உலகக் கோப்பையில் இந்தியா சரிந்தது ஏன்?

By டி. கார்த்திக்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இறுதிப் போட்டிவரை முன்னேறிய இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றத் தவறியிருக்கிறது. தொடர் முழுவதும் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி, இறுதிப் போட்டியில் மட்டும் தோல்வி அடைந்தது துரதிர்ஷ்டம் அல்ல. ‘நாக் அவுட்’ என்றழைக்கப்படும் வாழ்வா, சாவா போட்டியில் திட்டமிடலில் கோட்டைவிட்டால், எந்த அணிக்குமே தோல்விதான் கிடைக்கும். அதோடு இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு இருந்த புற அழுத்தங்களும் இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவுவதற்குக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

உதாரண உலகக் கோப்பைகள்: ஐம்பது ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி இதுவரை இரண்டு முறை வென்றுள்ளது. 1983இல் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையை அப்போது வலுவற்றதாகக் கருதப்பட்ட இந்திய அணி யாரும் எதிர்பாராத விதமாக வென்றெடுத்தது. அது கபில் தேவ் என்கிறதலைமைக்குக் கிடைத்த மகத்தான வெற்றி. தொடக்கத்திலிருந்தே அணியின் தன்னம்பிக்கையை அவர் கட்டமைத்த விதமும் வழிகாட்டியதும் வலுவான மேற்கிந்தியத் தீவுகளைச் சாய்க்கத் துணைநின்றன. 2011இல் இந்திய அணி மிக வலுவானதாக இருந்தாலும் அப்போதைய அணித் தலைவர் எம்.எஸ்.தோனியின் கச்சிதமான திட்டமிடல்தான், இந்தியா கோப்பையை வென்றதற்கு முக்கியக் காரணம்.

இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங்குக்கு முன்பாக தோனி களமிறங்கியது ஓரு சிறந்த மாற்று உத்தி. 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெற்ற அகமதாபாத் மைதானத்தில்தான் 2011 உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொண்டது. சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் அந்தப் போட்டியில் முதல் ஓவரை வீசி முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த இரண்டு உலகக் கோப்பைகளில் இருந்த இதுபோன்ற மாறுபட்ட உத்திகளை, ஆச்சரியத் தருணங்களை 2023 உலகக் கோப்பையில் காண முடியவில்லை.

திட்டமிடல் குறைபாடுகள்: 2023 உலகக் கோப்பைத் தொடரில் ஹர்திக் பாண்ட்யா வெளியேறிய பிறகு, முகமது ஷமியையும் சூர்யகுமார் யாதவையும் விளையாட வைத்தது; ஷர்துல் தாக்குரை வெளியே உட்கார வைத்தது மட்டுமே அணியில் நிகழ்ந்த மாற்றங்கள். ஐந்தாவது போட்டியிலிருந்து இறுதிப் போட்டிவரை அணி மாறவே இல்லை. சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் மட்டும் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டார் - அந்த உத்தி ஏன் இறுதிப் போட்டியில் கையாளப்படவில்லை? தொடர்ச்சியாக வென்றுவரும் ஓர் அணி அப்படியே தொடர வேண்டும் என்று அணி நிர்வாகம் நினைத்திருக்கலாம்.

ஆனால், எதிரணி யார் என்பதைப் பொறுத்தும், ஆடுகளத்தைப் பொறுத்தும் அந்த முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். ஏழு முறை உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்ற, ஐந்து முறை கோப்பையைவென்றுள்ள ஆஸ்திரேலியா போன்ற ஓர் உறுதியான அணிக்கு எதிராக வழக்கமான உத்திகள் கைகொடுக்காது. முதலில் பேட்டிங் செய்தால் என்ன செய்ய வேண்டும், இரண்டாவதாக பேட்டிங் செய்தால் என்ன செய்ய வேண்டும், பேட்டிங் வரிசையில் மாற்றம் தேவையா, ஐந்து பந்துவீச்சாளர்கள் போதுமா, பகுதி நேரப் பந்துவீச்சாளர்கள் தேவைப்படுவார்களா... இப்படியெல்லாம் அணி நிர்வாகம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு விடை கண்டிருக்க வேண்டும்.

இதற்கெல்லாம் முன்னோட்டமாக, சுற்றுப் போட்டிகளிலேயே சில மாற்றங்களைப் பரிசோதித்துப் பார்த்திருக்க வேண்டும். நெதர்லாந்துக்கு எதிரான சுற்றுப் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, சூர்யகுமார் போன்றோர் பந்துவீசிப் பார்த்தது ஒரு நல்ல பரிசோதனை. ஆனால், இறுதிப் போட்டியில் வழக்கமான பந்துவீச்சாளர்கள், டிராவிஸ் ஹெட் - லபுஷேன் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தடுமாறியபோது புதிதாக ஒருவரைக்கூட பந்துவீச வைக்காதது ஏன்? கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அன்றைய நாளில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ, அவர்களே வெற்றி பெற முடியும். தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்ற சாதனை எல்லாம் இறுதிப் போட்டி அன்று எந்தத் தாக்கத்தையும் இந்திய அணியிடம் ஏற்படுத்தவில்லை. சுற்றுப் போட்டிகளில் இரண்டு தோல்விகளைச் சந்தித்திருந்த ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் இந்தியாவைவிட பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து வகைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டது. கோப்பையையும் கைப்பற்றியது.

புற அழுத்தங்கள்: இந்த முறை போல, இதற்கு முன்னர்நடந்த உலகக் கோப்பைத் தொடர்களில் இந்திய அணிக்கு இத்தனை அழுத்தங்கள் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். குறிப்பாக 2019 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்குஇந்தியா, நியூசிலாந்தைப் பழி தீர்த்தது போல, 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பெற்ற தோல்விக்குப் பழி தீர்க்க வேண்டும், பல நாடுகள் பங்கேற்கும் சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தொடரை 10 ஆண்டுகளாக வெல்லாத குறையைப் போக்க வேண்டும் என்பன போன்ற அழுத்தங்கள் இந்த முறை இந்திய அணிக்கு மிகையாகவே ஏற்படுத்தப்பட்டன. கோப்பை இந்திய அணிக்குதான் என்ற வகையில் நடைபெற்ற பிரச்சாரங்களும் பேச்சுக்களும் செயல்பாடுகளும் அந்த அழுத்தங்களை மேலும் அதிகரித்தன.

இந்த முறை, தொடக்க விழாவே நடத்தப்படவில்லை. ஆனால், இறுதிப் போட்டிக்கு விமானப் படை சாகசம் உள்பட பிரம்மாண்டமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இவை எல்லாமே இந்திய மக்கள் வெற்றிக் கொண்டாட்டமனநிலைக்கு வந்துவிட்டதைதான், வீரர்களுக்கு மறைமுகமாக உணர்த்தியிருக்கும். இயல்புக்கு மாறான இதுபோன்ற புற அழுத்தங்கள் விளையாட்டில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தவே வாய்ப்பு அதிகம்.

முடிவைத் தீர்மானித்த பிட்ச்: இந்தியா இறுதிப் போட்டியில் தோற்றதற்கு பிட்ச் தன்மையும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இரவு 7 மணிக்குப் பிறகு பனிப்பொழிவின் காரணமாகப் பந்துவீச்சு எடுபடவில்லை என்று பயிற்சியாளர் ராகுல் திராவிட் சொல்கிறார். அதே நேரம் லீக் சுற்றில் அதிக போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றது. அந்தப் போட்டிகளில் பிட்ச், முதலில் பேட்டிங் செய்த அணி அதிக ரன் குவிப்பதாகவும் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி ரன்களைக் குவிக்கத் தடுமாறுவதாகவும் அமைந்திருந்ததாகவே புரிந்துகொள்ள முடிகிறது. நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலம் என்பதால் பிட்சின் தன்மை போட்டியின் நடுவே இப்படி மாற்றமடைவது தவிர்க்க முடியாதது என்று கூறப்படுகிறது.

ஆனால், இது ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிக்க அனுமதிப்பது சரியல்ல. உலகக் கோப்பை நடத்துவதற்கான கால அட்டவணையை முடிவு செய்வதற்கு முன் இதையும் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்க வேண்டுமல்லவா. உணர்ச்சியும் உத்திகளும்: உலகில் எந்த நாட்டிலுமே இல்லாத அளவுக்குக் கிரிக்கெட் பற்று அதிகமாக உள்ள நாடு இந்தியா. அதுவும் உலகக் கோப்பைத் தொடர் என்றால், அதைப் போருக்கு நிகராகக் கற்பனை செய்துகொள்ளும் ரசிகர்கள் இங்கு அதிகம். அதனால்தான் மற்ற விளையாட்டுகளைவிட கிரிக்கெட் இங்கு ஊதிப் பெருக்கப்பட்ட பலூனாக இருக்கிறது. உலகக் கோப்பை போன்ற தொடர்களில் அதில் ஓட்டை விழுந்தால், இங்கு இதயங்கள் நொறுங்கிவிடுகின்றன.

இறுதிப் போட்டித் தோல்வியை இந்தியர்களால் ஜீரணிக்க முடியாமல் போனதற்கு அதுவே காரணம்.இதையெல்லாம் மனதில் வைத்துத்தான், ‘அகமதாபாத்தில் ரசிகர்களை அமைதியில் ஆழ்த்துவதே எங்கள்இலக்கு’ என்று ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் சொல்லியிருந்தார். சொன்னதைச் செய்தும் காட்டிவிட்டார். உள்நாட்டில் செல்வாக்குப் பெற்ற விளையாட்டில் ரசிகர்களை அமைதியாக்குவதும் ஓர் உத்திதான். உணர்ச்சிகரமான அம்சங்கள் எதுவும் விளையாட்டில் வெற்றி தேடித் தராது. விளையாட்டு உத்திகள்தான் வெற்றியைத் தேடி தரும். 2023 உலகக் கோப்பை அதைத்தான் நிரூபித்திருக்கிறது.

- தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in

To Read in English: Why did India fail to win ICC World Cup?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்