"வாதங்கள் எதுவாக இருப்பினும் ஒரேசீரான சிவில் சட்டம் நிறைவேற்றப்படுமானால் அது வரவேற்கத்தக்கது. நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் சொன்னதைப் போல இது மக்கள் முன்னால் தேர்தல் அறிக்கையில் வைத்து அவர்களது ஆணை பெறப்பட்டுள்ளது. பாஜக 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் தனது தேர்தல் அறிக்கையில் இதை முன்வைத்துள்ளது. எனவே அது இதை நிறைவேற்றக் கடமைப்பட்டது." என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன். பொது சிவில் சட்டம் குறித்து இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது:
பாடப் புத்தகங்கள் சொல்லாத பல வரலாறுகள் உண்டு. அவற்றில் ஒன்று இந்தியா சுதந்திரம் பெற்று மிகச் சில ஆண்டுகளிலேயே இந்தியாவின் முதல் பிரதமருக்கும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவருக்கும் இடையே முரண்பாடுகள் முற்றி, ‘இந்தச் சட்டம் இயற்றப்பட்டால் நான் ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று குடியரசுத் தலைவர் சொல்கிற அளவிற்குச் சென்றது என்பதும் ஒன்று. இன்னொரு புறம், அதே கால கட்டத்தில், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், ‘பிரதமரிடம் நேர்மை இருக்கிறது ஆனால் துணிவு இல்லை’ எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி தன் பதவியை ராஜினாமா செய்தார் என்பது இன்னொரு நிகழ்வு.
இங்கு குறிப்பிடப்படும் குடியரசுத் தலைவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேட்கர். குறிப்பிடப்படும் சட்டம், ஹிந்து கோட் பில் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் ஹிந்து சட்ட முன்வடிவு. இந்துக்களின் பாரம்பரிய சொத்துக்களின் மீதான உரிமை, திருமணம், மணவிலக்கு, தத்தெடுத்தல் போன்றவற்றில் பெரும் திருத்தங்களை முன் மொழிந்தது இந்தச் சட்ட முன்வடிவு.
துல்லியமாகச் சொல்வதானால் இந்த முன்வடிவு குறித்து ராஜேந்திர பிரசாத்திற்கும் நேருவிற்குமிடையேயான மோதல், ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் முன்னரே, இந்தியா சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே, தொடங்கி விட்டது. இந்த சட்ட முன்வடிவு அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அவையின் முன் 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி வைக்கப்பட்டது. அதை முன் மொழிந்தவர் நேரு. அப்போது சுதந்திரமடைந்து ஓராண்டு கூட ஆகியிருக்கவில்லை. அந்த சமயத்தில் அரசமைப்புச் சட்ட அவையின் தலைவராக இருந்த, ராஜேந்திர பிரசாத். இது குறித்த விவாதங்களின் போது அவையைத் தானே தலைமையேற்று நடத்துவது என்பதில் உறுதியாக இருந்தார். சட்டம் நிறைவேறவில்லை. மாறாக அது செலக்ட் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. நேரு ஏமாற்றமடைந்தார்.
» பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு இது பொருத்தமான காலம் அல்ல: உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி விமலா
அதன்பின் நேரு ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராக விரும்பவில்லை. மாறாக ராஜாஜியை குடியரசுத் தலைவராக்க விரும்பினார். அதற்காக நேரு உண்மையை மறைத்து அதற்கு மாறாகவும் செயல்பட்டார். 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி, நேரு ராஜேந்திர பிரசாத்திற்கு எழுதிய கடிதத்தில், குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்துத் தான் படேலிடம் பேசிவிட்டதாகவும், ராஜாஜியை வேட்பாளராகத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். ராஜேந்திர பிரசாத் இதற்குக் கடுமையான மறுமொழி அளித்து அதன் நகலை படேலுக்கும் அனுப்பினார். இதைச் சற்றும் எதிர்பாராத நேரு திகைத்துப் போனார். உடனடியாக பிரசாத்திற்கு பதில் கடிதம் அனுப்பினார். அதில் நான் எழுதியதற்கும் படேலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பற்றி படேலுக்கு எதுவும் தெரியாது” என்று அதில் கூறினார்.
அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த 489 இடங்களுக்கு நடைபெற்ற 1952 தேர்தலில், காங்கிரஸ் 364 இடங்களில் வெற்றி பெற்றது. மாநிலங்களிலும் காங்கிரசே வெற்றி பெற்றது. அதையடுத்து நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ராஜேந்திர பிரசாத் நிறுத்தப்பட்டார். ராஜாஜியை கட்சி ஏற்கவில்லை பிரசாத் மிகச் சுலபமாக வென்றார். நேருவிற்கு இரண்டாம் முறையாக ஏமாற்றம் அந்தத் தேர்தலில் 65 எம்.பிக்களும், 479 எம்.எல்.ஏக்களும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மீண்டும் இரண்டாவது குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரசாத் நிற்பதற்கு முட்டுக்கட்டை போட முயன்றார் நேரு. அந்தத் தேர்தலில் அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணனை ஜனாதிபதியாக்க முனைந்தார், ஆனால் மெளலானா ஆசாத் போன்றவர்கள் அந்த யோசனையை ஆதரிக்கவில்லை. கட்சியும் அதை ஏற்கவில்லை. ஏமாற்றமடைந்த ராதாகிருஷ்ணன், தன் ராஜினாமாவை சமர்ப்பித்தார். அந்தத் தேர்தலிலும் ராஜேந்திர பிரசாத் மீண்டும், ஜனாதிபதியானார். நேருவிற்கு மீண்டும் ஏமாற்றம். ராதாகிருஷ்ணனை மறுபடியும் துணை ஜனாதிபதியாக்கி அவர் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியிருந்தது.
ராஜேந்திர பிரசாத்திற்கும் நேருவிற்கும் ஏற்பட்ட மோதல்கள் ஒருபுறம் என்றால் மறுபுறம் அம்பேட்கருக்கும் நேருவிற்கும் இடையே முரண் ஏற்பட்டு, அவர் அமைச்சரவையிலிருந்து வெளியேறித் தனிக்கட்சி காணும் நிலையும் இந்தச் சட்ட முன்வடிவால் ஏற்பட்டது. ராஜேந்திரப் பிரசாத்தைப் போலன்றி அம்பேத்கரும் நேருவும் கருத்தியல் ரீதியாகப் பெரிதும் முரண்பட்டவர்கள் அல்ல. நவீனமான, முற்போக்கான, இந்தியாவைக் கட்டமைக்க வேண்டும் என்பதில் அவர்களுக்குக் கருத்தொற்றுமை இருந்தது. ஆனால் அவர்கள் முரண்பட்டுப் பிரிவதும் நடந்தது.
அரசமைப்புச் சட்ட அவையின் செலக்ட் கமிட்டிக்கு சட்ட முன்வடிவு அனுப்பப்பட்டதல்லவா, அந்தக் குழுவின் தலைவராக அப்போது சட்ட அமைச்சராக இருந்த அம்பேட்கர் நியமிக்கப்பட்டார். அவர் அதில் பல திருத்தங்களை முன்மொழிந்திருந்தார். பலதார மணத்திற்குத் தடை, பாரம்பரியச் சொத்தில் மகனுக்கு உள்ளதைப் போன்றே விதவையான அவன் மனைவிக்கும் உரிமை, கலப்புத் திருமணம், மணவிலக்கு போன்ற திருத்தங்கள் இடம் பெற்றிருந்தன.
மசோதா கடும் எதிர்ப்பிற்குள்ளாயிற்று. இந்தத் திருத்தங்களை எதிர்த்தவர்கள் ஆயிரக்கணக்கில் நாடாளுமன்றத்திற்கு முன் கூடி, அடையாள பூர்வ எதிர்ப்பாக நேரு அணிவதைப் போன்ற காந்திக் குல்லாய் அணிந்து சென்று, அதை எரித்தனர். காங்கிரசின் பெண் தலைவர்களும் கூட இதை ஆதரிக்கவில்லை. இந்த மசோதாவைத் திரும்பப் பெறவில்லை என்றால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று சரோஜினி நாயுடு அறிவித்தார். அரை மனதான மசோதா, இதனால் பிரயோசனமில்லை என்றார் சுசேதா கிருபளானி. ராஜேந்திரப் பிரசாத், “புதிய கருத்தியல்கள், புதிய எண்ணங்கள், இந்துச் சட்டத்திற்கு அன்னியமானவை மட்டுமல்ல, அவை ஒவ்வொரு குடும்பத்தையும் சீர் குலைத்துவிடும். நான் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன், இந்தச் சட்டம் குறித்து கட்சியின் காரியக்கமிட்டியிலோ, பொதுக்குழுவிலோ விவாதிக்கப்படவில்லை. இது போன்ற பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் முன் அவற்றை மக்கள் முன் வைத்து அவர்களின் ஆணையைப் பெற வேண்டும். அடுத்த சில மாதங்களில் தேர்தல் வரவிருக்கிறது. இதை தேர்தல் அறிக்கையில் வைத்து மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பின் பரிசீலிக்கலாம்” என்று கடுமையான கடிதம் ஒன்றை 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி எழுதினார்.
சட்டம் நிறைவேறுவதற்கான சூழல் இல்லை என்பதாலும் தேர்தல் வெற்றியை அது பாதிக்கக் கூடும் என்று கருதிய நேரு சட்டம் நிறைவேறுவதைத் தள்ளிப் போட்டார். அதில் அம்பேட்கர் கடும் கோபமடைந்தார். அவர் தான் எழுதிய அரசமைப்புச் சட்டங்களுக்கு நிகரானவை இந்தச் சீர்திருத்தங்கள் என்று கருதினார். அவற்றைச் சட்டமாக நிறைவேற்றிக் கொடுப்பது நேருவின் கடமை, பொறுப்பு என்று எண்ணினார். “இதில் நான் எவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும், இதை நிறைவேற்ற என் சக்திக்குட்பட்டது அனைத்தையும் செய்வேன்” என்று 1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நேரு கடிதம் மூலம் அவருக்கு உறுதி அளித்திருந்ததால் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் அதில் நேரு போதிய அக்கறை காட்டவில்லை என்பது அவருக்கு சினமூட்டியது. இது, ”நகைப்பிற்குரியது,கோழைத்தனமானது, அவமானப்படுத்துவது” என்று சாடிய அவர், “சாணிக் குவியலின் மேல் மாளிகை எழுப்ப முடியாது!” என்று சொல்லி, 1951ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர் சொன்னது: “பிரதமர் நேர்மையானவர். ஆனால் போதுமான துணிவு இல்லாதவர்”.
நேருவின் துணிவை கேள்வி கேட்ட இன்னொருவர், நிர்மல் குமார் சட்டர்ஜி. ஹிந்து மகாசபையின் தலைவர்களில் ஒருவர் (இவர் மகன் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பது வரலாற்றின் விசித்திரங்களில் ஒன்று) நிர்மல் குமார் சட்டர்ஜி கேட்டார், “பொது சிவில் சட்டம் இயற்றலாம் என அரசமைப்புச் சட்டத்தில் கூறியிருக்கிறதே, அப்படியிருக்க ஏன் இந்து மதத்தை மட்டும் குறி வைத்து இந்தச் சட்டம்? இந்த அரசுக்கு முஸ்லீம் சமூகச் சட்டங்களைத் தொடத் துணிவுண்டா?” நேருவின் துணிவின்மையையோ, அல்லது பலவீனங்களையோ அல்லது அவரே படேலுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது போல, ‘நான் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டேன், நம் எம்.பிகளே என்னுடன் இல்லை” என்ற ஆற்றாமையையோ மட்டும் ஹிந்து சட்ட முன்வடிவு வெளிப்படுத்தியதாக நான் கருதவில்லை. அரசியல் நெருக்கடி காரணங்களாலோ அவரது - இன்னும் சொல்லப்போனால் நம் மதிப்பிற்குரிய பல தலைவர்களின் - இரட்டை நிலையை அது வெளிப்படுத்தியது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
அரசமைப்புச் சட்ட அவை 1948ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியே “இந்தியா முழுவதுமுள்ள குடிமக்களுக்காக பொது சிவில் சட்டம் இயற்ற அரசு முயற்சிக்கும்” என்ற அரசமைப்புச் சட்டத்தின் 35ஆவது பிரிவை நிறைவேற்றி விட்டது. அது நேரு அரசிற்கு பொது சிவில் சட்டம் இயற்றும் வாய்ப்பைக் கொடுத்தது. எனினும் எல்லா மதங்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் இயற்றும் முயற்சியில் அவர் இறங்கவில்லை. மாறாக அதன் பின்னும் 1951 வரையிலும் இந்துக்களுக்கான சட்டத்தில் மட்டும். திருத்தங்கள் செய்வதில் தீவிரமாக இருந்தார்.
அரசமைப்புச் சட்ட அவையில் பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தின் போது பேசிய முஸ்லீம் உறுப்பினர்கள், முஸ்லீம் தனிச் சட்டம் (Muslim Personal Law) நாடு முழுக்க ஒரே சீராக இருக்கிறதென்றும், நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் அதைச் செயலற்றதாக்க முடியாதென்றும் பேசினார்கள். அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய அம்பேட்கர், 1935 வரை வடமேற்கு எல்லை மாகாணத்தில் முஸ்லீம் தனிச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்றும், இந்துச் சட்டமே நடைமுறையில் இருந்தது என்றும், அங்கு மட்டுமல்ல, மத்திய மாகாணம், ஐக்கிய மாகாணம், மும்பை மாகாணம் ஆகிய மாகாணங்களிலும் வாரிசுரிமை விஷயத்தில் 1935வரை இந்துச் சட்டமே பின்பற்றப்பட்டதென்றும் ஷரியத் சட்டம் அல்ல என்றும் சுட்டிக் காட்டினார். வடக்கு மலபாரில் அமலில் உள்ள மருமக்கள்தாயம் என்ற சட்டம் இந்துக்கள் முஸ்லீம்கள் எல்லோருக்குமானது என்றும் அங்கு முஸ்லீம்கள் மருமக்கள்தாயத்தையே பின்பற்றி வருவதாக கருணாகர மேனன் குறிப்பிடுவதையும் சுட்டிக் காட்டினார். எனவே நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது என்ற கூற்று ஏற்கத்தக்கதல்ல என்றும் சொன்னார். அதை விட அவர் சொன்ன இன்னொரு கருத்து முக்கியமானது. “ஒருவேளை, அவர்கள் மதம் எதுவாக இருப்பினும், எல்லாக் குடிமக்களுக்கும் பொருந்தக் கூடிய ஒரு சிவில் சட்டத்தை உருவாக்கும் நோக்கத்திற்குத் தேவைப்படுமெனில், இந்துச் சட்டத்தின் சில பகுதிகள் அதில் சேர்க்கப்படும். அதற்குக் காரணம் அவை இந்துச் சட்டம் என்பதால் அல்ல, அவை மிகப் பொருத்தமானவை என்பதால்” என்றார் அம்பேட்கர். இது 1948 நவம்பர் 23ஆம் தேதி.
ஆனால் அதே அம்பேட்கர், அதே அவையில், பத்து நாட்களுக்குப் பிறகு. அதாவது 1948ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி, பேசுகிறபோது,”முஸ்லீம் சமூகம் கிளர்ந்தெழும் வகையில் எந்த ஓர் அரசும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தாது. அப்படிச் செய்தால் அது ஒரு பைத்தியக்கார அரசாங்கமாகத்தான் இருக்கும்.” என்றார். ஹிந்துச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டால் அதற்கு நான் ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று சொன்ன ராஜேந்திர பிரசாத், 1956-57ல், அந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களை நான்காகப் பிரித்து நான்கு சட்டங்களாக நாடாளுமன்றம் இயற்றிய போது அதற்கு ஒப்புதல் அளித்தார்.
அண்மையில் போபாலில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது பிரதமர் மோடி, எல்லாக் குடிமக்களுக்கும் ஒரே சீரான சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பேசியிருப்பதால் இப்போது அது குறித்த விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது. அந்த விவாதத்தில் முன்பு, இந்து சட்ட முன்வடிவு விவாதத்தில் கேட்ட அதே வாதங்கள் மீண்டும் ஒலிப்பதைக் கேட்ட போது ஞாபகத்தில் எழுந்த வரலாற்றை மேலே நினைவு கூர்ந்திருக்கிறேன். அதே வாதங்கள், அதே குரல்கள், ஆனால் பாத்திரங்கள்தான் வேறு. ஹிந்து சட்ட முன்வடிவு விவாதத்தில், மதம் மனிதர்களுடைய தனிப்பட்ட விஷயம், அதில் அரசு தலையிடக் கூடாது, பல நூறாண்டு காலமாகப் பின்பற்றப்படும் வழக்கங்களை மாற்றக் கூடாது, இது சட்டமாக இயற்றப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என்ற வாதங்கள் இந்து அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டன. அதே வாதங்கள் இப்போது முஸ்லீம் அமைப்புகளால் வைக்கப்படுகின்றன.
வாதங்கள் எதுவாக இருப்பினும் ஒரேசீரான சிவில் சட்டம் நிறைவேற்றப்படுமானால் அது வரவேற்கத்தக்கது. ராஜேந்திர பிரசாத் சொன்னதைப் போல இது மக்கள் முன்னால் தேர்தல் அறிக்கையில் வைத்து அவர்களது ஆணை பெறப்பட்டுள்ளது. பாஜக 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் தனது தேர்தல் அறிக்கையில் இதை முன்வைத்துள்ளது. எனவே அது இதை நிறைவேற்றக் கடமைப்பட்டது. இதன் பின்னுள்ள அரசியல் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இது பாலின சமத்துவத்திற்கு வழிகோலும் என்ற ஒரு காரணமே இதை வரவேற்க எனக்குப் போதுமானது. அனேகமாக மதங்கள் எல்லாமும் பெண்களை உயர்வாகப் பேசுகின்றன, ஆனால் குழந்தை மணம், சதி, பலதார மணம், விதவைகளை அலங்கோலப்படுத்தல், வரதட்சிணை, பாரம்பரியச் சொத்தில் பெண்களுக்கு உரிமை மறுப்பு, முத்தலாக், மணவிலக்கு மறுப்பு, பெண் குழந்தைகளைத் தத்தெடுத்தல் போன்று பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் யாவும் மதங்களின் பெயரால் நடத்தப்பட்டன என்பதும் வரலாறு.
இரண்டு சம்பவங்கள் நினைவிற்கு வருகின்றன. என்னுடைய தில்லி நண்பர் சொன்னது இது: பர்வீனுக்கு இரண்டு சகோதரிகள். உடன் பிறந்த சகோதரர் யாரும் இல்லை. அவரது பெற்றோர் பெற்றெடுத்தது மூன்று மகள்களை மட்டுமே. உயில் ஏதும் எழுதி வைக்காமல், அவரது தந்தை இறந்து போனார். பணத் தேவைகளுக்காகப் பர்வீன் தனது பூர்வீக வீட்டை விற்க முயன்றார், ஆனால் முடியவில்லை. காரணம், அவர் அந்தப் பூர்வீக வீட்டை, அவர் ஆண் வாரிசு இல்லாததால், அவரது தந்தையின் சகோதரர்களின் சம்மதம் இல்லாமல் விற்கமுடியாது என இஸ்லாமியச் சட்டம் கூறுகிறதாம். “அவர் ஆணாகவோ அல்லது வேறு மதத்திலோ பிறந்திருந்தால் அவருக்கு இந்தப் பிரச்சினை இருந்திருக்காதல்லவா? அவர் எந்த மதத்தில் என்னவாகப் பிறக்க வேண்டும் என்பதை அவரா தீர்மானித்தார்?” என்று நண்பர் கேட்டார். என்னிடம் பதில் இல்லை.
இன்னொரு சம்பவம்: ‘வீட்டை விட்டு வெளியே போ, உனக்கு சொத்தெல்லாம் தரமுடியாது’ எனச் சகோதரர் சொன்னபோது, மேரிக்குத் திகைப்பாகத்தான் இருந்திருக்கும். ஆனால் கணவனை இழந்திருந்த அவர் தனது மகள் அருந்ததி, மகன் லலித் ஆகியோருடன் ஊட்டியிலிருந்த அவரது பூர்விக வீட்டிலிருந்து வெளியேறினார். அப்போது அவர் ஒரு சட்டப் புரடசிக்கு வித்திடப் போகிறோம் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்.
கோட்டயத்தில் உள்ள தங்கள் குடும்பத்தின் பூர்வீகச் சொத்தில் தனக்குப் பங்குதர வேண்டும் என அவர் கோரினார். சட்டப்படி கொடுக்க வேண்டியது ஏதும் இல்லை என்றார் அவர் சகோதரர். அவர் சொன்னது சட்டப்படி சரிதான். 1911ஆம் ஆண்டு இயற்றப்பட்ட திருவாங்கூர் கிறிஸ்தவ வாரிசுரிமைச் சட்டத்தின்படி, ஒருவர் உயிலெழுதி வைக்காமல் இறந்து போனால், அவரது சொத்து முழுவதும் மகனுக்குரியது. பெண்களுக்கு சீதனம் கொடுத்து விட்டால் அவர்களுக்கு உரிமை கிடையாது. சீதனம் ரூ 5000க்கு மேல் இருக்கக் கூடாது.
இந்தச் சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார் மேரி. 1986ஆம் ஆண்டு நீதிபதி பகவதி தலைமையிலான அமர்வு திருவாங்கூர் கிறிஸ்தவ வாரிசுரிமைச் சட்டம் செல்லாது எனத் தீர்ப்பளித்தது. அப்போதும் கூட ஆணும் பெண்ணும் சமம் என அரசமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு சொல்கிறதே, அந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்தியாவுடன் இணைந்த பின்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சட்டங்கள் செல்லுபடியாகாது என்ற தொழில்நுட்பக் காரணத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பு அது அளிக்கப்பட்ட முந்தைய காலங்களுக்கும் பொருந்தும் எனச் சொல்லிற்று. அதற்குப் பெரும் எதிர்ப்பு எழுந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இருந்த இந்த அம்சத்தைச் செயலற்றுப் போகும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. பி.ஜே. குரியன் ஒரு மசோதா கொண்டு வந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. பின்னர் இதே விஷயத்தை முன்னிறுத்தி கருணாகரன் தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியது. ஆனால் அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை. அதை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அங்கு அது தள்ளுபடியானது.
இந்த மேரி ராய்தான் அருந்ததிராயின் தாய். அவரது சட்டப் போராட்டத்தின் காரணமாக கேரள கிறிஸ்துவப் பெண்களுக்கு இருந்த ஒரு தடை தகர்ந்தது. சாதிகளின் அடிப்படையில் பாரபட்சம் கூடாது என்பதில் எவ்வளவு நியாயம் இருக்கிறதோ அதே நியாயம், மதங்களின் அடிப்படையிலும், பாலினங்களின் அடிப்படையிலும் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதிலும் உண்டு. எல்லாம் சரி, ஆனால் சீரான பொது சிவில் சட்டம் வந்துவிட்டால் மட்டும், மறுநாளே பாலின சமத்துவம் ஏற்பட்டுவிடுமா எனக் கேட்டால், சட்டம் மட்டும் சமூகத்தைத் திருத்திவிட முடியாது என்பதுதான் பதில். ஆனால் சட்டம் நீதி கோர வழி வகுக்கும். அதுவுமில்லையேல் அந்த வாய்ப்புக் கூட இராது.
முந்தைய அத்தியாயம்: பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு இது பொருத்தமான காலம் அல்ல: உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி விமலா
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago