வரலாறு என்பது சம்பவங்களால் ஆனதுதான். ஆனால் சம்பவங்களல்ல; விளைவுகளே வரலாற்றின் உயிரைத் தக்கவைப்பவை. இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்கம் முதல் பாலஸ்தீனத்தில் நடந்த விவகாரங்களை இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பார்த்துக் கொண்டு வந்திருக்கிறோம். அட்டவணை போட்டு வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாள் சம்பவமாகக் கூட எடுத்துப் பார்க்கலாம், ஆராயலாம். எவ்வளவு நீட்டித்தாலும் இறுதியில் நமக்குக் கிடைக்கப் போகிற செய்தி ஒன்றுதான். இந்தப் பிரச்னை இப்போது தீராது. ஏன் தீராது?
இதற்கான காரணங்கள் முக்கியமானவை. இஸ்ரேல் போன்ற நாடுகளிடம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் எடுபடுவதில்லை என்பது பலமாகவே நிரூபிக்கப்பட்டுவிட்டாலும், இக்காலம் ஆயுதப் போராட்டங்களுக்குப் பெரும் பாலும் வெற்றி தருவதாக இல்லை. மனித குலம் பன்னெடுங்காலமாகப் பல்வேறு யுத்தங்களைக் கண்டு வந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நடைபெற்ற யுத்தங்களை எடுத்து எண்ணினாலே வெற்றிகளைக் காட்டிலும் இழப்புகளின் எண்ணிக்கை அதிகம் என்பது புரிந்துவிடும்.
ஒருபுறம் வளர்ந்த நாடுகள் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மக்களின் வருமானம் உயர்கிறது, வாழ்க்கைத் தரம் உயர்கிறது. புதிய முயற்சிகள், புதிய கண்டுபிடிப்புகள், புதிய சாதனைகள் என்று அடுத்தடுத்த கட்டம் நோக்கிப் பெரும்பான்மை சமூகம் நகர்ந்து கொண்டே இருக்கிறது.
மறுபுறம் போர்களாலும் உள்நாட்டுப் போர்களாலும் தீவிரவாதத்தினாலும் கிளர்ச்சிகளாலும், சர்வாதிகாரம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் பாதிக்கப்பட்ட தேசங்கள் தொடர்ந்து அந்தந்த நிலையிலேயே இருக்கக் கட்டாயப்படுத்தப்படுகின்றன. மிக நிச்சயமாக இது மேலாதிக்க நாடுகளின் கைங்கர்யம். அதில் சந்தேகம் வேண்டாம்.
எளிய உதாரணம், இராக்கை எடுத்துக் கொள்வோம். எண்ணெய் வளம்மிக்க நாடு. சதாம் ஹுசைன் ஒரு சர்வாதிகாரி. ஒழிக்கப்பட வேண்டியவர் என்று அமெரிக்கா நினைத்தது. ஒழித்துவிட்டது. நல்லது. இப்போது இராக், பக்கத்தில் இருக்கும் துபாய் அளவுக்குப் பணக்கார நாடாகிவிட்டதா? துபாய் வேண்டாம். எண்ணெய் வாசனையே இல்லாத நம் நாட்டளவுக்காவது வளமாகிவிட்டதா? சதாம் என்கிற ஒரே ஒரு சர்வாதிகாரி இருந்த இடத்தில் இன்று அல் காயிதா, ஐ.எஸ்., குர்து இயக்கங்கள், இதர பல சிறு தீவிரவாத இயக்கங்கள் முளைத்தெழுந்து நர்த்தனமாடிக் கொண்டிருக்கின்றன. வந்த காரியத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கர்கள் போய்விட்டார்கள். இராக் என்றைக்கு மீளும்? தெரியாது.
சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தைக் கவனியுங்கள். அந்த நாட்டு அதிபரின் அடாவடிகள் மக்களுக்குப் பிடிக்காமல் கிளர்ச்சி செய்யத் தொடங்கினார்கள். அவ்வளவுதான். இந்தப் பக்கம் அமெரிக்கா, அந்தப் பக்கம் ரஷ்யா என்று இரண்டு வல்லரசுகள் வந்து உட்கார்ந்து கட்சி பிரித்துக் கூறு போட்டுக் கந்தர கோலமாக்கிவிட்டார்கள். சிரிய அப்பத்தைப் பிய்த்துத் தின்ன வந்த தீவிரவாத இயக்கங்களை அமெரிக்காவும் ரஷ்யாவும் ஆளுக்குக் கொஞ்சமாகப் பிய்த்துத் தின்றதன் விளைவு, இன்றைக்கு அங்கே யாருக்கு யார் எதிரி என்று யாருக்கும் புரியாத அரசியல் குழப்பம் நிலவிக் கொண்டிருக்கிறது.
உக்ரைன். கணப் பொழுது சிந்திக்கலாம். ரஷ்யாவின் வல்லமைக்கு உக்ரைன் எல்லாம் ஒரு வார யுத்தத்துக்குத் தாங்கக் கூடிய தேசமா? ஆனால் இரண்டு வருடங்களாக இழுத்துக் கொண்டிருக்கிறது. உக்ரைனை ஆதரிக்கும் நாடுகள் ஒரு பக்கம். ரஷ்யாவை ஆதரிப்போர் மறுபக்கம். எப்படியாவது சமாதானத்தைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற கவலையில் லாரி லாரியாக, கப்பல் கப்பலாக, விமானம் விமானமாக ஆயுதங்களைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
சமாதானத்தை ஆயுதங்களைக் கொண்டு சாதிக்கலாம் என்று உக்ரைனில் நினைப்பவர்கள்தாம் பாலஸ்தீனர்களை ஆயுதங்களைக் கீழே போடச் சொல்லி, அமைதிப் பேச்சுக்கும் அழைக்கிறார்கள். இந்த இரட்டை வேடம் ஒத்துவராததால்தான் ஹமாஸ் இன்னும் ஆயுதங்களை மட்டும் நம்புகிறது. மொத்தமாக அழிந்தாலும் இறுதி வரை போராடிய திருப்தி மிஞ்சும் என்கிற எண்ணம்.
ஆனால், இதில் களப்பலியாவது மக்கள். அரசுகளைக் கணக்குகள் இயக்கலாம், இயக்கங்களை சித்தாந்தங்கள் இயக்கலாம். மக்களை இயக்குவது அவர்தம் பசி ஒன்றுதான். 2023 அக்டோபரில் தொடங்கிய ஹமாஸ் - இஸ்ரேல் யுத்தத்தில் இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காஸா முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சம்பந்தமேயில்லாத நூற்றுக்கணக்கான மேற்குக் கரை முஸ்லிம்களும் பலியாகியிருக்கிறார்கள்.
இஸ்ரேலை நிர்மூலம் செய்யக் கிளம்பிய ஹமாஸால், இந்த இரண்டு மாதங்களில் முடியவில்லை. ஹமாஸில் ஒருவர் மிச்சமில்லாமல் அழிப்போம் என்று சொன்ன இஸ்ரேலாலும் அது முடியவில்லை. ஆனால் 14 ஆயிரம் பொதுமக்கள் களப்பலி.
எதற்கு இந்த அவல வாழ்க்கை என்று தோன்றுமா? தோன்றாதா?
மனித குலம் தோன்றிய நாளாக, உலகெங்கும் விடுதலை இயக்கங்களின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கும் புள்ளி இதுதான். ஹமாஸுக்கு அது இப்போது உடனடியாக நேர வாய்ப்பில்லை. ஆனால் எப்போதும் நேர்ந்துவிடாதிருக்க, சுதாரித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.
(தொடரும்)
முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 57 | சுரங்கங்களை உருவாக்கிய பிதாமகர்கள் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago