பல காலமாக ஒரு விடுதலை இயக்கமாக மக்களுக்கு அறிமுகமாகி, மக்கள் நலப் பணிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று ஒரு நாள் ஆட்சியாளர்களாகப் புதிய அவதாரம் எடுக்கும்போது சில விஷயங்கள் சிக்கலாகும்.
முக்கியமாக, ஏற்கெனவே ‘ஆட்சி’ என்ற ஒன்று எல்லா பிராந்தியங்களிலும் இருக்கும். அரசு என்ற ஒன்று இயங்கிக்கொண்டிருக்கும். அதில் ஊழியர்கள் இருப்பார்கள். காஸாவைப் பொறுத்த அளவில் அரசு ஊழியர்களும் பெரும்பாலும் ஹமாஸ் ஆதரவாளர்களே என்றாலும் அங்கும் யாசிர் அர்ஃபாத் அனுதாபிகள் உண்டு. கணிசமாகவே உண்டு. அர்ஃபாத் காலமான பின்பும்ரகசியமாகத் தமது பி.எல்.ஓ. ஆதரவைவைத்துக்கொண்டு மேலுக்கு ஹமாஸுக்கு வாழ்த்து சொல்லிக்கொண்டு பிழைப்பைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவர்கள்.
என்னதான் ஃபத்தா ஆதரவாளர்களை ஹமாஸ் முற்றிலுமாக விரட்டியடித்துவிட்டே ஆட்சியமைத்தாலும் மக்கள் அதை 100 சதவீதம் அங்கீகரித்துவிட்டார்கள் என்றுசொல்ல முடியாது. ஒரு மாதிரி சகித்துக் கொண்டார்கள், அவ்வளவுதான்.
ஆனால் ஹமாஸ் அரசாங்கம் அமைந்தபோது துறை வாரியாக நபர்கள் நீக்கப்படுவதும், மாற்றப்படுவதும், குறைக்கப்படுவதும் கணிசமான அளவில்நடைபெற்றன. குறிப்பாகக் காவல் துறையில் சுமார் ஆறாயிரம் புதிய போலீஸார் சேர்க்கப்பட்டார்கள். (நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பதிவாகவில்லை) முறைப்படி தேர்வெழுதி காவல் பணிக்கு வந்தவர்கள் அவர்கள்.
என்ன சிக்கல் என்றால், அவர்கள் காவலர்கள் என்றாலும் ஹமாஸ் போராளிகளுக்குக் கட்டுப்பட்டே நடந்துகொள்ள வேண்டியிருந்தது. காவலர்களுக்குள்ளேயே யார் ஹமாஸ், யார் பொதுஜனம் என்று யாருக்கும் தெரியாது. ஒவ்வொருவரும் அடுத்தவரை உளவாளியாக நினைத்தாக வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.
இது காவல் துறையில் மட்டுமல்லாமல் அனைத்துத் துறைகளிலுமே ஓரளவு இருந்தது. குறிப்பாக நீதித்துறை. அங்கே சிக்கல் இன்னுமே பெரிதாக இருந்தது. ஹமாஸ் ஒரு மத அடிப்படைவாத இயக்கம். அதை அவர்கள் பகிரங்கமாகவே ஒப்புக்கொள்வார்கள். ஃபத்தாவைப் போல மதச் சார்பின்மையெல்லாம் பேச மாட்டார்கள்.
அதே சமயம் ஏற்கெனவே உள்ள நீதித் துறைச் சட்டங்களை முற்றிலுமாக மாற்றி அமைக்கவும் அவர்கள் விரும்பவில்லை. ஆனால் ஷரியத் சட்டங்களின் தாக்கம் தீர்ப்புகளில் இருந்தாக வேண்டும் என்று நினைத்தார்கள். என்ன செய்யலாம்?
நீதிபதி இருக்கட்டும். விசாரணைகள் நடைபெற்று, தீர்ப்பு வழங்கட்டும். ஆனால் அனைத்து நீதிமன்றங்களையும் மேற்பார்வை செய்ய ஒரு குழு இருக்கலாம் என்று முடிவு செய்தார்கள். கவனியுங்கள். குழுதான். அது மதத் தலைவர்களால் ஆன குழு என்று அறிவிக்கப்படவில்லை.
இவற்றுக்கெல்லாம் அப்பால் சிலமக்கள் நலப் பணிகள் ஹமாஸால் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றுள் சில உலகில் வேறெங்குமே நடைமுறையில் இல்லாதவை.
உதாரணமாக, நகராட்சி, மாநகராட்சி வரி வசூல் விவகாரம். வீட்டுவரி, குடிநீர் வரி, சாலை வரி, இதர வரிகள் எதுவானாலும் வசூலாகும் தொகையில் 90 சதவீதம் அந்தந்த நகராட்சிகளுக்கே செல்லும். 10 சதவீதம் மட்டுமே மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
இதன் மூலம் பிராந்திய வாரியாக உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சினைகள் அனைத்தும் நிதிக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.
ஆனால் வரித் தொகை மத்திய அரசுக்குப் பெரிய வருமானமாக இல்லாமல் போனதால் அவர்களால் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் ஆனது. சம்பளச் சுமையைக் குறைப்பதற்காக ஆள் குறைப்பு செய்யப் போக, அது பல இனங்களில் வேலைச் சுணக்கத்தில் சென்று முடிந்தது.
பெருமளவு பாதிக்கப்பட்டது, கல்வித்துறை. பொதுவாகவே பாலஸ்தீனப் பிள்ளைகளின் கல்வி கஷ்ட காண்டத்தில் இருப்பதுதான். காஸாவில் அது இன்னமும் மோசம். உலகின் மிக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பிராந்தியங்களுள் ஒன்று காஸா. அங்குள்ள குழந்தைகளின் தேவைகளுக்கு ஏற்றஅளவில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் கிடையாது. சரி, இருக்கிற பள்ளிகளிலாவது சேர்ந்து படிக்க முடியாதா என்றால் அதுவும் சிரமம். இஸ்ரேலிய நெருக்கடிகள், தடுப்புச் சுவர்கள், செக் போஸ்ட் அட்டகாசங்களைக் கடந்து பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்குச் செல்வதே பெரிய காரியம்.
ஹமாஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின்பு காஸா பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதல்கள் மிக அதிகம். குறிப்பாகப் பள்ளிக்கூடங்களையும் பாலர்பள்ளிகளையும் குறி வைத்தே தாக்குதல்கள் நடக்கும் என்று UNICEF அறிக்கைஒன்று சொல்கிறது.
2008-ம் ஆண்டு மட்டும் 245 பள்ளிக்கூடங்களில் அவர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஹமாஸ் வீரர்கள் பள்ளிகளில்தான் பதுங்குகிறார்கள் என்பது அவர்கள் தரப்பு. இது மாணவர்கள் படிப்பைவிட்டு அறவே விலகிச் செல்வதற்கு மிக முக்கியக் காரணமாவதை மறுக்கவே முடியாது.
(தொடரும்)
முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 53 | காஸாவின் ராஜாக்கள் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago