கணை ஏவு காலம் 32 | நெருக்கடியிலும் தெளிவாக இருந்த ஹமாஸ் தலைவர் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

By பா.ராகவன்

ஹமாஸ் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்னால், பாலஸ்தீன அத்தாரிடியில் தேனும் பாலும் ஓடியதா என்றால் இல்லை. ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வரும்போதே கொஞ்ச நஞ்சம் வந்து கொண்டிருந்த பொருளாதார உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் முதலில் திணறிப் போனார்கள்.

ஹமாஸின் அப்போதைய தலைவர் காலெத் மஷல். ஷேக் அகமது யாசின், அப்துல் அஜிஸ் ரண்டஸி இருவரும் கொல்லப்பட்ட பின்பு அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். 1987-ல் இருந்து மஷல் ஹமாஸில் இருந்தாலும் 1992-ம் ஆண்டு அவர் குவைத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே இருந்தபடி இயக்கப் பணிகளை நிர்வகித்து வர ஆரம்பித்தவருக்குப் பிறகு ‘வெளியில் இருந்து வேலை பார்ப்பது’ என்பதே வழக்கமாகிப் போனது. பிறகு அவர் பாலஸ்தீனத்துக்குத் திரும்பிய போது கூட காஸாவில் இல்லை. மேற்குக் கரையில்தான் வசித்து வந்தார். இதனால் ஹமாஸுக்குள்ளேயே அவரை ‘வெளிநாட்டுத் தலைவர்’ என்றுதான் குறிப்பிடுவார்கள்.

காலெத் மஷல் தேர்தல் ஜனநாயக முயற்சிகளுக்கு ஒப்புக் கொண்டதன் ஒரே காரணம், அந்த வகையில் மக்களுக்கு ஏதாவது சிறிய லாபங்கள் இருக்குமானால் இருந்துவிட்டுப் போகட்டும் என்பதுதான். அடிப்படையில் அவர் ஜனநாயகவாதியெல்லாம் இல்லை. ஹமாஸில் அப்படி யாருமே கிடையாது. 2006 என்றில்லை. இன்று வரையிலுமே அப்படித்தான். ஜனநாயகமெல்லாம் நமக்கு ஆடம்பரம் என்று வெளிப்படையாகவே சொன்னவர். அமெரிக்க, பிரிட்டன் உதவிகள் கணப் பொழுதில் நிறுத்தப்பட்டதற்குப் பிறகு செலவினங்களை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தார்.

அதுநாள் வரை ஐரோப்பிய ஒன்றியம் பாலஸ்தீன அத்தாரிடிக்கு ஆண்டுதோறும் 500 மில்லியன் டாலர் அளித்துக் கொண்டிருந்தது. அமெரிக்கா, பிரிட்டன் இரண்டும் தனிப்பட்ட முறையில் இனி உதவி இருக்காது என்று அறித்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் சிறிது இழுத்துப் பிடிக்கப் பார்க்கலாம் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். எதிர்பார்த்ததைப் போலவே, ஹமாஸ் இனி ஆயுதங்களை எடுப்பதில்லை என்று சூடம் அணைத்து சத்தியம் செய்தாக வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். அதைவிட அவர்களுக்கு முக்கியமாகத் தேவைப்பட்டது, இஸ்ரேல் மீதான அதன் பகைமைப் போக்கு. இஸ்ரேலை எப்படியாவது ஹமாஸ் அங்கீகரித்துவிட வேண்டும் என்று அத்தனை மேற்குலக நாடுகளும் விதவிதமாகக் கொக்கி போட்டுப் பார்த்தன. ஆட்சிக்கு வந்திருக்கும் தருணத்தில் நிதி ஆதாரங்களை இழக்க விரும்பாமல், காலெத் மஷல் சொன்ன பேச்சைக் கேட்பார் என்பது அவர்களது கணக்கு.

ஆனால் நடந்தது வேறு. பதவிக்கு வந்த உடனேயே மஷல் செய்த அறிவிப்பு, ‘விரைவில் கிழக்கு ஜெருசலேத்தைத் தலைநகரமாகக் கொண்டு சுதந்தர பாலஸ்தீனம் உதயமாகும். நமது நோக்கம் அது ஒன்றுதான். அதிலிருந்து எப்போதும் பின்வாங்கப் போவதில்லை’ என்பதுதான்.

அதிர்ந்து போனது இஸ்ரேல். உடனடியாக ஒரு யுத்தத்தைத் தொடங்கியே தீர வேண்டும் என்ற முடிவுக்குக் கிட்டத்தட்ட அவர்கள் வந்துவிட்டிருந்த தருணத்தில் ரஷ்ய அதிபர் புதின் ஓர் அறிக்கை வெளியிட்டார். ‘பாலஸ்தீனர்களுக்கான நிதி உதவிகளை நிறுத்தும் எந்த முயற்சியையும் ரஷ்யா ஆதரிக்காது. ஹமாஸுக்கு என்ன குறைச்சல்? அவர்கள் ஜனநாயக முறைப்படி தேர்தலில் நின்று, மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்களை நெருக்கடியில் தள்ளாதீர்கள்.’

இதைச் சொன்னதோடு நிறுத்திக் கொண்டிருந்தால்கூடப் பரவாயில்லை. கையோடு ஹமாஸ் தலைவர்களை ரஷ்யாவுக்கு வரச் சொல்லி அழைப்பும் விடுத்தார். விளாதிமிர் புதின் இவ்வளவு நல்லவரா என்று இதனைப் படிக்கும் போது தோன்றலாம். அரசியலில் நல்லது - கெட்டது, சரி - தவறு, நியாயம் -அநியாயம் போன்ற இருமைகளுக்கு இடமில்லை. அமெரிக்கா ஒரு நிலைபாட்டினை எடுக்கிறதென்றால் அதற்கு எதிராக நிற்பது தனது கடமை என்று ரஷ்யா நினைத்தது. அவ்வளவுதான். இன்றைய உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்தாம். ஜனநாயக முறைப்படி தேர்தலில் நின்றுதான் ஆட்சிக்கு வந்தார். பதவிக்கு வந்தவர், ஜனாதிபதி மாளிகையைக் கூட முழுதாகச் சுற்றிப் பார்த்திருக்க மாட்டார். அதற்குள் ரஷ்யா படையெடுத்துவிட்டதை நினைவுகூர்ந்தால், இந்த அரசியலின் அடிப்படை புரியும்.

இருக்கட்டும். நாம் பாலஸ்தீனத்தின் அரசியலைமட்டும் பார்ப்போம். அன்றைக்கு சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் காலெத் மஷலிடம் கேட்க விரும்பியது ஒன்றுதான். என்ன செய்யப் போகிறீர்கள்? எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்?

ஹமாஸ் தனது நிலைபாட்டில் மிகவும் தெளிவாக இருந்தது. 1967 யுத்தத்துக்கு முன்பு இருந்த நில எல்லைகளை இஸ்ரேல் ஏற்கவேண்டும். ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் நிபந்தனையின்றி அகற்ற வேண்டும். குடியேற்றங்களைக் காலி செய்ய வேண்டும். வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் சென்றிருக்கும் பாலஸ்தீனர்கள் மீண்டும் தாய் மண் திரும்புவதில் எந்தச் சிக்கலும் இருக்கக் கூடாது.

இதெல்லாம் நடக்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஹமாஸ் சொன்ன பதில், ‘இன்னொரு இண்டிஃபாதா.’

(தொடரும்)

முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 31 | நிதி இல்லாமல் ஹமாஸ் ஆட்சி @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE