‘பூமியிலே நம்மை வாழவைத்த வளரவைத்த / சாமிதனை முதன்முதலில் தொழுதிடுவோம் - ராம / சாமிதனை முதன்முதலில் தொழுதிடுவோம் - பெரியார் / ராமசாமி தனை முதன்முதலில் தொழுதிடுவோம்’ என்று கவியரங்க மேடையொன்றில் பாடினார் தலைவர் கலைஞர். அந்தளவுக்குத் தந்தை பெரியாரைப் போற்றினார். தந்தை பெரியாருக்கும் கலைஞருக்குமான நட்பு என்பது தந்தை - தனயன் நட்பு என்பதை இருவரது வரலாற்றையும் நன்கு அறிந்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
கலைஞர் ஐம்பது ஆண்டுகாலம் ஒரு இயக்கத்தின் தலைவராக; ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக; தனது கண்ணசைவில் இந்தியப் பிரதமர்களையும் - குடியரசுத் தலைவர்களையும் உருவாக்கும் ஆற்றல் பெற்றவராக இருந்தார். ஆனால், உங்களை இந்த நாடு எப்படி அடையாளம் காண வேண்டும் என்று கேட்டபோது, “மானமிகு சுயமரியாதைக்காரன்” என்று அவர் சொன்ன ஒற்றை வரியில்தான் கலைஞர் அவர்களின் 95 ஆண்டுகால வாழ்க்கை அடங்கியிருக்கிறது. அதற்குக் காரணம், தந்தை பெரியார் ஊட்டிய இனமான உணர்வு ஆகும். அதே வழியில்தான் பேரறிஞர் அண்ணா அவர்களும் கலைஞரை வளர்த்தெடுத்தார். “அய்யாவின் மாணவன் - அண்ணாவின் தம்பி” என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டு, கொள்கைத் தனயனாக வாழ்ந்தவர்தான் கலைஞர்.
குருதி கொடுத்தார் கலைஞர்: கலைஞர் ‘குடிஅரசு’ வார இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றிய சமயத்தில்தான் திராவிடர் கழகம் உருவானது. திராவிடர் கழகத்துக்குக் கொடியை உருவாக்க நடைபெற்ற ஆலோசனையில் கறுப்பு நிறத்தின் நடுவில் சிவப்பு இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. அப்போது கலைஞர் குண்டூசியை எடுத்துத் தன்னுடைய விரலில் குத்தி, வெளிப்பட்ட ரத்தத்தை அட்டையில் பூசப்பட்டிருந்த கறுப்பு நிறத்துக்கு நடுவில் வட்ட வடிவமாகப் பூசினார். அந்த வகையில், திராவிடர் கழகத்தினுடைய கொடிக்காக ரத்தம் தந்தவர் கலைஞர்.
பெரியார்தான் தமிழ்நாடு அரசு: “திமுக ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை” என்றார் பேரறிஞர் அண்ணா. “தமிழ்நாடு அரசுதான் பெரியார் - பெரியார்தான் தமிழ்நாடு அரசு” என்றார் கலைஞர். “முதலமைச்சர் கலைஞர் நமக்குக் கிடைத்த வாய்ப்பு, பொக்கிஷம், இதனை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட ஆட்சி மாறினால் இனி நம் தமிழ்ச் சமுதாயத்தின் கதி அதோகதி ஆகிவிடும்” என்று சொன்னவர் பெரியார். திமுக ஆட்சி மீதும், கலைஞர் மீதும் பழிச்சொற்கள் வீசப்படும்போதெல்லாம் முதல் எதிர்வினை பெரியாரிடம் இருந்துதான் வரும்.
வாழ்நாளெல்லாம் வழித்துணையாக - வழிகாட்டியாக - ஒளிவிளக்காகத் திகழ்ந்தவர்தான் தந்தை பெரியார். அத்தகைய உணர்வைத்தான் கலைஞரும் எங்களுக்கு ஊட்டினார்கள். தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தமிழினத் தலைவர் கலைஞர் ஆகிய மூவரும் மூன்று உருவம் தாங்கிய ஓருயிர் என்றே நாங்கள் கருதிச் செயல்பட்டு வருகிறோம்.
சமூகநீதி உறுதிமொழி: அத்தகைய உணர்வோடுதான் தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாளைச் சமூகநீதி நாளாக 2021ஆம் ஆண்டு ‘திராவிட மாடல்’ அரசு அறிவித்தது. அன்றைய தினம் அனைவரும் சமூகநீதி உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் உத்தரவிட்டேன். இது பெரியாருக்குக் கிடைத்த பெருமையல்ல - இந்த ஆட்சிக்குக் கிடைத்த பெருமை... எனக்குக் கிடைத்த பெருமை!
‘‘...சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!” என்ற உறுதிமொழியை 2021ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 17ஆம் நாள் அனைவரும் எடுத்துக்கொள்கிறார்கள். அதேபோல் பெரியாரின் சிந்தனைகளை மொழிபெயர்த்து உலகின் பல்வேறு மொழிகளில் அரசின் சார்பில் வெளியிட இருக்கிறோம்.
உலகின் பல்வேறு நாடுகளில் செயல்படும் சீர்திருத்த இயக்கங்கள், பகுத் தறிவு இயக்கங்கள், பெண்ணுரிமைச் செயல்பாட்டாளர்கள் அனைவரும் பெரியாரின் சிந்தனைகளைத் தேடித் தேடிப் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால், தந்தை பெரியார் - உலகத் தலைவர் என்பதை உலகம் இன்றைய தினம் ஏற்றுக் கொண்டுள்ளது.
கொள்கைகள் நிறைவேறுவதைப் பார்த்தார்: ‘தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கூட முடியாத நிலை இருக்கிறதே’ என்று 1956ஆம் ஆண்டு தன்னைத்தானே நொந்துகொண்டார் தந்தை பெரியார். 1968ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா. சாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்ட, வேலைவாய்ப்பு பெற முடியாத சூத்திர சாதிப் பிள்ளைகள் அனைவரும் படித்து முன்னேற வேண்டும், வேலைவாய்ப்புகளைக் கைப்பற்ற வேண்டும் என்று பெரியார் விரும்பினார். அந்த முன்னேற்றத்தைப் பார்த்தார்.
எந்தக் கொள்கைகளைப் பேசினாரோ, அக்கொள்கைகள் நடைமுறைப்படுத்தப் படுவதையும் கண்ணால் கண்டார் பெரியார். அதனால்தான் தந்தை பெரியார் மறைந்தபோது, “பெரியார் தமது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார், நாம் தொடர்வோம்” என்று கலைஞர் எழுதினார்கள். நாம் தொடர்வோம்!
- மு.க.ஸ்டாலின், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் | (‘என்றும் தமிழர் தலைவர்’ நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரையின் ஒரு பகுதி.)
| டிசம்பர் 24: பெரியாரின் 50ஆவது நினைவு நாள் |
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago