இரண்டாவது இண்டிஃபாதா என்பது இரண்டாயிரமாவது ஆண்டின் இறுதியில் தொடங்கி, அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு நடைபெற்றது. ஏற்கெனவே கண்டபடி பாலஸ்தீனர் தரப்பில் சுமார் நான்காயிரம் மரணங்கள். இஸ்ரேல் தரப்பில் ஆயிரத்துக்குச் சற்று அதிகம். இதர இழப்புகள் தனி. அதுவல்ல விஷயம். இந்தப் போராட்டம் நியாயமாக இரு தரப்பிலும் ஒரு சில மாற்றங்களையாவது ஏற்படுத்தியிருக்கும் என்று உங்களுக்குத் தோன்றலாம். உண்மையில், பாலஸ்தீனர்கள் மேலும் மோசமாக பாதிக்கப்பட்டார்கள் என்பது தவிர வேறெந்த விளைவும் இல்லை.
முதலாவது, முஸ்லிம்கள் மீதான இஸ்ரேல் அரசாங்கத்தின் கெடுபிடிகள் முன்னைக் காட்டிலும்பன்மடங்கு அதிகரிக்கத் தொடங்கின. இவர்களுக்குத் தன்னாட்சி அதிகாரமெல்லாம் கொடுத்திருக்கவே கூடாது என்றுபகிரங்கமாகப் பேசத் தொடங் கினார்கள். மட்டுமல்லாமல், மேற்குக் கரை, ஜெருசலேம் பகுதி களை முழுதாகக் கைப்பற்றி, இனி எக்காலத்திலும் பாலஸ்தீனர்கள் அங்கே உரிமை கோர முடியாதபடி செய்துவிட வேண்டும் என்பதில் தீவிரமானார்கள்.
திட்டத்தின் தொடக்கமாகப் பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதிகளெல்லாம் தங்களுக்குச் சொந்தம் என்று நிறுவும் வகையில் தடுப்புச் சுவர் எழுப்பத் தொடங்கினார்கள். இஷ்டமிருந்தால் எங்காவது ஓடிப் போ. இல்லாவிட்டால் இங்கேயே இருந்து நீ உயிரோடு இருக்கும் நாள்களை எண்ணிக்கொண்டிரு என்பது இதற்குப் பொருள்.
தடுப்புச் சுவர் என்றால் வெறும் சுவரல்ல. சுவர் எழுப்பி அவர்கள் தமது நிலம் என்று வரையறை செய்த பகுதிகளில் எல்லாம் உடனடியாக யூதக் குடும்பங்களைக் கொண்டு வந்து குடியேற்றத் தொடங்கினார்கள். அவர்களது பாதுகாப்புக்கு என்று சொல்லிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ராணுவ வீரர்களை அங்கே அனுப்பி, மெல்ல அங்கெல்லாம் ராணுவ முகாம்களை ஏற்படுத்த ஆரம்பித்தார்கள்.
» கணை ஏவு காலம் 12 | முரண்பாடுகளுக்கு இடையில் இருவர் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்
போதாது? அப்படியே சுங்கச் சாவடிகள், சோதனைச் சாவடிகள் என்று வரிசையாக ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன. அமெரிக்க அரசின் ஒத்துழைப்புடன் தனது இந்த நடவடிக்கைகளைச் சட்டபூர்வமாக்க என்னென்ன விதமாகவெல்லாம் முயற்சி செய்யமுடியுமோ, அவை அனைத்தையும் செய்தார்கள்.அவர்கள் உலகத்துக்குச் சொல்லிக்கொண்டிருந்த தெல்லாம் ஒன்றுதான். ‘இஸ்ரேல், தீவிரவாதிகளால் தொடர்ந்து தாக்கப்படுகிறது. வேறு வழியின்றி எங்களைப் பாதுகாத்துக்கொள்ள நாங்கள் இதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.’
இதனால் அமைதி, நல்லுறவு, சகோதரத்துவம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த யாசிர் அர்ஃபாத் நொறுங்கிப் போனார். அவருக்கு இருந்த ஒரே ஆறுதல், பாலஸ்தீன மக்கள் அவருக்கு அளித்த நிபந்தனையற்ற ஆதரவு. இண்டிஃபாதா தோல்வியே கண்டாலும் ஹமாஸ் தலைவர்களை அவர் சிறையிலிருந்து விடுவித்துப் போராட அனுமதித்தது, மக்கள் மத்தியில் ஒரு சிறிய நம்பிக்கையைத் தக்க வைத்திருந்தது. இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் கிழக்கு ஜெருசலேத்தைத் தலைநகரமாகக் கொண்ட சுதந்திரப் பாலஸ்தீனம் உருவாகியே தீரும் என்பது அவர்கள் நம்பிக்கை.
மறுபுறம் காசாவில் வசித்து வந்த மக்களின்எண்ணம் சிறிது வேறாக இருந்தது. இண்டிஃபாதாவுக்குப் பிறகு அர்ஃபாத்தின் செல்வாக்கு குறையும், ஹமாஸின் கை மேலும் ஓங்கும் என்று அவர்கள் கருதினார்கள். ஏனென்றால், ஹமாஸ் போராட்டத்தில் இறங்கியிராவிட்டால் மிக நிச்சயமாகப் பாலஸ்தீனர் தரப்பில் இழப்புகள் பன்மடங்கு கூடியிருக்கும். ஹமாஸ் மீதான அச்சத்தினால்தான் இஸ்ரேல் தடுப்புச் சுவர்களை எழுப்பத் தொடங்கியிருக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள்.
உண்மையில் ஹமாஸ் அப்போதுஇதையெல்லாம் பொருட்படுத்த வில்லை. இண்டிஃபாதாவில் பாலஸ்தீனர்கள் காட்டிய ஒற்றுமையும் உத்வேகமும் அர்ஃபாத்தின் வெற்றியாக முன்னிறுத்தப்பட்டதை அவர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் ஒரு விஷயத்தில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள். கொஞ்சமாவது இஸ்ரேலுக்கு எதிரான ஆயுத நடவடிக்கைகள் பாலஸ்தீன தரப்பில் இருக்கும் வரைதான் அர்ஃபாத்தை மக்கள் மதிப்பார்கள், ஏற்பார்கள். அமைதி ஒன்றே வழி என்று அவர் முடிவு செய்துவிடும் கட்டத்தில் அவரை நகர்த்திவிட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பார்கள்.
இன்னொரு பெரும் பிரச்சினையையும் அப்போது ஹமாஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டினார்கள். யாசிர் அர்ஃபாத்தின் அரசாங்கத்தில் பங்காற்றிக் கொண்டிருந்தவர்கள் நிகழ்த்திய கணக்கற்ற ஊழல் விளையாட்டுகள். அர்ஃபாத்தால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாதிருந்தது. எல்லாமே வெட்ட வெளிச்சமாக நடைபெற்ற ஊழல்கள். அனைத்தையும் மக்கள் அறிவார்கள். அது ஒருபுறம் அவர்களது வெறுப்பை வளர்த்துக்கொண்டிருந்தது. அமைதி. சமாதானம். ஜனநாயகம். ஊழல். நல்லது. இனி அர்ஃபாத்தால் நெடுநாள் தாக்குப் பிடிக்க முடியாது என்று ஹமாஸ் கருதியது. உண்மையில் அதுதான் நடந்தது.
அறம் வேண்டுமானால் மனித குலத்துக்குப் பொதுவானதாக இருக்கலாம். அரசியல் என்பது மண்ணுக்கு மண் மாறுபடக்கூடியது. பாலஸ்தீனர்கள் தமது தலைவர்களின் ஊழலுக்கும் சேர்த்தே அன்றைக்கு விலை தர வேண்டியிருந்தது.
(தொடரும்)
முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 13 | ஹமாஸ் ஆட்டம் ஆரம்பம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago