கணை ஏவு காலம் 43 | லாபம் பார்ப்பது யுத்த கணக்கு @ இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

By பா.ராகவன்

நவீன யுகத்தில் போர் என்பது தொண்ணூற்று ஒன்பதே முக்கால் சதவீதம் பொருளாதாரக் காரணங்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிறது. நாடு பிடிக்கும் வேட்கைக்கெல்லாம் இன்று மதிப்பில்லை. ஒரு யுத்தம் செய்தால் அதன் நிகர லாபம் என்ன? அவ்வளவுதான் கணக்கு. மற்றபடி இன்னொரு பிராந்தியத்தை இணைத்துக் கொண்டு அதையும் சேர்த்து ஆளும் ஆசையெல்லாம் யாருக்கும் இல்லை. அது அமெரிக்காவோ, ரஷ்யாவோ, இஸ்ரேலோ - எந்த நாடானாலும் இதுதான், இவ்வளவுதான்.

அப்படியானால் இஸ்ரேல் எதற்காக காஸாவை ஆக்கிரமிக்க நினைக்கிறது? ஒருவேளை இஸ்ரேல் ஹமாஸை மொத்தமாக அழித்தே விடுகிறார்கள். அதன்பிறகு? பாலஸ்தீனர்களுக்கு அள்ளிக்கொடுத்து அரவணைத்துக் கொள்வார்களா?

அப்படிக் கிடையாது. இது வேறு கணக்கு.

இதர மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு உள்ளது போல இஸ்ரேலுக்கு எண்ணெய் வயல்கள் கிடையாது என்பது நமக்குத் தெரியும். ஆனால் ஓரளவு நல்ல இயற்கை எரிவாயு வளம் அவர்களிடம் இருக்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் இஸ்ரேல் தனதுகடற்பகுதிகளில் இருந்து சொந்தமாகஇயற்கை எரிவாயு உற்பத்தியைத் தொடங்கியது. பெருமளவு உள்நாட்டு மின்சாரத் தேவைகளுக்கும் ஓரளவுதொழில் துறை சார்ந்த தேவைகளுக்கும் அது பயன்படுத்தப்பட்டு வருகிறது.தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எண்ணெய் இல்லாவிட்டாலும் இதுவாவது கிடைக்கிறதே என்று ஆய்வுகளை முடுக்கிவிட்டார்கள். விளைவு, 2009-ம்ஆண்டுக்குப் பிறகு இன்னும் கணிசமான இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

இதனாலெல்லாம் மிகப் பெரிய லாபங்கள் இல்லை என்றாலும் உள்நாட்டுத் தேவைகளுக்காக இறக்குமதி செய்யும் எரிவாயுவின் அளவு கணிசமாகக் குறைந்து விடுகிறது. லாபம்என்பது செலவின் சதவீதம் குறைவதும்தான் அல்லவா?

இது இவ்வாறிருக்க, அதே 2000-வது ஆண்டின் தொடக்கத்தில் காஸா கடற்பகுதியிலும் இயற்கை எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டது. முதலில் பாலஸ்தீனர்களால் அதை நம்பவே முடியவில்லை. ஆனால் வல்லுநர்கள் அதன் இருப்பை உறுதி செய்ததும் பாலஸ்தீன அத்தாரிடி புல்லரித்துப் போனது. இது எதிர்பாராத அதிர்ஷ்டம் அல்லவா? ஒவ்வொரு துண்டுரொட்டிக்கும் யாரிடமாவது கையேந்திக் கொண்டிருக்கும் காலம் ஒரு முடிவுக்கு வந்து, இந்த எரிவாயுசௌகரியத்தால் ஓரளவேனும் பாலஸ்தீனர்களின் பசி தீர்க்க முடிந்தால் எவ்வளவு பெரிய விஷயம்!

ஆனால், பாலஸ்தீன அத்தாரிடி என்பது இஸ்ரேலிய அரசை போன்றதல்ல. நினைத்த மாத்திரத்தில் ஒருபெரும் செலவு செய்து எரிவாயுவைஎடுக்கவோ, அதைப் பயன்பாட்டுக்குரியதாக மாற்றவோ, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ அதனால் முடியாது. மிக நிச்சயமாக இஸ்ரேல் உதவினாலொழிய அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. குட்டிக்கரணம் அடித்தாவது இஸ்ரேலை அதற்குச் சம்மதிக்க வைத்துவிட முடியுமானால் இரு தரப்பு உறவு வலுப்பெறவும் அது சரியான வழியாக இருக்கும் என்று பாலஸ்தீன அத்தாரிடி நினைத்தது.

British Gas என்னும் பிரிட்டனைச் சேர்ந்த எரிவாயு கண்டெடுப்பு நிறுவனத்துடன் பாலஸ்தீன அத்தாரிடி ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு எவ்வளவு இருக்கிறது என்று கண்டறிந்து சொல்ல அனுப்பி வைத்தது. அவர்களது பரிசோதனை முடிவுகளின்படி, காஸா கடற்பகுதியில் 35 பில்லியன் க்யூபிக் மீட்டர் அளவுக்கு வாயுப் புதையல் இருப்பது தெரிய வந்தது. முப்பத்தைந்து பில்லியன் க்யூபிக் மீட்டர் என்றால் குத்துமதிப்பாக எவ்வளவு மதிப்பு என்றெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் கண்டறியப்பட்ட இந்த அளவு இஸ்ரேலிய கடற்பகுதியில் அவர்களுக்குக் கிடைத்த எரிவாயுவின் அளவைக் காட்டிலும் கணிசம். அதுதான் இங்கே முக்கியம்.

பார்த்தார், அன்றைய இஸ்ரேலியப் பிரதமர் இஹுத் பாரக். பாலஸ்தீனம் ஒரு சுதந்திர தேசமே இல்லை. இஸ்ரேலின் குடைக்குள் ஏதோ சிறிது தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும் ஒருபிராந்தியம். அவர்கள் தனியே எரிவாயு எடுத்து சம்பாதிப்பதெல்லாம் அடுக்குமா? அதுவும் இஸ்ரேல் எரிவாயுவின் மூலமாகப் பெறுவதைக் காட்டிலும் அதிகமாகப் பெறுவார்கள் என்றால் அதை எப்படி அனுமதிக்க முடியும்?

எனவே, இரண்டு காரியங்கள் உடனடியாகச் செய்யப்பட்டன. முதலாவது, எரிவாயு மூலம் பணம் சம்பாதித்து பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு அதைத் திருப்பிவிடுவதை அனுமதிக்க முடியாது என்று ஓர் அறிக்கை.  

அதனை வெளியிட்ட கையோடு இஸ்ரேலிய கடற்படையின் ஒரு பெரும் பிரிவை காஸா கடற்பகுதியில் கொண்டு நிறுத்தினார். பாதுகாப்புக் காரணங்கள் சொல்லப்பட்டு, எரிவாயு ஆராய்ச்சிகள் அப்படியே நிறுத்தப்பட்டன.

யாசிர் அர்ஃபாத்துக்கோ, மம்மூத் அப்பாஸுக்கோ மற்றவர்களுக்கோ என்ன செய்வதென்று புரியவில்லை.

(தொடரும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE