கணை ஏவு காலம் 49 | ஒரே பகுதிக்குள் 3 விதமான ஆட்சி @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

By பா.ராகவன்

சிக்கலை இதுவரை நெருங்கிப் பார்த்தோம். இனி சிறிது உடைத்துப் பார்ப்போம். ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக இருக்கும் 193-ல் 139 நாடுகள் சுதந்திர பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்று சொல்கின்றன. இவற்றுள் 138 நாடுகள் பாலஸ்தீன அத்தாரிட்டியுடன் ராஜாங்க உறவு வைத்துள்ளன. ஒரு வாக்கெடுப்பு என்று வந்தால் மிக நிச்சயமாகப் பெரும்பான்மை, பாலஸ்தீனத்தின் பக்கம்தான் விழும். அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் இறுதி வரை எதிர்க்குமே தவிர, வேறு தடைகள் இராது. ஆனால், ஆதரிக்கும் நாடுகள் ஒரு மனதாக முடிவு செய்து அமெரிக்காவைக் கூட சரிக்கட்ட முடியும். முடியாதது என்பதில்லை. ஆனால் ஏன் இதுவரை நடக்கவில்லை?

இக்கணம் வரை மம்மூத் அப்பாஸ் உலக நாடுகளின் அங்கீகாரத்துக்காகதான் போராடிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாட்டுத் தலைவரையும் முறை வைத்துக் கொண்டு சந்திக்கிறார்.
பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இன்றில்லாவிடினும் என்றேனும் சுதந்திர பாலஸ்தீனம் உருவாகி விடும் என்றுதான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

என்ன பிரச்சினை என்றால் 2007-ம் ஆண்டுக்கு முன்னர் சுதந்திர பாலஸ்தீனம் உருவானால் போதும் என்பது தான் நிலைமை. இன்றைக்கு அப்படியல்ல. சுதந்திர பாலஸ்தீனம் உருவானால் அடுத்தக் கணமே காஸா - மேற்குக் கரைப் பிரிவினைச் சண்டை வெடித்துப் போராகும்.

சொல்லும் போதே நெருடுகிறதல்லவா? ஆனால் சூழ்நிலை அப்படித்தான் ஆகிவிட்டது. தேர்தலில் வென்று ஹமாஸ் ஆட்சி பொறுப்பை ஏற்று, ஃபத்தா மற்றும் அதன் தோழமை இயக்கங்களுடன் பகை பெரிதாகி, காஸாவிலிருந்து ஃபத்தாவை முற்று முழுவதுமாக ஹமாஸ் வெளியேற்றி, மம்மூத் அப்பாஸ் ஹமாஸின் ஆட்சியைக் கலைத்த பின்பு இன்று வரை அவர்களால் ஒன்று சேர முடியவில்லை. மம்மூத் அப்பாஸ் ஆளும் பாலஸ்தீனம் வேறு; யாஹியா சின்வார் ஆளும் காஸா வேறு.

காஸாவும் பாலஸ்தீனத்தில்தான் உள்ளது என்று நாம் உணர்ச்சிவசப்பட்டு சொல்லலாம். அது உண்மையே என்றாலும் ஒத்துப்போக வாய்ப்பே இல்லாத இரண்டு வெவ்வேறு அரசியல் முனைகளாகிவிட்டன. தனித்துதான் நிற்பார்கள். பிரிந்துதான் போவார்கள். பாகிஸ்தானும் பங்களாதேஷும் பிரிந்தது போன்றதுதான் இது. ஒரே வித்தியாசம், பாகிஸ்தான் பிரிந்து சுதந்திர நாடான பின்பு பங்களாதேஷ் அதிலிருந்து பிரிந்தது. பாலஸ்தீனம் இன்னும் சுதந்திர நாடாகவில்லை. முன்னதாகவே பிரிந்துவிட்டார்கள்! இதனால்தான், பாலஸ்தீனத்தின் சுதந்திரம் என்பது மேலும் சிக்கலுக்குரியதாகிறது.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். பாலஸ்தீன அத்தாரிட்டி என்று மம்மூத் அப்பாஸ் ஆளும் நிலப்பரப்புக்குள்ளும் சிக்கல்களுக்குப் பஞ்சமில்லை. சொல்லப் போனால் காஸா விவகாரமாவது வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று முடிந்துவிடும். ஜோர்டான் நதியின் மேற்குக் கரை என்று பொது வாகக் குறிப்பிடப்படும் இன்றைய பாலஸ்தீனத்துக்குள் மூன்று விதமான ஆட்சிகள் நடைபெறுகின்றன. இது ஓஸ்லோ ஒப்பந்தத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடு.

இதன்படி மொத்த மேற்குக் கரை நிலப்பரப்பின் பதினெட்டு சதவீதம் பகுதியை (இதைப் பிரிவு ‘அ’ என்று வைத்துக் கொள்வோம்) பாலஸ்தீன அத்தாரிட்டி ஆட்சி செய்கிறது. மம்மூத் அப்பாஸ்தான் மூலவர். சிக்கலின்றி அவரது உத்தரவுப்படியே இங்கு எல்லாம் நடக்கும்.

இன்னொரு இருபத்திரண்டு சதவீத நிலப்பரப்பை நாம் பிரிவு ‘ஆ’ என்று கொள்வோமானால், இங்கே ஆட்சி செய்வது என்னவோ மம்மூத் அப்பாஸ்தான். ஆனால் பாதுகாப்புத் துறையில் இஸ்ரேலுக்கு ஐம்பது சதவீதப் பங்கு உண்டு. அதாவது பாலஸ்தீனத்துப் போலீசாரும் இருப்பார்கள், இஸ்ரேலிய போலீசாரும் இருப்பார்கள்.

பாலஸ்தீனத்து ராணுவமும் இருக்கும், இஸ்ரேலிய ராணுவமும் இருக்கும். அப்படியென்றால் யார் கை ஓங்கியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை அல்லவா?

இருக்கட்டும். மூன்றாவது பிராந்தி யத்தையும் பார்த்துவிடுவோம். இது பிரிவு ‘இ’. கிழக்கு ஜெருசலேம் நீங்கலான அறுபது சதவீத மேற்குக் கரை நிலப்பரப்பினை உள்ளடக்கிய, அளவில் பெரிய பகுதி இது. பெயர் என்னவோ பாலஸ்தீன நிலப்ரப்புதான். ஆனால், ஆள்வது இஸ்ரேல் அரசாங்கம். இங்கே மம்மூத் அப்பாஸுக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது. கிட்டத்தட்ட ஒன்றரை முதல் ஒன்றே முக்கால் லட்சம் முஸ்லிம்கள் இங்கே வசிக்கிறார்கள் என்பதால் அவர்களுக்குக் கல்வி அளிப்பதும் போதிய மருத்துவ வசதிகள் அளிப்பதும் மட்டும் பாலஸ்தீன அத்தாரிட்டியின் பொறுப்பு. இதர அனைத்துக் கட்டுப்பாடுகளும் இஸ்ரேலின் வசமே உள்ளன.

இந்த ‘இ’ பிரிவு நிலங்களில் இன்னொரு விசேடம் உண்டு. சொல்லப் போனால் பாலஸ்தீன அத்தாரிட்டி என்ற கட்டமைப்புக்கே ஓர் அர்த்தமில்லாமல் போகச் செய்வது இந்தப் பிராந்தியமும் அதன் அரசியலும்தான். அதைச் சற்று விரிவாகப் பார்த்துவிடுவோம்.

(தொடரும்)

முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 48 | சுவர் அரசியல் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்