நாடாளுமன்றத் தேர்தல் | மகாராஷ்டிர அரசியல் களம் யாருக்கு சாதகம்? - விரிவான பார்வை

By பால. மோகன்தாஸ்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த மாதத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது. இந்நிலையில், இந்த நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு மாநிலமாக தேர்தல் கள நிலவரம் குறித்து நாம் ஆராய இருக்கிறோம். அந்த வகையில், முதல் மாநிலம் மகாராஷ்டிரா. இந்த மாநிலத்தில் தற்போது கள நிலவரம் எப்படி இருக்கிறது? கட்சிகளின் செல்வாக்கு எப்படி இருக்கிறது? இந்த மாநிலத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உள்ள சாதக பாதகங்கள் என்னென்ன? காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் சாதக பாதகங்கள் என்னென்ன? உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

நாட்டின் பொருளாதார தலைநகரமான மும்பையை தலைநகராகக் கொண்டது மகாராஷ்டிரா. விவசாயம், வர்த்தகம், தொழில்துறை மூன்றிலும் சிறந்து விளங்கக்கூடிய மாநிலம் இது. இந்தியாவின் இயற்கையான, மிகப் பெரிய, மிக பழமையான துறைமுகம் மும்பை துறைமுகம். இந்திய ஏற்றுமதியில் 5ல் ஒரு பங்கு இங்கிருந்துதான் ஏற்றுமதியாகிறது. இந்தியாவின் கேட்வே அதாவது நுழைவு வாயில் என அழைக்கப்படக்கூடிய நகரம் மும்பை. இந்தியாவில் அதிக அளவில் திரைப்படங்களைத் தயாரிக்கும் பாலிவுட் இங்குதான் உள்ளது.

சமவெளிகள், மலைகள், ஆறுகள் நிறைந்த, நிலப்பரப்பில் நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய மாநிலம்; மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய மாநிலம் மகாராஷ்டிரா. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இம்மாநிலத்தில் 11.24 கோடி மக்கள் வசிக்கிறார்கள். சத்ரபதி சிவாஜி, பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தியின் அரசியல் குருவாக விளங்கிய கோபால கிருஷ்ண கோகலே ஆகியோரின் அரசியல் தாக்கம் அதிகம் நிறைந்த மண் மராட்டியம். இன்று தேசிய அரசியலில் மிகப் பெரிய சக்தியாக விளங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தது. அந்த வகையில், நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது அரசியலிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாநிலம் இது.

நாட்டிலேயே அதிக நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட முதல் மாநிலம் உத்தரப்பிரதேசம் என்றால், இரண்டாவது பெரிய மாநிலம் மகாராஷ்டிரா. இந்த மாநிலத்தில் சந்திராபூர், நான்டெட், அவுரங்காபாத், நாசிக், பால்கர், கல்யாண், தானே, புனே,ஷிர்டி, வார்தா, கோலாப்பூர், நாக்பூர் என மொத்தம் 48 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. ஷிர்பூர், ராவெர், ஜல்கோன், மால்காபூர், அகோட், ஆர்வி, பல்லார்பூர், கின்வாட், நாசிக் கிழக்கு, கல்யாண் புறநகர், தானே, பேலாபூர், ஷிவாடி என 288 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

நாடு முழுவதும் இருந்ததுபோலவே, ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க மாநிலம் மகாராஷ்டிரா. கடந்த காலத்தில் இருந்தது போல் இல்லாவிட்டாலும், தற்போதும்கூட காங்கிரஸ் கட்சி இங்கு ஓரளவு வலிமையாகவே இருக்கிறது. காங்கிரஸ், பாஜக, சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகள்தான் மகாராஷ்டிர அரசியலை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளன. மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி என ஏராளமான அரசியல் கட்சிகள் இங்கு இருந்தாலும் அவற்றுக்கு பெரிய மக்கள் செல்வாக்கு இல்லை.

மாநிலத்தில் தற்போது மிகப் பெரிய கட்சியாக இருப்பது பாஜக. இக்கட்சி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 27.84 சதவீத வாக்குகளைப் பெற்று 23 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதேபோல், 2019 சட்டமன்றத் தேர்தலில் 25.75 சதவீத வாக்குகளைப் பெற்று 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சிவ சேனா 23.50 சதவீத வாக்குகளுடன் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2019 சட்டமன்றத் தேர்தலில் 16.41 சதவீத வாக்குகளுடன் 56 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 1 நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றாலும், 16.41 சதவீத வாக்குகளை பெற்றது. 2019ல் நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 44 தொகுதிகளையும் 15.87 வாக்குகளையும் காங்கிரஸ் பெற்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 15.66 சதவீத வாக்குகளைப் பெற்று 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதேபோல், சட்டமன்றத் தேர்தலில் 16.71 சதவீத வாக்குகளைப் பெற்று 54 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

நடாளுமன்றத் தேர்தலில் அசாதுதின் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலில் 1.34 சதவீத வாக்குகளைப் பெற்று 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை ஒருவர் 3.72 சதவீத வாக்குடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார். மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சி 2019 சட்டமன்றத் தேர்தலில் 2.25 சதவீத வாக்குடன் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. சமாஜ்வாதி கட்சி 2019 சட்டமன்றத் தேர்தலில் 0.22 சதவீத வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வேறு எந்த கட்சியும் சட்டமன்றத் தேர்தலிலோ நாடாளுமன்றத் தேர்தலிலோ ஒரு சதவீத வாக்கைக்கூட வாங்கவில்லை.

சிவ சேனாவும், தேசியவாத காங்கிரசும் தற்போது இரண்டாக உடைந்திருக்கின்றன. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனாவில் முக்கிய தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, கட்சியை உடைத்து 39 எம்எல்ஏக்களையும், 12 எம்பிக்களையும் தன்பக்கம் கொண்டு வந்துவிட்டார். அதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவார், கட்சியை உடைத்து 2 எம்பிக்களையும் 42 எம்எல்ஏக்களையும் தன் பக்கம் கொண்டு வந்துவிட்டார். இவர்கள் இருவரும் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறார்கள்.

எண்ணிக்கை கணக்கின்படி, மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 நாடாளுமன்றத் தொகுதிகளில் 37 தொகுதிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வசம் இருக்கிறது. 284 சட்டமன்றத் தொகுதிகளில் 186 தொகுதிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வசம் உள்ளது. கடந்த நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல்களின்போது பாஜக உடன் சிவ சேனா மட்டும் கூட்டணியில் இருந்தது. தற்போது, தேசியவாத காங்கிரசும் கூட்டணியில் இணைந்திருக்கிறது.

அதேநேரத்தில், எதிர்புறம் காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இருக்கின்றன. மகாராஷ்டிராவில் இந்த கூட்டணி மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த கூட்டணிக்கு தற்போது 9 எம்பிக்களும் 73 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே வலிமையாக இருக்கிறது. மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஷோக் சவானும் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்த முக்கிய தலைவர்களான மிலிந்த் தியோரா ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவில் இணைந்துள்ளார். பாபா சித்திக்கி அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த கட்சி உடைக்கப்பட்டதால் உத்தவ் தாக்கரேவும், சரத் பவாரும் பலவீனப்பட்டிருப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலர் விலகியதால் அக்கட்சியும் பலவீனப்பட்டிருக்கிறது. இதனால், மகா விகாஸ் அகாதி பலவீனமடைந்திருப்பது போன்ற ஒரு தோற்றம் நிலவுகிறது.

ஏக்நாத் ஷிண்டே சிவ சேனாவை உடைத்தாலும், தொண்டர்களும் ஆதரவாளர்களும் உத்தவ் தாக்கரே பக்கம்தான் இருக்கிறார்கள் என்றும், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்தாலும் அக்கட்சியின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் சரத் பவார் பக்கம்தான் இருக்கிறார்கள் என்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. சிவ சேனாவின் நிறுவனரான பால் தாக்கரேவின் மகன் என்பதால் உத்தவ் தாக்கரேவுக்கே மக்கள் செல்வாக்கு உள்ளதாகக் கூறப்படுவதை மறுக்க முடியாது என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அதேபோல், சரத் பவார் இன்னமும் ஆளுமை மிக்க தலைவராக உள்ளதால் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்களும், ஆதரவாளர்களும் அவர் பக்கமே நிற்பார்கள் என்ற வாதமும் வலுவாக உள்ளது. இதேபோல், காங்கிரஸ் கட்சியில் இருந்து சிலர் வெளியேறினாலும் கட்சி வலிமையாகவே இருப்பதாக மகாராஷ்டிர காங்கிரஸ் பொறுப்பாளரான ரமேஷ் சென்னிதாலா தெரிவித்திருக்கிறார்.

இந்திய அரசியல் சாசன சிற்பியான பி.ஆர். அம்பேத்கரின் பேரனும் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சியின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கருக்கு மகாராஷ்டிராவில் கணிசமான செல்வாக்கு உள்ளது. அவரை மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. இதனால், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிரான வலிமையான கூட்டணியாக மகா விகாஸ் அகாதி மகாராஷ்டிராவில் விளங்கும் என கூறப்படுகிறது.

தற்போதைய பொதுவான சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே இம்மாநிலத்தில் வலுவாக உள்ளது. அதேநேரத்தில், வலுவான போட்டியை கொடுக்கக்கூடிய இடத்தில் மகா விகாஸ் அகாதி தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க மகராஷ்டிர அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். எத்தகைய மாற்றங்கள் நிகழும், அது யாருக்கு சாதகமாக அமையும் என்பது போகப்போக தெரியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்