"பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைக் களைய மத்திய அரசு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும். மாறாக, பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது ஏற்புடையது அல்ல" என்கிறார் தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கே.சாந்தகுமாரி. இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது:
வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் அடையாளம். மக்கள் மத்தியில் நிலவும் கலாசார, பண்பாட்டு வேறுபாடுகளை அங்கீகரிக்க, அவற்றின் தனித்தன்மையை பாதுகாக்க உலகின் பல்வேறு நாடுகள் முனைந்திருக்கிற வேளையில், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஒற்றைக் கலாசாரம், ஒற்றைப் பண்பாடு, ஒரே நாடு என்ற சித்தாந்தத்தை திணிக்க ஆளும் மத்திய அரசு எடுக்கும் முயற்சியே அவசர கதியில் சட்ட ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிற பொது சிவில் சட்ட விவாதம்.
ரோம் பற்றி எரிகிறபோது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்த கதைபோல மணிப்பூர் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டும், பழங்குடியின மக்கள் வீடிழந்து, உடமை இழந்து உயிர் பயத்தோடு சொந்த நாட்டிலேயே நாடோடிகளாய் அலையும் கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கும்போது பெரும்பான்மை இனவாத மத்திய அரசு, 2024 தேர்தலை மனதில் வைத்து பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை முன்னெடுத்திருக்கிறது.
பண்பாட்டு வேறுபாடுகள், ஒருபோதும் பாகுபாடாகாது; அது ஆகச் சிறந்த ஜனநாயகத்தின் ஆணிவேராகும். சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து பொது சிவில் சட்டம் குறித்த விவாதங்கள் எழுந்திருந்தாலும் தற்போது அவசர அவசரமாய் அரசு கையில் எடுத்திருக்கும் முன்னெடுப்பு அபாயகரமானது மட்டுமல்ல; நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதத்தை வேரறுக்கிற முயற்சியுமாகும். அதுவும் அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவு, 'பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர அரசு முயற்சி எடுக்க வேண்டும்' என்று மட்டுமே கூறுகிறது. உச்ச நீதிமன்றமே பொது சிவில் சட்டத்தை காலாவதியாகிப்போன கடிதம் என்று சொல்லி இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
» இஸ்லாமியர்களை மட்டுமே பொது சிவில் சட்டம் குறி வைக்கிறது: கே.சாமுவேல்ராஜ்
» சமூக நீதி மேம்பட பொது சிவில் சட்டம் அவசியம்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சதீஷ்குமார்
கடந்த 10 ஆண்டுகளில் வரலாற்றைத் திருத்தி தமது சித்தாந்த வழியில் புது வரலாற்றை உருவாக்கும் முயற்சியை பாஜக தொடர்ந்து நடத்தி வருகிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தில் அபாயகரமான புதிய பிரிவு உருவாக்கப்பட்டிருப்பதைக் காண வேண்டி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பாஜக ஆட்சி புரிகிற மாநிலங்களில் சட்டத்திற்குப் புறம்பான மதமாற்ற தடைச் சட்டம் என்ற பெயரில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்தை இங்கு நாம் நினைவுகூற வேண்டும். 'லவ் ஜிகாத் தடைச் சட்டம்' என்று இந்துத்துவவாதிகள் இவற்றை குறிப்பிடுகிறார்கள்.
புதிய இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தன்னுடைய அடையாளத்தை மறைத்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறியோ, பதவி உயர்வு பெற்றுத் தருவதாகக் கூறியோ, திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்தோ ஒரு பெண்ணோடு உடலுறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 10 வருட சிறைத்தண்டனை என்று கூறப்படுவது புதிய சட்டத்தின் லவ் ஜிகாத் பிரிவாகும். இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. உண்மையில் ஆராய்ந்து பார்த்தால், இதுபோன்ற எத்தனைப் பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்நுழைக்கப்பட்டிருக்கின்றன என்பது புலப்படும்.
பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான நோக்கம் பற்றி ஆராய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்திய குடியரசு, பெரும்பான்மை மதத்தினருக்கு மட்டுமின்றி ஏனைய சிறுபான்மை மதத்தினருக்குமான ஜனநாயக நாடு என்பதை அரசு மறந்துவிடலாகாது. உலகின் வேறு எந்த நாட்டைக் காட்டிலும் மதம், மொழி, இனம், கலாசாரம் போன்ற அனைத்து வகையிலும் பன்முகத்தன்மை கொண்ட நாடு நமது இந்தியா. இது பெரும்பான்மை இந்துக்களுக்கு மட்டுமின்றி சிறுபான்மையினரான இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், பெளத்தர், பார்சிகள் மட்டுமின்றி பல்வேறு இனக்குழுக்களைக் கொண்ட பழங்குடியினருக்குமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொள்ளாத அரசு மட்டுமே, சிறுபான்மையினரை உள்ளடக்கிய விவாதத்தை முன்னெடுக்காமல் தேர்தலுக்காக அவசர கதியில் தங்களது மிருக பலத்தை வைத்து பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர துணியும்.
இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர நினைப்பது விரும்பத்தக்கதல்ல என்று 21வது சட்ட ஆணையம் கூறியுள்ளதை புறந்தள்ளும் அரசின் மனோபாவம் சரியல்ல. அரசியல் சாசன பிரிவு 44, பொது சிவில் சட்டம் இந்திய நிலப்பரப்பில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் என்கிறது. அப்படி என்றால், மாநில அரசுகளுக்கு அந்த பொது சிவில் சட்டத்தை தங்களது மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு திருத்தம் செய்வதற்கான வாய்ப்பில்லை என்பது பொருள். இந்தியாவின் பலமும், ஒற்றுமையும் இன்றும் நிலைத்திருப்பதற்கான காரணம் வேற்றுமையில் ஒற்றுமையே இன்றி - ஒரே சீரான சட்டத்தால் அல்ல. நகாலாந்து கத்தோலிக்க சங்கத்தின் கோஹிமா டையோசிஸைச் சேர்ந்த பிஷப் ஜேம்ஸ் தோப்பில், "பொது சிவில் சட்டம் பழங்குடியின மக்களுக்கு மட்டுமின்றி மற்ற குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுகிறது; குறிப்பாக ஒரு தனிமனிதனின் மத விஷயங்களில்" என்கிறார்.
‘எந்திரன்’ படத்தில் வருவதுபோல் மனிதர்கள் ஒரே சீரான ரோபோக்கள் அல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வியல் நடைமுறைகளைப் பின்பற்றும் உரிமை இருக்கிறது. அந்த வாழ்வியல் நடைமுறைகள், மத பழக்க வழக்கங்கள் ஆகியவை அரசியல் சாசனத்துக்கு முரணாக இல்லாதவரை அவற்றை பொது சிவில் சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தி எடுக்க நினைப்பது மனித உரிமை மீறலாகும்.
இஸ்லாமியர்கள் மத்தியில் நிலவி வந்த மும்முறை தலாக் சொல்லி உடனடியாக மனைவியை விவாகரத்துச் செய்யும் இஸ்லாமிய தனிநபர் சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவை ஒன்றிய அரசு 2019ல் குற்றமென அறிவித்தது. உச்சநீதிமன்றமும் அதனை உறுதி செய்தது. சரி, அப்படியானால், பெரும்பான்மை இந்துக்கள் ஒட்டுமொத்தமாக பொது சிவில் சட்டம் வேண்டும் என ஏற்றுக்கொள்கிறார்களா? இந்துக்களில் இந்து கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வரிச்சலுகை உண்டு. அதனை வைத்து பல மேல்மட்டக் குடும்பங்கள் செல்வச் செழிப்பில் உள்ளனர். பொது சிவில் சட்டம் வருமானால் இந்து கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு வரிச்சலுகை தேவையில்லை என்பார்களா? அல்லது இதுபோன்ற வரிச்சலுகையை இஸ்லாமியர்களுக்கும் கொடுங்கள் என்பார்களா? அல்லது மோடி அரசுதான் இஸ்லாமியர்களுக்கு அச்சலுகையை கொடுத்து விடுமா?
அதுமட்டுமல்ல, இந்துக்கள் மத்தியிலும் அவரவர் வாழும் இடத்திற்கு ஏற்ப, சாதிக்கு ஏற்ப பழக்க வழக்கங்கள் மாறுபடும். ஒருசாரார் தாய் மாமனை திருமணம் செய்து கொள்வார்கள். மறுசாரார் அதனைத் தவறு என்பார்கள். இஸ்லாமியர்களுக்கு இடையேயும் சில சன்னி, போரா முஸ்லிம்கள் இந்து சட்டத்தின் அடிப்படையில் சொத்துரிமை, வாரிசு உரிமை பெறுகிறார்கள். வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மிசோரம் மக்கள் அவர்களது தனிச்சட்டத்தின் அடிப்படையில் தங்களது பழக்க வழக்கங்களை தகவமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலவே, அரசியல் சாசனத்தின் VI ஷெட்யூலின் அடிப்படையில், சுயாதீனமான மாவட்டக் குழுக்களுக்கு, தங்களது நடைமுறையில் இருக்கிற பழக்கவழக்கங்கள் மற்றும் அங்கு பின்பற்றும் மரபுகளை தீர்மானிக்க உரிமை அளித்திருக்கிறது. அதனை பொது சிவில் சட்ட ஆதரவாளர்கள் அவர்களிடம் இருந்து பறிக்க முடியுமா?
முத்தலாக் போலவே நான்கு மனைவியரை ஒரே சமயத்தில் வைத்திருக்கும் உரிமையும், சொத்துரிமையில் ஆணுக்கு உள்ள உரிமையில் அரைப்பங்கு மட்டுமே பெண்களுக்கு என்றும் கூறும் இஸ்லாமிய தனிநபர் சட்டங்கள், அரசியல் சாசனம் வழங்கியுள்ள சம உரிமைக்கு எதிரானதுதான். அவற்றை மாற்ற நாடாளுமன்றத்துக்கு அதிகாரமிருக்கையில் அதனை செய்வதற்கு என்ன தடை இருக்க முடியும்? பாதுகாப்பாளர் உரிமையில் கிறிஸ்தவ தனிநபர் சட்டம் ஆணுக்கு முன்னுரிமை கொடுப்பது, பார்சி ஆண்கள் வேற்று மதத்துப் பெண்ணை மனம் செய்து கொண்டாலும் சொத்துரிமை பெரும்போது, வேற்று மதத்து ஆணை மணம் செய்த பார்சி பெண்ணுக்கு சொத்துரிமை மறுக்கப்படுவது, பா்ரசி பெண்ணுக்கு தத்தெடுக்கும் உரிமையை மறுப்பது ஆகியவை அரசியல் சாசனத்தின் அடிப்படையான சமத்துவத்துக்கு எதிரானதே. எனவே, சமத்துவத்தின் அடிப்படையில் சட்டங்களை திருத்த நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்துதல் அவசியம்.
சமத்துவத்தை நிலைநாட்டத்தான் பொது சிவில் சட்டம் என அரசு கூறுமானால், சமத்துவத்திற்கு எதிராக பெண்கள் கோயிலுக்குள் நுழையத் தடை விதிக்கும் விதியை மாற்ற நடவடிக்கை எடுக்குமா, பொது சிவில் சட்டம் குறித்துப் பேசும் அரசு? 75 ஆண்டுகளுக்குப் பின்னரும் சட்டத்தில் பாதுகாப்பாளர் உரிமையில் பெண்களுக்கு சம உரிமை கிடைக்கவில்லையே! இதுவரை ஒன்றிய அரசு அதற்கு நடவடிக்கை எடுத்ததா? 1867ல் இருந்து கோவாவில் பொது சிவில் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. அது எல்லா மதத்தினருக்கும் பிரிவினருக்கும் பொருந்தும். ஆனால், அதேசமயத்தில் மாறுபாடான விதிகள் கத்தோலிக்கர்களுக்கும் மற்ற பிரிவினருக்கும் இருக்கிறதே. இருதார மண தடைச் சட்டம் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையினருக்கு இருக்கையில் கோவாவில் இருதார மணம் இந்துக்களுக்கு அனுமதிக்கப்படுகிறதே ஏன்?
பொது சிவில் சட்டம் வேண்டுமென்போர், கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாமே! -
பாஜக அரசு ஒரே ரீதியிலான திருமணச் சட்டங்களை அனைத்து மதத்தினருக்கும் பொருந்த உருவாக்குமா? அப்படி உருவாக்கினால், எந்த மதத்தைச் சேர்ந்தவரும் எந்த மதத்தினரோடும் திருமணம் புரிய முடியுமே - அப்படியானால், சட்டவிரோத மதமாற்றத்தை தடை செய்யும் சட்டங்களை இவர்கள் என்ன செய்வார்கள்? 21வது சட்ட ஆணைம் நீண்ட விவாதத்திற்குப் பின் ஆழ்ந்த யோசனைக்குப் பின், "சட்டங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைக் களைய அந்தந்த சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வரலாம். பொது சிவில் சட்டம் கொண்டு வருவது ஏற்புடையது அல்ல; இந்த காலகட்டத்திற்கு உகந்ததுமல்ல" என்று தெரிவித்தது.
பெண்கள் சமத்துவத்தை, நீதியைப் பெற இந்த அரசு கடந்த பத்தாண்டுகளில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரசு நினைத்திருந்தால் சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி இருக்க முடியும்? ஆனால், ஒன்றிய அரசு பெண்களது சம உரிமை பற்றி ஒருபோதும் கவலை கொள்ளவில்லை. வரவிருக்கின்ற 2024 ஆண்டின் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற பொது சிவில் சட்டம் என்ற ஆயுதத்தை முன்னெடுத்திருக்கிறது.
நமது விருப்பதற்கு ஏற்ப எம்மதத்தையும் பின்பற்றும் சதந்திரத்தை அரசியல் சாசனம் வழங்குகிறது. அரசியல் சாசனத்தின் 25 முதல் 28 வரையிலான பிரிவுகள் உத்தரவாதப்படுத்தி உள்ள அடிப்படை மத சுதந்திரம், கலாச்சார சுயாதீனம் ஆகியவற்றை பொது சிவில் சட்டம் பறித்துவிடும். பெண்களுக்கு எதிரான பாலின பாகுபாடுகளை பொது சிவில் சட்டத்தின் மூலம் களைய முடியாது. ஏனெனில், சமூகக் கட்டுப்பாடுகள் பாலின சமத்துவத்தை அடைவதற்கு பெருந்தடையாக இருக்கின்றன.
இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை பெரும்பான்மை சட்ட ஒழுங்கமைவிற்குள் அடக்கும் அல்லது குறைத்து மதிப்பிடும் பணியை பொது சிவில் சட்டம் செய்யும். பொது சிவில் சட்டத்தை அமலாக்கினால் நாட்டில் நிலவும் பன்முகத்தன்மை சீர்குலையும்; சிறுபான்மையினர் தங்களுக்கான சலுகைகளை இழக்க நேரிடும். இந்தியாவின் மதச்சார்பின்மையை பொது சிவில் சட்டம் பிரிச்சினைக்கு உள்ளாக்குவதோடு சிறுபான்மையினரின் தனித்த மரபுகளை கலாச்சாரத்தை வேரறுத்துவிடும்.
எனவே, இன்றையத் தேவை பொது சிவில் சட்டமல்ல. வேற்றுமையில் ஒற்றுமையோடு மதச்சார்பற்ற இந்தியாவின் குடியரசை காப்பாற்றி வருகிற பல்வேறு மதத்தவர்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை மதிப்பதும் பாகுபாடுகளை சட்டத்திருத்தின் மூலம் களைவதுமேயாகும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago