பாலஸ்தீனத்தை இஸ்ரேல் அழித்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், உலகமே இஸ்ரேலின் பக்கம் திரண்டு நின்று கொண்டிருப் பதை எப்படிப் புரிந்துகொள்வது? பாலஸ்தீனர்கள் பாவம் என்று உச்சுக்கொட்டிக் கடப்பதைத் தவிர்த்து வேறு எதுவும் செய்ய முடியாதது ஏன்? தொடங்கியது ஹமாஸ் என்பதால் பாலஸ்தீனர்கள் அழிவது நியாயம்என்றால், பிரச்சினையின் தொடக்கம் இஸ்ரேல் அல்லவா? குழப்பமும் அச்சமும் தவிப்பும் சூழ்ந்திருக்கும் இத்தருணத்தில் தெளிவும் துணிவும் பெறுவதற்கு எட்வர்ட் செய்த் (1935-2003) நமக்கு உதவக்கூடும்.
தவறான கோணம்: ஜெருசேலத்தில் ஒரு பாலஸ்தீனக் கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்த செய்த், எகிப்திலும் பின்னர் அமெரிக்காவிலும் கல்வி கற்று, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றிவந்தபோது, 1967இல் இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையில் போர் வெடித்தது. சிரியாவிடமிருந்து கோலன் குன்றுகள், ஜோர்டானிலிருந்து மேற்குக் கரை (கிழக்கு ஜெருசேலம் பகுதிகளும்), எகிப்திடமிருந்து காசா முனை, சினாய் தீபகற்பம் ஆகியவற்றை இஸ்ரேல் அப்போரில் கைப்பற்றியது.
மத்தியக் கிழக்கின் வரைபடத்தைத் திருத்தியமைத்த அப்போர், அவரைத் தனிப்பட்ட முறையில் ஆழமாகப் பாதித்தது. அவர் சிறுவயதில் சுற்றித் திரிந்த இடங்களும் அவருடைய உறவினர்களும் நண்பர்களும் வாழ்ந்துவந்த பகுதிகளும் இப்போது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன. “முதல் முறையாக ஒரு அராபியனாக நான் என்னை உணர்ந்த தருணம் அது” என்கிறார் செய்த். அன்று தொடங்கி புற்றுநோய் தாக்கி இறக்கும் தருணம்வரை, செய்த்தின் குரல் பாலஸ்தீனத்தின் குரலாகவே ஒலித்துவந்தது.
ஏன் இஸ்ரேலின் குரல் மட்டும் சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலிக்கிறது என்றும் பாலஸ்தீனத்தால் தனது தரப்பென்று ஒன்றை ஏன் உருவாக்கிக்கொள்ளவே முடியவில்லை என்பதையும் செய்த் கண்டறிந்தார். பாலஸ்தீனர்கள் என்றல்ல, பொதுவாகவே இஸ்லாம்குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்தும் மேற்குலகுக்கு முற்றிலும் தவறான புரிதல் மட்டுமே இருந்தது. ‘இஸ்லாம் பிற்போக்கான மதம். கீழை நாடுகள் நாகரிகமற்றவை.
மேலை நாடுகள் நாகரிகமானவை’ - இதுதான் அவர்களுடைய உலகப் பார்வை. அவர்களின்இலக்கியப் பிரதிகளிலும் வரலாற்று நூல்களிலும் பயணக் குறிப்புகளிலும் இப்படித்தான் எழுதப்பட்டிருந்தன. இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் காலனியாதிக்கம் பிறந்தது. பிற்போக்கான அரபு நிலங்களை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமிப்பதில் தவறில்லை எனும் கருத்து ஆதிக்கம் பெற்றது.
இஸ்ரேல் - பாலஸ்தீன இன்னல்கள்: பாலஸ்தீனப் பிரச்சினை என்பது வெறுமனே காலனியாதிக்கப் பிரச்சினையாக மட்டும் இல்லாமல் போனதற்குக் காரணம், யூதர்களின் வரலாறு என்கிறார் செய்த். பாலஸ்தீனர்களின் வலியை நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் போவதற்குக் காரணம், ஹிட்லரின் யூத இனவொழிப்பு நமக்குள் உருவாக்கியிருக்கும் பெருஞ்சுமை. நம் உளவியலை யூத இனவொழிப்பு ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதால், இஸ்ரேலின் தவறுகளை நாம் கண்டுகொள்ள மறுக்கிறோம் அல்லது தயங்குகிறோம். யூதர்களை அவர்களுடைய வரலாற்று வலி ஒன்றிணைக்கிறது. அந்த வலியை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் செய்த்.
பாலஸ்தீனத்துக்காகக் குரல் கொடுத்த எவரும் செய்த் அளவுக்கு இஸ்ரேலைப் பரிவோடு அணுகியதில்லை. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்க வேண்டும்; அதற்காக அவர்களுடைய கடந்தகாலத் துயரை மறுக்கவோ இகழவோ கூடாது என்கிறார் செய்த். இஸ்ரேலையும் பாலஸ்தீனத்தையும் எதிரெதிராக நிறுத்தாமல் இருநாட்டு மக்களின் கூட்டு வரலாற்றை, கூட்டுத் துயரை, கூட்டு அனுபவங்களை, கூட்டு அச்சங்களைத் தொகுத்துப் பார்த்து ஆராய வேண்டும் என்கிறார் செய்த்.
இஸ்லாமியர்களைச் சிறுமைப்படுத்தி இகழ்வதும் வெறுப்பதும் தவறென்றால், யூதர்களை அவ்வாறு செய்வதும் தவறுதான்; இஸ்லாமிய வெறுப்பு போலவே யூத வெறுப்பும் ஆபத்தானது என்கிறார் செய்த். அதே சமயம், யூதர்கள் தங்கள் வரலாற்றுத் துயரை அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதும் தவறு என்று கண்டிக்கிறார். ஜியோனிசம் என்பது காலனியாதிக்கத்தின் தொடர்ச்சியே என்று வாதிடும் செய்த், இஸ்லாமிய வெறுப்பு இஸ்லாமியர்களை மட்டுமின்றி யூதர்களையும் பாதிக்கவே செய்யும் என்று சுட்டிக்காட்டுகிறார்.
பாலஸ்தீனர்களிடம் இல்லாத ஒரு வசீகரமான கற்பனை யூதர்களிடம் இருக்கிறது. ‘இது இறைவன் எங்களுக்கு வாக்களித்து அருளிய நிலம். இதைவிட்டு நாங்கள் அகல மாட்டோம்’ என்று யூதர்கள் நம்புகிறார்கள். இந்த அசாதாரணமான புனிதத்தன்மை கவசம்போல் செயல்படுவதுடன், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் செல்வாக்கு பெற்றிருக்கிறது என்கிறார் செய்த். இந்தக் கற்பனைக் கதையாடல்களுக்கு மத்தியில்தான் பாலஸ்தீனம் தன் தரப்பை முன்வைக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் அவர்களுடைய குரல் வெளியில் கேட்பதில்லை என்கிறார் செய்த்.
நடுநிலைப் பார்வை: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து முழுமையான விடுதலையை எப்படிப் பெறுவது என்பதில் பாலஸ்தீன மக்களுக்குத் தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும் என்கிறார் செய்த். யாசர் அராஃபத்தோடும் பாலஸ்தீன விடுதலை அமைப்போடும் ஒரு கட்டத்தில் நெருக்கமாக இருந்தார் என்றாலும், நாளடைவில் அவர்களிடமிருந்து விலக வேண்டியிருந்தது.
அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தையில் யாசர் அராஃபத் பற்றுறுதியோடு செயல்படவில்லை; இஸ்ரேலின் ஆதிக்கத்துக்கு அடிபணியும் வகையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இது பாலஸ்தீனத்துக்கு விடுதலை பெற்றுத் தராது என்று செய்த் வாதிட்டார். அவர் சொன்னதுதான் இறுதியில் நடந்தது.
சமரசம் செய்துகொள்ளும் அரசியல் தலைமையைஎவ்வாறு நிராகரித்தாரோ அவ்வாறே ஹமாஸ் உள்ளிட்ட இயக்கங்களின் வன்முறைப் பாதையையும் தொடக்கத்திலேயே நிராகரித்துவிட்டார் செய்த். ஒடுக்கப்படும் மக்கள் ஆதிக்கத்திலிருந்து எப்படியாவது விடுபட வேண்டும் எனும் உணர்வோடு அவ்வப்போது எழுச்சிகொள்வதும் அந்த எழுச்சி வன்முறைப் போராட்டமாக உருமாறுவதும் வழக்கம்தான். ஆனால், அது சரியான வழியல்ல. பாலஸ்தீனம் வன்முறையைக் கையிலெடுக்கக் கூடாது என்பதில் உறுதியோடு இருந்தார் செய்த். அது பாலஸ்தீனர்களையே பாதிக்கும் என்றும் எச்சரித்தார்.
நீங்கள் பாலஸ்தீனம் பக்கமா.. இஸ்ரேலின் பக்கமா,சொல்லுங்கள் என்று உடன் நின்ற தோழர்களே எரிச்சல் கொள்ளும்படி செய்த்தின் வாதங்கள் நடுநிலையோடும் நிதானத்தோடும் அமைந்திருந்தன. சல்மான் ருஷ்டி எங்களை அவமதித்துவிட்டார் என்று உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் சீறியபோது, ருஷ்டியின் பக்கம் உறுதியோடு நின்றார் செய்த்.
ஜியோனிசத்தை அடிப்படைவாதம் என்று அழைக்க வேண்டுமென்றால், இஸ்லாத்தின் பெயரால் ஆட்சி செய்யும் நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை அதே பெயரிட்டுதான் அழைக்க வேண்டியிருக்கும் என்றார் செய்த். ஹமாஸ் போன்ற இயக்கங்களை அவர் நிராகரித்தற்கு அவர் களுடைய மதவாதமும் ஒரு காரணம். இஸ்ரேலிடம் இல்லாத மதவாதமா என்று அரபுத் தோழர்கள் கோபித்துக் கொண்டபோது, நாம் ஏன் அவர்கள் வழியில் செல்ல வேண்டும் என்பதே செய்த்தின் பதிலாக இருந்தது.
நீடித்த அமைதிக்கு... இஸ்ரேலுக்கு அமெரிக்கா அளித்துவரும் நிபந்தனையற்ற, நீடித்த ஆதரவை செய்த் கடுமையாக விமர்சித்தார். அராபியர்களின் குற்றங்களுக்கு ஆதாரமே தேவையில்லை. கேட்கப் படுவதும் இல்லை. இஸ்ரேலின் குற்றங்களுக்கு எவ்வளவு ஆதாரங்களை அடுக்கினாலும், அவை அமெரிக்காவின் மனசாட்சியை அசைப்பதுகூட இல்லை என்றார். ஊடக உலகம் எவ்வாறு பாரபட்சத்தோடு இயங்குகிறது என்பதையும் விரிவாக விவாதித்தார்.
ராணுவமும் ஊடகமும் சேர்ந்துதான் இதுவரையிலான எல்லா போர்களையும் நடத்திமுடித்திருக்கின்றன. இவை இரண்டுமே இல்லாததால்தான் பாலஸ்தீனம் தொடர்ந்து தோற்கடிக்கப்படுகிறது என்றார். பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்று எவ்வளவு ஆயிரம் முறை அவர் சொல்லியிருப்பார் என்று தெரியாது. இஸ்ரேல் ஒழிக்கப்பட வேண்டும் என்று ஒருமுறைகூட அவர் நினைத்ததும் இல்லை.
இஸ்ரேலும் பாலஸ்தீனமும் மோதல் போக்கைக் கைவிட்டு, ஒருவரை ஒருவர் அங்கீகரித்து, மதித்து இணைந்து வாழ்வதுதான் இருவருக்குமே நீடித்த அமைதியைக் கொண்டுவரும் என்கிறார் செய்த். அதுதான் நிதர்சனமும்கூட!
- தொடர்புக்கு: marudhan@gmail.com
To Read in English: When will Israel-Palestine conflict end?
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago