சரி, விடுதலை தாகம்தான். போராட்டம்தான். சிரமங்கள் இருக்கும் தான். எல்லாவற்றுக்கும் அப்பால், காஸாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி 2007-ம் ஆண்டு முதல் ஹமாஸ் தான் ஆண்டு கொண்டிருக்கிறது. இன்று வரை இன்னொரு கட்சி என்ற ஒன்று கிடையாது. கேள்வி கேட்பார் யாரும் கிடையாது. விமர்சிக்க வழியில்லை. குறை சொல்ல புதிதாக ஒன்றுமில்லை. எல்லாம், எப்போதும் இருப்பவை மட்டுமே. ஆனாலும் ஆட்சி எப்படி? நிதிக் குறைபாட்டினை எப்படிச் சமாளிக்கிறார்கள்? மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? ஹமாஸின் ஆதிநாள் கனவான ‘சுதந்திர இஸ்லாமிய பாலஸ்தீனம்’ என்பதில் முதல் சொல் நீங்க லாக மற்றது நிறைவேறியதா?
இந்தக் கேள்விகளுக்குப் பளிச்சென்று ஒரு சொல்லில் பதில் பெற இயலாது. தனக்குப் பரிச்சயமில்லாத நாடாளுமன்ற நடைமுறைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொண்டு ஒருவாறு அவர்கள் சமாளித்துக் கொள்ள முடிந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், பாலஸ்தீன அத்தாரிட்டி ஒரு பக்கம், இஸ்ரேல் அரசாங்கம் ஒரு பக்கம், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் ஒரு பக்கம் என்று மூன்று பக்கத் தொடர் அழுத்தங்களைச் சமாளித்து, பொருளாதார ரீதியில் சிறிதுகூட மூச்சுவிட முடியாமல்தான் இருக்கிறது. ஹமாஸ் ஒரு விடுதலை இயக்கமாக மட்டும் இருந்த போது வந்து கொண்டிருந்த பணத்தில் பாதியளவு கூட ஆட்சியாளர்களான பிறகு அவர்களுக்கு வருவதில்லை. இந்தச் சுமை மொத்தமும் காஸாவில் வசிக்கும் பதினைந்து லட்சம் பேரின் தலையில்தான் விழும் என்பது புரிகிறதல்லவா?
மாதம் பிறந்தால் ஒழுங்காகச் சம்பளம் வந்துவிடும் சௌகரியம் மிக்க அரசு ஊழியர்களே எப்படி வேலை பார்ப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். சம்பளம் என்பது எப்போதாவது வருகிற ஒரு திருவிழா என்ற நிலைமையில் ஊழியர்கள் எவ்வாறு அங்கே பணியாற்றுவார்கள் என்பதை எண்ணிப்பார்த்தால் நிலவரம் புரியும்.
அது ஒரு பக்கம் இருக்க, தனியார் துறை என்ற ஒன்று காஸாவில் அநேகமாகக் கிடையாது. காஸாவின் குடிமக்களுக்கு இஸ்ரேல் மட்டுமல்ல பிரச்சினை. பாலஸ்தீன அத்தாரிடி எப்போது ஹமாஸின் எதிரியானதோ, அன்று முதல் அவர்களும் பிரச்சினையாகிப் போனார்கள். அதேசமயம் மேற்குக் கரைவாசிகளுக்கு ஹமாஸ் ஒருபோதும் பிரச்சினையாக இருந்ததில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அவர்கள் காஸாவிலிருந்து ஃபத்தாவினரையும் அவர்களது ஆதரவாளர்களையும் விரட்டியடித்தார்களே தவிர, மேற்குக் கரைக்குச் சென்று சண்டை செய்ததில்லை. மாறாக, ஃபத்தாவினர் காஸாவுக்குள் நிகழ்த்திய தாக்குதல்கள் அதிகம். அதில் மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.
அர்ஃபாத் நினைவேந்தல் விவகாரம் ஒன்றை முன்னர் பார்த்தோமே, அது ஓர் உதாரணம் மட்டும்தான். அம்மாதிரிப் பல சம்பவங்கள் நடந்துவிட்டன. ஒரு ஃபத்தா விவகாரம் அரங்கேறி முடியுமானால், ஒன்றிரண்டு வாரங்களில் இஸ்ரேல் தாக்க ஆரம்பிக்கும். இது 2007 முதல் தொடர்ந்து அங்கே நடந்து வருகிறது. ஏன் தாக்குதல், எதற்காகத் தாக்குதல் நடக்கிறது என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. மக்கள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். பதற்றத்திலேயே இருக்க வேண்டும். அதன்மூலம் ஹமாஸ் மீது சகிக்க முடியாத ஒவ்வாமை ஏற்பட்டு அவர்களே ஹமாஸைத் துரத்தியடிக்க வழி செய்ய வேண்டும். இது திட்டம்.
ஓரளவேனும் பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்தாலொழிய மக்கள் மத்தியில் நம்பிக்கையைத் தக்க வைக்கவே முடியாது என்பது ஹமாஸுக்குப் புரிந்தது. ஆனால், எல்லா பக்கங்களிலும் கதவுகள் அடைக்கப்பட்டு முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்ட ஒரு பிராந்தியம் என்ன செய்து பணத்தைக் கொண்டு வரும்? எங்கிருந்து கொண்டு வரும்? எப்படி அது உள்ளே வரும்? யார் கொடுப்பார்கள் என்பது அடுத்த கேள்விதான். அதைப் பிறகு பார்க்கலாம். முதலில் பணமும் பொருட்களும் காஸாவுக்குள் வருவதற்கு என்ன வழி?
வரைபடத்தில் காஸா இருக்கும் பகுதியைப் பாருங்கள். வடக்கு எல்லை முதல் தெற்கு எல்லை வரை இந்திரஜித் மாதிரி இஸ்ரேல் நிற்கிறது. இஸ்ரேல் நிற்கிறதென்றால், இஸ்ரேலிய ராணுவம் நிற்கிறது என்று பொருள். தெற்கே கொஞ்சம் எகிப்துடன் எல்லைப் பகிர்வு உண்டென்றாலும் அங்கும் இஸ்ரேலிய ராணுவம் உண்டு. போதாக் குறைக்கு எகிப்து ராணுவமும் உண்டு. மேற்கே விரிந்து பரந்த மத்திய தரைக் கடல். கடலெங்கும் இஸ்ரேலியக் கடற்படை ரோந்து.
இதை மீறித்தான் ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று யோசித்துக் கண்டுபிடித்ததுதான் சுரங்க வழிப் பாதைகள்.
(தொடரும்)
முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 54 | பள்ளிகளைத் தாக்கு @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago