கணை ஏவு காலம் 33 | நிதி நெருக்கடியிலும்  தாக்குப்பிடித்த ஹமாஸ் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

By பா.ராகவன்

நிதி. இது ஒரு பெரிய சிக்கல்தான். என்னதான் பாலஸ்தீனம் ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிராந்தியம் என்று அறியப்பட்டாலும், உலக நாடுகளின் உதவியால் மட்டுமே வண்டி ஓடிக்கொண்டிருந்தது. அமெரிக்கா தனது பங்களிப்பை நிறுத்திக் கொள்வதென்று முடிவெடுத்தால், அமெரிக்க உறவு முக்கியம் என்று கருதும் அத்தனை நாடுகளும் அதையேதான் செய்யும். ஐ.நா.வைக் குறித்துக் கேட்கவே வேண்டாம்.

இந்தச் சூழ்நிலையில் ஹமாஸ் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது மம்மூத் அப்பாஸ் ஒரு பக்கம் முறைத்துக் கொண்டு திரும்பி நின்றார். ஏனென்றால், அந்தத் தேர்தல் தோல்வி அவருக்கு மிகப்பெரிய அவமானம். மேற்குக் கரை எங்களுக்கு, காசா உங்களுக்கு என்றுதான் அதுநாள் வரை அவர்கள் இருந்தார்கள். வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வது கிடையாது என்றாலும் உண்மை அதுதான். ஆனால், மேற்குக் கரையிலேயே ஹமாஸ் முன்னணிக்கு வந்துவிட்டது என்பதை ஃபத்தா எப்படிஏற்கும்? அப்பாஸ் எப்படி அதைத் தாங்குவார்? அவர் ஜனாதிபதி என்பதால் தம் பங்குக்கு முடிந்த விதங்களில்எல்லாம் காலெத் மஷலுக்குக் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தார்.

ஓர் இயக்கமாக மட்டும் இருந்த போது கூட ஹமாஸ் நிதிப் பிரச்சினையில் சிக்கியதில்லை. இதர போராளிஇயக்கங்களுக்கு எங்கெங்கிருந்தோ நிதி வரும். சட்டென்று வராமலும் போகும். சில காலம்ஒன்றும் இருக்காது, திடீரென்று வரத் தொடங்கும். ஹமாஸைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட சூழ்நிலை என்றும் இருந்த தில்லை. ஒரு தெளிவான, திட்டமிட்ட, வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரம் அவர்களுக்கு இருந்தது.

கடந்த 2003-ம் ஆண்டு The Financial Sources of the Hamas Terror Organization என்ற தலைப்பில் இஸ்ரேலிய அரசு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஹமாஸின் நிதி வரும் பாதை என்று 11 வழிகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

1. சிரியா ஆதரவு

2. மத்தியக் கிழக்கு நாடுகளில் செயல்பாடுகள்

3. ஹமாஸின் பிரத்யேக நிதி உதவி அமைப்புகள்

4. தாவாக்கள்

5. பாலஸ்தீனர்களிடம் இருந்து திரட்டும் உதவிகள்

6. மேற்கத்திய நாடுகளின் உதவிகள்

7. பிரிட்டன் / ஐரோப்பாவில் மேற் கொள்ளப்படும் வசூல்

8. ஆசிய நாடுகளின் உதவிகள்

9. ஆப்பிரிக்க உதவிகள் (முக்கியமாக எகிப்து)

10. வெளிநாடுகளில் இருந்து ஆள் சேர்ப்பது

11. வெளிநாட்டு அமைப்புகளின் ஆதரவு

இஸ்ரேல் வெளியிட்ட இந்த அறிக்கையில் மேற்படி பட்டியல் மட்டும் இல்லை.

குறிப்பிடப்பட்டுள்ள 11 வழிகளிலும் எங்கெங்கு இருந்து எப்படி எப்படியெல்லாம் பணம் வருகிறது, இதர உதவிகள் கிடைக்கின்றன என்று விளக்கமாகவே விவரிக்கப்பட்டு இருந்தது. ஹமாஸ் அன்றைக்கு இதனை ஒப்புக்கொள்ள வில்லையே தவிர, மறுக்கவும் இல்லை. நீ ஏதோசொல்கிறாய்; சொல்லிவிட்டுப்போ என்றுஅமைதியாக இருந்துவிட்டது. இதுவே அந்தஅறிக்கையை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருத வழி செய்தது.

இந்த 11 பாதைகளும் உண்மை தானா என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பது சிரமம். ஆனால் ஒரு சில வழிகள் உலகறிந்த உண்மையே ஆகும். உதாரணமாக, சிரியாவின் ஆதரவு.

தொடக்க காலம் முதலே ஹமாஸின் அரசியல் பிரிவினர் சிரியாவில் தங்கிதிட்டம் தீட்டுவது வழக்கம். ஹமாஸுக்குத் தொண்ணூறுகளின் தொடக்கம் முதலே சிரிய அரசாங்கத்தின் வலுவானஆதரவு இருந்தது. ஹமாஸின் ஏராளமான பயிற்சி முகாம்கள் சிரியாவில் அமைக்கப்பட்டன. இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களைத் திட்ட மிடுவது, போர்த் தளவாடங்கள் வாங்குவது, பொதுமக்களிடம் நன்கொடை திரட்டுவது அனைத்தும் சிரியாவில் நடக்கும்.

சிரியா தவிர, ஈரான், லெபனான், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் ஹமாஸ் அன்றைக்குத் தீவிரமாக இயங்கி வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற அரபு எழுச்சிக்கு முன்னால் பெரும்பாலான அரபு தேசங்கள் ஹமாஸை ஆதரிப்பதைத் தங்கள் கடமையாகவே கருதின. இதில் ஒரு வினோதம் என்னவெனில், அந்த நாடுகள் யாசிர் அர்ஃபாத் உயிருடன் இருந்த போதும் சரி, அவரது காலத்துக்குப் பிறகும் சரி; ஃபத்தாவையும் ஆதரித்தன.

இந்த நாடுகளின் உதவிகளால் அக்காலக் கட்டத்தில் ஹமாஸ் ஆண்டுக்குப் 10 மில்லியன் டாலர் அளவில் வருமானம் பெற்றுக் கொண்டிருந்ததாகச் சொல்வார்கள். கவனியுங்கள். இதெல்லாம் அந்தந்த தேசம் பிரச்சினைக்குள்ளாவதற்கு முன்னால் வரை நடந்தது மட்டுமே. சிரியா உள்நாட்டுப் போரில் சிக்கிச் சின்னாபின்னமாகத் தொடங்கிய போது ஹமாஸுக்குச் சிரியாவின் உதவி இல்லாமல் போனது.அரபு எழுச்சி பரவத் தொடங்கிய ஒவ்வொரு தேசமும் தனது கதவுகளை மூடிக்கொள்ள ஆரம்பித்தது.

வேறு இயக்கமானால் நொடித்தே போய்விடும். ஆனால் ஹமாஸ் தாக்குப் பிடித்தது. அரசுகள் உதவாவிட்டால் என்ன? அமைப்புகள் உதவும்

(தொடரும்)

முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 32 | நெருக்கடியிலும் தெளிவாக இருந்த ஹமாஸ் தலைவர் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE