பொது சிவில் சட்டத்தின் தேவைக்கான புரிதலை ஏற்படுத்த வேண்டும்: வழக்கறிஞர் இளங்குமார் சம்பத்

By Guest Author

"பொது சிவில் சட்டம் நாட்டுக்கு அவசியம் என்பதால்தான், நமது அரசியல் சாசனத்தில் வழிகாட்டும் நெறிமுறைகள் பிரிவில் அது இடம் பெற்றது. பொது சிவில் சட்டம் அவசியம் என்பதற்கான புரிதலை ஏற்படுத்த வேண்டியது தற்போது மிகவும் முக்கியம். பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதாகச் சொல்பவர்கள் சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்று சொல்வதை விட சட்டத்தை கொண்டுவர முயலும் மத்திய அரசாங்கத்தை எதிர்க்கிறார்கள் என்பதுதான் உண்மை" என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இளங்குமார் சம்பத். இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது...

130 கோடிக்கும் மேலான மக்கள் தொகையைக் கொண்ட நமது நாட்டில் சட்ட அறிவு, சட்ட திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. மக்கள் அரசியல், சமூக, பொருளாதார விழிப்புணர்வு பெற்று விடக்கூடாது என்பதற்காகவே சில அமைப்புகள் இங்கே வேலை செய்து கொண்டிருக்கின்றன. இது மிகவும் வருத்தத்துக்குரியது. ஒரு பக்கம் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், எதிர்காலத்துக்கான உத்தரவாதம் இவற்றை மனதில் கொண்டு நாட்டின் மீது பற்றுள்ளவர்கள் திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும், மக்களின் இறை நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சுய லாபம் அடைய வேண்டும் என்பதற்காக சிலர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியில் பிரிவு 44ல் கூறப்பட்டுள்ள விஷயம்தான் பொது சிவில் சட்டம். இதை எப்போதோ அமல்படுத்தி இருக்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் இது விவாதத்துக்கு வந்திருக்கிறது என்பதே வருத்தப்படக் கூடிய ஒன்று.

அதேநேரத்தில், இந்த விவாதத்தின் இறுதியில், பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும் என்ற நம்பிக்கை இருப்பதால் அது சற்று ஆறுதலையும் தருகிறது. பொதுமக்கள் தாங்கள் சார்ந்திருக்கக்கூடிய குழு அமைப்பு அல்லது மத அமைப்புகளின் விருப்பு வெறுப்புகளைத் தாண்டி இந்தச் சட்டம் என்ன சொல்கிறது என்பதை ஒரு பொது கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அதற்கான முயற்சியே இந்தக் கட்டுரை.

நாடு சுதந்திரம் பெற்ற உடன், அரசியலமைப்புச் சட்டங்கள் தயாரிக்கப்பட்டன. இதன் வரைவுக் குழு தலைவராக டாக்டர் அம்பேத்கர் செயல்பட்டார். நமது நாட்டின் அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த அனைத்து விஷயங்களும் அந்த சட்டத்தில் கூறப்பட்டன. அதன்படிதான் நம்முடைய அரசாங்கங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக சிவில் சட்டம், கிரிமினல் சட்டம் என சட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதற்குள் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. சிவில் சட்டம், அதாவது உரிமையியல் சட்டத்தின் கீழ் திருமணம், விவாகரத்து, சொத்து பரிமாற்றம், வாரிசு போன்ற விஷயங்கள் வருகின்றன. சமூக சீர்கேட்டுக்குக் காரணமான குற்றங்களுக்கு தண்டனை கொடுக்கக்கூடிய விஷயங்கள் கிரிமினல் சட்டம் அதாவது குற்ற நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வருகின்றன. இவ்வாறு சட்டம் முறைப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

பொது சிவில் சட்டம் எதற்கானது? - திருமணம், விவாகரத்து, சொத்து பரிமாற்றம், வாரிசு ஆகியவை குறித்து பேசக்கூடியது பொது சிவில் சட்டம். ஒருவர் யாராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருக்கு இந்த சட்டம் பொருந்தும். திருமணம், விவாகரத்து, சொத்து பரிமாற்றம், வாரிசு ஆகியவை சம்பந்தப்பட்ட விஷயங்களில் சட்டம் அனைவருக்கும் ஒன்று போல் இருப்பதுதான் அரசியல் சட்டப் பிரிவு 14-ல் கூறப்பட்டிருக்கின்ற சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கின்ற கோட்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும். இதை கருத்தில் கொண்டே பொது சிவில் சட்டம் வலியுறுத்தப்படுகிறது.

பொது சிவில் சட்டம் ஏன் எதிர்க்கப்படுகிறது? - பொது சிவில் சட்டம் வேண்டும் என்றால் என்ன என்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டி இருக்கின்றது. பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரானதா என்பதை விளக்க வேண்டி இருக்கிறது. ஏனெனில், அப்படி ஒரு தோற்றத்தை சில அரசியல் கட்சிகள், சில மத அமைப்புகள் ஏற்படுத்துகின்றன. நமது நாட்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது சட்டங்கள் ஒவ்வொன்றாக வந்தன. இன்றைக்கு இருக்கக்கூடிய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், உரிமையியல் நடைமுறை சட்டம் ஆகியவை 1860, 1868,1872 போன்ற காலகட்டங்களில் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டவை. ஆங்கிலேய ஆட்சியை இங்கே நிலை நிறுத்துவதற்கு வசதியாகவே இச்சட்டங்களை அவர்கள் கட்டமைத்தார்கள். 1937-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கம் நமது நாட்டில் ஒரு சட்டத்தை அமல்படுத்தினார்கள். அதுதான் ஷரியத் சட்டம்.

இந்தியாவில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களை திருப்தி படுத்துவதற்காக, அவர்களை இந்து சமுதாயத்திலிருந்து பிரிப்பதற்காக திட்டமிட்ட ரீதியிலே ஆங்கிலேயர்கள் இந்த சட்டத்தை கொண்டுவந்தார்கள். அதற்கு முன் இஸ்லாமியர்களுக்கு என்று தனி சட்டம் கிடையாது. அப்போது, நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட நமது தலைவர்கள், எல்லா இஸ்லாமியர்களையும் சேர்த்துக்கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற காரணத்திற்காக அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த சட்டத்தை ஆமோதித்து விட்டார்கள். அது மிகப்பெரிய தவறு என்று சொன்னால் தவறில்லை. இதன் காரணமாக இந்து சமுதாயத்திற்கும் இஸ்லாமிய மக்களுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளியை உருவாக்கினார்கள். அந்த வகையில், ஷரியத் சட்டம் என்பது ஆங்கிலேயனுடைய திட்டமிட்ட சதி. நமது நாட்டில் இருந்து மதரீதியாக பிரிந்த பாகிஸ்தானிலோ, இஸ்லாமிய அகிலம் குறித்துப் பேசும் துருக்கிலோ, சூடானிலோ, இந்தோனேஷியாவிலோ, மலேசியாவிலோ ஷரியத் சட்டம் கிடையாது.

பொது சிவில் சட்டம் என்ன சொல்கிறது? - திருமணம், விவாகரத்து, சொத்து பரிமாற்றம், வாரிசு ஆகிய விஷயங்களில் நாட்டில் இருக்கக்கூடிய குடிமக்கள் அனைவருக்கும் சட்டம் பொதுவானதாக இருக்கும். நன்றாக இதை புரிந்து கொள்ள வேண்டும். பொது சிவில் சட்டம் என்பது ஹிந்து சட்டம் என்று சொல்லப்படவில்லை. இது அனைத்து மக்களுக்குமான பொதுவான ஒரு சட்டம். ஒருவர் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், எப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதெல்லாம் அவரவர் விருப்பம். இதில் இந்த சட்டம் தலையிடாது. ஆனால், திருமண சட்டம் என்று சொன்னால் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும், விவாகரத்து என்று சொன்னால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே உள்ள பிரச்சினைகளுக்கான காரணத்தை சொல்லி நீதிமன்றத்தின் மூலமாக தீர்ப்பு பெற வேண்டும், சொத்துப் பிரிவினை என்று சொன்னால் ஆண்-பெண் அனைவருக்கும் சமமான முறையில் சொத்து பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும், வாரிசுகள் யார் என்பது சட்டப்படி வரையறுக்கப்படும், பலதாரமணம் அங்கீகரிக்கப்படாது. இப்படித்தான் இந்த சட்டம் இருக்கும்.

ஆனால், பொது சிவில் சட்டத்தை எதிர்க்கக் கூடியவர்கள், இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் இஸ்லாமிய ஆண்கள் தொப்பி அணிய முடியாது, இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய முடியாது, சீக்கியர்கள் தலைப்பாகை வைத்துக் கொள்ள முடியாது, திருமண நடைமுறைகள் மாற்றப்படும் என்றெல்லாம் பொய்யான கேலிக்கூத்தான காரணங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் பழக்கவழக்கங்கள், அவர்களுடைய வழிபாட்டு முறைகள் ஆகியவற்றில் இந்த சட்டம் எந்தவிதத்திலும் தலையிடாது; குறுக்கிடாது. உண்மையில், இந்த சட்டம் அமலுக்கு வந்தால் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும். அவர்கள் இரண்டாம் தர நிலைக்கு தள்ளப்பட மாட்டார்கள். சொத்துரிமையில், வாரிசு உரிமையில் பெண்களுக்கு சம அந்தஸ்து கிடைக்கக்கூடிய வகையில் சட்டம் இருக்கும். ஆகவே, சிறுபான்மை மக்கள் பொது சிவில் சட்டத்தால் மிகுந்த நன்மை பெறுவார்கள்.

தற்போது பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள் சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்று சொல்வதை விட சட்டத்தை கொண்டுவர முனையும் மத்திய அரசாங்கத்தை எதிர்க்கிறார்கள் என்பது தான் உண்மை. பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு 75 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வந்திருக்கின்றது. இதன் மூலம் சமூக சீர்திருத்தம் ஏற்படப் போகின்றது. பொருளாதார, கலாச்சார, சமூக வளர்ச்சிக்கு இந்த சட்டம் வழி வகுக்கப் போகிறது. இந்த சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம். இதை அனைவரும் வரவேற்க வேண்டும். இதற்கு மதச்சாயம் பூசுவது நல்லதல்ல; ஏற்றுக்கொள்ளக் கூடியதும் அல்ல. மத ரீதியாக மக்களை பிளவுபடுத்துவதற்கோ, துன்புறுத்துவதற்கோ, சிறுமைப்படுத்துவதற்கோ இதில் எதுவுமே கிடையாது. ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும், நமது நாட்டில் பொது கிரிமினில் சட்டம்தான் இருக்கிறது.

வழக்கறிஞர் இளங்குமார் சம்பத்

பொது சிவில் சட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்பதை அரசியலமைப்புச் சட்டம் பகுதி நாலில் வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ் அம்பேத்கர் கொண்டு வந்தார். இந்த சட்டம் தேவையில்லாதது என்றோ, மக்களை அச்சுறுத்தக்கூடியது என்றோ நினைத்திருந்தால், இதை அவர் செய்திருக்க மாட்டார். அம்பேத்கர், கே.எம். முன்சி போன்றவர்கள், இந்த சட்டம் வேண்டும் என்று அன்றே சொன்னார்கள். வழிகாட்டு நெறிமுறைகள் எல்லாம் சட்டமானால் தான் அதை அமல்படுத்த முடியும். நீதிமன்றங்கள் நேரடியாக இவற்றை அமுல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் இல்லை.

ஆகவே, இன்றைக்கு வளர்ந்து வரக்கூடிய, வலிமை பெற்று வரக்கூடிய நமது நாட்டிற்கு பொது சிவில் சட்டம் அவசியம். நாட்டின் எந்த பிரிவு மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு அநீதி இழைக்கப்படக்கூடாது; அனைவருக்கும் சம நீதி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் பொது சிவில் சட்டத்தை இன்றைய அரசாங்கம் சட்டமாக்க முனைந்திருக்கின்றது. இந்த நல்ல விஷயத்தை நாம் வரவேற்க வேண்டும். ஒரு சட்டத்தை யார் கொண்டு வருகிறார்கள் என்று பார்க்காமல் நல்ல சட்டத்தை யார் கொண்டு வந்தாலும் வரவேற்கக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். அந்த வகையில், பொது சிவில் சட்டம் என்பது நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு, சம நீதிக்கு, சமூக நீதிக்கு அவசியம் என்பதால் இதனை ஆதரிப்பது நம் அனைவரின் கடமை.

> முந்தைய அத்தியாயம்: பாகுபாடுகளை சட்ட திருத்தம் மூலம் களைய வேண்டுமே தவிர, பொது சிவில் சட்டத்தால் அல்ல: வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்