கணை ஏவு காலம் 11 | மாற்று வழியை கண்டுபிடித்த ஹிஸ்புல்லா @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

By பா.ராகவன்

ஹமாஸ் உள்ளே வருகிறது என்றால் முதலில் ஏவுகணைகள் வரும். பிரச்சினையின் தீவிரத்துக்கு ஏற்ப முதல் சுற்று ஏவுகணைகளின் எண்ணிக்கை மாறுபடுமே தவிர, அதுதான் அவர்கள் களத்துக்கு வருவதன் அறிகுறி. இப்போது என்றில்லை.

இரண்டாயிரமாவது ஆண்டு பாலஸ்தீனத்தில் தொடங்கிய இண்டிஃபாதாவை முன்வைத்து இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனியர்களின் மீது தொடுத்த தாக்குதலில் தினசரி ஏராளமான மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன. தவிர, முன்னர் குறிப்பிட்டது போல குடியிருப்புப் பகுதிகளின் மீதுவான்வழித் தாக்குதல். மேற்குக் கரையில் கிட்டத்தட்ட அத்தனை வீதிகளிலும் குறைந்தது ஒரு இடிபாடாவது நிச்சயம் உண்டு.

இழப்புகள் எல்லை மீறிச் செல்வதைக் கண்ட பின்புதான் ஹமாஸ் நேரடியாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது. இதற்கு இன்னொரு காரணம், சவுதி அரேபியா முன்வைத்த அமைதிப் பேச்சுவார்த்தை திட்டத்தை யாசிர் அர்ஃபாத் வழி மொழிந்துவிடப் போகிறாரே என்கிற பதற்றம் (பிறகு அவர் அதைத்தான் செய்தார்). என்னென்ன காரணங்களால் ஹமாஸுக்கு அர்ஃபாத்தின் அரசியல் ஒத்துவரவில்லை என்பது குறித்து பின்னால் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

இப்போது இந்த இண்டிஃபாதாவை முடித்துவிடலாம். காசாவிலிருந்து இஸ்ரேலிய நிலப்பரப்புக்கு ஏவுகணைகளை அனுப்பி தங்கள் வருகையை அறிவித்தாலும், எடுத்த எடுப்பில் ஹமாஸ் ஒரு முழு நீளத்தாக்குதல் திட்டத்தை உத்தேசித்திருக்கவில்லை. அந்நாட்களில் ‘லெபனீஸ் மாடல்’ என்றொரு நூதன அச்சுறுத்தல் வழி அப்பிராந்தியங்களில் மிகவும் பிரபலம். இந்த லெபனீஸ் மாடல் என்பது ஹிஸ்புல்லா அமைப்பால் கண்டுபிடிக்கப்பட்டது.

எப்படி பாலஸ்தீனத்தை முழுமையாகவும் சிரியாவில் கொஞ்சம், எகிப்தில் கொஞ்சம் என்று அண்டை நாடுகளின் நிலப்பரப்புகளை இஸ்ரேல் அபகரித்துக் கொண்டதோ, அதேபோல லெபனானிலும் செய்தது. லெபனான் பல விதமாகப் போராடிப் பார்த்தும் அவர்கள் இடத்தைவிட்டு நகர்வதாக இல்லை.

ராணுவ ரீதியில் இஸ்ரேலை இதர அரபுநாடுகளால் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்ததே காரணம். நூறு சதவீத அமெரிக்கஆதரவு இஸ்ரேலுக்கு இருந்தபடியால் அவர்கள் போர்க்களத்தில் நிகரற்ற பலத்தை எப்போதும் காட்டுவார்கள். எனவேஹிஸ்புல்லா ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தது. இஸ்ரேலிய ராணுவத்தைத்தானே அசைக்க முடியவில்லை? நேரடியாக அரசையே அசைத்துப் பார்த்தால் என்ன? அரசை அசைத்துப் பார்ப்பதென்றால் அதன் மக்களைக் கலவரம் கொள்ளச் செய்வது.

அச்சத்தின் வழி அவர்களைப் பதற்றம் கொள்ளச் செய்து, தாங்கள் படும் கஷ்டத்துக்கு அரசே காரணம் என்று குற்றம்சாட்ட வைப்பது. இத்திட்டத்தின்படி ஹிஸ்புல்லா முதலில் தனது உளவுப் படைப் பிரிவினரை மெல்ல இஸ்ரேலுக்குள் ஊடுருவச் செய்தது. அவர்கள் என்ன செய்தார்கள், மக்களுடன் என்ன பேசினார்கள் என்ற விவரம் இல்லை. ஆனால் இஸ்ரேலின் மூத்த குடி மக்கள் கலவரமடைந்து, லெபனானிடம் இருந்து அபகரித்த நிலப் பரப்புகளைத் திருப்பிக் கொடுத்துவிடச் சொல்லி உள்ளூர் அரசுப் பிரதிநிதிகள் மூலமாக அரசுக்குத் தொடர்ந்து செய்தி அனுப்ப ஆரம்பித்தார்கள்.

இதனைப் பலர் அமைப்பு ரீதியாகவும் செய்தார்கள். மறுபுறம் திடீர் திடீரென்று கடத்தல் சம்பவங்கள் நடக்கத் தொடங்கின. பெரும்பாலும் முக்கியஸ்தர்கள். ஏதாவது பொது விழாவுக்கு வருவார்கள். மேடையிலிருந்து நேரடியாகக் கடத்திச் செல்லப்பட்டு விடுவார்கள். யார் செய்தது, எங்கே கொண்டு போனார்கள் என்று எதுவும் தெரியாது. அடிக்கடிப் பல அரசியல் கொலைகள் நடந்தன. திடீர் திடீரென்று காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன. ஷாப்பிங் மால்கள், மருத்துவமனைகள், யூத தேவாலயங்கள் என்று பொது மக்கள் கூடும் இடங்களில் அவ்வப்போது குண்டுகள் வெடித்தன.

பொது மக்கள் மத்தியில் எப்போதும் ஓர் அச்சம் இருந்தது. வெளியே போகவே பயந்தார்கள். கட்சி மாநாடு வைத்தால், தொண்டர்கள்கூடக் கலந்துகொள்ள மாட்டோம் என்று அடம் பிடிக்கும் நிலை உண்டானது. இதையெல்லாம் செய்வது ஹிஸ்புல்லா என்று கண்டுபிடிக்கவே இஸ்ரேலுக்கு வெகுநாள் ஆனது. அவர்கள் ஹமாஸைச் சந்தேகப்பட்டார்கள். இதர பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

எப்போது இஸ்ரேல் கைப்பற்றியிருந்த லெபனான் பகுதிகளுக்குள்ளேயே இத்தகு சம்பவங்கள் நடக்கத் தொடங்கினவோ, அப்போதுதான் விவகாரம் வெளியே வந்தது. இது ஊரறிந்த ரகசியமாகிவிட்ட பின்பு ஹிஸ்புல்லா தனது செயல்பாடுகளை இன்னும் தீவிரமாக்கத் தொடங்கியது.

இஸ்ரேலிய மக்கள் குரல் கொடுக்கத் தொடங்கியதும் வேறு வழியின்றி இஸ்ரேல்,லெபனானில் ஆக்கிரமித்திருந்த பகுதிகளில் இருந்து வெளியேறியது. இந்த லெபனீஸ் மாடலைத்தான் 2001-ம் ஆண்டில் ஹமாஸ் கடைப்பிடிக்க நினைத்தது.

டெல் அவிவ் நகரத்துக்குள் புகுந்து படபடவென பத்து பேரைச் சுட்டுக் கொல்வது அவர்களுக்குப் பிரச்சினை இல்லை. அங்கேயே போய் கூடாரம் அடித்து உட்கார்ந்து கொண்டு 100 ஏவுகணை விடுவதிலும் அவர்களுக்குத் தயக்கமில்லை.

உலகில் முதல் முதலில் தற்கொலைத் தாக்குதல் என்னும் உத்தியைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியவர்கள் அவர்கள்தாம். ஹமாஸ் ஆரம்பித்த தாக்குதல் இஸ்ரேல் அதற்கு முன் காணாத ஒன்றாக இருந்தது. தலைநகரம், முக்கிய நகரங்கள் என்றெல்லாம் இல்லை.

நாடு முழுதும் அவர்கள் வெடிக்கச் செய்தார்கள். எப்படி, எங்கிருந்து ஊடுருவுகிறார்கள் என்று கண்டுபிடிப்பதே இஸ்ரேல் ராணுவத்துக்குப் பெரும்பணியாக இருந்தது. உண்மையில் ‘எல்லையில் முழுமையாக வேலி போடுவது’ என்ற எண்ணமே இதற்குப் பிறகுதான் இஸ்ரேல் அரசுக்கு ஏற்பட்டது. இரண்டாவது இண்டிஃபாதாவின் இறுதியில் இஸ்ரேல் தரப்பில் ஆயிரம் பேருக்கு மேல் இறந்திருந்த விவரத்தை முன்னர் பார்த்தோம் அல்லவா? அதில் பெரும் பகுதி ஹமாஸ் தாக்குதலினால் ஏற்பட்டதே.

(தொடரும்)

முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 10 | உயிர் விளையாட்டு @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE