பாலஸ்தீனத் தன்னாட்சிப் பிராந்தியத்துக்கு ஒரு தேர்தல் என்ற போது இஸ்ரேல் யோசிக்கவில்லை. அந்தத் தேர்தலில் ஹமாஸ் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்ட போது அமெரிக்கா யோசிக்கவில்லை. ஒருவேளை ஹமாஸ் வென்றுவிட்டால் என்ன ஆகும் என்று ஐரோப்பிய தேசங்கள் எதுவுமே சிந்திக்க வில்லை. ஆனால் அதுதான் நடந்தது.
இப்போது ஹமாஸை எந்த இடத்தில் நிறுத்தி வைத்துப் பார்ப்பது? நிற்க வைத்துப் பார்ப்பதா, உட்காரச் சொல்லிப் பார்ப்பதா? முந்தைய நாள் வரை ஹமாஸ் என்றால் அவர்களுக்குத் தீவிரவாத இயக்கம். பயங்கரவாத இயக்கம். தடை செய்யப்பட்ட, அதிமோசமான இயக்கம். அதன் தலைவர்கள் ஒவ்வொருவர் மீதும் இண்டு இடுக்கு விடாமல் ஏராளமான வழக்குகளைப் போட்டு வைத்திருந்தார்கள். ஆனால், இப்போது அதே தலைவர்களை மக்களின் பிரதிநிதியாக ஏற்று அமர வைத்துப் பேசியாக வேண்டும். கைகுலுக்க வேண்டும். மாண்புமிகு காலெத் மஷல் அவர்களே என்று இஸ்ரேலியப் பிரதமர் அழைப்பாரா? அமெரிக்க புஷ்தான் அன்பொழுகப் பேசுவாரா?
எதற்குமே வாய்ப்பில்லை என்று சற்றும் யோசிக்காமல் கூடி முடிவு செய்தார்கள். அந்தப் பக்கம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்டபல மேலை நாடுகள் நிதி உதவிகளை நிறுத்துவதாக அறிவித்த சூட்டில், இஸ்ரேல்தன் பங்குக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. பாலஸ்தீன அத்தாரிடிக்கு அது தந்தாகவேண்டிய வரிப் பணப் பங்கைத் (ஐம்பத்தைந்து மில்லியன் அமெரிக்க டாலர்கள்) தர முடியாது என்று சொன்னார்கள்.
காரணம்? ஹமாஸை நம்புவதற்கில்லை. எப்படியோதேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்து விட்டார் களே தவிர, அடிப்படையில் அவர்கள் தீவிரவாதிகள். மக்கள் பணிக்கென வழங்கப்படும் வரிப் பணத்தில் அவர்கள் ஆயுதங்களைத்தான் வாங்குவார்கள். அதுவும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கு. காசு கொடுத்து பிரச்சினையை விலைக்கு வாங்க நாங்கள் தயாரில்லை.
» ODI WC 2023 | நியூஸி.யை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்தியா: ஷமி அசத்தல் பந்துவீச்சு!
» உலகக் கோப்பை இறுதியில் இந்தியா: நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஹமாஸ் இந்த அடாவடித் தனத்தை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் போர் நிறுத்தம் அறிவித்திருந்தார்கள். முன்பைப் போலத் தற்கொலைத் தாக்குதல்களில் அப்போது ஈடுபடவில்லை. இஸ்ரேலில் நிகழ்த்திக்கொண்டிருந்த குண்டு வெடிப்புத் திருவிழாக்களையும் நிறுத்தியிருந்தார்கள். இத்தனைக்கும் பிறகுதான் தேர்தல், வெற்றி, ஆட்சி எல்லாம். ஆனாலும் இஸ்ரேல் சொல்வதென்ன? தீவிரவாத இயக்கம். நம்ப முடியாது.
காலெத் மிஷல் உண்மையிலேயே கொதித்துப் போய்விட்டார். கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்சம் அரசு ஊழியர்களுக்கு மாதம் பிறந்தால் சம்பளம் தர வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தாக வேண்டும். இது ஒன்றும் இஸ்ரேல் தருகிற நன்கொடை அல்ல. வரி வசூல்களில் பாலஸ்தீன அத்தாரிடிக்கு முறைப்படி சேர வேண்டிய பங்குப் பணம்தான். அதைப் பிடித்து வைத்துக்கொண்டு தர மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்?
பேசி பார்த்தார்கள். போராடி பார்த்தார்கள். மிரட்டி பார்த்தார்கள். என்ன செய்தும் இஸ்ரேல் மறுத்துவிட்டது. அந்தப் பக்கம் ஹமாஸுக்கு உதவ கூடாது என்று அமெரிக்கா விடாப்பிடியாக நின்றதே அவர்களுக்குப் பெரிய வசதியாகி போனது. மக்கள் நலனை பார்க்க, அந்த ஐம்பத்தைந்து மில்லியன் டாலர் பாலஸ்தீனத்துக்கு மிகவும் அத்தியாவசியம் என்பது தெரிந்திருந்தாலும் ஐ.நா.வால் அமெரிக்க அதிபரை மீறி ஒன்றும் பேச முடியவில்லை.
முன்போல ஹமாஸால் இனி உலக முஸ்லிம்களிடம் நிதி வசூல் செய்து கொண்டிருக்கவும் முடியாது. அமைப்புகளைத் தேடித் தேடி வேட்டையாடிக் கொண்டிருந்தார்கள். ரகசியமாக உதவிக் கொண்டிருந்த தொழிலதிபர்கள் கூட தலைமறைவாகிப் போனார்கள். வேறு வழியின்றி ஹமாஸ் தலைவர்கள் மக்களிடம் நேரிடையாகப் பேசினார்கள். பிரச்சினையை விளக்கி சொல்லி, சிறிது பொறுத்திருங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.
பொறுத்திருக்கலாம். ஆனால் எத்தனை காலத்துக்கு? அப்போதுதான் எதிர்பாராத ஓரிடத்தில் இருந்து ஒரு குரல் வந்தது. உலக வங்கி.
இஸ்ரேல் செய்வது அராஜகம். மரியாதையாகப் பாலஸ்தீனத்துக்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுங்கள். இல்லாவிட்டால் விளைவு மோசமாகும் என்ற அதன் எச்சரிக்கை அறிக்கை இஸ்ரேல் அல்ல; அமெரிக்கா உள்பட அத்தனை தேசங்களையும் அதிர வைத்தது.
இந்த ஐ.நா. சபை, உலக வங்கியெல்லாம் எப்போது எப்படிப் பேசும் என்று சொல்ல முடியாது. திடீரென்று நல்ல வார்த்தை சொல்லும். திடீரென்று பல்டியடிக்கும். வைத்துக் கொண்டு சீராட்டவும் முடியாது. வெட்டிவிட்டு வேறு வேலை பார்க்கவும் முடியாது. இப்போது உலக வங்கி எச்சரிக்கை அனுப்பிய பின்பு நிதியைத் தராவிட்டால் இஸ்ரேலுக்கு வேறு விதமாக ஏதாவது குடைச்சல் வரும். இன்னும் பெரிய அளவு நிதி எதிலாவது கைவைப்பார்கள். ஆட்டம் காட்டுவார்கள். தவிக்க ஆரம்பித்தது இஸ்ரேல். வந்தால் எல்லாம் ஒன்றாக வரும் என்பார்களே. அப்படி இன்னொரு அறிவிப்பு வந்தது. இது ஈரான் அரசிடம் இருந்து.
இஸ்ரேல் உதவாது. நம்பாதீர்கள். நான் இருக்கிறேன் உங்களுக்கு என்றது ஈரானிய அரசு. இது ஹமாஸே அன்றைக்கு எதிர்பாராதது.
(தொடரும்)
முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 34 | ஹமாஸ் ஆதரவு அறக்கட்டளை முடக்கம் @ இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago