இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவை என அம்பேத்கர் கருதியது ஏன்? - ஹெச்.வி.ஹண்டே

By Guest Author

"பொது சிவில் சட்டம் என்பது ஒரு மதத்துக்கு எதிராக மற்றொரு மதத்தை வைப்பது அல்ல. உண்மையில், பொது சிவில் சட்டம் என்பது, ஆணாதிக்கவாதத்துக்கும், பெண் விடுதலைக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் அறப்போர். இந்தப் போரில் பெண் விடுதலை வெற்றி பெற வேண்டியது அவசியம்" என்கிறார் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான ஹெச்.வி. ஹண்டே. இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது...

பொது சிவில் சட்டம் என்பது ஏதோ பாஜக அரசு கொண்டு வர முயற்சி செய்வது போன்ற ஒரு தோற்றம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் நான்காவது பிரிவின் கீழ் 'அரசு கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள்' எனும் தலைப்பின் கீழ் உள்ள 16 சரத்துகளில் ஒன்று சட்டப்பிரிவு 44. 'இந்தியா முழுவதுமுள்ள இந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஒரே சிவில் சட்டத்தினை எய்திடச் செய்வதற்கு அரசு முயல வேண்டும்' என்று சொல்கிறது, இந்தச் சட்டப்பிரிவு 44.

அதாவது, 'பொது சிவில் சட்டம் என்பது அரசின் கொள்கையாகவும் அதனை சட்டமாக்குவது அரசின் கடமையாகவும் இருக்க வேண்டும்' என்று டாக்டர் அம்பேத்கர் நமக்கு வகுத்தளித்துள்ளதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44-ஆவது பிரிவு. இந்த 44-ஆவது பிரிவு அம்பேத்கரால் 1948-ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி அன்று 35-ஆவது வரைவு சரத்தாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அந்த அரசியல் சாசன சபையில் இருந்த இஸ்லாமிய உறுப்பினர்களில் சிலர், 'தங்களுக்கென்று தனி சிவில் சட்டத்தைக் கொண்டிருக்கும் சமூகங்களின் முன் ஒப்புதல் இல்லாமல் அவற்றை மாற்றக்கூடாது' எனும் திருத்தத்தை முன்வைத்தனர். பிறகு, அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் இந்த திருத்தம் பற்றி விவாதிக்கப்பட்ட பிறகே, தற்போதைய வடிவத்தில் 44-வது சரத்து நிறைவேற்றப்பட்டது.

விவாதத்தின் இறுதியில் அம்பேத்கர் பதில் அளித்துப் பேசும்போது, "ஏற்கெனவே நாடு முழுமைக்குமான சீரான குற்றவியல் சட்ட நடைமுறைகளும் குற்றவியல் தண்டனைச் சட்டங்களும் உள்ளன. அதேபோல், சொத்து பரிமாற்றங்களை முறைப்படுத்தும் பொதுவான சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. இன்னும் இதுபோன்ற பல பொது சட்டங்கள் வழக்கத்தில் உள்ளன. அவ்வாறு இருக்கையில், இவ்வளவு பரந்த நாட்டுக்கு ஒரே மாதிரியான சிவில் சட்ட விதிகளை உருவாக்குவது சாத்தியமா மற்றும் விரும்பத்தக்கதா என்று சபையின் உறுப்பினரான ஹூசைன் இமாம் எழுப்பியுள்ள கேள்வி எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார். இதுவரை திருமணம் மற்றும் வாரிசுரிமை ஆகிய இரண்டு விஷயங்களை மட்டுமே இன்னும் பொது சிவில் சட்டங்கள் மூலம் நெறிப்படுத்தாமல் இருப்பதாக கூறிய அம்பேத்கர், அந்த மாற்றத்தைக் கொண்டு வருவதே இந்த சரத்தின்(சட்டப்பிரிவு 44) நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

கேரளத்தின் வடக்கு பகுதிகளில் 'மருமக்கதாயம்' என்று வழங்கப்படும் தாய்வழி வாரிசுரிமை வழக்கம், இந்து, முஸ்லிம் பேதமின்றி அனைவரும் பின்பற்றுவதாக உள்ளதைக் குறிப்பிட்டு நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மதங்களுக்கு அப்பாற்பட்டு நடைமுறையில் உள்ள பழக்கங்களையும் அம்பேத்கர் மேற்கோள் காட்டினார். எனவே, பொது சவில் சட்டத்துக்கு எதிரான இந்த திருத்தங்களை ஏற்க இயலாது என்று ஆணித்தரமாக அம்பேத்கர் கூறினார். பிறகு, 23.11.1948 அன்று பொது சவில் சட்டம் குறித்த 44-வது சரத்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த விவாதங்களில் இருந்து நம் அரசியல் அமைப்பை உருவாக்கித் தந்தவர்களின் (அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பாபு ராஜேந்திர பிரசாத் உள்பட) சிந்தனையை மிகவும் தெளிவாக தெரிந்து கொள்ள இயலும்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தன் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளது. பரவலாக அறியப்படும் ஷாபானு வழக்கு இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஒரு வழக்கறிஞராக இருந்த தன் முஸ்லிம் கணவரால் கைவிடப்பட்ட இஸ்லாமிய பெண்ணான ஷாபானு, 1975-இல் வீட்டை விட்டு கணவரால் வெளியேற்றப்படுகிறார். வெளியேற்றப்பட்ட மனைவிக்கு தன் திருமணம் மூலம் ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருந்தன. ஏப்ரல் 1978-இல் Indian Penal Code பிரிவு 125-ன் கீழ் ரூ.500 ஜீவனாம்சம் கேட்டு ஷாபானு, இந்தூர் (Indore) நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். நவம்பர் 1978-ல் கணவர் மொஹம்மத் அகமது, முத்தலாக் மூலம் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மனுதாரர் ஷாபானு இப்போது தன் மனைவி என்ற நிலையில் இல்லை என்பதால் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியதில்லை என்று வாதிடுகிறார்.

ஆகஸ்ட் 1979-ல் மாஜிஸ்திரேட், ஷாபானுவுக்கு பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.25 தரும்படி உத்தரவிடுகிறார். ஜூலை 1980-ல் தாக்கல் செய்த சீராய்வு விண்ணப்பத்தில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், பராமரிப்புத் தொகையை மாதத்திற்கு ரூ.179.20 ஆக உயர்த்தியது. இப்படி கீழ் நீதிமன்றத்தில் இருந்து ஒவ்வொரு படியாகக் கடந்து 10 வருடங்கள் போராடி இறுதியாக 1985-இல் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்கிறார் ஷாபானு. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி தலைமையிலான அமர்வு, தன் கணவனால் கைவிடப்பட்ட பெண் ஷாபானுவுக்கு ஆதரவாக ஜீவனாம்சம் தர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் கணவர், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125, ஷரியத் சட்டத்திற்கு முரணானது என்பதால், மேற்கண்ட தீர்ப்பு முஸ்லிம்களுக்கு பொருந்தாது என கூறி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125, ஒருவரது மதம் சார்ந்த தனிப்பட்ட சட்டத்தைத் தாண்டி, அனைத்து நபர்களுக்கும் பொருந்தும் என்று தீர்ப்பளித்தது. கணவரின் மனுவை நிராகரித்தது.

அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் (1985 AIR பக்கம் 946-955 உச்ச நீதிமன்றம்) இந்த மேல்முறையீடு, முஸ்லிம் பெண்களுக்கு என்று இல்லாமல் பொதுவாகவே பெண்களுக்கு எதிரான பாலினம் சார்ந்த அடக்குமுறைகளும், பாகுபாடுகளும் இல்லாத சமுதாயத்தை உருவாக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு நேரடியான சவாலை எழுப்புகிறது என்றும், அந்த திசையில் மனித குலம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்ற நம்பிக்கை பொய்யாகிவிடும் என்றும் தெளிவாக குறிப்பிடுகிறார்.

மேலும், நாட்டின் குடிமக்களுக்கு ஒரு சீரான பொது சவில் சட்டத்தை அளிக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றும், மதம் சார்ந்த மற்றும் முரண்பட்ட சித்தாந்தங்களால் கட்டமைக்கப்பட்ட தனிப்பட்ட சட்டங்கள் மேல் உள்ள விசுவாசம் அகற்றப்பட வேண்டும் என்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பொது சிவில் சட்டம் அவசியம் என்றும் அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் கூறியுள்ளார். இவர், தற்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் தந்தை.

ஆனால், 1986-ல் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, இந்தத் தீர்ப்பை முறியடிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றியது. முஸ்லிம் பெண்கள் விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரிலான அந்த சட்டத்தின் மூலம், விவாகரத்து செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது முன்னாள் கணவர், ஷரியத் சட்டப்படி அல்லாமல் குற்றவியல் நடைமுறை 125வது விதியின் கீழ் தாங்கள் நிர்வகிக்கப்பட தயாராக இருக்கிறோம் என்று நீதிமன்றத்தில் விண்ணப்பிப்பதை கட்டாயமாக்கியது. அப்போதுதான் விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் மனைவி, தன்னை விவாகரத்து செய்த முஸ்லிம் கணவரிடம் இருந்து பராமரிப்பு உதவித் தொகையைப் பெற முடியும் என்ற நிலையை உருவாக்கியது இந்த புதிய சட்டம்!

தன் மனைவியை ஷரியத் சட்டப்படி விவாகரத்து செய்த கணவன், எப்படி தன் சுயநலத்துக்கு எதிரான ஒரு சிவில் சட்டத்துக்கு ஒப்புக்கொள்வான் என்பதை துளியும் சிந்திக்கவே இல்லை, இந்த புதிய சட்டத்தைக் கொண்டு வந்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி. ''இதன் மூலம், ராஜீவ் காந்தி ஒட்டுமொத்த பெண்களின் கண்ணியம், பாலின சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையையே அடித்துவிட்டார்'' என்று சாடி, ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் இருந்த ஆரிப் முகமது கான் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இவர் தற்போது கேரள ஆளுநராக உள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யும் விதமாக புதிய சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் அம்பேத்கரால் மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்ட 44வது சரத்தையும் ராஜீவ் காந்தி அழித்தார். அதுமட்டுமல்லாமல், 1986-ல் கொண்டு வந்த இந்த பிற்போக்குச் சட்டம் குறித்து அரசியலமைப்பு வழக்கறிஞர் டி.டி.பாசு கூறுகையில், "இந்தச் சட்டம் 1976-ல் இந்திரா காந்தி, பெண்களின் பாதுகாப்புக்காகக் கொண்டு வந்த சரத்து 51-A-க்கு நேர் எதிரானது" என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த சிறந்த சட்ட நிபுணர்களின் கருத்துக்கள் சிலவற்றை தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். லக்னோவைச் சேர்ந்த பெரும் வழக்கறிஞர் சவுத்ரி ஹைதர் ஹூசைன் 1949ல், A Unified Code for India என்ற தலைப்பில், "இரண்டு நூற்றாண்டுகளாக ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வாழ்ந்த நாம், இந்துக்கள் இந்து சட்டத்தால் ஆளப்படுவதும், முஸ்லிம்கள் முஸ்லிம் சட்டத்தால் ஆளப்படுவதும் இயற்கையானது என்று கருதி வந்தோம். ஆனால், நவீன உலகில் இதற்கு இடமில்லை. பிரான்சில் வாழும் அனைவரின் உறவுகளையும் நிர்வகிக்கும் நெப்போலியன் விதிகளை வைத்திருந்தார்கள். அதேபோல், ஜெர்மன் சிவில் சட்டம் என்றும், இன்னும் பல நாடுகளில் பலவற்றையும் வைத்திருந்தார்கள்.

ஆனால், முன்னேறிய அந்த நாடுகள் இப்படிப்பட்ட தனி சட்டங்களை விட்டு, தற்போது ஒரே சீரான பிராந்திய சட்டங்களை வைத்துள்ளனவே தவிர, நம் நாட்டில் உள்ளது போல சமூகங்கள் சார்ந்த தனிப்பட்ட சட்டங்கள் வைத்திருக்கவில்லை. உண்மையில் நம் நாட்டில் கூட பெரும்பாலான சட்டங்கள் பொதுவானவை. அவற்றில் இருந்து யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. எனவே, இந்திய தேசத்தின் எல்லைக்குள் வாழும் அனைவருக்கும் சாதி, மத பேதங்கள் இல்லாமல் அனைவருக்கும் பொருந்தும் ஒரு பொது சிவில் சட்டத்தை வைத்திருப்பதன் அவசியத்தை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். இதுவே மதவாத இனவாத பிரச்சினைகளுக்கான சட்டரீதியான தீர்வு. நாட்டில் ஒரே சட்டத்தின் மூலம் ஒரே தேசத்தை தட்டியெழுப்புவதற்கு இது முற்றிலும் இன்றியமையாதது" என தெரிவித்துள்ளார்.

சில வருடங்கள் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் இருந்த தீவிர மதச்சார்பின்மை கொள்கை உடையவராகவும் பெரும் தேசியவாதியாகவும் விளங்கிய முன்னாள் தலைமை நீதிபதி எம்.சி. சாக்லா, மார்ச் 1973-ல் வெளியான தனது Plea for a Uniform Civil Code எனும் கட்டுரையில், "அரசு கொள்கைகளை கட்டுப்படுத்தும் ஒரு கட்டாய பிரிவான அரசியல் சாசனத்தின் 44ம் சரத்து நடைமுறைப்படுத்த அரசு கடமைப்பட்டுள்ளது. அரசியலைப்புச் சட்டம், முழு நாட்டுக்குமாக இயற்றப்பட்டது. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரிவினரும், சமூகமும், அதன் விதிகள் மற்றும் அதன் உத்தரவுகளை ஏற்றாக வேண்டும்.

உண்மையில், 'முஸ்லிம் பெண்கள் விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு' என்ற போர்வையில் 1986ல் ராஜீவ் காந்தியால் கொண்டு வரப்பட்ட மசோதா மீதான விவாதத்தின்போது அன்றைய சட்ட அமைச்சரால் சிறுபான்மை சமூகத்தினரின் தனிப்பட்ட சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவதைப் பற்றி பேசும்போது, சம்பந்தப்பட்ட சமூகத்தினரே அந்த கோரிக்கையை முன்வைத்து ஆதரிக்கும் வரை அரசாங்கம் காத்திருக்க விரும்புகிறது என்று சொல்லப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது இத்தகைய அணுகுமுறையை புரிந்து கொள்ளலாம்.

ஆனால், சுதந்திரம் அடைந்து 39 ஆண்டுகளுக்குப் பிறகும் உலகளாவிய அளவில் சமூக நீதி எனும் முழக்கம் ஒலிக்கும் இந்த நவீன காலத்திலும் அதனை ஏற்றுக்கொள்ள இயலாது. தேசம் முழுமைக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்துதல், அரசின் முயற்சியாக இருக்க வேண்டும் என்று 44ம் சரத்து சொல்கிறது. பொது சிவில் சட்டத்தை இயற்றுவதில் எதிர்கொள்ளக் கூடிய பெரும் சிரமங்கள் குறித்து நம் அரசியல் சாசன ஸ்தாபகர்கள் நன்கு உணர்ந்தே இருந்தனர். ஆனால், சிரமங்கள் இருந்தபோதிலும் ஒரே மாதிரியான சிவில் சட்டங்களை அமல்படுத்த உதவும் சில நடைமுறை வழிகளைக் கண்டறிய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றத்தின் 17 Lawyers Chambers-ஐ சேர்ந்த பிரபல வழக்கறிஞர் எம். ரஃபிக், Right to maintenance under Muslim law; A Legalistic view என்ற தனது கட்டுரையில், "விவாகரத்து செய்துவிட்ட மனைவிக்கு முஸ்லிம் கணவனால் தரப்பட வேண்டிய ஜீவனாம்சம் பற்றி ஷாபானு வழக்கு மூலம் நிறைய பேசப்பட்டும், எழுதப்பட்டும் விட்டது. ஜீவனாம்சம் பற்றிய ஷரத்துகள் 1973 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 125, 128 பிரிவுகளில் சொல்லப்பட்டுள்ளன.

சட்டத்தின் பார்வையில் பார்க்கும்போது ராஜீவ் காந்தி கொண்டு வந்த முஸ்லிம் பெண்கள் விவாகரத்து பாதுகாப்புச் சட்டம் 1986 என்பது, முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கும் வகையில் இல்லாமல் அவர்களது நிலையை பல நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்று விடவே வகை செய்துள்ளது. மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் ஏன் நம்மால் பொது சிவில் சட்டம் கொண்டு வர முடியாது? அல்லது நாம் நம் மதச்சார்பற்ற தன்மையை படிப்படியாக இழந்து வருகிறோமா?" என்று கூறியுள்ளார்.

ஹெச்.வி.ஹண்டே

இந்துக்கள் இடையேயும் உடன்கட்டை ஏறுதல், வரதட்சிணை, ஒரு சார்பான வாரிசுரிமை போன்ற வழக்கங்கள் இருந்தன. ஆனால், இந்தியா விடுதலை அடைந்த சிறிது காலத்திலேயே பெண்கள் மீதும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் செய்யப்பட்ட அக்கிரமங்களை பல சட்டங்கள் மூலமாக ஒழிக்கப்பட்டன. இந்த விஷயத்தில், இன்னமும் நாம் செய்ய வேண்டிய வேலை நிறைய உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தலாக் மற்றும் பலதார மணம் (எந்த மதமானாலும்) ஆகியவற்றைவிட பெண்களுக்கு பெரும் அவமானங்கள் செய்ய வேறு எதுவும் இல்லை. கடந்த அரை நூற்றாண்டில் முற்போக்கான முஸ்லிம்கள், குறிப்பாக முஸ்லிம் பெண்கள் நவீன நாகரிக கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட பொது சிவில் சட்டத்தை வெகுவாக ஆதரித்து வருகின்றனர்.

பொது சவில் சட்டம் என்பது முஸ்லிம்களின் நலனுக்கு எதிரானது என்பது முற்றிலும் தவறான பிரச்சாரம். சொல்லப்போனால், பொது சிவில் சட்டம் அனைத்து பெண்களையும் அவமதிப்புகள், சமத்துவமின்மை ஆகிய சித்ரவதைகளில் இருந்து காப்பாற்றுகிறது. மலேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகள், தங்களின் சிவில் சட்டங்களை நாடு முழுமைக்கும் பொதுவாக வைத்துள்ளன.

உலகில் வெவ்வேறு சமூகங்களுக்கு என்று தனித்தனியாக சட்டங்கள் நடைமுறையில் வைத்துள்ள ஒரு நாடும் இல்லை. கம்யூனிஸ்டுகளும் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் ஆதர்சமாக கருதும் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் கூட தங்கள் நாடு முழுமைக்கும் பொதுவான சிவில் சட்டங்களைத்தான் நடைமுறையில் வைத்துள்ளன என்பதை கம்யூனிஸ்ட் நண்பர்கள் உணர வேண்டும்.

பொது சிவில் சட்டம் என்பது ஒரு மதத்துக்கு எதிராக மற்றொரு மதத்தை வைப்பது அல்ல. உண்மையில், பொது சிவில் சட்டம் என்பது, ஒருபுறம் ஆணாதிக்கவாதத்துக்கும், மற்றொருபுறம் பெண்கள் விடுதலைக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் அறப்போர். இந்தப் போரில் பெண்கள் விடுதலை வெற்றி பெற வேண்டியது அவசியம். இதனை நன்கு உணர்ந்து தான் 70 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் அம்பேத்கர், இந்திய அரசியல் சாசன சபையில், 44வது சரத்தின் மூலமாக நம்முடைய நாட்டுக்கு பொது சிவில் சட்டத்தை அன்றைய காங்கிரஸ் கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் கொண்டு வந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்