இதில் ஒரே ஒரு வித்தியாசம் மட்டும் முக்கியம். இந்தியாவில் முஸ்லிம்களின் ஒரு பகுதியினர் தனி நாடு கேட்டபோது, எண்ணிக்கை அடிப்படையில் அவர்களுக்கு ஒரு நியாயம் இருந்தது. பாலஸ்தீனத்து யூதர்களும் அம்மண்ணின் ஆதிகுடிகள்தாம். ஆனால் நாற்பதுகளின் நிலவரப்படி அங்கே வசித்து வந்த யூதர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம்.
1945-ம் ஆண்டுத் தரவுகளின் அடிப்படையில் பாலஸ்தீனத்தின் மக்கள் தொகை 17 லட்சத்து 64 ஆயிரத்து 520. இதில் 10 லட்சத்து 61 ஆயிரம் பேர் முஸ்லிம்கள். ஐந்தரை லட்சம் பேர் யூதர்கள். கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட இதர பிரிவினர் சுமார் 15 ஆயிரம் பேர். கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள வரைபடத்தைக் கூர்ந்து கவனித்தால் நிலவரம் தெளிவாகப் புரியும். ஐந்தரை லட்சம் பேருக்காக ஒரு நாடா? கேள்வி வருகிறதல்லவா? அதனால்தான் பல தலைமுறைகளாகப் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்த யூதர்களை மீண்டும் பாலஸ்தீனத்துக்கு வரவழைத்தார்கள். ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்து, யூதர்களைத் தேடித் தேடிக் கொல்லத் தொடங்கியபின்பு, இந்தக் குடியேற்றம் எண்ண முடியாத அளவுக்கு உயரத் தொடங்கியது. இரண்டு காரணங்கள். என்ன இருந்தாலும் பூர்வீக மண். பிரிட்டன் நம்மை கைவிடாது என்ற நம்பிக்கை.
ஏனெனில் முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோதே, பாலஸ்தீனத்து மண்ணில் இஸ்ரேல் என்கிற யூத தேசம் உருவாவதற்கு பிரிட்டன் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டிருந்தது. 1917-ம் ஆண்டு பிரிட்டன் வெளியிட்ட ஓர் அறிக்கையில் (இதற்கு பால்ஃபொர் பிரகடனம் என்று பெயர்) இது திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.
முதல் உலகப் போர் முடிந்து முப்பதாண்டுகள் கழித்து, இரண்டாம் உலகப் போரும் நடந்து முடிந்தபின், 1948-ம் ஆண்டு பிரிட்டன் பாலஸ்தீனிலிருந்து விடைபெற முடிவு செய்தது. அப்போதுதான் யூதர்களுக்கு ஒரு பகுதி, பாலஸ்தீனத்து அரேபியர்களுக்கு ஒரு பகுதி என்று கோடு கிழித்தார்கள். வழக்கம் போலத்தான். கோணல்மாணலாக ஒரு கோடு. அதைக் கூட ஏற்கலாம். அதற்குப் பிறகு நடந்ததுதான் நம்ப முடியாத அநியாயம்.
பாலஸ்தீனத்து நிலத்தில் இஸ்ரேல் என்கிற யூத நாடு உருவானதை பாலஸ்தீன முஸ்லிம்கள் எப்படி விரும்பவில்லையோ, அதுபோன்றே சுற்று வட்டாரத்து அரபு நாடுகளும் விரும்பவில்லை. ஐ.நா.வின் அந்தப் பிரிவினைத் திட்டத்தில் இன்னொரு சிக்கல் இருந்தது. ஜெருசலேத்தையும் பெத்லஹேமையும் மேற்படி இரண்டு தரப்பிலும் சேர்க்காமல் ‘சர்வதேசப் பகுதிகள்’ என்று அறிவித்திருந்தார்கள். அதாவது, எல்லோருக்கும் பொதுவான பிராந்தியங்கள்; ஆனால் யாருக்கும் உரிமை இல்லை.
இதெல்லாம் நீடித்து நிலைக்கிற ஏற்பாடா? கொதித்துப் போன பாலஸ்தீனர்கள், இஸ்ரேல் என்கிற தேசம் பிறந்த கணத்திலேயே ஒரு யுத்தத்துக்கான அறைகூவல் விடுத்தார்கள். இது பாலஸ்தீனர்களின் பிரச்சினை மட்டுமல்ல; ஒட்டுமொத்த அரபு முஸ்லிம்களும் காலமெல்லாம் இந்த ஏற்பாட்டால் அவதிப்பட நேரிடும் என்று கருதிய ஜோர்டான், சிரியா, எகிப்து போன்ற அண்டை நாடுகள் பாலஸ்தீன முஸ்லிம்களுடன் இணைந்து இஸ்ரேலைத் தாக்குவதற்குப் படை திரட்டிக்கொண்டு வந்தன. இராக், சவுதி அரேபியா, லெபனான் ஆகிய நாடுகளும் அரபு லீக்கின் உறுப்பினர்கள் என்பதால் போரில் கலந்துகொண்டன.
இதனை முதலாவது அரபு-இஸ்ரேல் யுத்தம் என்று சரித்திரம் சொல்லுகிறது. சுமார்பத்து மாத காலம் இந்த யுத்தம் நடந்தது.சம்பந்தப்பட்ட நாடுகளின் வீர பராக்கிரமங்களெல்லாம் இதில் முக்கியமில்லை. முக்கியமானது, போரின் முடிவு.
போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. சண்டைக்கு வந்த ஒவ்வொரு அண்டை நாட்டுடனும் தனித்தனியே ஒப்பந்தம் போட்டு அது தனது நிலையைத் தக்க வைத்துக்கொண்டது. பிரிட்டன் வழங்கிய சுதந்திரம், ஐ.நா. வரையறுத்தளித்த நிலப் பிரிவினை எல்லாம் இஸ்ரேலுக்கு அப்படியே இருக்கும். தவிர, போரில் முன்னேறி வென்ற நிலப்பரப்பும் இனி இஸ்ரேலுக்கே சொந்தம். அதாவது, பாலஸ்தீன அரேபியர்களுக்கென ஒதுக்கப்பட்ட நிலத்தில் 60 சதவீதம். அந்தப் பக்கம் ஜோர்டான் நதியின் மேற்குக் கரை எல்லை வரை ஜோர்டானுக்கு சொந்தம். காசாவில் எகிப்துப் படைகள் முன்னேறி வந்து ஆக்கிரமித்த ஒரு குறிப்பிட்ட அளவு நிலப்பரப்பு எகிப்துக்குச் சொந்தம்.
சண்டை முடிந்து சமாதானமாகிவிட்டது. அனைவரும் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டுத் தூங்குங்கள்.
இப்போது உங்களுக்கு வரவேண்டிய கேள்வி, அண்டை நாடுகள் பாலஸ்தீனத்துக்கு உதவி செய்ய வந்தனவா? உருவிச் செல்ல வந்தனவா? இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டு எல்லாம் சுபம் என்று திரும்பிச் செல்ல இவர்கள் எதற்கு?
அந்த துரோகம். அதுகொடுத்த வலி. கண்ணெதிரே பாலஸ்தீனர்களின் நிலத்தை ஆளுக்குக் கொஞ்சமாகப் பிய்த்துக்கொண்டு போன அவலம். சிறு வயதில்தாயுடனும் சகோதர சகோதரிகளுடனும் அகதியாக காசாவுக்கு ஓடி வரக்காரணமாக இருந்த அந்த 1948 யுத்த காலநிலவரம். 1987 வரையிலுமே எந்த மாறுதலும் இல்லாதிருந்ததுதான் ஷேக் அகமது யாசினைவேறு விதமாகச் சிந்திக்கச் செய்தது. யாருடனும் கூட்டு சேராதே, எந்த நாட்டையும் நம்பாதே என்று சொல்ல வைத்தது. அதுதான் அவரை ஆயுதம் ஏந்தவும் வைத்தது. அவர்எடுத்ததால் ஹமாஸும் எடுத்தது. அன்று எடுத்ததுதான் இன்றுவரை வெடிக்கிறது.
(தொடரும்)
முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 2 | “நம் பிரச்சினைக்கு நாம்தான் தீர்வு, யாரையும் நம்பாதே” - இளைஞர்களை ஈர்த்த யாசினின் தத்துவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago