இந்தியாவில் 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதுதான் ‘தேசியக் காசநோய் ஒழிப்புத் திட்ட’த்தின் (National Tuberculosis Elimination Programme - NTEP) இலக்கு. ஆனால், இலக்குக்கான காலம்நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், நாட்டில் காசநோய் பரவுவது அதிகரித்திருக்கிறது என்கின்ற களப் புள்ளிவிவரங்கள் நம்மைக் கலவரப் படுத்துகின்றன.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி 2021இல் இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 210 காசநோயாளிகள் இருந்தனர். இப்போது இந்த விகிதம் அதிகரித்துள்ளது என்கிறது சமீபத்தில் வெளியான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) ‘தேசியக் காசநோய்ப் பரவல் ஆய்வு 2019-2021 அறிக்கை’ (National TB Prevalence Survey In India 2019-2021). அதன்படி, நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒரு லட்சம் பேருக்கு 316 காசநோயாளிகள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு 301 காசநோயாளிகள் என்று அறிக்கை கூறுகிறது. காசநோயாளிகளை உள்நோயாளியாக அனுமதிப்பதில் தமிழ்நாட்டில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்கிறது ஒரு மருத்துவத் தகவல்.
பிரச்சினைகள் என்னென்ன? - உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதனோம், ஒருமுறை உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியதை இங்கே நினைவுகூரலாம். ‘காசநோய் ஒழிப்புப் போராட்டமானது காசநோயை ஏற்படுத்தும் கிருமிக்கு எதிரானது மட்டுமல்ல! மக்களின் அறியாமை, வறுமை, ஊட்டச்சத்துச் சமமின்மை, சமூகக் களங்க அச்சம், மாசுபட்ட சுற்றுச்சூழல் போன்ற பலமுனைத் தாக்குதல்களையும் சமாளிக்க வேண்டிய போராட்டம் ஆகும்’ என்றார் அவர்.
காசநோய் ஒழிப்பில் - ஒருவருக்குக் காசநோய் இருப்பதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, முறையாகச் சிகிச்சையளிப்பது முக்கியமான பணி. ஆனால், இதுதான் முதன்மையான சவால். ஒருவருக்கு வாரக்கணக்கில் இருமல் இருந்தால், இரவில் காய்ச்சல் வந்தால், உடல் எடை குறைகிறது என்றால், உடனடியாகப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள முன்வர வேண்டும். ஆரம்ப நிலையில் காசநோயைக் கண்டறிந்தால் சிகிச்சை அளிப்பது எளிது. நோயும் முழுவதுமாகக் குணமாகும்.
ஆனால், காசநோய்க்கான அறிகுறிகளை அறியாமல் இருப்பவர்களும், அலட்சியப்படுத்துகிறவர்களும் கணிசமான அளவில் இருக்கின்றனர். சிகிச்சை தொடங்கிய சில வாரங்களில் இந்த அறிகுறிகள் மறைந்துவிடுவதால் சிகிச்சையைப் பாதியில் நிறுத்திக்கொள்கிறவர்களும் இருக்கின்றனர். இதனால் மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாக (MDR-TB, XDR-TB) அது உருமாறிவிடுகிறது. இது காசநோய் ஒழிப்புக்குப் பெரும் சவாலாகிறது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் காசநோயாளிகள் புதிதாகக் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். காசநோய்க்குச் சிகிச்சை பெற49.01% பேர் அரசு மருத்துவமனைகளுக்கும், 49.75% பேர் தனியார் மருத்துவமனைகளுக்கும் 1.24% பேர்மாற்று மருத்துவத்துக்கும் செல்கின்றனர். சாமானியர்களுக்குக் கைகொடுப்பது அரசு மருத்துவமனைகள் தான். காசநோய்க்குரிய நவீனப் பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகக் கிடைக்கின்றன.
காசநோய்க்குரிய அறிகுறிகள் காணப்படும் பயனாளிகளுக்கு சிபிநாட் (CBNATT), ட்ரூநாட் (TrueNat) ஆகிய பரிசோதனைகள் மூலம் காசநோய் உறுதிப்படுத்தப்படுகிறது. சமயங்களில் இவற்றைத் தாமதமாக மேற்கொள்ளும்போது, காசநோயைக் கண்டறிவதிலும் தாமதம் உண்டாகிறது. அடுத்தகட்டமாக, அவர்கள் தாலுகா மருத்துவமனைக்கோ, மாவட்ட மருத்துவமனைக்கோ செல்கின்றனர். அந்தக் கட்டத்தில் நோய் மோசமாகிவிடுகிறது.
படுக்கை வசதிகள் குறைவு: இவ்வாறு முற்றிய நிலையில் கண்டறியப்படும் காசநோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் உள்ளிட்ட 278 பெரிய அரசு மருத்துவமனைகள், 321 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் (30 படுக்கை வசதி கொண்டவை) இருந்தும், காசநோய் முற்றிய நிலையில் உள்ளவர்களில் 90% பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி அனுமதிக்கப்படும் 10% நோயாளிகள் படுக்கை வசதிக் குறைவு காரணமாகச் சில நாள்களில் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.
பெரும்பாலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே காசநோயாளிகள் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், அங்கும் காசநோயாளிகளுக்கான படுக்கைகளுக்குப் பற்றாக்குறை இருப்பதால், ஒரு வார காலத்துக்குள் வீட்டுக்குஅனுப்பப்படுகின்றனர். இவ்வகைக் காசநோயாளிகளில், சிகிச்சை முழுமை பெறாமல் ஆண்டுக்கு6,000 முதல் 8,000 பேர் வரை உயிரிழப்பதாகத் தெரிகிறது. நோயாளிகளின் முழு ஒத்துழைப்புடன் குறைந்தது இரண்டு மாத காலம் மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டால் இந்த உயிரிழப்புகள் தவிர்க்கப்படும்.
குறைக்கப்பட்ட நிதி: அடுத்ததாக, ஊட்டச்சத்துள்ள உணவின் மூலம் காசநோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று ‘ரேஷன்ஸ்’ (RATIONS – Reducing activation of tuberculosis by improvement of nutritional status) என்னும் ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. முக்கியமாக, காசநோயாளிகளுக்குப் புரதச் சத்துள்ள உணவு வகைகள் தேவை. முன்பு, தமிழ்நாட்டில் காசநோயாளிகளுக்கு என ‘சானடோரியங்கள்’ (நோயை நீக்குவதற்கான மருத்துவ இல்லங்கள்) இருந்தன. நல்ல காற்றோட்டமான இடங்களில் அவை அமைந்திருந்தன.
அங்கு காசநோயாளிகள் உள்நோயாளிகளாக மாதக்கணக்கில் சிகிச்சை பெற்றனர். அப்போது ஒரு நபருக்குத் தினமும் 500 கிராம் இறைச்சி வழங்கப்பட்டது. இந்த வகை விலங்குப் புரதங்கள் பயனாளிகளுக்குக் கூடுதல் நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கும். இப்போது உள்ளதுபோல் மேம்பட்ட மருந்துகள் அப்போது இல்லாதநிலையில்கூடக் காசநோயாளிகள் உயிர் பிழைத்தனர் என்றால், அதற்கு இறைச்சி ஒரு முக்கியமான காரணம்.
இப்போது சாமானியக் காசநோயாளிகளுக்கு சானடோரியங்களும் இல்லை; இறைச்சி உணவு வகைகளும் கிடைக்க வழியில்லை. பதிலாக, 2018இல்தொடங்கப்பட்ட ‘நிக்ஷய் போஷன் யோஜனா’ (Nikshay Poshan Yojana) என்னும் திட்டத்தின் மூலம் காசநோயாளிகளின் உணவுச் செலவுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் வீதம் 6 மாதங்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படுகிறது. இது அவர்களின் புரதத் தேவைக்குப் போதுமானதாக இல்லை. மேலும், நாட்டில் 9.55 லட்சம் காசநோயாளிகள் தன்னார்வ அமைப்புகளால் தத்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான உணவுச் செலவை இந்த அமைப்புகள் ஏற்றுக்கொள்கின்றன. ஆனாலும், அதிக உயிரிழப்புக்கு உள்ளாகிற, கடுமையான சத்துக்குறைவுள்ள (Severely malnourished) காசநோயாளிகளுக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை. இந்த நிலையில், காசநோய் ஒழிப்புக்கான மத்திய அரசின் நிதி உதவி ரூ.3,409.94 கோடியிலிருந்து ரூ.2,656.83 கோடியாகக் குறைக்கப்பட்டிருப்பது காசநோய் ஒழிப்பில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
என்ன செய்யலாம்? - காசநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கும், 6 மாதங்கள் சிகிச்சை பெறுவதற்கும் பொதுச் சமூகம் முன்வந்தால், காசநோயை ஒழிப்பதுசாத்தியமாகும். அதற்கான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை இன்னும் மேம்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ‘காசநோய் இறப்பில்லாத் திட்டம்’ செயல்பாட்டில் உள்ளது. அதற்கு இப்போதுள்ள சுகாதாரக் கட்டமைப்பை முழுவதுமாகப் பயன்படுத்த வேண்டும். முதியவர்கள், நீரிழிவு நோயாளிகள், சத்துக்குறைவு உள்ளவர்கள், காசநோயாளிகளோடு நெருக்கமாக உள்ளவர்கள் என நோய்த் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்களை முன்னிலைப்படுத்திப் பரிசோதிக்க வேண்டும்.
அத்துடன், முற்றிய நிலையில் உள்ள காசநோயாளிகளைத் தனிமைப்படுத்தி, காற்றோட்டமுள்ள இடங்களில் தங்கவைத்துத் தொடர் சிகிச்சை பெறவும் வழிசெய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க முடியும். இதற்கு, பழையபடி காசநோய் சானடோரியங்கள் தொடங்கப்படுவதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். அல்லது மாவட்ட அளவில் காசநோய்க்கு எனப் பிரத்யேக மருத்துவமனைகள் தொடங்கப்பட வேண்டும்.
தேவையான படுக்கை வசதிகள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட எல்லா மருத்துவக் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். மத்திய அரசு இதற்குத் தேவையான நிதியை மாநில அரசுகளுக்கு ஒதுக்கி உதவ வேண்டும். ஒவ்வொரு உயிரும் உன்னதமானது. அதைக் காக்க வேண்டிய கடமை அரசுகளுக்கு உள்ளது.
காசநோய்க்கான அறிகுறிகளை அறியாமல் இருப்பவர்களும், அலட்சியப்படுத்துகிறவர்களும் கணிசமான அளவில் இருக்கின்றனர். சிகிச்சை தொடங்கிய சில வாரங்களில் இந்த அறிகுறிகள் மறைந்துவிடுவதால் சிகிச்சையைப் பாதியில் நிறுத்திக்கொள்கிறவர்களும் இருக்கின்றனர். இதனால் மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாக (MDR-TB, XDR-TB) அது உருமாறிவிடுகிறது.
- தொடர்புக்கு: gganesan95@gmail.com
To Read in English: TB eradication programme must be upgraded
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago