான் விளையாடிக் கொண்டிருந்த போது, அம்மா காலமாகி விட்டார்கள் என்ற செய்தியை கேட்ட போது உறைந்து போன அந்த மனநிலையின் மீதங்களோடு தான் எனது படைப்புக்களையும் சம்மந்தப்படுத்தி பார்க்க வேண்டியிருக்கிறது. திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனையில் போதுமான கருத்தடைச் சாதனங்கள் இல்லாத அந்த காலத்திய பெண்மணிகள் சந்தித்த மரணங்களில் எனது தாயின் மரணமும் ஒன்று. எனவே தான் எனது படைப்புக்களில் பெண்கள் பிரதானமானவர்களாகிறார்கள். பெண் இல்லாமல் எனது படைப்புக்கள் இல்லை, ஏன் இந்த உலகமே இல்லை. எனது பாட்டி சொல்வார்கள் பெண் இல்லாத வீடும் பூட்டை (சரட்டை) இல்லாத கேணியும் ஒன்று என்பார்கள் அது தான் உண்மை”. என்று இவர் தனது படைப்புகள் குறித்து கூறியவற்றை பார்க்கும் போது இவரது மொழியும் கலையும் பெண்களைச் சார்ந்ததே என்பது ஒட்டுமொத்தமான 77 சிறுகதைகளையும் மறுவாசிப்புக்கு உட்படுத்தினால் நன்றாகப் புலப்படும்.
இவர் தனது சிறுகதைகளுக்கு புதுமைப் பித்தனின் கதை வடிவங்களைத் தேர்ந்து கொண்டார். அந்த வடிவத்திற்குள் தான் ஒரு வாழ்வின் கிண்டலான விமர்சனம் கலைத் தன்மையோடு இருக்கும். புதுமைப் பித்தன் படைப்புகளில் உரையாடலற்ற பனுவல் இருக்கும். இவரது கதைகளில் உரையாடல் மிகுந்த பனுவல் இருக்கும். இதிலிருந்து தான் இவரது நாடக எழுத்துக்களும் துவங்குவதாகக் கருத வேண்டி இருக்கிறது.
ஒரு தேனீ மாதிரி இலக்கியம், அரசியல், நாடகம் என்று அலைந்த ஒரு கலைஞன் இன்று நம்மிடையே இல்லை. இராசேந்திர சோழன் நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஆளுமை. பெரிதாக இவரது படைப்புகள் விவாதிக்கப்படவில்லை. அதைவிடுத்து இவரது கதையாடல் என்ன சொல்கிறது. எப்படிப்பட்ட நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. சாதாரணமாக ஆறடி உயரம். நிமிர்ந்து நடப்பார். மிகவும் எளிமையானவர். யாரிடமும் நெருங்க மாட்டார், நெருங்கி பழகி விட்டால் அவர் ஒரு உன்னதம். ஒரு இலை உதிர்வது மாதிரி அந்த உன்னதம் உதிர்ந்து விட்டது. ஆழ்ந்த அஞ்சலிகள்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago