மிசோரம் - சத்தீஸ்கர் தேர்தல்கள்: அரையிறுதியின் முதல் சுற்று

By வெ.சந்திரமோகன்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நாடு முழுவதும் பெரும் கவனத்தைக் குவித்திருக்கின்றன. நவம்பர் 7ஆம் தேதி, மிசோரம் சட்டமன்றத் தேர்தல், சத்தீஸ்கர் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், அவற்றின் நிலவரம் குறித்துப் பார்க்கலாம்.

மீளத் துடிக்கும் காங்கிரஸ்: 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டமன்றத்தில், ஆட்சியமைக்க 21 இடங்கள் தேவை. 1980கள் முதல் காங்கிரஸ் கட்சிக்கும், மிசோ தேசிய முன்னணிக்கும் (எம்.என்.எஃப்)இடையிலான போட்டியாகவே இருந்துவந்த மிசோரம் தேர்தல் களம் 2018இல் மாறியது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்றது. எம்.என்.எஃப் 27 இடங்களில் வென்றது.

அதன் தலைவர் ஸோரம்தங்கா இரண்டாவது முறையாக முதல்வரானார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அதில் அங்கம் வகிக்கும் கட்சி எம்.என்.எஃப். எனினும், மிசோரம் அரசில் பாஜக அங்கம் வகிக்கவில்லை. இரு கட்சிகளும் இங்கு இணைந்து போட்டியிடுவதும் இல்லை. 2018 தேர்தலில், 39 இடங்களில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வென்றது.

2017இல் தொடங்கப்பட்ட ஸோரம் மக்கள் இயக்கம் (இஸட்.பி.எம்) கட்சி 8 இடங்களில் வென்று எதிர்க்கட்சியானது. அந்தத் தேர்தலில் அக்கட்சியினர் சுயேச்சையாகவே போட்டியிட்டனர். இந்த முறை அதிகாரபூர்வமாக அக்கட்சி களம் காண்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த லுங்க்லி உள்ளாட்சித் தேர்தலில் எம்.என்.எஃப் வசமிருந்த 11 இடங்களையும் கைப்பற்றி இஸட்.பி.எம். தனது செல்வாக்கைக் காட்டியிருப்பதால், இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்மானிக்கும் காரணிகள்: மிசோரத்தில் 80%க்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவர்கள். பெரும்பாலானோர் பழங்குடியினர். மணிப்பூர் கலவரம் காரணமாக. 12,500க்கும் அதிகமான குக்கி இனமக்கள் மிசோரத்தில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அதை வைத்து அரசியல் நடக்கிறது. மிசோரத்தின் பெரும்பான்மை மிசோக்கள், மணிப்பூரிலிருந்து தப்பிவந்த குக்கிக்கள், மயன்மார் - வங்கதேசத்திலிருந்து குடியேறிய சின் மக்கள் ஆகியோரை ‘ஸோ’ எனும் பொதுப்பெயரில் ஒருங்கிணைக்கவிருப்பதாக (Zo Unification) வாக்குறுதி அளித்திருக்கிறது எம்.என்.எஃப். இது தேர்தல் தந்திரம் என்று இஸட்.பி.எம் சாடுகிறது. மணிப்பூர் விவகாரத்தை, சிறுபான்மை கிறிஸ்தவர்களின் பிரச்சினை எனப் பார்க்காமல் இனப் பிரச்சினையாக மட்டுமே காங்கிரஸ் பார்ப்பதாக எம்.என்.எஃப் விமர்சித்திருக்கிறது.

பாஜக முன்வைக்கும் பொது சிவில் சட்டம் (யூசிசி) இங்கு முக்கியப் பிரச்சினையாகப் பார்க்கப்படு கிறது. அரசமைப்புச் சட்டக்கூறு 371(ஜி) மூலம் பாதுகாக்கப்படும் தங்கள் மத, சமூக மற்றும் பாரம்பரியப் பழக்கங்களுக்கு ஆபத்து ஏற்படும் என மிசோ மக்கள் அஞ்சுகிறார்கள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினரும் பொது சிவில் சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

எம்.என்.எஃப். அரசின் சமூக- பொருளாதார வளர்ச்சித் திட்டத்தின் (SEDP) மூலம் பெரும் ஊழல் நடந்திருப்பதாக பாஜக விமர்சிக்கிறது. வெறும் 2,000 பேர்தான் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர் எனக் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. மோடி ஆட்சிக்காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி கண்டிருப்பதாகக் கூறும் பாஜக, மிசோரம் மாநிலத்தில் அதற்கான பலன் கிட்டும் எதிர்பார்க்கிறது.

பெண் வாக்காளர்களே இங்கு அதிகம் என்பதால் பெண்களைக் கவரும் வாக்குறுதிகளை முன்வைத்திருக்கிறது. மதுவிலக்குச் சட்டத்தை (1995), காங்கிரஸ் அரசு 2014இல் நீக்கியது, 2018 தேர்தலில் அக்கட்சியின் தோல்விக்கான காரணங்களில் ஒன்று. அதை உணர்ந்த ஸோரம்தங்கா, 2019இல் மதுவிலக்கை மீண்டும் அமல்படுத்தினார். இந்த முறை போதைப்பொருள் பரவல் முக்கியப் பிரச்சினையாகியிருக்கிறது.

சத்தீஸ்கர் சதிராட்டம்: 90 இடங்களைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறது பாஜக. 2000இல் மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிந்து சத்தீஸ்கர் தனி மாநிலமானபோது காங்கிரஸின் அஜித் ஜோகி முதல்வரானார்.

ஆனால், 2003 தேர்தலில் வென்ற ரமண் சிங் தலைமையிலான பாஜக, 15 ஆண்டுகளுக்கு சத்தீஸ்கரைக் கட்டியாண்டது. 2018 தேர்தலில், 68 இடங்களில் காங்கிரஸ் வென்றது; பூபேஷ் பகேல் முதல்வரானார். வேலைவாய்ப்பின்மை, ஊழல், விவசாயத்தில் வீழ்ச்சி என ரமண் சிங்கின் 15 ஆண்டுகால ஆட்சி மீது எழுந்த அதிருப்தியே பாஜகவின் தோல்விக்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது.

இந்தத் தேர்தலில், பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர் முன்னிறுத்தப்படவில்லை. “தேர்தலுக்குப்பின்னர் பாஜக எம்எல்ஏ-க்கள் முதல்வரை முடிவுசெய்வார்கள்” என்று ரமண் சிங் விளக்கமளித்துவிட்டார். ஆக,மோடியின் செல்வாக்கை முன்வைத்துதான் களம் காண்கிறது பாஜக. எனினும், இந்த முறையும் பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு குறைவு என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் பாஜகவுக்கே வெற்றிவாய்ப்பு எனக் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்ட நிறுவனங்கள்கூட (குறிப்பாக, இந்தியாடிவி) சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சிக்குவரும் என்று கணித்திருப்பது கவனிக்கத்தக்கது. சுழற்சி முறையில் தனக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என வாய்மொழி உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் டி.எஸ்.தேவ் எழுப்பிய உட்கட்சிப் பிரச்சினையையும் சமாளித்தவர் பூபேஷ் பகேல். எனவே, இந்த முறை அவரை முன்னிறுத்த காங்கிரஸ் தலைமை தயங்கவில்லை.

இலவசம் குறித்து எதிர்மறையாகப் பேசினாலும் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000, ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர் என்றெல்லாம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை பாஜக அளித்திருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்த பூபேஷ் பகேல் அரசு தவறிவிட்டதாகவும் பாஜக குற்றம்சாட்டுகிறது.

முதல்வர் மீது ஊழல் புகார்: ‘மகாதேவ்’ எனும் சூதாட்டச் செயலியின் உரிமையாளர்களிடமிருந்து பூபேஷ் பகேல், ரூ.508 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத் துறை அவர் மீதான விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.

கூடவே, தேர்தல் பிரச்சாரத்துக்கே அந்த நிதிதான்பயன்படுத்தப்படுகிறது என்றும் காங்கிரஸ் ஆட்சியில்அக்கட்சித் தலைவர்கள் மட்டும்தான் வளமாகியிருக்கிறார்கள் என்றும் பாஜக குற்றம் சாட்டுகிறது. ஆனால், தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க அமலாக்கத் துறையை பாஜக பயன்படுத்துவதாக பூபேஷ் பகேல் குமுறியிருக்கிறார்.

விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனக் காங்கிரஸ் முன்வைத்த வாக்குறுதிதான், 2018இல் அக்கட்சியின் வெற்றிக்கு முக்கியக் காரணம். அதை பூபேஷ் பகேல் அரசு அமல்படுத்திவிட்டது. எனினும், இந்த முறை மேலும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என பூபேஷ் பகேல் அறிவித்திருப்பது ‘சற்று அதிகம்தான்’ எனக் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பேச்சு எழுந்திருக்கிறது.

சாதி அரசியல்: பிஹார் அரசு நடத்திய சாதிவாரிக் கணக்கெடுப்பை முன்வைத்து ஓபிசி அரசியலைப் பிரதானமாக முன்னெடுத்திருக்கும் காங்கிரஸ், தனது 17 உத்தரவாதங்களில் ஒன்றாக சாதிவாரிக் கணக்கெடுப்பை அறிவித்திருக்கிறது. இது பாஜகவுக்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. “நாங்கள் தேசியக் கட்சி; இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய மாட்டோம்” என்று அமித் ஷா விளக்கமளித்திருக்கிறார்.

முதல்வர் பூபேஷ் பகேல் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் என்பது காங்கிரஸின் ஆயுதம். ஆனால், “நான் ஒரு ஓபிசி பிரதமர். என்னை அவமதிப்பதன் மூலம் ஓபிசி பிரிவினரை காங்கிரஸ் அவமதிக்கிறது” என்று மோடி பிரம்மாஸ்திரத்தை முன்வைக்கிறார். பழங்குடிகளை ‘வனவாசிகள்’ என்று பிரதமர் மோடி அவமதிப்பதாக இன்னொரு அஸ்திரத்தைக் காட்டுகிறது காங்கிரஸ்.

மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ்தர் பிராந்தியத்தின் நாராயண்பூர் மாவட்டத்தில், தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பாஜக வேட்பாளருக்காகப் பிரச்சாரம் செய்த கட்சி நிர்வாகி ரத்தன் துபே கொல்லப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

To Read in English: Mizoram, Chhattisgarh elections: The first round of semi-final

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE