கணை ஏவு காலம் 15 | நீ வேறு நான் வேற @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

By பா.ராகவன்

ஹமாஸுக்கு யாசிர் அர்ஃபாத்தின் அரசியலும் அவரது கட்சியினரின் நடவடிக்கைகளும் பிடிக்காமல் போனதற்கு அந்தப் ‘பிராந்தியம் காணாத’ ஊழல் ஒரு முக்கியமான காரணம். மண் என்கிறோம். மக்கள் என்கிறோம். விடுதலை என்கிறோம். நம் மக்களின் விடுதலைக்காகப் பாடுபடும் போது நாம் திருடலாமா? ஊழல் செய்யலாமா? அவர்களது ரத்தத்தை யூதர்கள் உறிஞ்சிக் குடிப்பது போதாதா? நாமும் நம் பங்குக்கு ரத்த வெறி கொண்டு அலையத்தான் வேண்டுமா?

இதே சொற்களல்ல. ஆனால் இதே பொருள்தான். அதில் சந்தேகமில்லை. ஹமாஸ் பலமுறை அர்ஃபாத்திடம் அவரது கட்சியினரின் ஊழல்கள் குறித்து எடுத்துச் சொல்லியிருக்கிறது. ஒரு விடுதலைப் போராட்டத்தை ஒன்றுமேயில்லாமல் ஆக்குவதற்கு அதனினும் சிறந்த உபாயம் வேறில்லை என்று எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லியும், அர்ஃபாத் தம் பங்குக்குத் தனது கட்சியினரைப் பலவாறாக எச்சரித்தும் நடப்பது நடந்து கொண்டுதான் இருந்தது. ஒரு கட்டத்தில் ஹமாஸின் விமர்சனம் தீவிரமடையத் தொடங்கியது. அர்ஃபாத்தின் ஃபத்தா கட்சியினர் ஹமாஸை ஜென்ம எதிரி போலக் கருத ஆரம்பித்தார்கள். கட்சி மட்டத்தில் உருவான இந்தக் கசப்புணர்வு மெல்ல மெல்லப் போராளிகள் தரப்புக்கும் மடை மாற்றி விடப்பட்டது.

குழப்புகிறதா? எளிது தான். யாசிர் அர்ஃபாத் முதலில் தொடங்கியது அல் ஃபத்தா என்கிற போராளி இயக்கம். அதே பெயரைத்தான் பிறகு அவர் அமைதிவழிப் போராட்டத்தைத் தொடங்கிய போதும் தனது கட்சியின் பெயராகக் கொண்டார். பாலஸ்தீனத்தில் இயங்கி வந்த இதர அனைத்துப் போராளிக் குழுக்களையும் பிஎல்ஓ என்ற குடையின்கீழ் கொண்டு வந்து ஃபத்தாவையும் அதில் ஓர் உறுப்பினராகவே வைத்திருந்தார். ஆக, அர்ஃபாத்தின் ஃபத்தாவுக்கு அரசியல் முகமும் உண்டு; ஆயுத முகமும் உண்டு.

ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தை என்று ஆரம்பித்த பிறகு அவர் ஆயுதப் போராட்டங்களின் மீது மெல்ல நம்பிக்கை இழக்கத் தொடங் கியிருந்தார். இது அடிப்படையிலேயே வேலைக்கு ஆகாது என்பது ஹமாஸின் நிலைபாடு. இஸ்ரேலுக்கு ஆயுதம் தவிர வேறெந்த மொழியும் புரியாது என்று அவர்கள் அடித்துச் சொன்னார்கள்.

இதனாலேயே அர்ஃபாத்தின் அமைதி முயற்சிகளை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். மறுபுறம் அவரது கட்சியினர் செய்த பல ஊழல்களைப் பொதுவில் வன்மையாகக் கண்டித்தார்கள்.

ஊழலெல்லாம் ஒன்றுமேயில்லை என்று எல்லா அரசியல்வாதிகளையும் போல ஃபத்தாவினரும் பேசத் தொடங்க, அவர்களை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் ஃபத்தாவின் ஆயுதப் பிரிவினரும் ஹமாஸை எதிரியாகவே பார்க்கத் தொடங்கிகினார்கள். ஃபத்தா ஆயுதக் குழுவினர் ஆட்சியாளர்களின் பக்கம் நின்றதால், பிஎல்ஓ-வில் இருந்த இதர ஆயுதக் குழுக்களும் அதே பக்கம் நிற்க
வேண்டியதானது. விளைவு - பாலஸ்தீன் போராளிகள் என்பார் இரு தரப்பானார்கள். ஒன்று பிஎல்ஓ தரப்பு. இன்னொன்று ஹமாஸ் தரப்பு.

இது மக்களுக்கு ஏற்படுத்திய ஏமாற்றமும் விரக்தியும் சிறிதல்ல. இரு தரப்புமே விடுதலைப் போராட்டத்தில் நிறையச் செய்திருக்கின்றன. அதை மறுக்கவே முடியாது. ஆனால் இப்படிப் பிரிந்து நின்று அடித்துக் கொண்டால் அது எதிரிக்குதானே
வசதியாகிப் போகும்?

யாருக்கும் இது தெரியாததல்ல. ஆனால், வேறு வழியில்லை என்ற நிலை உண்டாகிவிட்டது. யாசிர் அர்ஃபாத் தன்னால் முடிந்த வரை தனது கட்சிக்காரர்களை ஒழுங்கு செய்யப் பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை. சீர்திருத்தம் நிகழும் வரையிலாவது ஹமாஸ் அமைதியாக இருக்கலாம் என்று எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை. எனவே ஹமாஸ் விஷயத்தில் அதன்பின் அவர் வாயே திறக்கவில்லை. ஒரு சிறிய கருத்தைக் கூடத் தெரிவிக்கவில்லை. அவரது மௌனம், ஒரு விதமான இறுக்கம் என்ற நிலைக்குச் சென்றது அப்பட்டமாகத் தெரிந்தது.

அதுவரை பல்லைக் கடித்துக் கொண்டிருந்த ஹமாஸ், இனி அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தது. இஸ்ரேலுக்கு நன்கு புரியக் கூடிய ஆயுத மொழியிலேயே பேசுவோம். இறுதி வரை அதிலிருந்து பின்வாங்குவதில்லை. அர்ஃபாத் என்ன சொன்னாலும் சரி, யார் என்ன சொன்னாலும் சரி. ஹமாஸ் தடம் மாறாது என்று காஸா மக்களிடம் அவர்கள் மைக் வைத்து அறிவித்தார்கள்.

எப்படி மேற்குக் கரை பாலஸ்தீனர்கள் அர்ஃபாத்தின் சொற்களுக்குக் கட்டுப்பட்டுக் கிடந்தார்களோ, அதே போலத்தான் காஸா மக்கள் ஹமாஸ் விஷயத்தில் நடந்து கொண்டார்கள். என்ன சொன்னாலும் சரி. என்ன செய்தாலும் சரி.

அந்த நம்பிக்கையை அவர்கள் எப்படிப் பெற்றார்கள் என்பது முக்கியம். அதைத் தெரிந்து கொள்ளாமல் இன்று நடக்கும் யுத்தத்தின் அடிப்படையைக் கூட நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

(தொடரும்)

முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 14 | மண்ணுக்கு மண் மாறுபடும் அரசியல்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE